நபிகளாரும், அவர்களது மனைவிமார்களும்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

முன்னுரை

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

நபி (ஸல்) அவர்கள் பல திருமணங்களை செய்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். தன்னுடைய மனைவிமார்களுடன் நபி (ஸல்) அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள். இன்றைக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்தவர்கள், தன்னுடைய மனைவியுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்தாமல் சண்டை சச்சரவுகளடனும்தான் தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கணவனிடம் மனைவி சில எதிர்ப்பார்ப்புகளை கொண்டிருப்பாள். அந்த எதிர்பார்ப்புகள் சில ஆரோக்கியமானதாகவும், சில ஆரோக்கியமற்றதாகவும் இருக்கும். ஆரோக்கியமான எதிர்பார்ப்புகளை கணவன் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.

கணவன் தன்மீது அன்போடும், பிரியத்துடனும் இருக்க வேண்டும் என்றும், மனது புண்படும்படி எதையும் பேச்கூடாது, கோபப்படக்கூடாது என்றும், பலர் முன் திட்டக்கூடாது என்றும், எந்த இடத்திலும் மனைவியை கணவன் விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும், ஏதாவது ஒருவிஷயத்தில் தன்னோடு ஆலோசனை செய்ய வேண்டும் என்றும், தாம் சொல்வதை கவனமாக கேட்க வேண்டும் என்றும் மனைவியாக இருப்பவர் ஆசைப்படுவார். மனைவியின் ஆசைக்கிணங்க கணவன் மனைவியுடன் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்து கொண்டால் கணவன் மனைவிக்கிடையே சரியான பாசப்பிணைப்பு ஏற்படும்.

அதேப் போல் மனைவியாக இருப்பவள் வித்தியாசமாக ஏதாவது ஒன்றை செய்தால் மனமுவந்து அதைப் பாராட்ட வேண்டும். குழந்தைகளோடு நேரத்தை செலவு செய்ய வேண்டும். மனைவி உடல் நலக் குறைவுடன் இருக்கும்போது அவளுக்கு உதவி செய்ய வேண்டும். மனைவியின் சின்னச் சின்னத் தேவைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும்.

அம்மாவிடம் காட்டும் பாசத்தைப் போன்று மனைவியிடமும் காட்ட வேண்டும். சாப்பிடும் நேரத்திற்கு வீட்டிற்கு வந்து சாப்பிட வேண்டும். வெளியே உணவருந்த தேவை ஏற்படும் போது மனைவியிடம் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். குறிப்பாக மனைவிக்கு பிடித்தவற்றை கணவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே எந்த விஷயத்திலும் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது.

மேற்கூறப்பட்ட முறைப்படி கணவன் மனைவி நடந்து கொண்டால் அந்த வாழ்க்கை சிறந்த வாழ்க்கையாக சண்டை சச்சரவு இல்லாத வாழ்க்கையாக மாறும்.

  • நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியோடு எப்படி நடந்து கொண்டார்கள்?
  • மனைவிக்கு எந்த விஷயத்தை கற்றுக் கொடுத்தார்கள்?
  • மனைவியிடம் எவ்வாறு அன்பு செலுத்தினார்கள்?
  • மனைவியை எவ்வாறு கவனித்து கொண்டார்கள்?
  • மனைவி தவறு செய்யும்போது எவ்வாறு அந்தத் தவறைத் திருத்தினார்கள்?

இப்படி எல்லாவற்றிலும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.

மனைவிக்கு ஒத்தாசையாக இருந்தார்கள்
عَنِ الأَسْوَدِ قَالَ :
سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْنَعُ فِي أَهْلِهِ قَالَتْ كَانَ فِي مِهْنَةِ أَهْلِهِ فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ قَامَ إِلَى الصَّلاَةِ

அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?” என்று நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், “தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். தொழுகை (நேரம்) வந்து விட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல் : (புகாரி: 6039) 

இதுதான் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையாக இருந்தது. தன்னுடைய மனைவியோடு அன்போடும், அவர்களுடைய வேலையில் தானும் பங்கெடுத்துக் கொண்டார்கள். தன்னால் இயன்ற அளவிற்கு மனைவிக்கு உதவிபுரிபவர்களாக இருந்தார்கள். மனைவிக்கு எந்த சிரமத்தையும் கொடுக்கமாட்டார்கள்.

