நன்மைகள் தரும் மென்மை
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
இயந்திர மயமாகிவிட்ட நவீன உலகம் அறிவியல் பூர்வமாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. மேலும் முன்னேற்றங்களை, அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி வீறுநடை போடுகின்றது. ஒரு பக்கம் இந்த முன்னேற்றங்கள் மனித சமுதயாத்திற்கு நன்மை பயப்பவையாக இருந்தாலும் மறுபக்கம் இவைகளால் மனித குலத்திற்கு சில கேடுகள், தீமைகள் விழைவதையும் மறுப்பதற்கில்லை.
செல்போன், டி.வி, இண்டர்நெட் போன்ற அறிவியல் முன்னேற்றங்கள் ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதை விட மனிதர்களின் அறிவை மழுங்கச் செய்யும் காரியத்திற்கும், அவர்களின் ஒழுக்க வாழ்வை நாசப்படுத்துவற்குமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. மனிதர்கள் இக்கருவிகளால் தங்களுக்கு தாங்களே கேடு விழைவித்து கொள்கின்றனர்.
நவீன கருவிகளில் மனிதர்கள் தொலைந்து விட்டதால் அவர்கள் இழந்த இழப்புகள் ஏராளம். வளமான வாழ்வு, நல்ல நட்பு, குழந்தைகளின் பாசம், நல்லறிவு, நற்பண்புகள் இவ்வாறாக மனிதர்கள் தொலைத்த நன்மைகள் பல. இவற்றுள் மென்மையும் ஒன்று.
இக்காலத்தில் அதிகமானோர் மென்மை எனும் குணத்தை இழந்தவர்களாக, நளினத்தை தவற விட்டவர்களாக இருக்கின்றார்கள். எப்போதும் பரபரவென்று இருப்பது, குழந்தைகள் உட்பட யாரைப்பார்த்தாலும் அவர்கள் மேல் எரிந்து விழுவது, சிறிய விஷயத்திற்கும் கடுமையாக நடந்து கொள்வது போன்ற அணுகுமுறைகளையே பெரும்பாலானோர் கடைபிடிக்கின்றனர். மொத்தத்தில் மென்மை எனும் பொன்னை, புதையலை, பொக்கிஷத்தை புறக்கணித்தவர்களாக தங்களுடைய வாழ்வை ஆக்கிக் கொண்டனர்.
மென்மைக்கு இருக்கும் மவுசை அறிந்து கொண்டால்… அறிந்து கொள்வோமே. பிறகு அதன் மூலம் இறைவன் பல மாற்றங்களை தருவான் என்று நம்புவோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.
அறிவிப்பாளர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)
(முஸ்லிம்: 5052) ➚
பிறரிடத்தில் நளினமாக, மென்மையாக நடந்து கொள்ளும் பக்குவம் இழந்தவர் எந்த நன்மையையும் பெறமுடியாது என்று நபிகளார் கூறுகின்றார்கள்.
நபிகளாரின் இக்கருத்து நூற்றுக்கு நூறு உண்மை என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். நல்லோர்களின் சகவாசத்தால் பல நன்மைகளை நாம் பெறுகிறோம்.
அவருடைய நல்ல பழக்கவழக்கங்கள், அவர்களின் மூலம் கிடைக்கும் நல்ல நண்பர்கள், நமது முன்னேற்றத்திற்கான வழிகள் என பல நன்மைகள் அவர்கள் வாயிலாக கிடைக்கப் பெறுகின்றது. அவர்கள் நம்மிடம் நெருங்கி பழகுவதாலே இந்நன்மைகள் ஏற்படுகின்றது..
இதுவே நாம் கடினத்தன்மை கொண்டவர்களாக இருந்தால் இவர்கள் நம்மிடம் ஒட்டுவார்களா? ஒன்று அறவே நம்மிடம் ஒட்ட மாட்டார்கள். அல்லது அளவோடு நிறுத்திக் கொள்வார்கள். நாம் மென்மையாக அவர்களிடம் நடந்து கொண்டால் தான் நம்முடன் பழகுவதை தொடர்வார்கள். அவர்கள் மூலம் கிடைக்கும் நன்மைகளும் தொடரும். எனவே மென்மையாக நடந்து கொள்ளும் குணம் நம்மிடம் இல்லையானால் அதனால் நாம் ஏராளமான இழப்புகளுக்கு ஆளாகிறோம் என்ற நபிகளாரின் கருத்தை மனதில் பதியச் செய்ய வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்” என்று கூறினார்கள்.
