நபித்தோழர்களும் மனிதர்களே!

பயான் குறிப்புகள்: கொள்கை

நபித்தோழர்களும் மனிதர்களே!

ஆன்மீகத்தின் பெயரால் மக்கள் வழிதவறிவிடக் கூடாது என்பதற்காக ‘நபிமார்களும் மனிதர்களே!’ என்பதை மக்களுக்கு மத்தியில் எடுத்துரைத்து மாற்றம் கண்டு கொண்டிருக்கின்ற வேளையில் ‘ஸஹாபாக்களும் மனிதர்களே!’ என்பதை விளக்க வேண்டிய நிலை.

மக்களைத் திருத்துவதற்கும் மார்க்கத்தை அவர்கள் முழுமையாக விளங்குவதற்கும் கடும் முயற்சியை எடுத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் அறியாமையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இன்னும் அதளபாதாளத்தில் அவர்களைத் தள்ளும்  கொடுமையை எங்கு போய் சொல்வது? மக்கள் எந்த இடத்தில் நின்றார்களோ அதை விட மோசமான இடத்தில் அவர்களைத் தள்ளி வழிகெடுப்பவர்கள் இறைவனுக்கு அஞ்சி நடக்க வேண்டும்.

இதற்கு முன் பல வருடங்கள் உங்களிடம் வாழ்ந்துள்ளேன். விளங்கமாட்டீர்களா? என்று (முஹம்மதே) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 10:16).)

இறைத்தூதர் என்று தம்மை அறிமுகப் படுத்துவதற்கு முன் பொய், பித்தலாட்டம், ஒழுக்கக்கேடு, தீய பழக்கவழக்கங்கள் போன்ற அனைத்திலிருந்தும் அவர்கள் விடுபட்டு, பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் நாம் அறியலாம். இப்படிப்பட்ட அல்லாஹ்வின் தூதரே நானும் மனிதன் தான் என்று கூறியுள்ளார்கள்.

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, “நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகின்றார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கின்றேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்) விட்டுவிடட்டும்‘’ என்று கூறினார்கள்.

(புகாரி: 2458)

இறைவன் புறத்திலிருந்து இறைச் செய்தி எனக்கு வருகின்றது என்பதைத் தவிர்த்து நானும் உங்களைப் போன்ற மனிதன் தான் என்று அறிவிப்புச் செய்யுமாறு இறைவனும் தனது திருமறையில் நபிகளாருக்குக் கட்டளை பிறப்பிக்கின்றான்.

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது.

(அல்குர்ஆன்: 18:110).)

‘‘என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும் தூதராகவுமே இருக்கிறேன்’’ என்று (முஹம்மதே) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 17:93).)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே அல்லாஹ் இவ்வாறு பிரகடனப்படுத்தச் சொல்கிறான் எனும் போது ஸஹாபாக்களும் மனிதர்களே என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. எனினும் நபித்தோழர்கள் செய்ததெல்லாம் மார்க்கம் என்று பிரச்சாரம் செய்யும் சிலருக்காக நாம் இதைச் சொல்ல வேண்டியுள்ளது.

நபித்தோழர்களும் மனிதர்கள் தாம் என்பற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

காலித் பின் வலீத் (ரலி)

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், காலித் பின் வலீத் (ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்புக் கொடுத்தார். அவர்களுக்கு ‘அஸ்லம்னா – நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்’ என்று சொல்லாமல் ‘ஸபஃனா, ஸபஃனா’ – ‘நாங்கள் மதம் மாறி விட்டோம், மதம் மாறிவிட்டோம்’ என்று சொல்லலானார்கள். உடனே காலித் (ரலி) அவர்கள், அவர்களில் சிலரைக் கொல்லவும், சிலரைச் சிறை பிடிக்கவும் தொடங்கினார். அவர் (தம்முடன் வந்திருந்த) எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார்.

ஒருநாள் காலித், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை நான் கொல்ல மாட்டேன்; மேலும், என் சகாக்களில் ஒருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்லமாட்டார்’’ என்று சொன்னேன். இறுதியில், நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி, ‘‘இறைவா! காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று இருமுறை சொன்னார்கள்.

