நபிகளார் கூறிய கடந்த கால நிகழ்வுகள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

முன்னுரை

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இந்த பூமியில் இப்போது நாம் வாழ்வதற்கு முன்னால், பல சமுதாய மக்கள் வாழ்ந்து சென்றுவிட்டார்கள். அவர்கள் அனைவரையும் பற்றி முழுமையாக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. முக்காலத்தையும் தெளிவாகத் தெரிந்திருக்கும் தன்மை என்பது ஏகஇறைவனுக்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பாகும்.

கடந்த தலைமுறையினர் அனைவரையும் பற்றிய அனைத்துச் செய்திகளையும் அறிந்திருக்கிற ஆற்றல் மனிதனுக்கு இல்லை. இந்நிலையில், இறைவனிடம் இருந்து வரும் இறைச்செய்தியின் வாயிலாக முந்தைய சமுதாயத்தவர்கள் தொடர்பான பல்வேறு சம்பவங்களை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அந்த நிகழ்வுகளை இந்த உரையில் அறிந்து கொள்வோம்.

1. இரத்தம் சிந்திய இறைத்தூதர்

சத்தியத்தை எடுத்துரைக்கும்போது மடை திறந்த வெள்ளம் போல பல இடையூறுகள் நம்மை நோக்கி வரும். கண்மூடித்தனமாக நம்மைத் திட்டுவது, விமர்சிப்பது என்ற எல்லையைக் கடந்து சில இடங்களில் சில நேரங்களில் அசத்தியவாதிகள் சத்தியவாதிகளை இரத்தம் சிந்துமளவிற்கு தாக்குவதற்கு முற்படுவார்கள்.

அதன் உச்சகட்டமாக சில தருணம் இறைவழியில் உயிரைத் துறக்கும் நிலையும் ஏற்படலாம். சாதாரண இறைநம்பிக்கையாளர்கள் மட்டுமல்ல. இறைத்தூதர்களும் இவ்வாறான உயிருக்கு ஆபத்தான இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்துள்ளார்கள் என்பதை ஏகத்துவவாதிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

قَالَ عَبْدُ اللَّهِ
كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَحْكِي نَبِيًّا مِنَ الأَنْبِيَاءِ ، ضَرَبَهُ قَوْمُهُ فَأَدْمَوْهُ، وَهُوَ يَمْسَحُ الدَّمَ عَنْ وَجْهِهِ وَيَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لاَ يَعْلَمُونَ

(முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. “அந்த இறைத்தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்து விட்டார்கள். அப்போது அவர் தம் முகத்தில் இருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, “இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்துவிடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி),
ஆதாரம் : (புகாரி: 3477) , முஸ்லிம் (1792)

2. கடனைத் தள்ளுபடி செய்தவர்

ஒவ்வொருவரும் சகமனிதர்களுடன் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்பவர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில், கடன் பெற்றவர் உண்மையாகவே அதைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருக்கும்போது கடன்கொடுத்தவர் அவரிடம் இரக்கத்தோடு நளினமாக நடந்துகொள்ள வேண்டும். அதற்கும் மேலாக ஒருவர், தாம் கொடுத்த கடனைத் தள்ளுபடி செய்துவிடுகிறார் எனும்போது அவர் அல்லாஹ்விடம் தமது பாவங்கள் தள்ளுபடி செய்யப்படும் பொன்னான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வார்.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
كَانَ الرَّجُلُ يُدَايِنُ النَّاسَ، فَكَانَ يَقُولُ لِفَتَاهُ: إِذَا أَتَيْتَ مُعْسِرًا فَتَجَاوَزْ عَنْهُ، لَعَلَّ اللَّهَ أَنْ يَتَجَاوَزَ عَنَّا، قَالَ: فَلَقِيَ اللَّهَ فَتَجَاوَزَ عَنْهُ

(முன் காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தனது (அலுவலரான) வாலிபரிடம், “(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக்கூடும்” என்று சொல்லிவந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்தபோது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
ஆதாரம் : (புகாரி: 3480) , 2078,(முஸ்லிம்: 1562)

3. பூனையைத் துன்புறுத்திய பெண்மணி

ஒருபோதும் நரகத்தில் விழுந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையோடு வாழும் நாம், மனிதர்களிடம் மட்டுமல்ல மற்ற ஜீவராசிகளிடமும் கருணை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். பிற உயிர்களின் விஷயத்தில் மார்க்கம் விடுக்கும் எச்சரிக்கையை மறந்து அவற்றைச் சித்தரவதைச் செய்து துன்புறுத்துவதும், கொடுமைப்படுத்தி வேடிக்கை பார்ப்பதும் பாவமான காரியம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

