நபிகளாரின் அணுகுமுறை
- இலகுவாக போதித்த இறைத்தூதர்
- நபிகளாரின் அணுகுமுறை
- தவறைச் சுட்டிக்காட்டும் முறை
- மன்னிக்கும் மனப்பாங்கு
- மன்னிப்புக்கே முதலிடம்
- விபச்சாரம் செய்ய அனுமதி கேட்டவரை மனம் திருத்திய நபிகளார்
- அண்ணலாரின் தலைச்சிறந்த அணுகுமுறை
- நிதானமாக அணுகிய முறை
அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக அனுப்பப்பட்ட ஓர் இறைத்தூதர் ஆவார்கள். அவர்கள் மனித சமுதாயத்தை அழகிய பண்பிலும் அருங்குணத்திலும் வார்த்தெடுத்தார்கள் என்றால் மிகையல்ல. அவ்வாறு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சிறந்த நற்குனமுடையவராகவும், அணுகுமுறை கொண்டவராகவும் திகழ்துள்ளார்கள். அவர்களின் வாழ்வில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளும், அதை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எவ்வாறு அணுகினார்கள் என்பதையும் இந்த உரையில் பார்ப்போம்.
…அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
(முஸ்லிம்: 2946)
இது போல் 9 மணிக்கு வரவேண்டிய ஊழியர் ஒருவர் அரை மணி நேரம் தாமதமாக வருகின்றார் என்றால் முதலாளி அவரைக் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டியதில்லை. கடிகார முட்களைப் பார்த்தாலே போதும். அது அந்த ஊழியரின் இதயத்தைத் தைத்து விடும். இப்படி ஒரு அணுகுமுறையை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறுகின்றோம்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். ஆகவே அபூதல்ஹா (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, ”அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலியான சிறுவன்.
அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்” என்று கூறினார்கள். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரயாணத்திலும் ஊரில் இருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும் ‘இதை ஏன் இப்படிச் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும் ‘இதை ஏன் நீ இப்படிச் செய்யவில்லை’ என்றோ என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.
இன்று இந்த அணுகுமுறைகளை முதலாளி தன் தொழிலாளியிடம் அனுசரிப்பதில்லை. நண்பர்கள் தங்களுக்குள் அலங்கரித்துக் கொள்வதில்லை. இப்படியொரு தன்மை இரு தரப்பிலும் நிலவுகின்ற போது அங்கு அமைதி தழுவும். பணி சிறக்கும். இதற்கு மாற்றமாக ஒரு நல்ல நண்பர் அல்லது ஒரு நல்ல ஊழியர் ஏற்கனவே குற்ற உணர்வில் இருக்கும் போது, அவரிடத்தில் சீறிப் பாயும் கடின வார்த்தைகள் அவரை சீர்குலைய வைக்கின்றன.
அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பத்து ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்கள். இந்தப் பத்தாண்டு காலத்தில் ஏதேனும் பிசகுதல் இல்லாமல் இருந்திருக்க முடியாது. ஆயினும் நபி (ஸல்) அவர்களின் மென்மையான அணுகுமுறையினால் அது சரி செய்யப்பட்டிருக்கும் என்பதை நாம் விளங்க முடிகின்றது.
தவறைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு முரட்டுத்தனம் வந்து விடக் கூடாது. தவறை எப்படிச் சுட்டிக் காட்ட வேண்டும் என்பதை இஸ்லாம் தெளிவாகச் சொல்லிக் காட்டுகின்றது. இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உள்ள முன்னுதாரணத்தை வாழ்க்கையில் நாம் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் போது, ஒரு கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்து, ”யா அல்லாஹ்! எனக்கும் முஹம்மதுக்கும் மன்னிப்பை வழங்குவாயாக! எங்களுடன் சேர்த்து வேறு யாருக்கும் நீ மன்னிப்பளிக்காதே!” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடனே சிரித்து விட்டார்கள். ”(அல்லாஹ்வின்) விசாலமான தன்மைக்கு நீ தடை விதிக்கின்றாயே!” என்று கூறினார்கள்.
