தொழுகையில் நிதானம்

கேள்வி-பதில்: தொழுகை

தொழுகை என்பது இஸ்லாத்தில் சொல்லப்பட்ட மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். எந்த அளவுக்கு என்றால், தொழுகை நமது பாவங்களை அழித்து, அந்தஸ்துகளை உயர்த்துகிறது. மேலும் பாவமான காரியங்களையும், அருவருக்கத்தக்க காரியங்களை விட்டும் நம்மைத் தடுக்கிறது. மேலும் இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

(புகாரி: 8)

மேலும் தொழுகை இறைவனுக்கும், அடியார் களாகிய நமக்குமிடையே உள்ள உரையாடலாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும், கிப்லாவுக்கும் இடையே அவரின் இறைவன் இருக்கிறான். எனவே எவரும் கிப்லாத் திசை நோக்கி உமிழக் கூடாது!

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

(புகாரி: 405)

எனவே, இஸ்லாத்தில் தொழுகை, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தொழுகையை அழகுறவும், அவசரமின்றியும், நிறுத்தி நிதானமாகவும் செய்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். மேலும், ஸஜ்தாவையும், ருகூவையும் நிறுத்தி நிதானமாகச் செய்வதற்கு ஏவப்பட்டுள்ளோம்.

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்குவார்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.. என்று (குர்ஆன்) ஓத ஆரம்பிப்பார்கள். ருகூஉச் செய்யும்போது தலையை  உயர்த்தவுமாட்டார்கள்; ஒரேடியாகத் தாழ்த்தவுமாட்டார்கள். மாறாக, நடுநிலையாக வைத்திருப்பார்கள். ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினால் நிமிர்ந்து நிற்காமல் சஜ்தாவுக்குச் செல்லமாட்டார்கள். சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினால் நேராக நிமிர்ந்து உட்காராமல் (இரண்டாவது) சஜ்தாச் செய்ய மாட்டார்கள்.

ஒவ்வோர் இரண்டு ரக்அத்திலும் ‘அத்தஹிய்யாத்’ ஓதுவார்கள். (அந்த அமர்வில்) இடது காலை விரித்துவைத்து, வலது காலை நட்டுவைப்பார்கள். மேலும், ஷைத்தான் உட்காருவதைப் போன்று (கால்களை நட்டுவைத்து, புட்டத்தைத் தரையில் படியவைத்து) உட்கார வேண்டாம் என்றும், மிருகங்கள் உட்காருவதைப் போன்று முழங் கைகளைத் தரையில் பரப்பி வைத்து உட்கார வேண்டாம் என்றும் தடை விதித்து வந்தார்கள். அவர்கள் சலாம் கூறியே தொழுகையை முடிப்பார்கள்.

நூல்கள்:(முஸ்லிம்: 857),(திர்மிதீ: 245),(நஸாயீ: 1017)

ஆனால் நடைமுறையில் இதற்கு மாற்றமாக நிதானமின்றி, அவசரகோலமாகத் தொழுகையை நிறைவேற்றுகின்றோம். இதனால் நம்முடைய தொழுகை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? ஏற்றுக் கொள்ளப்படவில்லையா? என்று சந்தேகத்திற்கு உரியதாகி விடுகிறது.

அவசரமாகத் தொழப்படும் தொழுகை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதைப் பின்வரும் செய்தி நமக்கு விவரிக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள்.

அந்த மனிதர் முன்பு தொழுதது போன்றே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். ‘திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர் ‘சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார்.

நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும்! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தா செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

(புகாரி: 757)

தொழுகைக்கு வருபவர்கள், தொழுகையை நிறைவேற்றி விட்டு வேலைக்குச் செல்வதாக இருந்தாலோ, பயணம் செய்வதாக இருந்தாலோ, முக்கியமான ஒரு காரியத்தைச் செய்பவராக இருந்தாலோ, அவசரத் தேவைக்காகச் செல்பவராக இருந்தாலோ, பசியாக இருந்தாலோ, இதுபோன்ற பல விஷயங்களைச் செய்பவர்கள் அந்த செயல்களை முடிப்பதற்கு காட்டுகின்ற முனைப்பில், தொழுகையின் மீதுள்ள கவனம் குழித் தோண்டிப் புதைக்கப்படுகிறது.

இதன் காரணத்தினால் தொழுகையில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சங்களான ருகூவு, ஸுஜூது, ஸூரத்துல் ஃபாத்திஹா ஓதுதல் போன்ற நிலைகளைச் சரியாக நிறைவேற்றாமல் அவசர அவசரமாகத் தொழுகையைப் பூரணமின்றி நிறைவேற்றுகிறோம், இப்படிப்பட்டத் தொழுகை களெல்லாம் இறைவனால் அங்கீகரிக்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

சூரா ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகை இல்லை!

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.

அறிவிப்பாளர்: உபாதா இப்னு ஸாமித் (ரலி),

(புகாரி: 756)

ருகூவு, ஸுஜூது பூரணமாகச் செய்யாதவருக்குத் தொழுகை இல்லை!

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது.

அறிவிப்பாளர்: அபூமஸ்வூத் அல்அன்சாரி (ரலி),

(திர்மிதீ: 265, 245)

தொழுகையின் திருடன்

“திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?” என நபித்தோழர்கள் கேட்டனர். “தனது ருகூவையும், சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அஹ்மத்: 22642, 11106)

தொழுகையில் நிதானம் தேவை!

இன்னும் சொல்வதென்றால், தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்டால் கூட தொழுகைக் காக வருபவர்கள் நிதானமாக வரவேண்டும் என்றும், ஓடி வரக் கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் கண்டித்துக் கூறிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள்! அப்போது நீங்கள் அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),

(புகாரி: 636)

எனவே என்ன முக்கியமான தேவைகள் இருந் தாலும், எவ்வளவு பெரிய வேலைகள் இருந்தாலும் நம்முடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதானமாகவும், பரிபூரணமாகவும், உளத்தூய்மையுடனும் தொழுது நன்மையை முழுமையாகப் பெற்று மறுமையில் வெற்றி பெறுவோமாக!