02) நபித்தோழர்கள் என்போர் யார்?

நூல்கள்: நபித் தோழர்களும் நமது நிலையும்

நபித்தோழர்களும் நமது நிலையும்

திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலிலோ ஆதாரம் இருப்பதைத் தான் இஸ்லாத்தின் பெயரால் செய்ய வேண்டும்.

‘திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலிலோ இல்லாத ஒன்றை அல்லது இவ்விரண்டுக்கும் முரண்பட்ட ஒன்றைச் செய்யலாகாது. அதை எவ்வளவு பெரிய அறிஞர் கூறினாலும், நபித் தோழர்களே கூறினாலும் அவற்றை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று என்று நாம் கூறி வருகிறோம். இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்றும் கூறுகிறோம். இவ்வாறு கூறுவதைப் புரிந்து கொள்ளாதவர்களும், புரிந்து கொண்டு புரியாதது போல் நடிப்பவர்களும் நபித்தோழர்களை நாம் அவமதித்து விட்டதாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தவ்ஹீத் போர்வையைப் போர்த்திக் கொண்டு தவறான மார்க்கம் போதிப்பவர்கள் இதில் முன்னணியில் உள்ளனர்.

மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது என்று நாம் கூறியபோது இமாம்களை நாம் இழிவுபடுத்துவதாக மத்ஹபுவாதிகள் பழி சுமத்தினார்கள்.

தர்கா வழிபாடு கூடாது என்று நாம் கூறியபோது அவ்லியாக்களை நாம் கேவலப்படுத்துவதாக சமாதி வழிபாடு நடத்துவோர் திசை திருப்பினார்கள்.

இவர்களின் இந்த வழிமுறையைத் தான் தவ்ஹீத் போர்வையில் தவ்ஹீதைக் கெடுக்க நினைப்பவர்களும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

இமாம்களைப் பின்பற்றக் கூடாது என்று வாதிடுவது எவ்வாறு இமாம்களை இழிவுபடுத்துவதாக ஆகாதோ, தர்காவில் வழிபாடு செய்யக் கூடாது என்று கூறுவது எவ்வாறு இறை நேசர்களை இழிவுபடுத்துவதாக ஆகாதோ அது போலவே தான் நபித்தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்று கூறுவதும் நபித்தோழர்களை இழிவுபடுத்துவதாக ஆகாது.

நபித்தோழர்கள் என்போர் யார்?

நபித்தோழர்களைப் பின்பற்றலாமா? கூடாதா? என்ற தலைப்புக்குச் செல்வதற்கு முன்னால் நபித்தோழர்கள் என்பதன் இலக்கணத்தை அறிந்து கொள்வோம்.

தமிழ் மொழியில் தோழர்கள் என்ற சொல் நெருக்கமான நண்பர்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

ஒரே ஊரையும், ஒரே தெருவையும் சேர்ந்த இருவர் நெருங்கிய நண்பர்களாக இல்லாவிட்டால் அவர்களைத் தோழர்கள் என்று நாம் குறிப்பிடுவதில்லை.

ஒரு கல்வி நிலையத்தில் பயிலும் நூற்றுக்கணக்கானோர் தினமும் பல முறை சந்தித்துக் கொண்டாலும், அவர்களிடையே நல்ல அறிமுகம் இருந்தாலும் தோழர்கள் என்று கூறுவதில்லை. நூற்றுக்கணக்கான மாணவர்களில் ஒன்றிரண்டு பேரைத் தான் ஒருவர் தோழர் என்று கூறுவார்.

நபித்தோழர்கள் என்பதை நாம் இவ்வாறு புரிந்து கொள்ளக் கூடாது.

அரபு மொழியில் சாஹிப், சஹாபி என்று ஒருமையிலும், சஹாபா, அஸ்ஹாப் என்று பன்மையிலும் குறிப்பிடப்படுவதைத் தான் தமிழில் நபித்தோழர் என்று குறிப்பிடுகிறோம்.

அரபு மொழியில் இச்சொல்லுக்கு ஆழமான நட்பைக் குறிக்கும் தோழமை என்பது பொருளல்ல.

ஒரு பள்ளிக் கூடத்தில் ஒரு காலகட்டத்தில் படிக்கும் அனைவருமே அஸ்ஹாப், சஹாபா என்ற பெயரால் குறிப்பிடப்படுவார்கள்.

ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை செய்தாலே இவருக்கு அவர் சஹாபி என்று கூறலாம். நாம் அமர்ந்திருக்கும் சபையில் நமக்கருகே ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவருக்கும், நமக்கும் எந்த அறிமுகமும் இல்லை என்ற போதும் எனது சாஹிப் அல்லது சஹாபி என்று அவரைக் குறிப்பிடலாம்.

இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. அரபுமொழி வழக்கத்தையும், நபிமொழிகளையும் ஆதாரமாகக் கொண்டே இவ்வாறு கூறுகிறோம்.