பிறகு அவர் பள்ளியின் ஓரத்தில் ஆடையை அகற்றி சிறுநீர் கழிக்கலானார். (தான் தவறு செய்து விட்டோம் என்று) அவர் உணர்ந்த பின் என்னருகில் வந்து நின்று கொண்டு, ”அவர்கள் கடுமையாக எச்சரிக்கவில்லை. ஏசவில்லை” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”இது பள்ளிவாசலாகும். இதனுள் சிறுநீர் கழிக்கப் படலாகாது. இது அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காகவும் தொழுவதற்காகவுமே கட்டப் பட்டுள்ளது” என்று கூறி ஒரு வாளி தண்ணீர் கொண்டு வர உத்தரவிட்டார்கள். அது அவரது சிறுநீரில் ஊற்றப்பட்டது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
(இப்னு மாஜா: 529, 522)
ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டார். உடனே மக்கள் அவரைப் பிடித்தனர். நபி (ஸல்) அவர்கள், ”அவரை விட்டு விடுங்கள். அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளி தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் நளினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப் பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்பவர்களாக நீங்கள் அனுப்பப் படவில்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 220)
பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டதால் தன்னை நபி (ஸல்) அவர்கள் கண்டிப்பார்கள் என்று அந்தக் கிராமவாசி எதிர்பார்க்கின்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. அதே சமயம் அந்தக் கிராமவாசியை நோக்கிப் பாயும் மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் நளினத்தைப் போதிக்கின்றார்கள். தவறைச் சுட்டிக் காட்டுவதாகக் கூறி, தவறு செய்தவரை கடித்துக் குதறி விடும் பழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது. அத்தகையவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறையில் அழகிய படிப்பினை உள்ளது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே – அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் – எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப் பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர.
சுமாமா என்பவர் போர்க்கைதியாகப் பிடித்து வரப்பட்டு பள்ளிவாசல் தூணில் கட்டி வைக்கப்படுகின்றார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கொண்ட அணுகுமுறையைப் பின்வரும் ஹதீஸ் விவரிக்கின்றது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் “நஜ்த்‘ பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் “பனூ ஹனீஃபா‘ குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, “(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய், ஸுமாமாவே?” என்று கேட்டார்கள். அவர், “நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள்.
(என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்” என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார்.
மறுநாள் வந்தபோது அவரிடம், “ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியது தான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்” என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள்.
மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, “நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே!” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், “நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள்” என்று சொன்னார்கள்.
உடனே ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை‘ என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், “முஹம்மது, அல்லாஹ்வின் தூதர்‘ என்றும் நான் உறுதி கூறுகிறேன்” என்று மொழிந்துவிட்டு, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை.
ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது.
உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக்கொண்டு விட்டனர்” என்று சொல்லிவிட்டு, “மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள்.
அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், “நீ மதம் மாறிவிட்டாயா?” என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது” என்று சொன்னார்கள்.
இங்கு நபி (ஸல்) அவர்களிடம் மன்னிப்பு, தண்டிப்பு ஆகிய இரண்டு விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன. நபி (ஸல்) அவர்கள் மன்னிப்பையே தேர்வு செய்கின்றார்கள் என்பதை இந்தச் சம்பவத்தில் நாம் பார்க்கின்றோம். அவர்களது பெருந்தன்மையும், அணுகு முறையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர் ரிகாஉ) போருக்காக சென்றேன். (போரை முடித்துக் கொண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிய போது நானும் அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வுகொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள்.
மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மர நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முள் மரத்திற்குக் கீழே தங்கி ஓய்வெடுத்தார்கள்; அப்போது தமது வாளை அந்த மரத்தில் தொங்க விட்டார்கள்.
நாங்கள் ஒரு தூக்கம் தூங்கியிருப்போம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் அவர்களிடம் சென்றோம். அங்கே நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு கிராமவாசி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் தூங்கிக் கொண்டிருந்த போது இவர் எனது வாளை (எனக்கெதிராக) உருவிக் கொண்டார்.