மனைவியோடு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வரும் போது மனைவியிடம் சாப்பிடுவதற்கு ஏதாவது உணவு இருக்கிறதா? என்று கேட்பார்கள். மனைவி இல்லை என்று சொல்லிவிட்டால் எதுவும் சொல்லாமல் திரும்பிவிடுவார்கள். அதற்காக எந்த விதத் தவறான பேச்சையும் பேசமாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனைவியிடம் தான் ஒரு நபி என்ற மமதையோடு நடந்து கொள்ளமாட்டார்கள். தான், உங்களில் ஒரு மனிதர் என்ற தோரணையில்தான் நடந்து கொள்வார்கள். தன்னுடைய மனைவிமார்களோடு விளையாட்டாக சில நேரங்களில் நடந்து கொள்வார்கள். மனைவிமார்களை சிரிக்க வைப்பார்கள். அன்போடும் பாசத்தோடும் நடந்து கொள்வார்கள். மனைவிமார்களை சந்தோசமாக வைத்துக் கொள்வார்கள். மனைவியின் ஆசையை நிறைவேற்றி வைப்பார்கள்.

மற்றவர்களையும் குறிப்பாக மனைவியையும் மகிழ்ச்சிப்படுத்துதல்

நபி (ஸல்) அவர்கள் தன்னைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். அதிலும் குறிப்பாக மனைவிமார்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். சந்தோசப்படுத்துவார்கள்.

 عَنْ عَائِشَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ تَضْرِبَانِ بِدُفَّيْنِ فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْهُنَّ فَإِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள் என்னருகே கொட்டடித்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரையும் அபூபக்ர் (ரலி) அவர்கள் வெறுத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவ்விருரையும் விட்டுவிடுங்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கு ஒரு பெருநாள் உள்ளது. (நமக்கு இன்று பெருநாள்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : (நஸாயீ: 1593) (1575)

மனைவியுடன் விளையாண்டார்கள்
 عَنْ عَائِشَةَ، قَالَتْ
خَرَجْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ وَأَنَا جَارِيَةٌ لَمْ أَحْمِلِ اللَّحْمَ وَلَمْ أَبْدُنْ، فَقَالَ لِلنَّاسِ: «تَقَدَّمُوا» فَتَقَدَّمُوا، ثُمَّ قَالَ لِي: «تَعَالَيْ حَتَّى أُسَابِقَكِ» فَسَابَقْتُهُ فَسَبَقْتُهُ، فَسَكَتَ عَنِّي، حَتَّى إِذَا حَمَلْتُ اللَّحْمَ وَبَدُنْتُ وَنَسِيتُ، خَرَجْتُ مَعَهُ فِي بَعْضِ أَسْفَارِهِ، فَقَالَ لِلنَّاسِ: «تَقَدَّمُوا» فَتَقَدَّمُوا، ثُمَّ قَالَ: «تَعَالَيْ حَتَّى أُسَابِقَكِ» فَسَابَقْتُهُ، فَسَبَقَنِي، فَجَعَلَ يَضْحَكُ، وَهُوَ يَقُولُ: «هَذِهِ بِتِلْك

நபி (ஸல்) அவர்களுடன் நான் சில பயணங்களில் பங்கேற்று இருக்கிறேன். நான் சிறுமியாக இருந்தேன். அப்போது நான் சதை போடவில்லை. நபி (ஸல்) அவர்கள் முன்னேறி வாருங்கள் முன்னேறிவாருங்கள் என்று மக்களைப் பார்த்து கூறினார்கள். பின்பு என்னிடம் விரைந்து வா இறுதியாக நான் உன்னை இந்தப் போட்டியில் முந்திவிடுவேன் என்று கூறினார்கள். ஆனால் நான் நபி (ஸல்) அவர்களை முந்திவிட்டேன். என்னிடம் நபி (ஸல்) அவாகள் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார்கள்.

