70) தைக்கப்படாத ஆடையில் கஃபனிடுதல்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

(என் தந்தை) அபூ பக்ர் (ரலி) அவர்களின் மரண வேளையில் அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், ‘நபிகள் நாயகத்தை எத்தனை ஆடையில் கஃபனிட்டீர்கள்?’ என்று கேட்டார்கள். ‘யமன் நாட்டில் தயாரிக்கப்பட்ட வெள்ளையான மூன்று ஆடைகளில் கஃபனிட்டோம். அதில் சட்டையோ, தலைப்பாகையோ இருக்கவில்லை’ என்று நான் கூறினேன். ‘எந்த நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்?’ என்று அவர்கள் கேட்டார்கள். ‘திங்கள் கிழமை’ என்று நான் கூறினேன். ‘இன்று என்ன கிழமை?’ எனக் கேட்டர்கள். ‘திங்கள் கிழமை’ என்று நான் கூறினேன். ‘இன்றிரவுக்குப் பின் எனக்கு மரணம் வந்துவிடும் என்றே எதிர்பார்க்கிறேன்’ என்று கூறினார்கள். தாம் அணிந்திருந்த ஆடையை உற்று நோக்கினார்கள். அதில் குங்குமப் பூ கறை இருந்தது. ‘எனது இந்த ஆடையைக் கழுவி இத்துடன் மேலும் இரண்டு ஆடைகளை அதிகமாக்குங்கள். அதில் எனக்குக் கஃபனிடுங்கள்’ என்று கூறினார்கள். ‘இது மிகவும் பழையதாக உள்ளதே!’ என்று நான் கூறினேன். அதற்கவர்கள் ‘உயிருடன் உள்ளவர் தான் புதிய ஆடைக்கு அதிகம் தகுதியானவர். இந்த ஆடை சீழ் சலத்திற்குத் தானே போகப் போகிறது’ என்றார்கள். (ஆனால் அவர்கள் விரும்பிய படி திங்கள் கிழமை மரணிக்கவில்லை) செவ்வாய்க் கிழமை மாலை தான் மரணித்தார்கள். விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 1378)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தைக்கப்பட்ட சட்டையில் கஃபனிடப்படவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.