08) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு

நூல்கள்: நபித் தோழர்களும் நமது நிலையும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு

நபித் தோழர்களும் மனிதர்களே! அவர்களிடமும் தடுமாற்றங்களும், தவறான முடிவுகளும் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்து சென்றுள்ளனர்.

நியாயத் தீர்ப்பு நாளில் மக்களெல்லாம் பதை பதைப்புடன் நிற்கும் போது நடக்கும் ஒரு நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

என் தோழர்களில் சிலர் இடது புறமாகப் பிடிக்கப்படுவார்கள். (அதாவது நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவார்கள்) அப்போது நான் “அவர்கள் என் தோழர்கள்! அவர்கள் என் தோழர்கள்! என்று கூறுவேன். அதற்கு இறைவன் “நீ அவர்களைப் பிரிந்தது முதல் வந்த வழியே அவர்கள் திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர் என்று கூறுவான். அப்போது நான் “அவர்களுடன் நான் இருந்த வரை அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். எப்போது என்னை நீ கைப்பற்றிக் கொண்டாயோ (அப்போது முதல்) நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய் என்று என் சகோதரர் ஈஸா கூறியது போல் நானும் கூறிவிடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 3349, 3447)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் சில நபித்தோழர்கள் தவறான பாதைக்குச் சென்று விடுவார்கள் என்பது முன்னரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனால் அறிவிக்கப்பட்டு அவர்கள் அதனை நமக்கு அறிவித்துச் சென்று விட்டனர்.

இந்த நிலையில் நபித்தோழர்களின் கூற்றுகள் மார்க்க ஆதாரம் என்று சொல்ல முடியுமா?

நபித்தோழர்களில் சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத பித்அத்களை உருவாக்குவார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு முன்னறிவிப்புச் செய்துள்ளனர்.

நான் கவ்ஸர் எனும் தடாகத்தில் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். யார் என்னைக் கடந்து செல்கிறாரோ அவர் அதனை அருந்துவார். யார் அதனை அருந்துகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது. என்னிடம் சில கூட்டத்தினர் வருவார்கள். அவர்களை நானும் அறிவேன். அவர்களும் என்னை அறிவார்கள். பின்னர் எனக்கும் அவர்களுக்குமிடையே திரையிடப்படும். “அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவேன். ‘உமக்குப் பின்னால் அவர்கள் எதையெல்லாம் புதிதாக உருவாக்கி விட்டனர் என்பது உமக்குத் தெரியாது’ என்று கூறப்படும். “எனக்குப் பின் மார்க்கத்தை மாற்றியவர்களுக்குக் கேடு தான்; கேடு தான் என்று நான் கூறுவேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹ்ல் பின் ஸஅது (ரலி) அறிவிக்கிறார்.

இது பற்றி அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் போது “நியாயத் தீர்ப்பு நாளில் என் தோழர்களில் ஒரு கூட்டத்தினர் என்னிடம் வருவார்கள். அவர்கள் (கவ்ஸர்) தடாகத்தை விட்டும் தடுக்கப்படுவார்கள். அப்போது நான் “என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்; என் இறைவா! இவர்கள் என் தோழர்கள் எனக் கூறுவேன். “உமக்குப் பின்னால் அவர்கள் எதையெல்லாம் புதிதாக உருவாக்கி விட்டனர் என்ற அறிவு உமக்கு இல்லை. அவர்கள் வந்த வழியே பின்புறமாகத் திரும்பிச் சென்று விட்டனர் என்று இறைவன் கூறுவான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி: 6585, 6586)

இதே கருத்து(புகாரி: 4740, 6526, 6576, 6582, 7049)ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதையும், செய்ததையும் மட்டுமே நபித்தோழர்கள் செய்வார்கள். நபிவழியில் இல்லாத எந்த ஒன்றையும் நபித்தோழர்கள் செய்ய மாட்டார்கள் என்றெல்லாம் காரணம் கூறித் தான் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்கள் என்று வாதிட்டு வருகின்றனர்.

அவை அனைத்துமே ஆதாரமற்ற பொய்க்கூற்று என்பது இந்த நபிமொழிகள் மூலம் தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாததையும், செய்யாததையும் சில நபித்தோழர்கள் புதிதாக உருவாக்கி, அதன் காரணமாக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றால் இந்தக் கடும் எச்சரிக்கையில் இருந்து நாம் பெற வேண்டிய பாடம் என்ன?

