105) நபிகள் நாயகத்தின் கப்ரும், பள்ளிவாசலும்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

நபிகள் நாயகத்தின் அடக்கத் தலம் பள்ளிவாசலை ஒட்டி அமைந்திருந்த அவர்களின் வீட்டில் தான் இருந்தது. அபூ பக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) ஆகியோரின் ஆட்சிக் காலம் முழுவதும் நபிகள் நாயகத்தின் அடக்கத் தலம் பள்ளியின் ஒரு பகுதியாக ஆக்கப்படவில்லை.

பின்னர் வலீத் பின் அப்துல் மாலிக் (இவர் இஸ்லாத்தை அறவே பேணாதவர்) ஆட்சியில் ஹிஜ்ரி 88ஆம் ஆண்டு மஸ்ஜிதுன் நபவி இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்டது. இவ்வாறு கட்டும் போது தான் நபிகள் நாயகத்தின் அடக்கத் தலத்தையும் பள்ளிவாசலுக்குள் அவர் கொண்டு வந்தார்.

இந்தச் சமயத்தில் மதீனாவில் எந்த ஒரு நபித் தோழரும் உயிருடன் இருக்கவில்லை. நபித்தோழர்களில் மதீனாவில் கடைசியாக மரணித்தவர் ஜாபிர் (ரலி) அவர்கள். இவர்கள் ஹிஜ்ரி 78ஆம் ஆண்டு மரணித்தார்கள். மதீனாவில் ஒரு நபித்தோழரும் உயிருடன் இல்லாத 88ஆம் ஆண்டு தான் இந்தத் தவறை வலீத் என்ற மன்னர் செய்தார்.

உஸ்மான் (ரலி) அவர்கள் தான் கப்ரை பள்ளியில் சேர்த்தார் என்பது கட்டுக் கதையாகும். அவர்கள் காலத்தில் பள்ளிவாசலை விரிவுபடுத்திய போது நபிகள் நாயகத்தின் அடக்கத் தலத்தையும் நபிகள் நாயகத்தின் மனைவியர் வசித்த அறைகளையும் தவிர்த்து விட்டுத் தான் விரிவுபடுத்தினார். அவர் மரணித்து சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் வலீத் இக்காரியத்தைச் செய்தார்.