நபிகளாருக்கு சஃபர் மாதத்தில்தான் நோய் ஏற்பட்டதா?

கேள்வி-பதில்: மற்ற கேள்விகள்

நபிகளாருக்கு சஃபர் மாதத்தில்தான் நோய் ஏற்பட்டதா?

நபி (ஸல்) அவர்களுக்கு பல தடவை நோய் ஏற்பட்டுள்ளது. மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; உங்களால் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்” என்று சொன்னார்கள்.

நான், “(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்’ என்று கூறிவிட்டுப் பிறகு, “ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை” என்று சொன்னார்கள்.

நூல் : (புகாரி: 5660) 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி ஸல் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த சமயம்) அன்சாரிகள் தமது சபைகளில் ஒன்றில் (அமர்ந்தபடி) அழுது கொண்டிருந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்களும், அப்பாஸ் (ரலி) அவர்களும் அந்த வழியாகச் சென்றார்கள். அப்போது, அப்பாஸ் (ரலி) அவர்கள் (அல்லது அபூபக்ர் -ரலி- அவர்கள்), “நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கூடி) அமர்ந்திருந்த அவையை நினைத்துப் பார்த்தோம். (அதனால் அழுகிறோம்.)” என்று பதிலளித்தார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் (அல்லது அபூபக்ர் (ரலி) அவர்கள்), நபி (ஸல்) அவர்களிடம் சென்று, இந்த விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தம் சால்வையின் ஓரத்தைத் தம் தலையில் கட்டியிருந்த நிலையில் வெளியே வந்து, (உரை நிக்ழ்த்துவதற்காக) மிம்பரில் (மேடையில்) ஏறினார்கள் – அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் மிம்பரில் ஏறவில்லை. அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றிய பிறகு, “அன்சாரிகள் விஷயத்தில் (நல்லவிதமாக நடந்து கொள்ளும்படி) உங்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன். ஏனெனில், அவர்கள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். தம் மீதிருந்த பொறுப்பை, அவர்கள் நிறைவேற்றி விட்டார்கள். இனி அவர்களுக்குரிய உரிமை தான் எஞ்சியுள்ளது. ஆகவே, அவர்களில் நன்மை புரிவோரிடமிருந்து (அந்த நன்மையை) ஏற்றுக் கொண்டு, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்து விடுங்கள்” என்று சொன்னார்கள்.

நூல் : (புகாரி: 3799) 

நபிகளார் பல நேரங்களில் நோய் ஏற்பட்டிருந்தாலும் இறுதி காலகட்டத்தில் ஏற்பட்ட நோய் தொடர்பாகவே பரவலாகப் பேசப்படுகிறது. அதில் அவர்கள் இறக்கும் காலகட்டத்தில் ஏற்பட்ட நோய் தொடர்பாக நபிமொழிகளில் அதிகம் கூறப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, “”யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்டுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிவிட்டனர்” என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

நூல் : (புகாரி: 1330) 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் நோய் அதிகரித்தபோது, எனது வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதி வழங்கிவிட்டனர். அப்போது தமது கால்கள் தரையில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.

நூல் : (புகாரி: 198) 

இதுபோன்ற நபிமொழிகள் இருந்தாலும் எந்த நாளில் எந்த மாதத்தில் ஏற்பட்டது என்பதற்கு ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையில் எந்தச் செய்தியும் இடம்பெறவில்லை.

دلائل النبوة ـ للبيهقى موافقا للمطبوع – (7 / 234) 

أخبرنا أبو عبد الله الحافظ قال أخبرنا أحمد بن كامل قال حدثنا الحسن بن علي البزاز قال حدثنا محمد بن عبد الأعلى قال حدثنا المعتمر بن سليمان عن أبيه

أن رسول الله مرض لإثنتين وعشرين ليلة من صفر وبدأه وجعه عند وليدة له يقال لها ريحانة كانت من سبي اليهود وكان أول يوم مرض فيه يوم السبت وكانت وفاته اليوم العاشر يوم الاثنين لليلتين خلتا من شهر ربيع الأول لتمام عشر سنين من مقدمه المدينة

நபி (ஸல்) அவர்கள் சஃபர் மாதம் இருபத்தி இரண்டாம் நாள் திங்கள் கிழமை நோயுற்றார்கள்.

அறிவிப்பவர்: சுலைமான் பின் தர்கான் அத்தைமீ,

நூல்: தலாயிலுன் நுபுவ்வா-பைஹகீ-3181 , பாகம்: 7, பக்கம்: 234

இச்செய்தியை அறிவிக்கும் சுலைமான் பின் தர்கான் அத்தைமீ என்பவர் நபித்தோழர் அல்ல. நபிகளாருக்கு நடந்த நிகழ்வுகளை அவர்களைப் பார்த்த நபித்தோழர்கள் மட்டுமே அறிவிக்க முடியும். எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.

الطبقات الكبرى كاملا 230 – (2 / 272) 

2241- أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ ، حَدَّثَنِي أَبُو مَعْشَرٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

اشْتَكَى يَوْمَ الأَرْبِعَاءِ لِإِحْدَى عَشْرَةَ لَيْلَةً بَقِيَتْ مِنْ صَفَرٍ سَنَةَ إِحْدَى عَشْرَةَ ، فَاشْتَكَى ثَلاَثَ عَشْرَةَ لَيْلَةً , وَتُوُفِّيَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الِاثْنَيْنِ لِلَيْلَتَيْنِ مَضَتَا مِنْ شَهْرِ رَبِيعٍ الأَوَّلِ سَنَةَ إِحْدَى عَشْرَةَ.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் வருடம் சஃபர் மாதம் 11 ஆம் நாள் புதன் கிழமை நோயுற்றார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் கைஸ்,

நூல்: தபகாத்துல் குப்ரா-2247 , பாகம் : 2, பக்கம் : 272

இந்தச் செய்தியை அறிவிக்கும் முஹம்மத் பின் கைஸ் என்பவர் நபித்தோழர் அல்ல. எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தி என்பதில் ஐயமில்லை. மேலும் இரண்டாவது அறிவிப்பாளர் அபூமஃஷர் என்பவர் பலவீனமானவராவார். இதைப் போன்று முஹம்மத் பின் உமர் என்ற அல்வாகிதீ என்பவர் பொய் சொல்பவர் என்று கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டவர்.

எனவே இந்தச் செய்தி மிகவும் பலவீனமானது. நபிகளார் இறுதிக்காலத்தில் கடுமையான நோயில் பாதிக்கப்பட்ட்டது உண்மை. ஆனால் அது சஃபர் மாதம் என்பதற்கும் புதன் கிழமை என்பதற்கும் ஆதாரம் இல்லை. மேலும் குறிப்பிட்ட நாளில் நோயுற்றதால் அந்த நாள் பீடை என்று சொல்வதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.