நபித்தோழர்களின் சொற்களாக இருந்தாலும், செயல்களாக இருந்தாலும் அதற்கு குர்ஆனிலிருந்தும் நபிவழியில் இருந்தும் ஆதாரம் காட்டப்பட்டிருந்தால் மட்டுமே அதைப் பின்பற்ற வேண்டும். நபிவழியை ஆதாரமாகக் காட்டாமல் அவர்கள் செய்தவை எதுவாக இருந்தாலும் அவை பித்அத்தாக இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அதை மார்க்க ஆதாரமாகக் கருதக் கூடாது என்பது தான் இதிலிருந்து நாம் பெற வேண்டிய பாடம்.

நபித்தோழர்கள் நம்மை விடப் பல மடங்கு சிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையை நாம் மறந்து விடக் கூடாது.

ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்து காபிர்களாகி விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் எச்சரிக்கை செய்தார்கள்.

(புகாரி: 121, 1739, 1741, 4403, 4405, 4406, 5550, 6166, 6868, 6869, 7077, 7078, 7080, 7447)

ஆனால் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு நபித்தோழர்கள் தமக்கிடையே வாள் ஏந்தி போரிட்டு ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்யும் நிலைக்கு ஆளாயினர்.

ஆயிஷா (ரலி) தலைமையில் அணிவகுத்தவர்களும் நபித்தோழர்களே. சொர்க்கவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நற்செய்தி கூறப்பட்டவர்களும் அவர்களில் இருந்தனர்.

அலி (ரலி) அவர்களின் தலைமையில் அணிவகுத்தவர்களும் நபித்தோழர்களே. சொர்க்கவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நற்செய்தி கூறப்பட்டவர்கள் இந்த அணியிலும் இருந்தனர்.

தலைமை தாங்கிய இருவரும் சொர்க்கவாசிகள் என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் தாம்.

அப்படி இருந்தும் ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் ஆயுதம் ஏந்தி போர் செய்தார்கள். (அவர்கள் அனைவரையும் அல்லாஹ் மன்னிப்பானாக)

அவர்களை விமர்சனம் செய்வதற்காக இதனை நாம் எடுத்துக் காட்டவில்லை.

மனிதர்கள் என்ற முறையில் இத்தகைய பாரதூரமான காரியத்தையே அவர்கள் செய்திருக்கும் போது அவர்களின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆக முடியும் என்பதற்காகவே இதனை எடுத்துக் காட்டுகிறோம்.

இது போலவே முஆவியா (ரலி) தலைமையிலும், அலி (ரலி) தலைமையிலும் நபித்தோழர்கள் அணி திரண்டு போர் செய்தனர். ஒருவரை ஒருவர் கொலை செய்யும் நிலை ஏற்பட்டது.

கொலை செய்தவர்களிலும் நபித்தோழர்கள் இருந்தனர். கொல்லப்பட்டவர்களிலும் நபித்தோழர்கள் இருந்தனர்.

அதன் பின்னர் நடந்த கர்பலா யுத்தத்திலும் இரண்டு அணியிலும் சில நபித்தோழர்கள் இருந்தனர்.

ஒரு முஸ்லிமுக்கு எதிராக இன்னொரு முஸ்லிம் ஆயுதம் தாங்கி கொலை செய்வது மிகப் பெரிய பாவச் செயல் என்ற நிலையிலும் நபித்தோழர்களிடம் இது நிகழ்ந்துள்ளது.

வஹீயைத் தவிர வேறு எதுவும் பாதுகாப்பானது இல்லை என்பதை அறிந்திட இது போதுமான சான்றாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே நபித்தோழர்களிடம் நடந்த தவறுகளை நாம் இங்கே சுட்டிக்காட்ட விரும்பவில்லை. அவற்றைப் பட்டியலிட்டால் இந்த நூல் அதற்கு இடம் தராது.

பொதுவாக நபித்தோழர்களும் மனிதர்கள் தாம். அவர்களது சிந்தனையில், தீர்ப்புகளில் நிச்சயம் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை இந்த ஆதாரங்கள் விளக்குகின்றன.

குறிப்பாகவும் நபித்தோழர்கள் வாழ்வில் அதற்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைக்கின்றன.