நசிர் அல்-தின் அல்-துசி – வானியல் மற்றும் கோணவியல் (Trigonometry) வல்லுநர்

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

நசிர் அல்-தின் அல்-துசி – வானியல் மற்றும் கோணவியல் (Trigonometry) வல்லுநர்

1201 ஆம் ஆண்டில் ஈரான் நாட்டிலுள்ள டஸ் என்ற நகரில் அல்-துசி பிறந்தார். இவர் ஷியா பிரிவை சேர்ந்தவர். கணிதம் மற்றும் வானியல் சார்ந்த பல ஆய்வுகளை அல்-துசி அவர்கள் மேற்கொகாண்டுள்ளார். அவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சில நூல்கள் கீழே தரப்பட்டுள்ளது:

• கிதாப் அல்-ஷக்ல் அல்- கட்டா (Kitab al-Shakl al-qatta) கோணவியல் குறித்த ஐந்து பாகங்கள் கொண்ட புத்தகம்

• அல்-தத்கிரா ஃபி இல்ம் அல்-ஹயா (Al-Tadhkirah fi’ilm al-hay’ah) வானியல் அறிவியல் பற்றிய நினைவுக் குறிப்பு

• அல்-ரிஸாலா அல்-அஸ்டுர்லேபியா (al-Risalah al-Asturlabiyah) – அஸ்ட்ரோலேப் எனப்படும் விண்வெளி ஆராய்ச்சிக் கருவி குறித்த ஆய்வுக்கட்டுரை

• ஸிஜ்-இ இல்கானி(Zij-i Ilkhani) இல்கானிக் அட்டவணைகள் எனப்படும் பெரிய வானியல் ஆய்வுக் கட்டுரை

இல்கானட் பேரரசின் அனுமதியுடன் அஸர்பைஜான் பகுதியில் ரஸாத் கானே ஆய்வுமையத்தை அல்-துசி அவர்கள் ஏற்படுத்தினார். இதன் மூலம் துள்ளியமான கிரக இயக்கங்களை அவர் ஆய்வு செய்தார். அவற்றை தனது ஆய்வு நூலான Rx-இ இல்கானியில் (Zij-i Ilkhani) பதிவிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் கிரகங்களின் நிலைகள் மற்றும் நட்சத்திரங்களின் பெயர் களைக் கணக்கிடுவதற்கான வானியல் அட்டவணைகள் உள்ளன.

கிரகங்கள் குறித்த மாதிரிகளை வடிவமைக்க அவர் ஒரு புதிய கணித நுட்பத்தை கண்டுபிடித்தார். துசிகபுல் ((Tusi-Couple) என்று அதற்கு பெயரிட்டார். இந்த நுட்பத்தின் மூலம், இரண்டு வட்ட இயக்கங்களின் (Circular Motion) கூட்டுத்தொகையானது நேரியல் இயக்கத்தை ((Linear Motion) உருவாக்குகிறது என்ற உண்மையை அதன் மூலம் நிறுவினார்.

ஈகியூனாக்ஸ் (Equinox) என்பதாவது குறிப்பிட்ட தருணத்தில் சூரியன் நேரடியாக பூமத்திய ரேகைக்கு (Equator) மேல் இருக்கும். மேலும், அந்த நாளானது முழு உலகிலும் பகல் மற்றும் இரவு சம நீளமாக இருக்கும். அல்-துசி அவர்கள் ஈகியூனாக்ஸின் வருடாந்திர முன்மாதிரியை கணக்கிட்டார். விண்வெளி ஆராய்ச்சிக்கு பயன்தரக்கூடிய ஆஸ்டிரோலேப் (Astrolabe) எனும் கருவியை கண்டுபிடித்தார். நட்சத்திரம் மற்றும் ஏனைய கோள்களின் அளவுகளை கணிப்பதற்கும், சூரியனின் இடத்தை யூகிப்பதற்கும் இக்கருவி பயன்படுத்தப்பட்டது. மேலும், சில மாற்றங்களுடன் இக்கருவியை கடற் பயணத்தின் போதும் பயன்படுத்த இயலும்.

