08) நபித்தோழர்கள் அனைவரும்  நம்பகமானவர்களே!

முக்கிய குறிப்புகள்: ஹதீஸ் கலை

நபித்தோழர்கள் அனைவரும்  நம்பகமானவர்களே!

நபியவர்கள் கூறியதாக வரும் ஒரு செய்தி ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டுமென்றால் அதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும் என்பதும், அதன் கருத்து குர்ஆனுக்கும், உறுதிப்படுத்தப்பட்ட மற்ற செய்திகளுக்கும் முரணாக இருக்கக் கூடாது என்பது அடிப்படையான விதியாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மற்றவர்களுக்கு அறிவிப்பவர்களில் முதல் நிலையில் இருப்பவர்கள் நபித்தோழர்கள் ஆவார்கள்.

ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்று தரம் பிரிப்பது நபித்தோழர்களுக்கு அடுத்த நிலையில் வரும் அறிவிப்பாளர்களில் இருந்துதான் பார்க்கப்படுகின்றது. நபித்தோழர்களை, அவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று யாரும் தரம் பிரித்துப் பார்ப்பது கிடையாது.

நபித்தோழர்களை ஏன் தரம் பிரிப்பதில்லை? நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று அடிப்படை அறியாத சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நபித்தோழர்கள் அனைவருமே நல்லவர்கள் தான் என்பது ஹதீஸ்கலை வல்லுநர்களில் பெரும்பாலானவர்களின் முடிவாகும்.

நபித்தோழர்களில் மிக, மிக அரிதானவர்கள் தொடர்பாகத் தான், அவர்களின் அறிவிப்பை ஏற்கலாமா? ஏற்கக் கூடாதா? எனக் கருத்து வேறுபாடு உள்ளது. எந்த நபித்தோழர்கள் விஷயத்தில் அந்தக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதோ அவர்களிடமிருந்து மிக முக்கியமான மார்க்கச் சட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

ஒருவரை நாம் நம்பகமானவர் என்று தீர்மானிப்பதும், பலவீனமானவர் என்று தீர்மானிப்பதும் அவர்களின் வெளிப்படையான செயல்களை வைத்துத்தான்.

ஒருவரை நாம் நம்பகமானவர் என்று தீர்மானித்து விட்டால் அவர் நூறு சதவிகிதம் நல்லவராகத்தான் இருப்பார் என்பது கிடையாது. அவர் கெட்டவராகவும் இருக்கலாம். அதற்கான வெளிப்படையான சான்றுகள் நமக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் அதன் பொருளாகும்.

அதுபோன்று ஒருவர் நம்பகமானவர் கிடையாது என்று நாம் முடிவு செய்வதும் அவருடைய வெளிப்படையான செயல்பாடுகளை வைத்துத்தான். நாம் ஒருவரை நம்பகமானவர் கிடையாது என முடிவு செய்துவிட்டால் அவர் நூறு சதவிகிதம் கெட்டவர்தான்; அவர் திருந்தவே மாட்டார் என்பது கிடையாது. அவர் திருந்தியும் இருக்கலாம்.

நபித்தோழர்களைப் பொறுத்தவரை நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கும், பெயர் குறிப்பிட்டுச் சொல்லப்படும் எந்த ஒரு நபித்தோழரும் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் காரியங்களைச் செய்ததாகவோ, திட்டமிட்டுப் பொய் சொன்னதாகவோ வெளிப்படையான எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.

ஒட்டு மொத்தமாகவும், குறிப்பாகவும் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்களே என நாம் வெளிப்படையின் மூலமாகத் தீர்மானிக்கும் ஏராளமான சான்றுகள் குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ளன.

ஒருவரை நம்பகமானவர் என்று தீர்மானிப்பதற்கு மனிதர்கள் கூறும் சான்றுகளை விட அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் குறிப்பிடும் சான்றுகள் பல கோடி மடங்கு உயர்ந்தவையாகும். அவற்றுக்கு நிகர் எதுவுமே கிடையாது.

நபித்தோழர்களின் நம்பகத்தன்மைக்கு அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் சான்று பகர்ந்துள்ளனர். நபித்தோழர்களின் நம்பகத்தன்மைக்குச் சான்றாகத் திருக்குர்ஆன் குறிப்பிடும் சான்றுகளைக் காண்போம்.

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏகஇறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணம்.

وَمَثَلُهُمْ فِي الْإِنْجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَىٰ عَلَىٰ سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ ۗ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது. அது தனது குருத்தை வெளிப்படுத்துகிறது. பின்னர் அதைப் பலப்படுத்துகிறது. பின்னர் கடினமாகி அதன் தண்டின் மீது நிலையாக நிற்கிறது. நிராகரிப்பவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துவதற்காக விவசாயி(கள் எனும் நம்பிக்கையுடையவர்)களை அது மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

(அல்குர்ஆன்: 48:29)

الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِنْدَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ ۚ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنْزِلَ مَعَهُ ۙ أُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்: 7:157)

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

(அல்குர்ஆன்: 9:100)

لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

(அல்குர்ஆன்: 9:108)

لَقَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍ مِنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ ۚ إِنَّهُ بِهِمْ رَءُوفٌ رَحِيمٌ
وَعَلَى الثَّلَاثَةِ الَّذِينَ خُلِّفُوا حَتَّىٰ إِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ أَنْفُسُهُمْ وَظَنُّوا أَنْ لَا مَلْجَأَ مِنَ اللَّهِ إِلَّا إِلَيْهِ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوبُوا ۚ إِنَّ اللَّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 9:117),118)

وَمَا لَكُمْ أَلَّا تُنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ لَا يَسْتَوِي مِنْكُمْ مَنْ أَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ ۚ أُولَٰئِكَ أَعْظَمُ دَرَجَةً مِنَ الَّذِينَ أَنْفَقُوا مِنْ بَعْدُ وَقَاتَلُوا ۚ وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَىٰ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டுப் போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகியதையே வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 57:10)

وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۚ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்: 59:9)

لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்தபோது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்.

(அல்குர்ஆன்: 48:18)

حَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: أَخْبَرَتْنِي أُمُّ مُبَشِّرٍ
لَا يَدْخُلُ النَّارَ، إِنْ شَاءَ اللهُ، مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ أَحَدٌ، الَّذِينَ بَايَعُوا تَحْتَهَا

நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் நாடினால் அந்த மரத்தின் கீழ் வாக்குப் பிரமாணம் அளித்தவர்களில் யாரும் நரகத்திற்குள் நுழையமாட்டார்கள்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு முபஷ்ஷிர் (ரலி), நூல்: (முஸ்லிம்: 4909) 

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، سَمِعْتُهُ مِنْهُ مَرَّتَيْنِ قَالَ: أَخْبَرَنِي حَسَنُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي رَافِعٍ، قَالَ: سَمِعْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ
 إِنَّهُ قَدْ شَهِدَ بَدْرًا، وَمَا يُدْرِيكَ لَعَلَّ اللَّهَ أَنْ يَكُونَ قَدِ اطَّلَعَ عَلَى أَهْلِ بَدْرٍ فَقَالَ: اعْمَلُوا مَا شِئْتُمْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ

அல்லாஹ், பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து, ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்’ என்று கூறி விட்டிருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நூல்: (புகாரி: 3007) 

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ ذَكْوَانَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لاَ تَسُبُّوا أَصْحَابِي، فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ، ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ، وَلاَ نَصِيفَهُ»

‘என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் உங்களில் ஒருவர் உஹத் மலையளவு தங்கத்தைச் செலவிட்டாலும் அவர்களின் இரு கையளவு அல்லது அதில் பாதியளவுக்கு அது ஈடாகாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி), நூல்: (புகாரி: 3673) 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسًا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ»

இறை நம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல் : (புகாரி: 17) 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، قَالَ: سَمِعْتُ البَرَاءَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«الأَنْصَارُ لاَ يُحِبُّهُمْ إِلَّا مُؤْمِنٌ، وَلاَ يُبْغِضُهُمْ إِلَّا مُنَافِقٌ، فَمَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ اللَّهُ، وَمَنْ أَبْغَضَهُمْ أَبْغَضَهُ اللَّهُ»

இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க  மாட்டார்கள்; அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும்  மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.

