நடுவிரலில் மோதிரம் அணியலாமா?
நடுவிரலில் மோதிரம் அணியலாமா?
நடுவிரலிலும் அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலைப்பாட்டைத் தான் நாம் முன்னர் கொண்டிருந்தோம். இவ்வாறு தான் நேரடி கேள்வி பதிலின் போதும் நமது பத்திரிகைகளிலும் இவ்வாறே முன்னர் கூறியுள்ளோம். ஆனால் அது குறித்த ஹதீஸை மறு ஆய்வு செய்த போது இந்த விரல்களில் மோதிரம் அணிவது தவறல்ல என்ற முடிவுக்கே வர முடிகிறது. இது குறித்த விபரம் வருமாறு:
இதற்கு அடிப்படையாக முஸ்லிமில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.
நடுவிரலையும் அதை அடுத்துள்ள விரலையும் சுட்டிக்காட்டி இந்த விரலிலோ அல்லது இந்த விரலிலோ மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தடை செய்தார்கள் என்று அலீ (ரலி) கூறியதாக ஆஸிம் கூறினார்.
இந்த ஹதீஸில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை. இரண்டு விரல்களில் மோதிரம் அணியக் கூடாது என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. இரண்டில் ஏதோ ஒரு விரலில் அணியக் கூடாது. அது எந்த விரல் என்பது தெரியவில்லை என்றே கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் நூலில் இடம் பெற்ற மற்றொரு அறிவிப்பில் (ஹதீஸ் எண் 3910) “இரண்டில் எந்த விரல் என்பது ஆஸிமுக்குத் தெரியவில்லை’ என்று கூறப்படுகிறது
இதே செய்தி இப்னுமாஜாவில் வேறு விதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் (இப்னு மாஜா: 3638) என்று இந்த அறிவிப்பில் கூறப்படுகிறது.
இரண்டையும் அலீ (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். இரண்டையும் அலீ (ரலி) வழியாக அபூபுர்தாவும் அவர் வழியாக ஆஸிமும் தான் அறிவிக்கிறார்கள்.
அதாவது ஒரே செய்தி நான்கு விரல்களில் மோதிரம் அணிவதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதியாக அறிவிக்கப்படுவதையே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சந்தேகத்துக்கு இடமான சொற்களைக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.
எனவே குறிப்பிட்ட விரலில் மோதிரம் அணியக் கூடாது என்பதை உறுதியாக அறிவிக்கும் ஹதீஸ் இல்லாததால் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்பதே சரியானதாகும்.