பின்பு ஒருநாள் நான் சதைபோட்ட போது உடல் பருமனாக ஆன போது நபியவர்களுடன் இன்னொரு பயணங்களில் நான் கலந்து கொண்டேன். அப்போது மக்களிடம் விரைந்து வாருங்கள் முன்னேறி வாருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடமும் நபி (ஸல்) அவர்கள் வா ஆனால் நான் உன்னை முந்திவிடுவேன் என்று கூறினார்கள். அதுபோல் நபி (ஸல்) அவர்கள் என்னை முந்திவிட்டார்கள். பின்பு சிரித்துக் கொண்டே சொன்னார்கள். அது (முந்தைய தோல்வி) இதுக்கு சரியாகிவிட்டது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்: (அஹ்மத்: 26277) (25075)

وَكَانَ يَوْمَ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالْحِرَابِ فَإِمَّا سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَإِمَّا قَالَ تَشْتَهِينَ تَنْظُرِينَ فَقُلْتُ نَعَمْ فَأَقَامَنِي وَرَاءَهُ خَدِّي عَلَى خَدِّهِ وَهُوَ يَقُولُ دُونَكُمْ يَا بَنِي أَرْفِدَةَ حَتَّى إِذَا مَلِلْتُ قَالَ حَسْبُكِ قُلْتُ نَعَمْ قَالَ فَاذْهَبِي

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
அன்று பெருநாள் (ஈத்) தினமாக இருந்தது. சூடானியர்கள் தோல்கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீரவிளையாட்டுக்கள்) விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் (அந்த விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம், “நீ (இவர்களுடைய வீர விளையாட்டுக்களைப்) பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டிருக்கவேண்டும். (சரியாக எனக்கு நினைவில்லை). அதற்கு நான், “ஆம்’ என்று பதிலளித்தேன்.

உடனே நபி (ஸல்) அவர்கள் என் கன்னம் அவர்களுடைய கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்கவைத்துக்கொண்டார்கள். “அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது “போதுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நான், “ஆம் (போதும்)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் நீ போகலாம்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : (புகாரி: 980) 

மனைவிக்கு முக்கியத்துவம்

நபி (ஸல்) அவர்கள் மனைவியை மகிழ்ச்சி படுத்தவும் செய்வார்கள். அதே போல் மனைவிக்கு முக்கியத்துவமும் கொடுப்பார்கள்.

 عَنْ أَنَسٍ
أَنَّ جَارًا لِرَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَارِسِيًّا كَانَ طَيِّبَ الْمَرَقِ فَصَنَعَ لِرَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- ثُمَّ جَاءَ يَدْعُوهُ فَقَالَ « وَهَذِهِ ». لِعَائِشَةَ فَقَالَ لاَ. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ » فَعَادَ يَدْعُوهُ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « وَهَذِهِ ». قَالَ لاَ. قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ ». ثُمَّ عَادَ يَدْعُوهُ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « وَهَذِهِ ». قَالَ نَعَمْ. فِى الثَّالِثَةِ. فَقَامَا يَتَدَافَعَانِ حَتَّى أَتَيَا مَنْزِلَهُ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அண்டை வீட்டுக்காரர் ஒருவர் இருந்தார். பாரசீகரான அவர் நன்கு (மணம் கமழ) குழம்பு சமைக்கக்கூடியவராக இருந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்துவிட்டு அவர்களை அழைப்பதற்காக வந்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் அருகில் பசியோடு இருந்த தம் துணைவி) ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து காட்டி “இவரும் (வரலாமா)?” என்று கேட்டார்கள், அவர் (உணவு குறைவாக இருந்ததால்), “இல்லை (வேண்டாம்)” என்று கூறிவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இல்லை (அவ்வாறாயின் நானும் வரமாட்டேன்)” என்று கூறிவிட்டார்கள்.

அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைப்பதற்காக மறுபடியும் வந்தார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவரும் (வரலாமா)?” என்று (ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து) கேட்டார்கள். அப்போதும் அவர் “இல்லை (வேண்டாம்)” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் “(அவ்வாறாயின் நானும்) இல்லை” என்று கூறிவிட்டார்கள்.

அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைப்பதற்காக மறுபடியும் வந்தார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இவரும் (வரலாமா)?” என்று (ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து) கேட்டார்கள். அவர் மூன்றாவது முறை “சரி (வரலாம்)” என்றார். பின்னர் இருவரும் ஒருவரையொருவர் பின்தொடர்ந்து அவரது வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தனர்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : (முஸ்லிம்: 4142) 

இவ்வாறு நாம் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது இதுபோன்ற சந்தர்ப்பங்களை மனைவி மறக்கவே மாட்டாள். நபி (ஸல்) அவர்கள் அதைத் தான் செய்தார்கள்.

அன்பும் இரக்கமும் காட்டுதல்

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً  ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன்: 30:21)

عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
إِنِّي لأَعْرِفُ غَضَبَكِ وَرِضَاكِ قَالَتْ قُلْتُ وَكَيْفَ تَعْرِفُ ذَاكَ يَا رَسُولَ اللهِ قَالَ إِنَّكِ إِذَا كُنْتِ رَاضِيَةً قُلْتِ بَلَى وَرَبِّ مُحَمَّدٍ ، وَإِذَا كُنْتِ سَاخِطَةً قُلْتِ لاَ وَرَبِّ إِبْرَاهِيمَ قَالَتْ قُلْتُ أَجَلْ لَسْتُ أُهَاجِرُ إِلاَّ اسْمَكَ

நபி (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கையில் மனைவியருடன் அன்பும் இரக்கமும் ஏராளமாக இருந்தது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னுடைய கோபத்தையும் உன்னுடைய திருப்தியையும் நான் நன்றாக அறிவேன்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அதை எவ்வாறு தாங்கள் அறிந்துகொள்வீர்கள்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கவர்கள், “நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), “ஆம்; முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்.

நீ கோபமாய் இருக்கும் போது (பேசினால்), “இல்லை; இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று சொன்னார்கள். நான், “ஆம் (உண்மைதான்). நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன் (தங்கள் மீதன்று)” என்று கூறினேன்.

நூல் : (புகாரி: 6078) 

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களை எப்படி புரிந்து வைத்துள்ளார்கள் பாருங்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் ஒவ்வொரு அசைவையும் பேச்சையும் கூர்ந்து கவனித்திருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் மாதவிடாயாக இருக்கும்போது எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைப் பாருங்கள்.

عَنْ عَائِشَةَ قَالَتْ
كُنْتُ أَشْرَبُ وَأَنَا حَائِضٌ ثُمَّ أُنَاوِلُهُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِىَّ فَيَشْرَبُ وَأَتَعَرَّقُ الْعَرْقَ وَأَنَا حَائِضٌ ثُمَّ أُنَاوِلُهُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِىّ

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.

நூல் : (முஸ்லிம்: 505) 

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும்போது அவர்கள் படக்கூடிய துன்பங்கள் வேதனைகள் சொல்ல முடியாதது. அந்த நேரத்தில் ஆறுதலாக இருக்க வேண்டிய கணவன்மார்கள், பாசம் காட்ட வேண்டிய கணவன்மார்கள் வெறுப்புணர்வைக் காட்டுகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் நடந்து காட்டியது போல் நாம் நடந்து கொண்டோமா? அப்படி நடந்து கொண்டால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சினைகள் சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் பாசப்பிணைப்பு ஏற்படும்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
 قَالَ فَرَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يُحَوِّي لَهَا وَرَاءَهُ بِعَبَاءَةٍ ثُمَّ يَجْلِسُ عِنْدَ بَعِيرِهِ فَيَضَعُ رُكْبَتَهُ فَتَضَعُ صَفِيَّةُ رِجْلَهَا عَلَى رُكْبَتِهِ حَتَّى تَرْكَبَ

நபிகள் நாயகம் அவர்கள் ஒட்டகத்தில் தமது மனைவி சபிய்யா ஏறுவதற்காக ஒட்டகத்தின் அருகில் அவர்கள் அமர்ந்தார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் முழங்கால் மீது தமது காலை வைத்து ஒட்டகத்தில் ஏறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல் : (புகாரி: 2235) 

இன்றைக்கு மனைவி கணவனுக்கு அடிமை என்றுதான் பெரும்பாலான கணவன்மார்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கணவனுக்குத்தான் மனைவி பணிவிடை செய்ய வேண்டும். மனைவி கணவனுக்கு பணிந்து நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைப் பாருங்கள்.

