தெளிவான வெற்றி அத்தியாயம் இறக்கப்படல்
அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களும் நபி அவர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறித்து நபி (ஸல்) அவர் களிடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை.
பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) உமர் கேட்டார்கள். அப்போதும் நபிகளார் பதிலளிக்கவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தம்மைத் தாமே கடிந்து கொண்டவர்களாக), உம்மை உமரின் தாய் இழக்கட்டும்! மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதரை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்கு பதிலளிக்கவில்லையே என்று கூறினார்கள்.
மேலும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதற்குப் பிறகு நான் எனது ஒட்டகத்தைச் செலுத்தி மக்களுக்கு முன்னால் வந்தேன். (அல்லாஹ்வின் தூதரிடம் இப்படி நான் நடந்து கொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) அருளப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன்.
சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் சப்தமிட்டு அழைப்பதைக் கேட்டேன். நான் நினைத்த படி என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) இறங்கிவிட்டிருக்கும் என அஞ்சினேன் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன்.
அப்போது அவர்கள் இந்த இரவு எனக்கு ஒரு (குர்ஆன்) அத்தியாயம் அருளப்பட்டுள்ளது. சூரியன் எதன் மீது உதயமாகிறதோ அ(ந்த உலகத்)தை விட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும் என்று கூறிவிட்டு, உங்களுக்கு நாம் பகிரங்கமான வெற்றியை அளித்துள்ளோம் என்று (தொடங்கும் 48:1ஆவது இறைவசனத்தை) ஓதினார்கள்.
ஹுபைப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூ வாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் (காரிஜிய்யா எனும் கிளர்ச்சியாளர்கள் குறித்து) கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்:
நாங்கள் ஸிஃப்பீன் எனுமிடத்தில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது (அப்துல்லாஹ் பின் அல்கவ்வாஎன்றழைக் கப்படும்) ஒரு மனிதர், அல்லாஹ்வின் வேதத்தின்பால் (தீர்ப்புக்காக) அழைக்கப்படு கின்றவர்களை நீங்கள் காணவில்லையா? என்று கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், ஆம். (அல்லாஹ்வின் வேதம் கூறுகின்ற தீர்ப்புப்படி செயல்பட அழைப்புவிடுக்கப் பெற்றால் அதை நான் ஏற்றுக் கொள்வேன்) என்று கூறினார்கள். அப்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
(இப்போரில் கலந்து கொள்ளாததற்காக யார் மீதும் குற்றம் சாட்டாதீர்கள். மாறாக,) உங்களையே குற்றம் சாட்டிக் கொள்ளுங்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை நடை பெற்ற ஹுதைபியா நாளில் எங்களை நான் பார்த்திருக்கிறேன். அன்று, நாங்கள் போர் புரிவது உசிதமென்று கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் இணைவைப்பவர்கள் விதித்த பாதகமான நிபந்தனைகளைக் கூட ஏற்றுக் கொண்டோம்). அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, (அல்லாஹ்வின் தூதரே!) நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா? (சத்தியத்திற்காகப் போராடி) போரில் கொலையுண்டுவிடும் போது நம் வீரர்கள் சொர்கக்கத்திலும் எதிரிகளுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அப்படியிருக்க, நாம் நமது மார்க்கத்தின் விஷயத்தில் எதற்காகத் தாழ்ந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையில் தீர்ப்பளிக்காமல் இருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்?என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கத்தாபின் புதல்வரே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்க மாட்டான் என்று கூறினார்கள். (முஸ்லிம்களை இழிவுக்குள்ளாக்க நினைக்கும் இணை வைப்பாளர்கள் மீது) உமர் (ரலி) அவர்கள் கோபம் கொண்ட நிலையில் திரும்பிச் சென்றார்கள். தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து அபூபக்ர் அவர்களே! நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா? என்று ளநபி (ஸல்) அவர்களிடம் கேட்டது போன்றேன கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் கத்தாபின் புதல்வரே! நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்க மாட்டான் என்று கூறினார்கள். அப்போது அல்ஃபத்ஹ் எனும் (48ஆவது) அத்தியாயம் இறங்கிற்று.13