தொழுகையில் பார்வை எங்கு இருக்க வேண்டும்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சதுரமான கறுப்பு நிற ஆடையை அணிந்து தொழுதார்கள். அதில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. (தொழுது கொண்டிருந்த போது அந்த வேலைப்பாடுகளின் பக்கம் தம் கவனம் சென்றுவிடவே,) இதன் வேலைப்பாடுகள் (தொழுகையிலிருந்து) என் கவனத்தை ஈர்த்துவிட்டது. இதை (எனக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, (அபூ ஜஹ்மிடமிருக்கும் வேலைப்பாடுகளற்ற) அன்பிஜான் (நகர சாதாரண) ஆடையை என்னிடம் வாங்கிவாருங்கள்! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும்போது ஸஜ்தா செய்யும் இடத்தைப் பார்க்காமல் தாம் அணிந்திருந்த ஆடையைப் பார்த்து அதில் ஈடுபாடு காட்டினார்கள் என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ருகூஉவையும் சஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் எனக்கு பின்புறமாக’ அல்லது என் முதுகுக்குப் பின்புறமாக’ நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும் போதும் சஜ்தா செய்யும் போதும் உங்களைப் பார்க்கிறேன்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
மக்கள் ருகூவு சஜ்தா செய்யும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதுக்குக்குப் பின் தமது பார்வையைச் செலுத்தி மக்கள் சரியாக ருகூவு ஸஜ்தா செய்கிறார்களா என்று கண்காணித்துள்ளனர். ஸஜ்தா செய்யும் இடத்தை விட்டு பார்வை விலகியுள்ளது என்று இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சமூகப் புறக்கணிப்பு செய்யப்பட்டனர். இந்து மிக நீண்ட இந்த ஹதீஸில்
……நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருகில் தொழுவேன். கடைக்கண்ணால் நான் திருட்டுப் பார்வை பார்ப்பேன். நான் அவர்களைப் பார்க்காமல் தொழுகையில் ஈடுபடும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்ப்பார்கள். நான் அவர்கள் பக்கம் திரும்பும் போது பார்வையைத் திருப்பிக் கொள்வார்கள்……
அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும் இடத்தைப் பார்க்காமல் கஅப் மின் மாலிக்கைப் பார்த்துள்ளார்கள். கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களும் ஸஜ்தா செய்யும் இடத்தை நோக்காமல் கடைக்கண்ணால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்துள்ளார்கள் என்பதால் கடைக் கண்ணால் பார்க்கலாம் என்பது தெரிகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹரிலும், அஸரிலும் ஓதுவார்களா? என்று கப்பாப் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர்கள் ஆம் என்றார்கள். நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம் என்று கப்பாப் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூமஃமர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது, (அதற்காக) தொழுதார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்க முயன்று விட்டுப் பின்வாங்கினீர்களே?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். “எனக்குச் சொர்க்கம் எடுத்துக் காட்டப்பட்டது. அதிலிருந்து ஒரு குலையைப் பிடித்தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும் அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அத்தஹிய்யாத்தில் ஆட்காட்டி விரலை அசைக்கும் போது, அதை நோக்கி பார்வையைச் செலுத்துவார்கள் என்று ஹதீஸ் உள்ளது.
தொழுகையில் இருக்கும் போது ஒருவர் சிறுகல்லை அசைத்துக் கொண்டிருப்பதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கண்டார்கள். தொழுகை முடிந்ததும் அவரிடம், “தொழுகையில் இருக்கும் போது நீ கல்லை அசைக்காதே! இது ஷைத்தானின் வேலை! மாறாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வது போன்று நீ செய்” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படிச் செய்வார்கள்?” என்று அவர் கேட்டார்.
அதற்கு இப்னு உமர் (ரலி), தமது வலது கையை வலது தொடையில் வைத்து கிப்லா திசையில் பெருவிரலுக்கு அடுத்த விரலை வைத்து இஷாரா செய்து அதை நோக்கி தமது பார்வையைச் செலுத்தினார்கள். பிறகு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யக் கண்டேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ பின் அப்துர் ரஹ்மான்
நூல்: நஸாயீ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு முன்னால் தென்பட்ட பழக்குலையைப் பிடிக்க முயன்றுள்ளார்கள். இந்த சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பார்வை நெற்றி படும் இடத்தில் நிச்சயம் இருந்திருக்காது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தச் செயலை நபித்தோழர்கள் பார்த்துள்ளனர். எனவே அவர்களும் நெற்றி படும் இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகின்றது.
தொழுகையில் இருக்கும் போது ஸஜ்தா செய்யும் இடத்தை நபித்தோழர்கள் பார்க்காமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாடையைப் பார்த்துள்ளனர்.
தொழுகையில் இமாமைப் பார்க்கலாம்; எதிரில் உள்ள சுவறைப் பார்க்கலாம். சற்று தலை குணிந்து நாம் அணிந்துள்ள ஆடைகளைப் பார்க்கலாம்; அருகில் இருப்பவரை க்டைக்கண்களால் பார்க்கலாம். விரும்பினால் ஸஜ்தா செய்யும் இடத்தையும் பார்க்கலாம்.
வானத்தை நோக்கிப் பார்க்கக் கூடாது என்று தடை உள்ளது.
தொழும் போது தங்கள் பார்வைகளை வானத்தின் பக்கம் உயர்த்துவோருக்கு என்ன நேர்ந்து விட்டது? இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்; இல்லை எனில் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டு விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
வானத்தைப் பார்ப்பது தடுக்கப்பட்டு இருந்தாலும் தேவை இருந்தால் பார்க்கலாம்.
கிரகணத் தொழுகையில் கிரகணம் விலகி விட்டதா என்பதை அறிவதற்காக வானத்தைப் பார்க்கலாம்.
மேலும் வலது புறம் இடது புறம் பின்புறம் திரும்புவது தடுக்கப்படுள்ளது.
தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். ஒரு அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
தொழுது கொண்டு இருக்கும் போது சலசலப்பு ஏற்பட்டால் என்ன என்று அறிவதற்காக திரும்பிப் பார்க்கலாம்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அபூபக்ர் ரலி அவர்கள் இமாமாக நிற்க) முஸ்லிம்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுது கொண்டிருந்த போது (உடல் நலமில்லாமல் இருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திடீரென எட்டிப்பார்த்து) மக்களை திகைப்புள்ளாக்கி விட்டார்கள். (இதன் விவரம் வருமாறு:)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களது அறையின் திரையை விலக்கித் தொழுகையில் அணிவகுத்து நின்று கொண்டிருந்த மக்களைப் பார்த்து புன்னகை புரிந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அறையிலிருந்து) வரப்போகிறார்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக (இடம் விட்டு), (முதல்) வரிசையில் சேர்ந்துகொள்ளத் தம் குதிகால்களால் பின் வாக்கில் வந்தார்கள்.
(நபி ஸல் அவர்களைத் திரும்பிப் பார்த்த மகிழ்ச்சியினால்) மக்கள் தம் (கவனம் சிதறி) தொழுகை குழம்பிப் போகுமோ என எண்ணலாயி னர். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து உங்கள் தொழுகையை நிறைவு செய்யுங்கள்’ என்று சைகை செய்துவிட்டு (அறைக்குள் நுழைந்து) திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினத்தின் இறுதியிலே அவர்கள் இறந்தார்கள்.
அறிவிப்பவர் :அனஸ் (ரலி)