عَنْ عَبْدِ اللَّهِ  بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ سَجَنَتْهَا حَتَّى مَاتَتْ، فَدَخَلَتْ فِيهَا النَّارَ، لاَ هِيَ أَطْعَمَتْهَا وَلاَ سَقَتْهَا، إِذْ حَبَسَتْهَا، وَلاَ هِيَ تَرَكَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ

ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
ஆதாரம் : (புகாரி: 3482) முஸ்லிம் (2242)

4. பூமிக்குள் இழுக்கப்பட்ட மனிதர்கள்

எந்தவொரு நம்பிக்கையாளரிடமும் இருக்கக்கூடாத பண்புகளுள் முக்கியமான ஒன்று பெருமையடிக்கும் பண்பாகும். எல்லாவிதமான பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. எந்நாளும் எக்காரியத்திலும் அல்லாஹ்வை மறந்து அகந்தையோடு செயல்படுவது கூடாது என்பதை என்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

 أَنَّ ابْنَ عُمَرَ، حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
بَيْنَمَا رَجُلٌ يَجُرُّ إِزَارَهُ مِنَ الخُيَلاَءِ، خُسِفَ بِهِ، فَهُوَ يَتَجَلْجَلُ فِي الأَرْضِ إِلَى يَوْمِ القِيَامَةِ

(முற்காலத்தில்) ஒரு மனிதன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் (கணுக்காலின் கீழ் தொங்க விட்டு) இழுத்துக் கொண்டே நடந்த பொழுது, அவன் (பூமி பிளந்து, அதில்) புதைந்து போகும்படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
ஆதாரம் : (புகாரி: 3485) 

(முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக்கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்றுகொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமைநாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கியபடி அழுந்திச் சென்றுகொண்டேயிருப்பான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : (புகாரி: 5789) 

5. பிறரறியாமல் தர்மம் செய்தவர்

ஒருவர் செய்யும் செயல்கள் மிகச் சிறியதாயினும், மிகப் பெரியதாயினும் அவற்றை அவர் எந்த எண்ணத்தில் செய்தார் என்பதைப் பொறுத்தே அவருக்குக் கூலி கிடைக்கும். நல்ல நோக்கத்தோடு செய்யும் காரியத்தின் மூலம் எதிர்பார்த்த நல்ல விளைவு ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் அதைச் செய்தவருக்கு அதன் மூலம் கட்டாயமாக நற்கூலி கிடைக்கும் என்பதே உண்மை.

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
قَالَ رَجُلٌ لَأَتَصَدَّقَنَّ اللَّيْلَةَ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ زَانِيَةٍ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ اللَّيْلَةَ عَلَى زَانِيَةٍ، قَالَ: اللهُمَّ، لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ، لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ غَنِيٍّ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ: تُصُدِّقَ عَلَى غَنِيٍّ، قَالَ: اللهُمَّ، لَكَ الْحَمْدُ عَلَى غَنِيٍّ، لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ: تُصُدِّقَ عَلَى سَارِقٍ، فَقَالَ: اللهُمَّ، لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ، وَعَلَى غَنِيٍّ، وَعَلَى سَارِقٍ، فَأُتِيَ فَقِيلَ لَهُ: أَمَّا صَدَقَتُكَ فَقَدْ قُبِلَتْ، أَمَّا الزَّانِيَةُ فَلَعَلَّهَا تَسْتَعِفُّ بِهَا عَنْ زِنَاهَا، وَلَعَلَّ الْغَنِيَّ يَعْتَبِرُ فَيُنْفِقُ مِمَّا أَعْطَاهُ اللهُ، وَلَعَلَّ السَّارِقَ يَسْتَعِفُّ بِهَا عَنْ سَرِقَتِهِ

(முற்காலத்தில்) ஒருவர் “நான் இன்றிரவு தர்மம் செய்யப்போகிறேன்’ எனக் கூறிக்கொண்டு, (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்) அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “இன்றிரவு ஒரு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது’ எனப் பேசிக்கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், “இறைவா! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்’ என்று கூறினார்.

மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளியே வந்து, அதை ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். மறுநாள் காலையில் மக்கள், “ஒரு பணக்காரருக்குத் தர்மம் செய்யப்பட்டுள்ளது’ எனப் பேசிக்கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், “இறைவா! பணக்காரருக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்’ என்று கூறினார்.

(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் புறப்பட்டுச் சென்று, ஒரு திருடனின் கையில் அதைக் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “இன்றிரவு ஒரு திருடனுக்குத் தர்மம் செய்யப்பட்டுள்ளது’ என்று பேசிக்கொண்டனர். உடனே அவர், “இறைவா! விபசாரிக்கும் பணக்காரனுக்கும் திருடனுக்கும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் உரியது’ எனக் கூறினார்.

