நபிமொழிகளில் தடைசெய்யப்பட்டவை -1

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

தொழும் போது கிப்லாவை முன்னோக்கி உமிழக்கூடாது

إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَى الصَّلاَةِ فَلاَ يَبْصُقْ أَمَامَهُ فَإِنَّمَا يُنَاجِي اللَّهَ مَا دَامَ فِي مُصَلاَّهُ ، وَلاَ عَنْ يَمِينِهِ فَإِنَّ عَنْ يَمِينِهِ مَلَكًا وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ ، أَوْ تَحْتَ قَدَمِهِ فَيَدْفِنُهَا.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழுகைக்காக நிற்கும்போது தமக்கு முன்புறம் உமிழ வேண்டாம். ஏனெனில் அவர் தொழுகையில் இருக்கும் வரை அவர் அல்லாஹ்விடமே அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருக்கிறார். (அதே போல்) அவர் தம் வலப்புறமாகவும் உமிழ வேண்டாம். ஏனெனில், அவரது வலப்புறத்தில் வானவர் ஒருவர் இருக்கிறார். (உமிழ வேண்டிய கட்டாயம் நேர்ந்தால்) தமது இடப்புறமோ அல்லது பாதத்திற்கு கீழேயோ உமிழ்ந்துவிட்டு அதை மண்ணுக்குள் புதைக்கட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்கள் : (புகாரி: 416) , 414, 409, 411,(முஸ்லிம்: 955)

தொழுகையில் இரு தொடைகளின் இடுக்கில் கைகளை வைக்கக் கூடாது

سَمِعْتُ مُصْعَبَ بْنَ سَعْدٍ يَقُولُ صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي فَطَبَّقْتُ بَيْنَ كَفَّيَّ ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَيَّ فَنَهَانِي أَبِي وَقَالَ كُنَّا نَفْعَلُهُ فَنُهِينَا عَنْهُ وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِيَنَا عَلَى الرُّكَبِ.

நான் என் தந்தை (ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூவில்) என் இரு கைகளையும் கோர்த்து என் இரு தொடைகளின் இடுக்கில் வைத்துக்கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். பின்னர் அவ்வாறு செய்யக்கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஸ்அப் பின் ஸஅத்,
நூல்கள் : (புகாரி: 790) ,(முஸ்லிம்: 931)

அடுத்தவர் இடத்தில் அமரக்கூடாது

أَنَّهُ نَهَى أَنْ يُقَامَ الرَّجُلُ مِنْ مَجْلِسِهِ وَيَجْلِسَ فِيهِ آخَرُ وَلَكِنْ تَفَسَّحُوا وَتَوَسَّعُوا ،

ஒரு மனிதர், அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிடப்பட்டு, அந்த இடத்தில் மற்றொருவர் அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இதற்கு மாறாக, “நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல்கள் : (புகாரி: 6270) , 6269, 911,(முஸ்லிம்: 4391)

இடுப்பில் கைவைத்து தொழக்கூடாது

نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُصَلِّيَ الرَّجُلُ مُخْتَصِرًا

ஒரு மனிதர் இடுப்பில் கை வைத்துக் கொண்டு தொழுவதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்கள் : (புகாரி: 1220) , 1219,(முஸ்லிம்: 948)

பட்டாடை அனைத்தும், ஆண்களுக்கு தடை

أَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَبْعٍ وَنَهَانَا عَنْ سَبْعٍ أَمَرَنَا بِاتِّبَاعِ الْجَنَائِزِ وَعِيَادَةِ الْمَرِيضِ وَإِجَابَةِ الدَّاعِي وَنَصْرِ الْمَظْلُومِ وَإِبْرَارِ الْقَسَمِ وَرَدِّ السَّلاَمِ وَتَشْمِيتِ الْعَاطِسِ وَنَهَانَا عَنْ آنِيَةِ الْفِضَّةِ وَخَاتَمِ الذَّهَبِ وَالْحَرِيرِ وَالدِّيبَاجِ وَالْقَسِّيِّ وَالإِسْتَبْرَقِ.

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை (ச்செய்யும்படி) கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை தடை செய்தார்கள். . . . வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், (ஆண்கள்) தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் (கலப்படமில்லாத) பட்டு, அலங்காரப் பட்டு, கஸ் எனும் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு ஆகியவற்றை அணிவதிலிருந்தும் எங்களை தடுத்தார்கள்.

அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப் (ரலி),
நூல்கள் : (புகாரி: 1239) , 5175, 5235, 5650 ,5863,(முஸ்லிம்: 4194)