நபிகள் நாயகத்தின் முடிக்கு(?) தர்கா!
நபிகள் நாயகத்தின் முடிக்கு(?) தர்கா!
காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் ஹஸ்ரத் பால் தர்கா இருக்கிறது. இது தர்கா என்று சொல்லப்பட்டாலும் இங்கு சமாதி எதுவும் கிடையாது. பால் என்ற பாரசீகச் சொல்லிக்கு முடி என்று பொருள். ஹஸ்ரத் பால் என்றால் புனித முடி என்று பொருள். இந்த தர்காவில் ஒரு முடி காட்சிப் படுத்தப்பட்டு, அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முடி என்று சொல்லப்படுகிறது. இதற்கு ஒரு கதையையும் கட்டியுள்ளனர்.
நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல் என்று சொல்லிக் கொண்டு சையது அப்துல்லாஹ் என்பவர் கடந்த 1635ஆம் ஆண்டு ஹைதராபாத் அருகில் உள்ள பீஜப்பூருக்கு வந்தாராம். (கர்நாடக மாநிலத்தில் பீஜப்பூர் என்னும் இன்னொரு நகரம் இருக்கிறது) அவர் தன்னுடன் ஒரு முடியை எடுத்து வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முடி என்றாராம். அந்த முடி காஷ்மீர் வியாபாரியான ஹாஜா நூருத்தின் என்பவர் வசம் வந்தது.
இதையறிந்த முகலாய மன்னர் ஒளரங்கசீப் அந்த முடியை மீட்டு ராஜஸ்தானில் இருக்கும் அஜ்மீர் தர்காவுக்கு அனுப்பி வைத்தாராம்! பின்னால் அது தவறு என உணர்ந்து மீண்டும் காஷ்மீருக்கே அனுப்பி வைக்கப்பட்டு, ஸ்ரீநகரில் ஹஸ்ரத் பால் என்ற தர்கா அமைக்கப்பட்ட்தாம். அந்த முடி ஒவ்வொரு ஆண்டின் மீலாது நாளின் போது எடுத்து காண்பிக்கப்படுகிறது. இதைக் கண்டு மார்க்க அறிவு அற்ற முஸ்லிம்கள் பரவசப்படுகிறார்கள் என செய்தி வெளியாகியுள்ளது.
தனது முடி புனிதமானது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. எனவே இந்த முடியை புனிதம் என நம்புவது இஸ்லாத்துக்கு எதிரானதாகும். இதை முதலில் முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முடி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒரு பரதேசி ஒரு முடியைக் கொண்டு வந்து நபிகள் நாயகத்தின் முடி என்று சொன்னதுதான் ஆதாரமாம்.
1963ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாளில் ஹஸ்ரத் பாலில் இருந்த முடி காணாமல் போய் விட்டது. இதனால் காஷ்மீரில் 9 நாட்கள் கடுமையான போராட்டங்கள் நடந்து, காஷ்மீரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருந்தாலும் அந்த முடி கண்டு பிடிக்கப்படவில்லை. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இதுதான் காணாமல் போன நபிகள் நாயகத்தின் முடி என்று ஒரு முடி கொண்டு வரப்பட்டு, ஹஸ்ரத் பாலில் வைக்கப்பட்டது. காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த முடி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முடி என வைத்துக் கொண்டாலும் இஸ்லாத்தில் இந்த முடிக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது.
இதை முஸ்லிம்கள் புரிந்து கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான எல்லா மூட நம்பிக்கைகளில் இருந்தும் விடுபட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதை மார்க்கம் கடமையாக்கி இருக்கிறது. நபிகள் நாயகத்தின் முடியை புனிதம் என நம்புவது, நபிகள் நாயகத்திற்கு பிறந்த நாள் கொண்டாடுவது உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை வெறுத்து ஒதுக்கி, இஸ்லாமியக் கொள்கையை ஓங்கச் செய்ய வேண்டும். இதை முஸ்லிம்கள் புரிந்து நடக்க முன்வர வேண்டும்!
Source:unarvu(08/12/18)