தொழுது கொண்டிருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால்?

கேள்வி-பதில்: தொழுகை

தொழுது கொண்டிருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால்?

தொழுது கொண்டிருக்கும் போது, இகாமத் சொல்லப்பட்டால், தொழுகையை விட்டு விட்டு, ஜமாத்தில் சேருவதா? அல்லது தொழுகையை முடித்து விட்டு ஜமாத்தில் சேருவதா?

அர்ஷாத்-கத்தார்

பதில்

கடமையான தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் எந்தத் தொழுகையும் இல்லை என்று பின்வரும் செய்தி கூறுகின்றது.

 

و حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ وَرْقَاءَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أُقِيمَتْ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ رواه مسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான அந்தத் தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்: 1281)

ஒருவர் முன் சுன்னத் தொழும் போது இகாமத் சொல்லப்பட்டால் உடனே அவர் தொழுகையை விட்டுவிட வேண்டும் என்று சிலர் இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு கூறுகின்றனர். ஆனால் இந்தச் செய்தி இவர்கள் கூறுகின்ற கருத்தைத் தரவில்லை.

இகாமத் சொல்லப்பட்ட பிறகு கடமையில்லாத வேறு எந்தத் தொழுகையையும் துவங்கக் கூடாது என்பதே இந்தச் செய்தியின் பொருளாகும்.

இகாமத் என்பது கடமையான தொழுகைக்குரிய அழைப்பாகும். இந்த அழைப்பு விடப்பட்டால் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதே முறையான செயல். இந்த அழைப்புக்குப் பிறகு உபரியான வணக்கத்தில் ஈடுபட்டால் கடமையான தொழுகையை அலட்சியம் செய்யும் நிலை ஏற்படுகிறது. நாம் பள்ளிக்கு வரும் போது இகாமத் சொல்லப்பட்டால் முன் சுன்னத் தஹிய்யதுல் மஸ்ஜித் உள்ளிட்ட எந்தத் தொழுகையிலும் ஈடுபடாமல் ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான் இதன் பொருளாகும்.

இகாமத் சொல்லப்படும் முன்னரே நாம் ஏதேனும் ஒரு தொழுகையில் ஈடுபட்டிருந்தால் அந்தத் தொழுகையை இடையில் முறிப்பதைப் பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை. நாம் ஈடுபட்டிருந்த தொழுகையை முடித்து விட்டு ஜமாஅத் தொழுகையில் சேர்ந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் தொழுகையை தக்பீர் கொண்டு ஆரம்பித்து ஸலாம் கொண்டு முடிக்க வேண்டும் என்பது நபி மொழியாகும்.

 

حدثنا قتيبة وهناد ومحمود بن غيلان قالوا حدثنا وكيع عن سفيان ح و حدثنا محمد بن بشار حدثنا عبد الرحمن بن مهدي حدثنا سفيان عن عبد الله بن محمد بن عقيل عن محمد بن الحنفية عن علي عن النبي صلى الله عليه وسلم قال مفتاح الصلاة الطهور وتحريمها التكبير وتحليلها التسليم قال أبو عيسى هذا الحديث أصح شيء في هذا الباب وأحسن وعبد الله بن محمد بن عقيل هو صدوق وقد تكلم فيه بعض أهل العلم من قبل حفظه قال أبو عيسى و سمعت محمد بن إسمعيل يقول كان أحمد بن حنبل وإسحق بن إبراهيم والحميدي يحتجون بحديث عبد الله بن محمد بن عقيل قال محمد وهو مقارب الحديث قال أبو عيسى وفي الباب عن جابر وأبي سعيد

திர்மிதி 3

ஒரு தொழுகையை துவக்கி விட்டால் அதை முழுமைப்படுத்தி ஸலாம் கொடுத்துத் தான் முடிக்க வேண்டும். இடையில் முடிக்கக் கூடாது.