மென்மை எனும் குணம் இறைவன் விரும்பும் குணம் என்றும், அதற்கு மற்றவைகளை விடவும் ஏராளமான சன்மானங்களையும், வெகுமதிகளையும் இறைவன் வழங்குவதாகவும் நபிகளார் தெரிவிக்கின்றார்கள். நபிகளாரின் இந்த ஒரு செய்தியிலேயே மென்மையின் மவுசு பளிச்சிடுவதை காணலாம்.
மது, மாது, சூது, விபச்சாரம் போன்றவைகள் மலிந்திருந்த காலம் அறியாமைக்காலம். இவைகள் தான் அக்காலத்து மக்களின் அன்றாட பொழுது போக்குகள். இவைகளை செய்பவர் முழுமையான மனிதராகவும், செய்யாதோர் கேவலமாகவும் பார்க்கப்பட்ட காலம். இக்காலத்து மக்களிடையே தான் நபிகளார் சத்தியப்பிரச்சாரம் செய்து அவர்களை, பண்புள்ளவர்களாக, ஒழுக்கசீலர்களாக, தியாகிகளாக வார்த்தெடுத்தார்கள்.
இறுதியில் நபிகளாருக்காக எதையும் இழப்பதற்கு அது உயிராக இருந்தாலும் தயார் எனுமளவில் ஒரு பெரும் கூட்டம் உருவாகியிருந்தது. காட்டுமிராண்டித்தனமான குணங்கள் கொண்டவர்களை இந்த நிலைக்கு மாற்றியதற்கு முழுமுதற்காரணம் நபிகளாரின் மென்மையான அணுகுமுறையே.
அனைத்து மக்களையும் நபிகளார் வென்றெடுத்ததற்கு அவர்களின் மென்மையான அணுகுமுறை ஒரு காரணம். இதை இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்.
(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்.
சத்தியக் கொள்கையின் பால் மக்களை வென்றெடுக்க நபிகளார் தன் கைவசம் வைத்திருந்த மென்மை எனும் வழிமுறையை நாம் நம் வசமாக்கினால் அதற்கான பலன் கிடைப்பது உறுதி.
வெறுமனே நபிகளார் நளினமாக நடந்து கொண்டார்கள் என்று கூறுவதை விட அதற்கு சில சம்பவங்களை குறிப்பிட்டால் பொருத்தமானதாய் அமையும். எனவே நபிகளார் தன்னுடைய மென்மையான அணுகுமுறையை வெளிப்படுத்திய சில நிகழ்ச்சிகள் :
كُنْتُ أَمْشِي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ، وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الْحَاشِيَةِ فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فَجَذَبَهُ جَذْبَةً شَدِيدَ حَتَّى نَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَدْ أَثَّرَتْ بِهِ حَاشِيَةُ الرِّدَاءِ مِنْ شِدَّةِ جَذْبَتِهِ ثُمَّ قَالَ مُرْ لِي مِنْ مَالِ اللهِ الَّذِي عِنْدَكَ فَالْتَفَتَ إِلَيْهِ فَضَحِكَ ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ.
நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் ஓரம் தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களைக் கண்டு அந்த சால்வையை வேகமாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால் அந்த கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப் பகுதி நபி (ஸல்) அவர்களுடைய தோளின் ஒரு மூலையில் (காயப்படுத்தி) அடையாளம் பதித்திருந்ததை நான் கண்டேன்.