அந்த வாள் உருவப்பட்டு இவரது கையிலிருந்த நிலையில் நான் கண்விழித்தேன். அப்போது இவர் என்னிடம், “என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?’ என்று கேட்டார். நான், “அல்லாஹ்‘ என்று பதிலளித்தேன். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்” என்று கூறினார்கள். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை. (மன்னித்து விட்டுவிட்டார்கள்.)
இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவருக்கு மரண தண்டனை அளிப்பதற்குரிய அனைத்து நியாயமும் இருந்தது. ஆனால் நபி (ஸல்) அவரைத் தண்டிக்காது மன்னிப்பளித்து, அவரை விடுவித்தார்கள்.
அலீ(பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூமர்ஸத் (கினாஸ் இப்னு ஹுஸைன்) அவர்களையும், ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களையும், நீங்கள் `ரவ்ளத்து காக் என்னுமிடம் வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகச் சிவிகையில் இணைவைப்பவர்களில் ஒருத்தி இருக்கிறாள். இணைவைப்பவர்(களின் தலைவர்)களுக்கு ஹாதிப் இப்னு அபீ பல்தஆ அனுப்பியுள்ள (நம்முடைய ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும்; (அவளிடமிருந்து கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)” என்று கூறினார்கள்.
(பிறகு நாங்கள் புறப்பட்டுப் போனோம்.) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க, அவளை நாங்கள் அடைந்தோம். அவளிடம், கடிதம் (எங்கே? அதை எடு)” என்று கேட்டோம். அவள், `எம்மிடம் கடிதம் எதுவுமில்லை” என்று பதிலளித்தாள். (அவள் அமர்ந்திருந்த) ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். எந்தக் கடிதத்தையும் நாங்கள் காணவில்லை. அப்போது, `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள்.
ஒன்று, நீயாக கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை(ச் சோதிப்பதற்காக உன்னுடைய ஆடையை) நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும்” என்று நாங்கள் சொன்னோம். விடாப் பிடியாக (நாங்கள்) இருப்பதை அவள் கண்டபோது, (கூந்தல் நீண்டு தொங்கும்) தன்னுடைய இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள்.
(அங்கிருந்து) அ(ந்தக் கடிதத்)தை வெளியில் எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அப்போது உமர் (ரலி), `இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹாதிப் இப்னு அபீ பல்தஆ) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; அவரின் கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஹாதிப் அவர்களை நோக்கி), `ஏன் இப்படிச் செய்தீர்கள்!” என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாதவனாக நடந்து கொள்ள வேண்டுமென்பது என் நோக்கமல்ல. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்குக் கிடைத்து, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும், என் செல்வத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றே நான் நினைத்தேன்.
தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களின் மனைவி மக்களையும், அவர்களின் செல்வத்தையும் எவரின் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் இருக்கின்றனர்” என்று கூறினார். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், `இவர் உண்மை கூறினார்.
இவரைப் பற்றி நல்லதையே சொல்லுங்கள்” என்று (தோழர்களைப் பார்த்துக்) கூறினார்கள். அப்போது உமர் (ரலி), `இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்” என்று (மீண்டும்) கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், `இவர் பத்ருப் போரில் பங்கெடுத்தவர் அல்லவா? பத்ரில் பங்கெடுத்தவர்களை நோக்கி அல்லாஹ், `நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது… அல்லது உங்கள் பாவங்களை நான் மன்னித்து விட்டேன்… என்று கூறி விட்டிருக்கலாம் அல்லவா?` என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) தம் கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, `அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினார்கள்.
ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! விபச்சாரம் செய்ய எனக்கு அனுமதி தாருங்கள்’’ என்று கேட்டார். உடனே மக்கள் கூட்டம் அவரை முன்னோக்கி வந்து, ‘‘நிறுத்து நிறுத்து’’ என அவரைத் தடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை நெருங்கி வா என அழைக்க அவர் நெருங்கி வந்து அமர்ந்து கொண்டார்.
அப்போது நபியவர்கள், ‘‘இதை உன் தாய்க்கு விரும்புவாயா?’’ என்று கேட்க அவரோ, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப மாட்டேன். மக்களும் தம் தாய்க்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.