(புகாரி: 4339)

நாங்கள் இருக்கும் மார்க்கத்திலிருந்து மாறிவிட்டோம்; இஸ்லாத்தை ஏற்றுவிட்டோம் என்ற கருத்தில் அமைந்த ‘மதம் மாறிவிட்டோம்’ என்று அம்மக்கள் கூறிய வார்த்தையின் கருத்தை விளங்காமல் அம்மக்களை கொல்லும் படி காலித் பின் வலீத் (ரலி) கட்டளை பிறப்பித்திருக்கிறார்கள்.

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி):

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவிலுள்ள என் உறவினர்களையும், சொத்துக்களையும், உமய்யா பின் கலஃப் (என்ற இறைமறுப்பாளன்) பாதுகாக்க வேண்டும்’ என்றும் ‘மதீனாவிலுள்ள அவனுடைய உறவினர்களையும், சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன்’ என்றும் அவனுடன் எழுத்து வடிவில் ஒப்பந்தம் செய்து கொண்டேன்.  (ஒப்பந்தப் படிவத்தில்) ‘ அப்துர் ரஹ்மான்’ (ரஹ்மானின் அடிமை) என்று என் பெயரை எழுதியபோது, “ரஹ்மானை நான் அறிய மாட்டேன்; அறியாமைக் காலத்து உமது பெயரை எழுதும்’’ என்று அவன் கூறினான்.  நான் அப்து அம்ரு என்று (என் பழைய பெயரை) எழுதினேன்.  பத்ருப் போர் நடந்த தினத்தில் மக்களெல்லாம் உறங்கிய உடன் அவனைப் பாதுகாப்பதற்காக மலையை நோக்கிச் சென்றேன். அவனை பிலாலும் பார்த்துவிட்டார். 

பிலால் உடனே வந்து அன்ஸாரிகள் குழுமியிருந்த இடத்தை அடைந்து, “இதோ உமையா பின் கலப்! இவன் தப்பித்துவிட்டால் நான் தப்பிக்க முடியாது’’ எனக் கூறினார்.  (இவன் பிலாலுக்கு எஜமானனாக இருந்து அவரைச் சித்திரவதை செய்தவன்.) பிலாலுடன் அன்ஸாரிகளில் ஒரு கூட்டத்தினர் எங்களைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் எங்களைப் பிடித்துவிடுவார்கள் என்று நான் அஞ்சியபோது, உமய்யாவின் மகனை முன்னிறுத்தி அவர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றேன். அவனை அன்ஸாரிகள் கொன்றனர். பிறகும் என்னைத் தொடர்ந்து வந்தனர். 

உமய்யா உடல் கனத்தவனாக இருந்தான். (அதனால் ஓட இயலவில்லை) அவர்கள் எங்களை அடைந்ததும் உமய்யாவிடம், ‘குப்புறப் படுப்பீராக!’ என்று கூறினேன். அவன் குப்புற விழுந்ததும் அவனைக் காப்பாற்றுவதற்காக அவன் மேல் நான் விழுந்தேன்.  அன்ஸாரிகள் எனக்குக் கீழ்ப்புறம் வாளைச் செலுத்தி அவனைக் கொன்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் என் காலையும் தமது வாளால் வெட்டினார்.

(புகாரி: 2301)

மிகச் சிறந்த தோழரான அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மனிதன் என்ற முறையில் மார்க்கத்துக்கு எதிராக நடந்து கொண்டுள்ளார்கள்.

ஹாத்திப் பின் அபீ பல்தஆ:

போர்க்கால சமயத்தில் முஸ்லிம்களின் உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்றுவதற்காக தந்திரம் செய்யலாம், பொய் சொல்லலாம் என்கின்ற அளவிற்கு இஸ்லாம் அனுமதி வழங்கியிருக்க ஹாத்திப் பின் அபீ பல்தஆ என்ற நபித்தோழரோ முஸ்லிம்களின் நிலையை சற்றும் புரிந்து கொள்ளாமல் முஸ்லிம்களின் இராணுவ நடவடிக்கைகளை மக்கத்து குறைஷியர்களுக்குத் தெரியப்படுத்துகின்றார்.

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின்  தூதர்  (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அவ்வாம் அவர்களையும் மிக்தாத் பின் அஸ்வத்  அவர்களையும், “நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ எனும் இடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண்  இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் ‘ரவ்ளா’ எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம்.