பின்னர் (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு, உமது தர்மம் ஏற்கப்பட்டு விட்டது. விபச்சாரிக்கு நீர் கொடுத்த தர்மம், அவள் விபசாரத்திலிருந்து விலகி கற்பைப் பேணக் காரணமாக அமையலாம். பணக்காரனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தால் அவன் படிப்பினை பெற்று, அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்யக்கூடும். திருடனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மம் அவன் களவைக் கைவிடக் காரணமாக அமையலாம் என்று கூறப்பட்டது என முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : (முஸ்லிம்: 1856) 

6. தாவூத் நபியிடம் முறையிட்ட பெண்கள்

எந்தவொரு தாயும் தமது குழந்தை துன்பத்தில் தவிப்பதைத் தாங்கமாட்டாள். தான் சிரமப்பட்டாலும் தமது குழந்தை இன்பத்தோடு வாழவேண்டும் என்றுதான் பெற்றோர் விரும்புவார்கள். ஒரு குழந்தையின் மீது தாய் தந்தையர் கொண்டிருக்கும் பாசத்திற்கும் மற்றவர்கள் வைத்திருக்கும் பாசத்திற்கும் இடையே மாபெரும் வித்தியாசம் இருப்பதை மறுக்கவே முடியாது.

كَانَتِ امْرَأَتَانِ مَعَهُمَا ابْنَاهُمَا، جَاءَ الذِّئْبُ فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا، فَقَالَتْ صَاحِبَتُهَا: إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، وَقَالَتِ الأُخْرَى: إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، فَتَحَاكَمَتَا إِلَى دَاوُدَ، فَقَضَى بِهِ لِلْكُبْرَى، فَخَرَجَتَا عَلَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ فَأَخْبَرَتَاهُ، فَقَالَ: ائْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّهُ بَيْنَهُمَا، فَقَالَتِ الصُّغْرَى: لاَ تَفْعَلْ يَرْحَمُكَ اللَّهُ، هُوَ ابْنُهَا، فَقَضَى بِهِ لِلصُّغْرَى

(தாவூத் -அலை- அவர்களுடைய காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களுடைய மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்று விட்டது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், “உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்று விட்டது” என்று கூற, மற்றொருத்தி அவளிடம், “உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்று விட்டது” என்று கூறினாள்.

ஆகவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்களில்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (அவர்களுடைய தீர்ப்பில் கருத்து வேறுபாடு கொண்டு) அப்பெண்கள் இருவரும் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், “என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்” என்று கூறினார்கள்.

அப்போது இளையவள், “அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்” என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே, சுலைமான் (அலை) அவர்கள் “அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது’ என்று தீர்ப்பளித்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : (புகாரி: 3427) , முஸ்லிம் (1720)

7. தற்கொலை செய்து கொண்டவன்

நமக்கு உயிரைக் கொடுத்து இங்கு வாழ்வதற்கு வாய்ப்பளித்த இறைவனுக்கே அந்த உயிரை எடுக்கும் உரிமை இருக்கிறது. எனவே எந்தவொரு நேரத்திலும் அவனது உரிமையில் தலையிடக்கூடாது. நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத எந்தவொரு துன்பமான நிலையிலும் சுயமாக உயிரைப் போக்கி தற்கொலை செய்து கொள்வதற்கு முயன்றுவிடக்கூடாது. இதையும்மீறி, ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அவர் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார் என்று மார்க்கம் நம்மை எச்சரிக்கிறது.

 قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلّى الله  عليه وسلم
كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ بِهِ جُرْحٌ، فَجَزِعَ، فَأَخَذَ سِكِّينًا فَحَزَّ بِهَا يَدَهُ، فَمَا رَقَأَ الدَّمُ حَتَّى مَاتَ، قَالَ اللَّهُ تَعَالَى: بَادَرَنِي عَبْدِي بِنَفْسِهِ، حَرَّمْتُ عَلَيْهِ الجَنَّةَ

உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். (ஒரு முறை) அவர் காயமடைந்தார். அவரால் வலி பொறுக்க முடியாமல் ஒரு கத்தியை எடுத்துத் தன் கையைத் துண்டித்துக் கொண்டார். அவர் இறக்கும் வரை இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டேயிருந்தது. அல்லாஹ், “என் அடியான், தன் விஷயத்தில் (அவசரப் பட்டு) என்னை முந்திக் கொண்டான். அவன் மீது நான் சொர்க்கத்தை ஹராமாக்கி (அதை அவன் நுழையத் தடை செய்யப்பட்ட இடமாக ஆக்கி) விட்டேன்” என்று கூறினான். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜுன்துப் (ரலி)
ஆதாரம் : (புகாரி: 3463) 

8. சோதிக்கப்பட்ட மூன்று நபர்கள்

இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகவே படைத்திருக்கிறான். அவன் எந்தவிதத்திலும் எந்தநேரத்திலும் எந்தக் காரியத்திலும் நம்மைச் சோதிப்பான். எனவே எல்லா நிலைகளிலும் கவனத்துடன் மார்க்கம் கூறும் நெறியில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். சோதிக்கப்படும் போது சரியாக செயல்படும் நல்லவர்களுக்கு இறைவன் ஈருலுகிலும் நல்லதை வழங்குவான். அவர்களின் காரியங்களைப் பொருந்திக் கொள்வான்.

