நபிகளாரின் வஸியத்
அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான் உயிரோடு வாழும் போது பல முக்கியமான அறிவுரைகளை செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் இறுதி நேரத்தில் முக்கியமான சிலவற்றை வஸிய்யத் செய்வான். அது போன்று நபி (ஸல்) அவர்கள் உயிரோடு வாழும் போது சஹாபாக்களுக்காக பல செய்திகளை வஸிய்யத் என்று சொல்லி செய்திருக்கிறார்கள். அது போன்ற செய்திகள் நிறைய ஹதீஸ்களில் காண கிடைக்கிறது. அவற்றில் சிலவற்றை இந்த உரையில் நாம் காண்போம்.
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோற்பது, இரண்டு ரக்அத் ளுஹா தொழுகை தொழுவது, வித்ர் தொழுதுவிட்டு உறங்குவது ஆகிய மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள். நான் இறக்கும் வரை அவற்றை விடமாட்டேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்கள்: (புகாரி: 1178) , (முஸ்லிம்: 1303)
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு மூன்று முக்கியமான விஷயங்களை வலியுறுத்திச் சொல்லியுள்ளார்கள்.
- மாதம் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது.
- ளுஹா தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவது.
- வித்ரு தொழுவது.
இந்த மூன்றும் நபிகளாரால் வலியுறுத்திச் சொல்லப்பட்ட, நன்மைகள் அதிகம் கிடைக்கும் நல்லறங்களாகும். மாதம் மூன்று நாட்கள் நோன்பு நோற்றால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மைகளைப் பெறலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீங்கள் இரவில் நின்று வணங்குவதாகவும் பகலில் நோன்பு நோற்பதாகவும் எனக்குச் செய்தி கிடைத்ததே’’ என்று கேட்டார்கள். நான், ஆம் (உண்மைதான்!) என்றேன். அவர்கள், ‘‘நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்து விடும்; மனம் களைப்படைந்து விடும். ஆகவே, ஒவ்வொரு மாதத்திலிருந்தும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அது காலமெல்லாம் நோன்பு நோற்றதாகும்’’ அல்லது ‘‘காலமெல்லாம் நோன்பு நோற்றதைப் போன்றதாகும்’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்கள்: (புகாரி: 3419) , (முஸ்லிம்: 2136)
தினமும் இரண்டு ரக்அத்கள் ளுஹா தொழுதால் பல நன்மையான காரியங்கள் செய்த கூலியைப் பெற்றுவிடமுடியும்.
உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு ஓரிறை உறுதிமொழியும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
நூல்: (முஸ்லிம்: 1302)
நபி (ஸல்) அவர்கள் கடமையான தொழுகைக்குப் பிறகு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து தொழுத தொழுகை இரவுத் தொழுகையாகும்.
ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 2157)
இரவில் தொழும் தொழுகையில் இறுதியாகத் தொழும் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுமாறு நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள்.
இரவில் தொழுபவர் இறுதியாக வித்ர் தொழட்டும். ஏனெனில், இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுவந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ,
நூல்: (முஸ்லிம்: 1368)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வஸிய்யத் செய்த விஷயங்களில் ஒன்று, தொழுகையை உரிய நேரத்தில் தொழுவதாகும்.
என் உற்ற தோழர் (நபி (ஸல்) அவர்கள் என்னிடம் “(உங்கள் தலைவருடைய சொல்லை) செவியேற்று அதற்குக் கட்டுப்பட வேண்டும்; அவர் (கை, கால்) உறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே’ என்றும், தொழுகையை உரிய நேரத்தில் தொழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.
“பின்னர் மக்கள் தொழுது முடித்துவிட்ட நிலையில் அவர்களை நீங்கள் அடைந்தால், (முன்பே) உங்களது தொழுகையை நீங்கள் காப்பாற்றிக் கொண்டவராவீரர்கள்; அவ்வாறின்றி (அவர்களுடன் சேர்ந்து நீங்கள் மறுபடியும் தொழுதால்) அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்’’ என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
நூல்: (முஸ்லிம்: 1142)
இந்தச் செய்தியில் முதலில் ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுதல் தொடர்பாக நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள். ஆட்சித் தலைவரின் தோற்றங்களைக் கவனிக்காமல் முஸ்லிம்களின் தலைவராக இருப்பதால் அவருக்குக் கட்டுப்படுதல் அவசியமாகும். அவ்வாறு நடக்கும் போது தான் நாட்டின் சட்டஒழுங்கு நன்றாக இருக்கும். முஸ்லிம்களுக்கும் வலிமை இருக்கும் என்பதால் இதை நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள்.