பிறகு அவர் (நபி-ஸல்-அவர்களிடம்), “தங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்று கூறினார். உடனே, நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்து விட்டு, பிறகு அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(புகாரி: 3149) ➚
ஒருமுறை நபியவர்கள் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கையில் யாசிப்பவர் நபிகளாரிடம் கடுமையாக நடந்து கொண்டு, நபிகளார் அணிந்திருந்த சால்வையினால் காயப்படுத்தி செல்வத்தை கேட்கின்றார். இவ்வாறு வன்மையாக நடந்து கொண்டவரிடமும் நபியவர்கள் சிரித்தவாறே மென்மையாக நடந்தார்கள் என்று இந்த சம்பவம் உணர்த்துகின்றது.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அஸ்ஸாமு அலைக்கும்’ (-உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு “வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (-அவ்வாறே உங்கள் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)” என்றேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்” என்று சொன்னார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான்தான் “வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)” என்று கேட்டார்கள்.
(முஸ்லிம்: 4373) ➚, 6024
நம்மை நோக்கி ஒருவர் எல்லை மீறி ஒரு வார்த்தையை உதிர்த்தால் பதிலுக்கு பல வார்த்தைகளால் அர்ச்சனை செய்வது தான் நமது வழக்கம். ஆனால் தன்னை திட்டியவருக்கு பதிலடி கொடுப்பதிலும் எல்லை மீறாமல் நபியவர்கள் நளினத்தை கடைபிடித்துள்ளார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது. அப்போதும் ஆயிஷா (ரலி) அவர்கள் கடுமையாக நடந்து கொள்வதை கண்டிக்கின்ற நபியவர்களின் உத்தமும் மின்னுகின்றது.
ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித்தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். பிறகு (தண்ணீர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது.
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(முஸ்லிம்: 479) ➚, 6025
பள்ளியினுள் சிறுநீர் கழித்த மாற்று மதத்தவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய இந்த நளினம்தான் நபியவர்களை பிற மதத்தவர்களையும் நேசிக்கச் செய்தது. நற்குணத்தில் நாயகராகவே நபிகள் நாயகம் திகழ்ந்திருக்கின்றார்கள் என்பதை இது பறைசாற்றுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)
(முஸ்லிம்: 5056) ➚
எல்லாவற்றிலும் மென்மை தான் அழகு என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். ஏனைய பொருள்கள் என்ன தான் அழகாக இருந்தாலும் மென்மையான பொருள் அவைகளை விட அழகாக மிளிர்வதை உணரலாம். ஆதலால் தான் பலரையும் அது கவர்ந்திழுக்கக்கூடியதாக இருக்கின்றது. மென்மையாக இருப்பது மண், ஆடை, இலை போன்று எதுவாக இருந்தாலும் மனிதர்களை கவரக்கூடியதாக விளங்குகிறது.
அந்த மென்மை மனிதர்களிடம் இருக்குமானால் அது மனிதர்களையும் அழகாக்கிவிடும் என்பதை தான் நபிகளார் இந்த ஹதீஸில் கூறுகின்றார்கள்.
நாம் ஒருவருக்கு கடன் வழங்கி, அவர் குறித்த நாளுக்குள் தரவில்லையானால் அவரிடம் சற்று கடினமாக நடந்து கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.
எனினும் அக்கடனாளியிடம் நாம் தாராள மனதுடன் மென்மையாக நடந்து கொண்டால் இறைவனும் நம்மிடத்தில் மறுமையில் மென்மையாக நடந்து கொள்கின்றான். நமது பாவங்களை மன்னிக்கின்றான். மென்மையான அணுகுமுறையால் கிடைக்கும் மற்றுமொரு நன்மை இது.
أُتِىَ اللَّهُ بِعَبْدٍ مِنْ عِبَادِهِ آتَاهُ اللَّهُ مَالاً فَقَالَ لَهُ مَاذَا عَمِلْتَ فِى الدُّنْيَا – قَالَ وَلاَ يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا – قَالَ يَا رَبِّ آتَيْتَنِى مَالَكَ فَكُنْتُ أُبَايِعُ النَّاسَ وَكَانَ مِنْ خُلُقِى الْجَوَازُ فَكُنْتُ أَتَيَسَّرُ عَلَى الْمُوسِرِ وَأُنْظِرُ الْمُعْسِرَ. فَقَالَ اللَّهُ أَنَا أَحَقُّ بِذَا مِنْكَ تَجَاوَزُوا عَنْ عَبْدِى
அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவர் (இறந்த பின்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்பட்டார். அவரிடம் அல்லாஹ், “உலகத்தில் நீ என்ன நற்செயல் புரிந்தாய்?” என்று கேட்டான். (அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.) அதற்கு அந்த அடியார், “இறைவா! உன் செல்வத்தை எனக்கு நீ வழங்கினாய். அதை வைத்து நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதே எனது இயல்பாக இருந்தது.