அறிவிப்பவர்: பராஉ (ரலி), நூல்: (புகாரி: 3783) 

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ، قَالَ: سَمِعْتُ زَهْدَمَ بْنَ مُضَرِّبٍ، قَالَ: سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«خَيْرُكُمْ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» – قَالَ عِمْرَانُ: لاَ أَدْرِي أَذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ قَرْنَيْنِ أَوْ ثَلاَثَةً – قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ بَعْدَكُمْ قَوْمًا يَخُونُونَ وَلاَ يُؤْتَمَنُونَ، وَيَشْهَدُونَ وَلاَ يُسْتَشْهَدُونَ، وَيَنْذِرُونَ وَلاَ يَفُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ»

‘‘உங்களில் சிறந்தவர் என் காலத்தவரே. அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். உங்களுக்குப் பின்னர் ஒரு கூட்டம் வரும். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப்படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

நூல்: (புகாரி: 2651) , 3650, 6428, 6695

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

«النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ، فَإِذَا ذَهَبَتِ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ، وَأَنَا أَمَنَةٌ لِأَصْحَابِي، فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِي مَا
يُوعَدُونَ، وَأَصْحَابِي أَمَنَةٌ لِأُمَّتِي، فَإِذَا ذَهَبَ أَصْحَابِي أَتَى أُمَّتِي مَا يُوعَدُونَ»

நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு ஆவேன். நான் போய்விட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். என் தோழர்கள் என் சமுதாயத்தாருக்குப் பாதுகாப்பு ஆவார்கள். என் தோழர்கள் போய்விட்டால் என் சமுதாயத்தாருக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்.

அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்ரி (ரலி) நூல்: (முஸ்லிம்: 4953) 

وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ

(ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையானவர்கள். (48:29)

 وَّيَنْصُرُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ‌ۚ‏

அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவுகின்றனர். அவர்களே உண்மையாளர்கள்.(59:8)

وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنْفُسِهِمْ

அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர்.(59:9)

فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ

அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான்.(48:18)

يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ

ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். (59:9)

يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا

அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். (48:29)

لَقَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான்.(9:117)

என்றெல்லாம் அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ் நற்சான்று வழங்கிய பிறகு அவர்களின் நம்பகத்தன்மைக்கு இவையே போதுமான சான்றாகும்.

நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்று நாம் தீர்மானித்துவிட்டதால் அவர்கள் அனைவரும் சுவர்க்கவாசிகள் என நாம் தீர்மானித்துவிட்டதாகக் கருதிவிடக்கூடாது.

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் யாரை சுவர்க்கவாசி என்று குறிப்பாகவும், பொதுப்படையாகவும் குறிப்பிட்டார்களோ அவர்களைத் தவிர வேறு யாரையும் நாம் சுவர்க்கவாசி என்றோ, நரகவாசி என்றோ தீர்மானிப்பது கூடாது.

நபித்தோழர்கள் அனைவரும் நம்பக மானவர்கள் என்பதன் பொருள் அவர்களின் அறிவிப்பை மறுக்கும் அளவிற்கு அவர்களிடம் எந்த ஒரு குறையும் இல்லை என்பதுதான். அவர்களது சொந்தக் கருத்துக்களை மார்க்கமாகக் கருதிப் பின்பற்றலாம் என்றும் இதைப் புரிந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் இறைச்செய்தியை மட்டுமே ஒரு முஸ்லிம் மார்க்கமாகப் பின்பற்ற வேண்டும்.

நபித்தோழர்கள் அறிவிக்கும் அறிவிப்புகளில் அறியாமல் நிகழும் சில தவறுகள் நிகழ்ந்துள்ளன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அவை ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகும் போது அந்த அறிவிப்புகளை ஏற்க வேண்டிய அவசியமில்லை. இது போன்றவை தவிர நபி (ஸல்) கூறியதாக நபித்தோழர்கள் அறிவிக்கும் எந்தச் செய்தியாக இருந்தாலும் அதன் அறிவிப்பாளர் தொடர் சரியாகவும், குர்ஆனுக்கு முரண் இல்லாமலும் இருந்தால் அது ஆதாரப்பூர்வமான செய்தியாகவே கருதப்படும்.