நாங்கள் (அவளிடம்),  ‘‘கடிதத்தை வெளியே எடு’’ என்று  கூறினோம். அவள், ‘‘என்னிடம் கடிதம் எதுவுமில்லை’’ என்று சொன்னாள். நாங்கள்,  “ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்’’ என்று  சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள்.

நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் பின் அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணை வைப்போரிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஹாத்திபே! என்ன இது?’’ என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாகவே இருந்து வந்தேன்.

தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால்,  (இணைவைப்பவர்களான) மக்காவாசிகளுக்கு நான்  உபகாரம்  எதையாவது செய்து அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் அங்குள்ள என் (பலவீனமான) உறவினர்களைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (அதனால், இணைவைப்பவர்கள் கேட்டுக் கொண்டதால் இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் என் மார்க்கத்தை விட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை’’ என்று கூறினார்கள்.

(இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் உங்களிடம் உண்மை பேசினார்’’ என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்!’’ என்று கூறினார்கள். அதற்கு  நபி (ஸல்)  அவர்கள், “இவர் பத்ருப்  போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உங்களுக்கென்ன தெரியும்? ஒரு வேளை, அல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களிடம் ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்’ என்று கூறி விட்டிருக்கலாம்’’ என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ் பின்வரும் (60வது) அத்தியாயத்தை அருளினான்: நம்பிக்கை கொண்டோரே! எனது பாதையிலும், எனது திருப்தியை நாடியும் அறப்போருக்குப் புறப்படுவோராக நீங்கள் இருந்தால் எனது பகைவரையும், உங்கள் பகைவரையும் நீங்கள் அன்பு செலுத்தும் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்கள் உங்களிடம் வந்துள்ள உண்மையை மறுக்கின்றனர்…….(60:1)

(புகாரி: 4274)

அயிஷா (ரலி)

எந்த மார்க்கத்தில் குரோதம், பிணக்கு  கூடாது என்று வலியுறுத்தப்பட்டதோ அதே மார்க்கத்தின் தலையங்கமாகத் திகழ்ந்த நபித்தோழர்களிடத்திலும் இது போன்ற பிரச்சனைகள் நிலவியதைக் காண்கின்றோம்.

எதிரியிடத்தில் கூட மென்மையைக் கடைப்பிடித்த, தன்னைக் கொல்ல வந்தவனிடம் கூட மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட, மோசமானவர்களிடத்தில் கூட இனிமையாகப் பழகியவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். அவர்களுடன் வாழ்ந்த அவர்களது அன்பிற்குரிய மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் நபிகளாரின் மருமகனான அலீ (ரலி) அவர்களிடம் நடந்து கொண்ட முறையைப் பாருங்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் நோய் அதிகரித்தபோது, எனது வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதி வழங்கிவிட்டனர். அப்போது தமது கால்கள் தரையில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.

-(அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸை நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாத அந்த வேறொரு மனிதர் யார் என்று தெரியுமா?’’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்று பதிலளித்தேன். “அவர்தாம் அலீ (பின் அபீதாலிப் (ரலி)’’ என்று அவர்கள் கூறினார்கள்.

(புகாரி: 198)

இவ்வாறு ஆயிஷா ரலி அவர்கள் அலீ (ரலி) யின் பெயரைக் கூட குறிப்பிட விரும்பாததற்குக் காரணம் ஆயிஷா (ரலி) மீது அவதூறு சுமத்தப்பட்ட போது நபிகளார் அவர்களைப் பற்றி கருத்துக்கணிப்பு கேட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களையும், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது ‘வஹீ’ (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா (ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியமாட்டேன்’’ என்று அவர்கள் கூறினார்கள்.

அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களோ “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர்’’ என்று அலீ (ரலி) அவர்கள் கருத்துக் கூறினார்கள்.

இவ்வாறு கருத்துக் கூறினால் எந்தப் பெண் தான் தாங்கிக்கொள்வாள்? ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? சக பெண்மணிகள் எவ்வாறு நடந்து கொள்வார்களோ அது போலத்தான் ஆயிஷா (ரலி) அவர்களும் நடந்து கொண்டார்கள் என்பதற்கு மேற்கண்ட செய்திகள் சிறந்த எடுத்துக்காட்டாகும். இதுவே அவர்களின் மனக்கசப்பிற்குக் காரணமாக இருந்தது.