வசதியுடையவரிடம் மென்மையாக நடந்துகொள்வேன்; சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பேன்” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ், “இ(வ்வாறு பெருந்தன்மையுடன் நடப்ப)தற்கு உன்னைவிட நானே மிகவும் தகுதியுடையவன். (எனவே,) என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்யுங்கள்” என்று (வானவர்களிடம்) கூறினான்
அறிவிப்பாளர்: ஹுதைஃபா (ரலி)
(முஸ்லிம்: 3181) ➚
இன்று எதுவுமறியாத குழந்தைகளிடம் சிறுவர்களிடம் கூட முரட்டுத்தனமாக, கடுமையாக நடந்து கொள்பவர்கள் உள்ளனர். (மார்க்க விஷயத்தில் கண்டிப்பதை குறிக்காது). அவர்களிடம் சிறு தவறு நிகழ்ந்தாலோ, ஒன்றுமே நிகழாவிட்டாலும் குழந்தைகளை மிரட்டுவதை சிலர் பழக்கமாக கொண்டுள்ளனர். நபியவர்கள் சிறுவர்களிடம் நளினமாக பழகக்கூடியவர்ளாக இருந்துள்ளார்கள்.
إِنْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيُخَالِطُنَا حَتَّى يَقُولَ لأَخٍ لِي صَغِيرٍ يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் “அபூஉமைரே! பாடும் உனது சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?” என்று கூடக் கேட்பார்கள்.
சிறுவர்களிடம் நளினமாக நடந்து கொள்வதே அவர்களை பண்படுத்துவதற்கு உதவியாய் இருக்கும் என்பதை அறிந்து கொண்டால் வளமான வாழ்வை நோக்கி அச்சிறுவர்களை அழைத்து செல்லலாம். அதை விடுத்து அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வோம் எனில் நம்மை விட்டும் அவர்கள் வெருண்டோடுவதற்கே அது உதவும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.
குறிப்பு : எல்லா சந்தர்ப்பங்களிலும் மென்மையாக நடந்து கொள்வது சரியாக இருக்காது. நம்முடைய கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய சில இடங்களில் கொஞ்சம் கடுமையாகவும நடந்து கொள்ள வேண்டும்.
நமது குழந்தைகள், குடும்பத்தினர்கள் ஒரு தீமையில் ஈடுபட முயல்கிறார்கள் எனில் அதை தடுக்கும் பொறுப்பு நம்மை சார்ந்தது. அவ்விடத்தில் மென்மையாக நடந்தால் முடிவு எதிர்வினையைத்தான் தரும். எனவே அது போன்ற இடங்களில் சற்று கடினமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே மார்க்கத்தின் நிலைப்பாடு.
“ஆயிஷா (ரலி) அவர்கள் (பயணத்துக்குப் பழக்கப்படாத) முரட்டு சுபாவமுடைய ஒட்டகம் ஒன்றில் ஏறிச் சென்றார்கள். அப்போது அதை விரட்டலானார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ஆயிஷா!) நளினத்தைக் கையாள்வாயாக” என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அறிவிப்பாளர்: ஆயிஷா ரலி
(முஸ்லிம்: 5057) ➚
மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளிடமும் நாம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நபிகளார் இந்த செய்தியில் கூறுகின்றார்கள். ஆனால் நடைமுறையில் மாடு, எருமை, கழுதை போன்ற விலங்குகளை காட்டுமிராண்டித்தனமாக சாட்டையிலடித்தும், அதிக பளுவை சுமத்தியும் வதைக்கின்றார்கள். ஒரு முஸ்லிம் அனைத்து விலங்குகளிடம் மென்மையாகவே நடந்து கொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.
ஆகவே இறைத்தூதரின் வழி நடந்து இம்மை, மறுமை வெற்றிகளைப் பெறுவோமாக! வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அப்துல் கரீம், துணை முதல்வர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்