‘‘உன் மகளுக்கு இதை விரும்புவாயா?’’ என்று கேட்க, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப மாட்டேன். மக்களும் தம் மகள்களுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.
‘‘உன் சகோதரிக்கு இதை விரும்புவாயா?’’ என்று கேட்ட போது, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப மாட்டேன் மக்களும் தம் சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.
‘‘உன் தந்தையின் சகோதரிகளுக்கு இதை விரும்புவாயா?’’ என்ற போது, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப மாட்டேன். மக்களும் தம் தந்தையின் சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.
‘‘உன் தாயின் சகோதரிகளுக்கு இதை விரும்புவாயா?’’ என்ற போது அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, அவ்வாறு நான் விரும்ப மாட்டேன். மக்களும் தம் தாயின் சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.
அப்போது நபியவர்கள் தனது கரத்தை அவர் மீது வைத்து, ‘‘இறைவா! இவரது பாவத்தை மன்னிப்பாயாக! இவரது உள்ளத்தை பரிசுத்தப்படுத்துவாயாக! இவரது கற்பைப் பாதுகாப்பாயாக!’’ என்று அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
(அஹ்மத்: 22211, 22265)
ஒரு நபித்தோழர் நபிகளாரின் அவைக்கு வந்து பலர் முன்னிலையிலே தனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்கிறார். விபச்சாரம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அவர் நன்கறிவார். இருப்பினும் தடை செய்யப்பட்ட விபச்சாரத்தை யாருக்கும் தெரியாமல் செய்து பாவத்தை சம்பாதித்துக் கொள்வதை விட, நபிகளாரிடம் அனுமதி பெற்று விட்டால் அது குற்றமாகாது அல்லவா? என்பது அவரது வெள்ளந்தியான எண்ணம்.
இவ்வாறு தனக்கு மட்டும் விபச்சாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த நபித்தோழர் கேட்கின்ற போது நபிகளார் அவர்களோ, இதே அனுமதியை உன் தாய்க்கும் வழங்கலாமா? உன் மகளுக்கும் வழங்கி விடவா? உன் சகோதரிகள், பெண் பிள்ளைகள் அவர்களுக்கும் விபச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படுவதை விரும்புவாயா? என்று கேட்டு இது தவறான சிந்தனை என்பதை அவருக்குப் புரியும்படி உணர்த்தி விடுகின்றார்கள்.
அத்துடன் நில்லாமல் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தனை புரிகிறார்கள். இந்தத் தவறான சிந்தனைக்கு உள்ளத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என்பதால் அவரது உள்ளத்தின் பரிசுத்தத் தன்மைக்கு அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள்.
அவரது கற்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் துஆ செய்கிறார்கள். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் நபிகளாரின் அழகிய அணுகுமுறையால் மற்றவர்களின் மனதை திருத்தியுள்ளார்கள்.
சுற்றியிருக்கும் மக்களுக்கு சத்தியத்தை சொல்ல வேண்டுமெனும் ஆர்வம் நபியிடம் மோலோங்கி இருந்தது. சுருக்கமாக கூறின், எல்லா விதத்திலும் அனைவருக்கும் தலைச்சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.
நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது (தொழுது கொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் “யர்ஹமுகல்லாஹ்” (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன்.
உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் “என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை.
அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. (மாறாக,) அவர்கள், “இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்“ என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் அல்ஹகம் (ரலி)
(முஸ்லிம்: 935)
“அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை” என்று நபித்தோழர் கூறுகிறார். இதன் மூலம் அல்லாஹ்வின் தூதருடைய அணுகுமுறை எந்தளவுக்கு நன்றாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவதை செவியேற்பவர், யர்ஹமுகல்லாஹ் என்று பதில் சொல்ல வேண்டும். தொழுகை என்பது இறைவனிடம் உரையாடுவதற்கு நிகரானது என்பதால் அதில் இருக்கும் நிலையில் தும்மியருக்கு பதில் சொல்லக் கூடாது.