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழுநோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களைச் சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.

அவர் தொழுநோயாளியிடம் வந்து, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க அவர், “நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்” என்று சொன்னார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை விட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன.

பிறகு அவ்வானவர், “எந்தச் செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?” என்று கேட்க அவர், “ஒட்டகம் தான்… (என்றோ) அல்லது மாடுதான்…(எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)” என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், “இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்” என்று சொன்னார்.

பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், “அழகான முடியும் இந்த வழுக்கை என்னை விட்டுப் போய் விடுவதும்தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து) விட்டார்கள்” என்று சொன்னார். உடனே அவ்வானவர், அவரது தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது.

அவ்வானவர், “எந்தச் செல்வம் உனக்கு விருப்பமானது?” என்று கேட்டார். அவர், “மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்” என்று சொன்னார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, “இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்” என்று சொன்னார்.

பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், “அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவிட, அல்லாஹ் அவருக்கு அவரது பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், “உனக்கு எந்தச் செல்வம் விருப்பமானது?” என்று கேட்க அவர், “ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார்.

அந்த இருவரும் (ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்) நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றனர். இவர் (ஆடு வழங்கப்பட்டவர்) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழுநோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.

பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தமது பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, “நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது.) இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த(இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கின்றேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்” என்று சொன்னார்.

அதற்கு அந்த மனிதர், “(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)” என்றார். உடனே அவ்வானவர், “உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கின்ற தொழு நோயாளயாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவன், “(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இந்தச் செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்” என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், “நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்” என்று சொன்னார்.

பிறகு வழுக்கைத் தலையரிடம் தமது (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழுநோயாளியிடம்) சொன்னதைப் போன்றே சொன்னார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்ததைப் போன்றே பதிலளித்தான். வானவரும், “நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்” என்று சொன்னார்.

பிறகு (இறுதியாக), குருடரிடம் தமது தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, “நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்துபோய் விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கின்றேன்” என்று சொன்னார்.

(குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், “நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் செல்வந்தனாக்கினான். ஆகவே, நீ விரும்புவதை எடுத்துக் கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கின்ற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்தமாட்டேன்.” என்று சொன்னார்.

உடனே அவ்வானவர், “உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரு தோழர்கள் (தொழு நோயாளி மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபம் கொண்டான்” என்று சொன்னார். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : (புகாரி: 3464) 

9. நாய்க்கு நீர்புகட்டிய இருவர்

நம்மைச் சுற்றியிருக்கும் பிற உயிரினங்களுக்கும் நல்லது செய்யும் குணம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். நம்பிக்கையாளர்கள் பிற ஜீவராசிகளுக்கு உதவும்போது அந்தக் காரியத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதற்கும் கூலி வழங்குவான். அதற்காகவும் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
بَيْنَمَا كَلْبٌ يُطِيفُ بِرَكِيَّةٍ، كَادَ يَقْتُلُهُ العَطَشُ، إِذْ رَأَتْهُ بَغِيٌّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ، فَنَزَعَتْ مُوقَهَا فَسَقَتْهُ فَغُفِرَ لَهَا بِهِ

(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : (புகாரி: 3467) 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
بَيْنَا رَجُلٌ  يَمْشِي، فَاشْتَدَّ عَلَيْهِ العَطَشُ، فَنَزَلَ بِئْرًا، فَشَرِبَ مِنْهَا، ثُمَّ خَرَجَ فَإِذَا هُوَ بِكَلْبٍ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنَ العَطَشِ، فَقَالَ: لَقَدْ بَلَغَ هَذَا مِثْلُ الَّذِي بَلَغَ بِي، فَمَلَأَ خُفَّهُ، ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ، ثُمَّ رَقِيَ، فَسَقَى الكَلْبَ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ “، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَإِنَّ لَنَا فِي البَهَائِمِ أَجْرًا؟ قَالَ: «فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ»

ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்த போது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அவர் (தம் மனத்திற்குள்) “எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்’ என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவிசெய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : (புகாரி: 2363) , முஸ்லிம் (2244)

எனவே மேற்கூறிய அனைத்து விஷயங்களும் நம் வாழ்கையில் பாடமாகவும் படிப்பினையாகவும் கொண்டு வாழும் நன் மக்களாய் அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!

 

Saleem. misc.