நீதமாக நடந்து கொள்ளுதல்

நபி (ஸல்) அவர்களுக்குப் பல மனைவிமார்கள் இருந்தாலும் எல்லா மனைவிமார்களிடமும் நீதமாக நடந்து கொண்டார்கள். எந்த மனைவியிடமும் பாகுபாடு காட்டவில்லை.

மனைவிமார்களிடம் இரவு தங்குவதிலும் சரி, செலவீனங்களிலும் சரி, வாழ்க்கை நடத்துவதிலும் சரி பயணங்கள் புறப்படுவதிலும் சரி நீதமாக நடந்து கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனைவியரிடம் இரவு தங்குவார்கள். மனைவிமார்களுக்கு செலவீனங்களுக்கு தன்னுடைய கையிலே இருப்பதை சமமாகப் பங்கு வைத்துக் கொடுப்பார்கள். ஒவ்வொரு மனைவிக்கும் தனித்தனியே வீடுகளை அமைத்துக் கொடுத்திருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ளும்போது சீட்டுக் குலுக்கிப்போட்டு யாரை முதலில் அழைத்துச் செல்வது யாரை இரண்டாவதாக அழைத்துச் செல்வது என்ற முடிவை எடுப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜதுல் வதா என்ற ஹஜ்ஜை நிறைவேற்றும் போது அப்போது உயிரோடு இருந்த எல்லா மனைவிமார்களையும் அழைத்துச் சென்றார்கள். இவ்வாறு எல்லா சந்தர்ப்பங்களிலும் நீதமான முறையில் நடந்து கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு மரணம் ஏற்படுகின்ற வரை தன்னுடைய எல்லா மனைவியடமும் நீதமான முறையில்தான் நடந்து கொண்டார்கள்.

இறுதியாக நபி (ஸல்) அவர்களுக்கு மரணம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஒரு மனைவியுடைய வீட்டில் இருக்கின்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) வீட்டில் இருக்க ஆசைப்படுவதாக கூறி அந்த மனைவியிடம் அனுமதி கேட்டு ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்கு வருகின்றார்கள்.

عَنْ أَنَسٍ قَالَ
كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَ بَعْضِ نِسَائِهِ فَأَرْسَلَتْ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ بِصَحْفَةٍ فِيهَا طَعَامٌ فَضَرَبَتِ الَّتِي النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بَيْتِهَا يَدَ الْخَادِمِ فَسَقَطَتِ الصَّحْفَةُ فَانْفَلَقَتْ فَجَمَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِلَقَ الصَّحْفَةِ ثُمَّ جَعَلَ يَجْمَعُ فِيهَا الطَّعَامَ الَّذِي كَانَ فِي الصَّحْفَةِ وَيَقُولُ غَارَتْ أُمُّكُمْ ثُمَّ حَبَسَ الْخَادِمَ حَتَّى أُتِيَ بِصَحْفَةٍ مِنْ عِنْدِ الَّتِي هُوَ فِي بَيْتِهَا فَدَفَعَ الصَّحْفَةَ الصَّحِيحَةَ إِلَى الَّتِي كُسِرَتْ صَحْفَتُهَا وَأَمْسَكَ الْمَكْسُورَةَ فِي بَيْتِ الَّتِي كَسَرَت

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்(துகொண்டிருந்)தார்கள். இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவ(ரான நபியவர்களுடைய மற்றொரு துணைவியா)ர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப்பினார்கள். (அப்போது) நபி (ஸல்) அவர்கள் யாரது வீட்டில் தங்கியிருந்தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியாளனின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது.

