நட்பின் இலக்கணம் என்ன

கேள்வி-பதில்: பண்பாடுகள்

நட்பின் இலக்கணம் என்ன

அழகிய முறையில் நட்பு கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்மையான காரியம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

நூல் : முஸ்லிம் (4760)

நல்ல நண்பனைத் தேர்வு செய்வதற்கு முன்னால்

ஒரு நல்ல நண்பனை நாம் தேர்வு செய்வதற்கு முன்னால் நம்மை நாம் நல்லவனாக மாற்றிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் நம்மிடத்தில் நல்ல பண்புகள் இருந்தால் தான் நல்லவர்கள் நம்மிடம் பழகுவார்கள். இனம் இனத்தைச் சாரும் என்ற அடிப்படையில் நல்லவர்கள் நல்லவர்களுடன் தான் நட்பு வைப்பார்கள். இதனால் தான் மோசமான குணம் உள்ளவர்களிடம் அது போன்ற குணம் உள்ளவர்கள் தான் அண்டுவார்களே தவிர நற்குணம் படைத்தவர்கள் அண்டுவதில்லை. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் சுட்டிக் காட்டுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப் போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (3336)

நல்லவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுதல்

பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும் என்று கூறுவார்கள். நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே நம்முடைய இரு உலக வாழ்க்கையும் சிறப்புடன் விளங்க நல்ல நண்பர்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகான உதாரணத்தைக் கூறி விளக்கியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்.

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)

நூல் : புகாரி (2101)

தீயவர்களுடைய நட்பு நம்முடைய மறுமை வாழ்வை எரித்து நாசப்படுத்திவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலுள்ள ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். வீணர்களுடைய சகவாசத்தால் மறு உலக வாழ்கையைத் தொலைத்தவர்களின் புலம்பல்களை இறைவன் பின்வரும் வசனத்தில் எடுத்துரைக்கிறான்.

குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (74 : 45)

நல்ல நண்பன் நம்முடன் இருந்தால் தவறு செய்ய நாம் முற்பட்டாலும் நல்லதை நமக்கு விளக்கிச் சொல்லி அதில் விழவிடாமல் நம்பை பாதுகாத்து விடுவான். நபிமார்கள் நல்வழியை மக்களுக்குப் போதிப்பதற்காக வந்தார்கள். அவர்களை இப்பணியில் தூண்டிவிடுவதற்காக அல்லாஹ் அவர்களுக்கென்று ஒரு நண்பரை ஏற்படுத்தியுள்ளான். நபிமார்களுக்கே நல்ல நண்பர் தேவைப்படுகிறார் என்றால் நிச்சயமாக நாம் அனைவரும் நல்லவர்களை நண்பர்களாகப் பெற்றிருக்க வேண்டும்.

அல்லாஹ் எந்த ஒரு இறைத்தூதரை அனுப்பினாலும் இன்னும் எந்த ஒரு ஆட்சித் தலைவரை நியமித்தாலும் அவருக்கு நெருக்கமான இரு ஆலோசகர்கள் இருப்பார்கள். ஒரு ஆலோசகர் நன்மையை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். மற்றொருவர் தீமை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : புகாரி (7198)

அல்லாஹ்விற்காக நட்புவைத்தல்

பெரும்பாலான நண்பர்கள் வீணாகப் பேசுவது, ஊர் சுற்றுவது, திரையரங்குகளுக்குச் செல்வது போன்ற தீய காரியங்களில் ஒன்றுபடுகிறார்கள். அனைவரும் அல்லாஹ்வுடைய மார்க்கம் மேலோங்குவதற்காக ஒன்று கூடுவது அரிதிலும் அரிதாகி விட்டது. இஸ்லாத்தைப் பரப்புவதற்காக அறிமுகமில்லாத பலரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தி நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இறைவனுக்காக நட்புவைத்தவர்களுக்கு ஏராளமான சிறப்புகள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்காமல் இருக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக் கொண்டார்.

அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) அவர்கள்

நூல் : அபூதாவுத் (4061)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் வேறொரு ஊரில் இருக்கும் தன் சகோதரனைச் சந்திப்பதற்காக ஒருவர் சென்றார். அவர் செல்லும் வழியில் ஒரு வானவரை அல்லாஹ் அவரிடத்தில் அனுப்பினான். அந்த வானவர் அவரிடத்தில் வந்த போது நீங்கள் எங்கே செல்ல நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரில் உள்ள எனது சகோதரனை (சந்திக்க) நாடிச் செல்கிறேன் என்று கூறினார். உங்களுக்கு சொந்தமான எதையாவது அவர் உங்களுக்கு தர வேண்டியுள்ளதா என்று வானவர் கேட்டார். அதற்கு அவர் இல்லை. கண்ணியமானவனும் சங்கையானவனுமான அல்லாஹ்விற்காக அவரை நேசிக்கிறேன் என்று கூறினார். அந்த வானவர் நீங்கள் யாருக்காக அவரை நேசித்தீர்களோ அவன் உங்களை நேசிக்கிறான் என்பதை உங்களிடம் (கூற வந்த) அல்லாஹ்வின் தூதராவேன் நான் என்று கூறினார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (4656)

என் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும் என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களுக்கும் எனது பிரியும் உறுதியாகி விட்டது என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆத் (ரலி)

நூல் : அஹ்மத் (21114)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (4655)

உதவும் நண்பனே உண்மையான நண்பன்

நாம் வசதி வாய்ப்புகளுடன் வாழும் போது நமக்கு ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் கஷ்டங்கள் வரும் போது அனைவரும் ஓடி விடுவார்கள். இவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல. நாம் சிரமப்படும் போதும் நமக்கு உதவி செய்பவர்களே உண்மையான நண்பர்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமுடியாது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (13)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகுமாறு) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : புகாரி (2442)

நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும்

தீமையான காரியங்களில் நன்பனுக்க ஒத்துப் போவது கூடாது. நன்பன் நன்மையான காரியங்களைச் செய்ய மறந்து விட்டால் உண்மை நன்பன் அவனுக்கு ஞாபகமூட்ட வேண்டும். நண்பன் தொழ மறந்து விட்டால் இதை அவனிடத்தில் தெரியப்படுத்தி அவனை தொழ வைக்க வேண்டும். நண்பன் நல்ல காரியங்களைச் செய்தால் அவனுடன் சேர்ந்து நாமும் செயல்பட வேண்டும். பின்வரும் நபிமொழிகள் நண்பர்கள் ஒருவரையொருவர் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது.