துபையில் விற்கப்படும் சிக்கன் ஹலாலா?
துபையில் விற்கப்படும் சிக்கன் ஹலாலா?
ஒரு முஸ்லிம் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினத்தை பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அறுத்தால் அந்த உயிரினம் ஹலலானதாகி விடுகின்றது. அதாவது அதை உண்பது ஆகுமானது.
இந்த ஒழுங்கு முறைகள் பேணப்படாமல் அறுக்கப்பட்ட உயிரினங்களை உண்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
வேறு நாடுகளில் அறுக்கப்பட்ட கோழிகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்தக் கோழிகள் ஹலாலானவை என்று இந்த பாக்கெட்டுகளின் மீதே போடப்பட்டிருக்கும். துபாய் அரசின் அங்கீகாரம் பெற்றே இவை நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
இவை ஹலால் என்று துபாய் அரசாங்கம் சான்று அளிக்கின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கோழிகளை உண்பது தவறல்ல.
இஸ்லாமிய முறைப்படி இவை அறுக்கப்படவில்லை என்று யாரேனும் கூறினால் அதை அவர் நிரூபிக்க வேண்டும். யூகமாகக் கூறாமல் ஆதாரத்துடன் நிரூபித்தால் அப்போது துபாய் அரசின் சாட்சியம் தவறானது என்ற முடிவுக்கு வரலாம். இந்நிலையில் இந்தக் கோழிகளை உண்ணக் கூடாது இவ்வாறு நிரூபிக்காத வரை யூகத்தின் அடிப்படையில் இந்தக் கோழிகள் ஹராமானவை என்று முடிவெடுக்கக் கூடாது.
அறுக்கப்பட்ட பிராணி ஹலாலா? ஹராமா? என்பதை நம்மால் நேரில் பார்த்து முடிவு செய்ய முடியாது. இதற்கு ஒரு முஸ்லிம் வழங்கும் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்ய முடியும். துபாய் ஆட்சியாளர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் இவ்விஷயத்தில் இவர்களுடைய சாட்சியத்தை ஏற்க வேண்டியுள்ளது.
நமக்குத் தெரியாமல் தவறான முறையில் அறுக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது? என்ற சந்தேகம் தேவையற்றது. ஒரு பேச்சுக்கு நமக்குத் தெரியாமல் தவறான முறையில் அறுக்கப்பட்டிருந்தால் அதற்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம். இத்தவறைச் செய்து மறைத்தவர்களே அதற்குப் பொறுப்பாளியாவார்கள்.
தவறான முறையில் அறுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டால் நமது கையால் அறுத்தவற்றைத் தவிர வேறு எந்த இடத்திலும் இறைச்சியை உண்ண முடியாது.
ஒரு முஸ்லிம் அளிக்கும் விருந்தில் இவ்வாறு சந்தேகப்பட்டால் யாருடைய விருந்திலும் கலந்து கொள்ள முடியாது. அண்டை வீட்டுக்காரர் தரும் உணவையும் உண்ண முடியாது. எனவே இது தேவையற்ற சந்தேகம்.