உடனே (ஆத்திரப்படாமல்) நபி (ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), “உங்கள் தாயார் ரோஷப்பட்டு விட்டார்” என்று சொன்னார்கள். பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்தி விட்டு தாமிருந்த வீட்டுக்கார(துணைவியா)ரிடமிருந்து மற்றொரு தட்டைக்கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டை (மாற்றாக)க் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல் : (புகாரி: 5225) 

தன்னுடைய மனைவி செய்த செயலைக் கண்டு நபி (ஸல்) அவர்கள் கோபப்படவில்லை. அடிக்கவில்லை. திட்டவில்லை வசைபாடவில்லை. மாறாக உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அந்த நேரத்தில் நீதத்தைக் கடைப்பிடித்தார்கள். எந்த மனைவியரிடம் தங்கவேண்டிய உரிமையோ அந்த உரிமையை நிறைவேற்றினார்கள். அதே போல் உடைந்த தட்டிற்க்கு பகரமாக உடைத்த மனைவியின் வீட்டிலிருந்த நல்ல தட்டை கொடுத்தனுப்பினார்கள்.

இறைநினைவை ஏற்படுத்துதல்

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியர்களுக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவையும், அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று ஆர்வமூட்டியும் அவனுக்கு மாறு செய்யக்கூடாது என்ற எச்சரிக்கையும் பிறப்பிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتِ
اسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ فَقَالَ سُبْحَانَ اللهِ مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الْفِتَنِ وَمَاذَا فُتِحَ مِنَ الْخَزَائِنِ أَيْقِظُوا صَوَاحِبَاتِ الْحُجَرِ فَرُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الآخِرَةِ

ஓர் இரவில் நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து (பதற்றத்துடன்) விழித்தெழுந்து “அல்லாஹ் தூயவன்! இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனைகள் (குழப்பங்கள்)தாம் என்ன! (இன்றிரவு) திறந்துவிடப்பட்ட கருவூலங்கள்தாம் என்ன!” என்று கூறிவிட்டு, (தம் துணைவியரை மனத்தில் கொண்டு) “இந்த அறைகளிலுள்ள பெண்களை எழுப்பிவிடுங்கள்! (அவர்கள் அல்லாஹ்வை வணங்கட்டும்.) ஏனெனில், இவ்வுலகில் உடை அணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில் நிர்வாணிகளாய் இருப்பார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி),
நூல் : (புகாரி: 115)

 عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ
كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்!

நூல் : (புகாரி: 2024) 

கற்பித்தல்

நபி (ஸல்) அவர்கள் பயனுள்ள கல்வியை கற்றுக் கொடுப்பவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வால் அருளப்பட்ட குர்ஆனில் சொல்லப்பட்ட விஷயங்களை ஆதாரத்துடன் எடுத்துச் சொல்வார்கள்.

 أَخْبَرَتْنِى أُمُّ مُبَشِّرٍ أَنَّهَا سَمِعَتِ النَّبِىَّ صلى الله عليه وسلم- يَقُولُ
عِنْدَ حَفْصَةَ « لاَ يَدْخُلُ النَّارَ إِنْ شَاءَ اللَّهُ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ أَحَدٌ. الَّذِينَ بَايَعُوا تَحْتَهَا ». قَالَتْ بَلَى يَا رَسُولَ اللَّهِ. فَانْتَهَرَهَا فَقَالَتْ حَفْصَةُ (وَإِنْ مِنْكُمْ إِلاَّ وَارِدُهَا) فَقَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- « قَدْ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ( ثُمَّ نُنَجِّى الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا

(ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களின் துணைவியார்) உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ் நாடினால் அந்த மரத்தின் கீழ் வாக்குப் பிரமாணம் அளித்தவர்களில் யாரும் நரகத்திற்குள் நுழையமாட்டார்கள்” என்று கூறினார்கள். அதற்கு ஹஃப்ஸா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அப்படியல்ல” என்று கூறினார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள், ஹஃப்ஸா (ரலி) அவர்களைக் கண்டித்தார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள், “உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தைக் கடக்காமல் இருக்க முடியாது” (அல்குர்ஆன்: 19:71) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள், “பின்னர் (நம்மை) அஞ்சி நடந்தோரை நாம் காப்பாற்றுவோம். அநீதி இழைத்தோரை மண்டியிட்டோராக அதிலேயே விட்டுவிடுவோம்” (அல்குர்ஆன்: 19:72) என்றும் அல்லாஹ் கூறியுள்ளான் என்றார்கள்.

நூல் : (முஸ்லிம்: 4909) 

…ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் “அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்” என்று சொல்” என்றார்கள்.

