129) துன்பத்தை வேண்டக் கூடாது

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

இறைவன் நமக்கு அளிக்கும் துன்பங்களை நாம் ஏற்றுச் சகித்துக் கொள்ள வேண்டும் என்றாலும் இதை இறைவனிடம் ஒரு கோரிக்கையாக நாம் முன் வைக்கக் கூடாது. இறைவா! மறுமையில் எனக்குத் தரவுள்ள துன்பத்தை இங்கேயே தந்து விடு என்று பிரார்த்திக்கக் கூடாது.

பறவைக் குஞ்சு போல் மெலிந்து போன ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றார்கள். நீ ஏதாவது பிரார்த்தனை செய்து வந்தாயா? என்று அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் ஆம்! இறைவா, மறுமையில் நீ எனக்கு என்ன தண்டனை கொடுக்க உள்ளாயோ அதை இவ்வுலகிலேயே எனக்கு முன்கூட்டியே வழங்கி விடு என்று பிரார்த்தித்து வந்தேன் என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ்! இதை நீ தாங்க மாட்டாய் என்று கூறிவிட்டு இறைவா இவ்வுலகிலும் எனக்கு நல்லதைத் தா! மறுமையிலும் நல்லதைத் தா! மேலும் நரகத்தின் வேதனையிலிருந்து என்னைக் காப்பாற்று எனக் கூறியிருக்க மாட்டாயா? என்று அறிவுரை கூறினார்கள். அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ் அவரைக் குணப்படுத்தினான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(முஸ்லிம்: 4853)

இவ்வுலகிலும் என்னைத் தண்டித்து விடாதே! மறுமையிலும் என்னைத் தண்டித்து விடாதே என்று தான் நமது கோரிக்கை அமைய வேண்டும். இறைவன் நாடினால் இவ்வுலகிலும், மறுமையிலும் நம்மைத் தண்டிக்காமல் இருக்கும் அளவுக்கு அவன் கருணை மிக்கவன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.