பால்வழி (Milky Way) குறித்தும் தனது ஆய்வை அல்-துசி மேற்கொண்டுள்ளார். பால்வழி என்பது பல சிறிய இறுக்கமான நட்சத்திர கூட்டங்களானது. மேலும், செறிவுத்தன்மை மற்றும் அளவில் சிறியதாக இருப்பதன் காரணமாக மேகத் திட்டுக்களை போல பால்வழி காட்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாகவே பால் வெண்மை நிறத்தில் அது இருப்பதாகவும் தனது ஆய்வில் கூறியுள்ளார்.

மூன்று நூற்றாண்டுகளுக்கு பின்னர் 1610ஆம் ஆண்டில் கலீலியோ அவர்கள் டெலெஸ்கோப்பை பயன்படுத்தி பால்வழி குறித்த ஆய்வை மேற்கொண்டு, அல்-துசி அவர்களின் கருத்தை மெய்ப்படுத்தினார். அதாவது, ஏராளமான மங்கலான நட்சத்திரங்கள் பால்வழியில் இருப்பதாக கூறினார்.

மேலும், வானியலிலிருந்து வேறுபடுத்தி கோணவியல்(Trigonometry) குறித்த தனது ஆய்வை அல்-துசி அவர்கள் வெளியிட்டார். குஆட்ரிலேட்டரல் (Quadrilateral) குறித்த தனது ஆய்வில், கோள முக்கோணவியல் ((Spherical Trigonometry) எனும் துறையை வானியல் துறையிலிருந்து வேறுபடுத்தியுள்ளார். இதன் விளைவாக, வலது முக்கோணத்தின் (Right Triangle) ஆறு தனித்துவமான நிகழ்வுகளை அல்- துசி அவர்கள் கணித உலகில் முதன் முதலாக வெளியிட்டார்.

சமதள முக்கோணங்களில்(Plane Triangles) பிரபல்யமாக பயன்படுத்தப்படும் ஓர் விதியான ‘லா ஆஃப் சைன்ஸ்’ (Law of Sines) என்பதை கண்டுபிடித்தார். a/Sin A = b/Sin B = c/Sin C மேற்கண்ட, ‘லா ஆஃப் சைன்ஸ்’ விதியிலிருந்தே ‘லா ஆஃப் டேன்ஜன்ட்ஸ்’ (Law of Tangents) எனும் விதியையும் தகுந்த ஆய்வின் மூலம் கண்டுபிடித்தார். இவர் சமூகத்திற்கு ஆற்றியுள்ள அளப்பரிய கண்டு பிடிப்புகளுக்காக, நிலவில் 60 கிலோமீட்டர் விட்டமுள்ள ஓர் பள்ளத்திற்கு ‘நஸிரெத்தின்’ (Nasireddin) என்ற இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சோவியத் வானியலாளரான நிகோலாய் என்பவர் 1979 ஆம் ஆண்டு கண்டுபிடித்த சிறிய கோளிற்கு, ‘10269 துசி’ என்று இவரது பெயரை சூட்டியுள்ளனர். அஜர்பைஜான் குடியரசிலுள்ள ‘தி கே.என்.துசி யூனிவெர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி இன் இரான் அண்ட் அப்சர்வேட்டரி ஆஃப் ஷமாகி’ என்ற பல்கலைக்கழகத்திற்கும் இவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது. வானியல் மற்றும் கணிதம் சார்ந்த இவரது கண்டுபிடிப்புகள் அறிவியல் உலகத்திற்கு இன்றளவும் அறிவு களஞ்சியமாக விளங்குகிறது.

பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் ஒவ்வொரு மாணவ மாணவியரும், புதிய ஆய்வுகளிலும் ஆராய்ச்சி துறைகளிலும் தங்களது ஆர்வத்தை செலுத்தி இன்றைய சமூகத்திற்கு தேவையான பல கண்டிபிடிப்புகளை கண்டுபிடிக்க உறுதியேற்க வேண்டும்.

Source: unarvu (06/12/2019)