தொழுகைக்கு சுத்ரா கிடைக்காவிட்டால்?
கேள்வி: தொழுகைக்கு சுத்ரா கிடைக்காவிட்டால்?
தொழுகையின் போது முன்னால் வைத்துக் கொள்ள வேண்டிய சுத்ரா எனும் தடுப்பு கிடைக்காவிட்டால் ஒரு கோடு போட்டுக் கொண்டால் போதுமா? பள்ளிவாசலில் ஒவ்வொரு வரிசைக்கும் போடப்பட்டுள்ள கோடு சுத்ராவாக ஆகுமா?
சப்ரி
பதில்: தொழுகைக்கு சுத்ரா கிடைக்காவிட்டால் கோடு போட்டுக் கொள்ளலாம் என்ற செய்தி பலவீனமானது.
நீங்கள் கூறுவது போன்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழும் போது தனக்கு முன்னால் ஏதேனும் ஒன்றை (தடுப்பாக) வைத்துக்கொள்ளட்டும். அது இல்லாவிட்டால் ஒரு கைத்தடியை நாட்டிவைக்கட்டும். கைத்தடியும் இல்லாவிட்டால் ஒரு கோட்டை போட்டுக்கொள்ளட்டும். இதற்கு பின்பு அவருக்குமுன் எது நடந்துசென்றாலும் அது அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
(அபூதாவூத்: 689) ➚,(அஹ்மத்: 7392) ➚,
அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா மற்றும் பல நூல்களில் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அபூ அம்ர் பின் முஹம்மத் பின் ஹுரைஸ் என்பார் தனது பாட்டனார் வழியாக அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
அந்த அபூ அம்ர் என்பவர் யார் என்று அறியப்படாதவர்கள். அவரது பாட்டனாரும் யார் என அறியப்படாதவர்கள். ஆகவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
கோடு என்பது சுத்ராவாக ஆகாது. ஏதாவது பொருளைத் தான் சுத்ராவாக வைக்க முடியும்.