இது தெரியாமல் தொழுகையில் பதில் கூறியவருக்கு நபியவர்கள் நல்ல முறையில் தவறைச் சுட்டிக் காட்டுகிறார்கள்; தொழுகையின் நோக்கத்தையும் விளக்குகிறார்கள். இவ்வாறு, கேட்பவரின் நிலைக்கேற்ப கற்றுத்தரும் பண்பாளராக நபிகளார் இருந்தார்கள்.
நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
அறிவிப்பவர்: உமர் இப்னு அபீஸலமா(ரலி)
(புகாரி: 5376)
பெரும்பாலான பெரியவர்கள் சிறுவர்களுக்கு ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தருவதில்லை. வளர்ந்து ஆளானதும் அவர்களாகவே கற்றுக் கொள்வார்கள் எனக் கருதிவிட்டு அடிப்படைச் செய்திகளைக் கூட சொல்லாமல் விட்டுவிடுகிறார்கள். சிலரோ போதிக்கும் பெயரில் அதிக கண்டிப்பைக் காட்டுகிறார்கள். கண்டிப்பே கூடாதென நாம் வாதிடவில்லை. கற்கும் ஈடுபாட்டைக் கெடுக்காத வகையில் அது எல்லைக்குள் இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பாருங்கள். கண்டிப்பை கட்டுக்குள் வைத்துவிட்டு குழந்தையின் மனதில் ஆழப்பதியும் வகையில் பக்குவமாக சொல்கிறார்கள். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் கூட சீக்கிரம் உள்வாங்கிக் கொள்ளும் வகையில்தான் அண்ணலாரின் அணுகுமுறை இருந்தது.
ஒருவர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார், பள்ளிவாசலின் ஒரு மூலையில் (அமர்ந்து) இருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் ‘திரும்பச் சென்று தொழுவீராக! ஏனென்றால் நீர் (முறையாகத்) தொழவில்லை’ என்று கூறினார்கள்.
அந்த மனிதர் திரும்பிச் சென்று (முன்பு தொழுததைப் போன்றே) தொழுதுவிட்டு வந்து (நபிகளாருக்கு) சலாம் சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘வ அலைக்க’ (அவ்வாறே உம்மீதும் சாந்தி உண்டாகுக! என பதில் சலாம் கூறிவிட்டு) ‘திரும்பச் சென்று தொழுவீராக! நீர் (முறையாகத்) தொழவில்லை’ என்று கூறினார்கள்.
(இவ்வாறு மூன்று முறை நடந்தது) மூன்றாவது முறையில் அந்த மனிதர், ‘அவ்வாறாயின் எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார்.
‘நீர் தொழ நினைத்தால் (முதலில்) பரிபூரணமாக அங்கசுத்தி (உளூ) செய்வீராக! பிறகு கிப்லா (இறையில்லம் கஅபாவின் திசையை) முன்னோக்கி (நின்று) ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறும்! பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதும்! பிறகு (குனிந்து) ‘ருகூஉ’ செய்வீராக! அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக!
பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி நேராக நிற்பீராக! பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்து, அதில் (சற்றுநேரம்) நிலைகொள்வீராக!பிறகு தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக! பின்னர் (மீண்டும்) சிரவணக்கம் செய்து, அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பிறகு எழுந்து நேராக நிற்பீராக! இவ்வாறே உம்முடைய தொழுகை முழுவதிலும் செய்துவருவீராக!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 6667)
தொழுகை முக்கியமான முதல் கடமை. இப்படியிருக்க அது பற்றி தெரியாமல் இருக்கிறீர்களே என்று நபியவர்கள் கோபம் கொள்ளவில்லை. அவர் சரியாக தொழாததிற்கு காரணம் அறியாமையா அல்லது அலட்சியமா என்பதை மீண்டும் மீண்டும் தொழச்சொல்வது மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். பிறகு, தொழுகை பற்றிய செயல்முறையை நிறுத்தி நிதானமாக கற்பிக்கிறார்கள்.
இவ்வாறு நபிகளாரின் அணுகுமுறை அறிந்த நாம் நம்முடைய வாழ்வில் இந்த அணுகுமுறைகளை பாடமாகவும், படிப்பினையாகவும் கொண்டு வாழும் நன் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.