(பொருள்: அடக்கத்தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)

மார்க்கத்தில் வரம்பு மீறாதிருத்தல்

வணக்க வழிபாடுகளில் வரம்புமீறக்கூடாது என்பதை நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவிமார்களுக்கு போதனை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَإِذَا حَبْلٌ مَمْدُودٌ بَيْنَ السَّارِيَتَيْنِ فَقَالَ مَا هَذَا الْحَبْلُ قَالُوا هَذَا حَبْلٌ لِزَيْنَبَ فَإِذَا فَتَرَتْ تَعَلَّقَتْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : لاَ حُلُّوهُ لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ فَإِذَا فَتَرَ فَلْيَقْعُدْ

நபி (ஸல்) அவாகள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளி வாசலுக்குள்) வந்தபோது இரு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. “இந்தக் கயிறு என்ன (ஏன்)?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், “இது (தங்கள் துணைவியார்) ஸைனப் (ரலி) அவர்களுக்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும்போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றைப் பிடித்துக்கொள்வார்” என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம். இதை அவிழ்த்துவிடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகமான மனநிலையில் இருக்கும்போது (உபரியான தொழுகைகளைத்) தொழட்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்துகொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : (புகாரி: 1150) 

முடிவெடுத்த விஷயத்தை அறிவித்தல்

நபி (ஸல்) அவர்கள் மனைவிமார்கள் விஷயத்தில் ஒரு முடிவெடுத்துவிட்டால் எல்லா மனைவியர்களிடமும் உறுதியான முறையில் அதை தெரிவிப்பார்கள். இதில் எந்த பாகுபாடும் காட்டமாட்டார்கள். மாறாக மனைவியர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும், அழகான முறையில் உறவாட வேண்டும் என்றே நினைப்பார்கள்.

நபியவர்களின் மனைவிமார்கள் குடும்பச் செலவீனங்களுக்காக உயர்த்தி அதிகமாகத் தருமாறு நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு நபி (ஸல்) அவர்களை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். இதனால் நபி (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் தன்னுடைய மனைவிமார்களை விட்டும் விலகியிருப்பேன் என்று முடிவெடுத்து அதே போன்று செய்தார்கள். இந்த நிகழ்வுக்கு பிறகுதான் அல்லாஹ் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களை இறக்கிவைத்தான்.

يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ اِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيٰوةَ الدُّنْيَا وَزِيْنَتَهَا فَتَعَالَيْنَ اُمَتِّعْكُنَّ وَاُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيْلًا‏

 وَاِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالدَّارَ الْاٰخِرَةَ فَاِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْمُحْسِنٰتِ مِنْكُنَّ اَجْرًا عَظِيْمًا‏

“இவ்வுலக வாழ்வையும், இதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்பினால் வாருங்கள்! உங்களுக்கு வசதியளித்து அழகிய முறையில் உங்களை விடுவித்து விடுகிறேன்” என்று நபியே (முஹம்மதே!) உமது மனைவியரிடம் கூறுவீராக! நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வாழ்வையும் விரும்பினால் உங்களில் நன்மை செய்வோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைத் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன்: 33:28,29)

இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “ஆயிஷா! நான் உன்னிடம் ஒரு விஷயத்தை முன்வைக்க விரும்புகிறேன். அது தொடர்பாக நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காதவரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து)விடக் கூடாது என விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (அல்குர்ஆன்: 33:28) ஆவது வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (உறவைத் துண்டிக்கும்) விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்? இல்லை! நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே தேர்ந்தெடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “நான் கூறியதைத் தாங்கள் மற்றத் துணைவியரில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்களில் எவரேனும் என்னிடம் (நீ சொன்னதைப் பற்றிக்) கேட்டால் நான் அவர்களிடம் அதைத் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன். அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ, எவரையும் வழி தவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறை நெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்” என்றார்கள்.

நூல் : (முஸ்லிம்: 2952) (3769)

ஈருலகிலும் வெற்றிபெறுவோமாக! அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவனாக!

எம்.எம்.ஸைபுல்லாஹ், கடையநல்லூர்