இரண்டாவதாக இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான தொழுகையைப் பற்றி கட்டளையிட்டுள்ளார்கள். நாள் ஒன்றுக்கு ஐந்து நேரம் தொழுவது கடமையாகும். ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்ப நேரமும் இறுதி நேரமும் உள்ளது. எனவே அந்த நேரத்திற்குள் தொழுவது அவசியமாகும்.
இதையே அல்லாஹ்வும் குறிப்பிடுகின்றான்.
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை, நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
தொழுகையைத் தாமதப்படுத்தாமல் குறித்த நேரத்தில் தொழுவது அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பத்திற்குரியதாகும்.
‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’’ என்று கேட்டேன். அவர்கள், ‘‘உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது’’ என்றார்கள். பிறகு எது? என்று கேட்டேன். ‘‘தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’’ என்றார்கள். பிறகு எது? என்றேன். அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது’’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி),
நூல்கள்: (புகாரி: 527) , (முஸ்லிம்: 137)
என் உற்ற தோழர் (நபியவர்கள்,) என்னிடம், “நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்து, உம்முடைய அண்டை வீட்டார்களில் ஒரு வீட்டாரைப் பார்த்து அதிலிருந்து சிறிதளவை அவர்களுக்கும் கொடுத்து உதவுக!’’ என்று அறிவுறுத்தினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
நூல்: (முஸ்லிம்: 5121)
நாம் வசிக்கும் வீட்டின், அண்டை வீட்டார் விஷயத்தில் நன்மை நாடவேண்டும். அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.
இந்த நபிமொழியில் நாம் குழம்பு வைத்தால் பக்கத்து வீட்டாருக்கும் பயன்படும் வகையில் அதில் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்தாவது பக்கத்து வீட்டாருக்கும் கொடுத்து உதவ வேண்டும் என்று நபிகளார், அபூதர் (ரலி) அவர்களுக்கு வஸிய்யத்தாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களும் நபிகளாருக்கு இதை அதிகம் வலியுறுத்தியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: (புகாரி: 6014) , (முஸ்லிம்: 5118)
மனிதன் பெரும் தவறுகள் செய்வதற்குக் காரணமாக அமைவது கோபமாகும். கோபத்தில் நிதானத்தை இழக்கின்றான். அதனால் பல பெரிய, சிறிய தவறுகளைச் செய்துவிடுகின்றான். அதனால்தான் நபிகளார் கோபத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தினார்கள்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், கோபத்தைக் கைவிடு என்று (அறிவுரை) கூறினார்கள். அவர் (அறிவுரை கூறுங்கள் எனப்) பல முறை கேட்ட போதும் நபி (ஸல்) அவர்கள் கோபத்தைக் கைவிடு என்றே சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 6116)
அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
ஆட்சி, அதிகாரம் வந்துவிட்டால் மனஇச்சையின் அடிப்படையில் ஆணவத்துடன் நடப்பது சாதாரணமாக ஆட்சியாளரிடம் ஏற்படுகிறது. அதிகாரம் வரும் போது அடக்கமும் பணிவும் இறைச்சமும் ஏற்படவேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைக்கோ அல்லது படைப் பிரிவுக்கோ தளபதி ஒருவரை நியமித்தால், தனியாக அவரை அழைத்து இறைவனை அஞ்சுமாறும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களின் நலனைப் பேணுமாறும் அறிவுறுத்துவார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 3566)
மறுமையில் சொர்க்கம் கிடைக்க வேண்டுமானால் அல்லாஹ் கூறிய அடிப்படையில் அழகிய முறையில் வணக்க வழிபாட்டில் ஈடுபடவும் அவனுக்கு நன்றி செலுத்தவும் வேண்டும். இதற்கு அல்லாஹ்வின் உதவி நமக்குத் தேவை. இந்த உதவியை அல்லாஹ்விடம் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் கேட்குமாறு நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள்.
‘‘அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னி இபாத(த்)திக்
(இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டு விடாதே’’ என்று உனக்கு நான் வஸியத் செய்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்கள்: (அபூதாவூத்: 1522) (1301),(அஹ்மத்: 21109)
நபிகளார் வலியுறுத்திய இந்த அறிவுரைகளைப் பின்பற்றி நடக்க முயற்சி செய்வோமாக..! அப்படி ஒரு வாய்ப்பினை வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக.!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.