இரண்டு முஸ்லிம்கள் வாள் முனையில் சந்தித்துக் கொண்டால் கொன்றவனும், கொல்லப்பட்டவனும் நரகத்திலிருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் “அல்லாஹ்வின் தூதரே! கொலை செய்தவன் நரகம் செல்வது சரி. கொல்லப்பட்டவனின் நிலை எப்படி? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “கொல்லப்பட்டவன் தனது சஹாபியை (தோழரை) கொல்வதில் ஆர்வமுள்ளவனாகத் தானே இருந்தான் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ பக்ர் (ரலி),

(புகாரி: 31, 6875, 7083)

வாள் முனையில் சந்தித்து சண்டையிட்ட இருவரையும் ஒருவருக்கு மற்றவர் சாஹிப் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

‘வெள்ளிக் கிழமை இமாம் உரை நிகழ்த்தும் போது உனது சாஹிபை (அருகில் இருப்பவரை) பார்த்து வாயை மூடு என்று நீ கூறினால் நீ பாழக்கி விட்டாய்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 934)

ஒருவருக்குப் பக்கத்தில் அமர்ந்துள்ள மற்றவர் சாஹிப் என்று இங்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதுபோல நூற்றுக் கணக்கான சான்றுகளை நாம் காண முடியும்.

ஒரு காலத்தில் வாழ்ந்து எதிரிகளாக இருப்பவர்கள் கூட சாஹிப் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் பைத்தியம் என்று பட்டம் சூட்டியதைக் கண்டிக்கும் போது “இவர்களுடைய சாஹிபுக்கு (தோழருக்கு) பைத்தியம் இல்லை என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டாமா? என்று அல்லாஹ் கூறுகிறான்.

பார்க்க :(அல்குர்ஆன்: 7:184, 34:46, 53:2, 81:22)

யூசுப் நபியுடன் சிறையில் இருந்த இருவரைப் பற்றிக் கூறும் போது தமது சாஹிப்கள் என்று யூசுப் நபி கூறியதாக அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

பார்க்க :(அல்குர்ஆன்: 39:41)

சம காலத்தில் வாழ்ந்த ஒரு கெட்டவனையும், நல்லவனையும் குறிப்பிடும் போது “அவனது சாஹிப் கூறினான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

பார்க்க :(அல்குர்ஆன்: 18:34-37)

சஹாபி என்ற சொல் நெருக்கமான நண்பர்களைக் குறிக்கும் சொல் அல்ல. அறிமுகமான இருவரைக் குறிக்கும் சொல் தான் அது.

அறிமுகமான இருவருக்கிடையே ஆழமான நட்பு இருந்தாலும், சிறிய அளவிலான நெருக்கம் இருந்தாலும், பகைமை இருந்தாலும் அனைவருமே சாஹிப் என்ற சொல்லால், சஹாபி என்ற சொல்லால் குறிப்பிடப்படுவார்கள்.

அகராதியின்படி இச்சொல்லின் பொருள் இதுதான் என்றாலும் சஹாபி என்ற சொல்லுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைச் சேர்த்து ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சஹாபி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சாஹிப்’ என்று பயன்படுத்தும் போது இவ்வாறு பொருள் கொள்வதில்லை.

அறிமுகமான எதிரி

அறிமுகமான உயிர் நண்பன்

எதிரியும், நண்பனும் இல்லாமல் அறிமுகமானவன்

ஆகிய மூன்று பொருள்களில் சஹாபி என்ற சொல்லை அகராதியின்படி பயன்படுத்தலாம் என்றாலும் நபியின் சஹாபி என்று பயன்படுத்தும் போது முதல் அர்த்தத்தில் மட்டும் பயன்படுத்துவதில்லை. மற்ற இரண்டு அர்த்தங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எவ்வளவு அறிமுகமானவராக இருந்தாலும் சஹாபி என்ற சொல்லால் குறிப்பிடப்பட மாட்டார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய நண்பரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஓரிரு முறை சந்தித்துக் கொண்ட முஸ்லிமும் சஹாபி என்ற சொல்லில் அடங்குவார்கள்.

இதனால் தான் சஹாபி என்பதற்கு இலக்கணம் கூறும் அறிஞர்கள் முஸ்லிமாக இருக்கும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஒரு தடவையாவது கண்ணால் கண்டவர் என்று கூறுகின்றனர்.

இந்த இலக்கணத்தின் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழர்களாகத் திகழ்ந்த அபூ பக்ர் (ரலி), உமர் (ரலி) போன்றவர்களும் சஹாபி என்பதில் அடங்குவார்கள்.

முஸ்லிமாக இருக்கும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஒரு தடவை சந்தித்தவரும் இதில் அடங்குவார்கள்.

நபித்தோழர்கள் என்று கூறப்படும் எத்தனையோ பேரின் பெயர்களோ அவர்களைப் பற்றி மற்ற விபரங்களோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளன. இவர்கள் முஸ்லிம்கள் என்பது மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியும். இத்தகையோரும் சஹாபி என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றனர்.

இவ்விரு வகையினரையும் தான் நபித் தோழர்கள் என்று நாம் குறிப்பிடுகிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.