தீமைக்குத் துணைபோகாதீர்!
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
சமூகத்தின் அங்கமாக இருக்கும் நாம், அதன் நலனை நாடும் வகையில் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணியைக் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும். இது குறித்து குர்ஆன் ஹதீஸில் நிறைய அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இந்த உரையில் காண்போம்..
முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து ஏராளமான போதனைகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது என்பது முக்கியமான ஒன்றாகும். இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதற்கேற்ப, மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ள நற்செயல்களை நாம் ஆர்வத்தோடும் அக்கறையோடும் செய்ய வேண்டும். மேலும், அவற்றைச் செய்வதற்கு மற்ற மக்களையும் தூண்ட வேண்டும்.
அதுபோன்று, மார்க்கம் எச்சரித்துள்ள தீமையான விஷயங்களை விட்டும் முழுமையாக விலகி இருப்பதுடன் பிறரையும் அவற்றில் விழுந்து விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும்; அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
சமூகத்தின் அங்கமாக இருக்கும் நாம், அதன் நலனை நாடும் வகையில் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணியைக் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும். இது குறித்து குர்ஆன் ஹதீஸில் நிறைய அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன.
ஆனால், மற்றவர்கள் எப்படி இருந்தால் நமக்கென்ன என்று பலர் சுயநலமாக இருக்கிறார்கள். தமது வேலையை மட்டும் கவனித்துக் கொண்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். பொதுநலத்தோடு அழைப்புப் பணியை மேற்கொள்ளும் சகோதரர்களிலும் கூட பலர், மார்க்கம் கண்டிக்கும் தீமையைத் தடுப்பதற்குத் தயங்குவதைப் பார்க்கிறோம்.
சிலர் அதற்கும் மேலாக, பிறர் செய்யும் தீமையான செயல்களுக்கு உதவி செய்யவும் தயாராக இருக்கிறார்கள். துணிந்து தீமை செய்வோருடன் கரம் கோர்க்கிறார்கள். தீமையைத் தடுக்காமல் இருப்பதை விடவும் அதற்கு ஒத்துழைப்பு தருவது பெரும் குற்றம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
தீமைகளை ஆமோதிக்கும் பண்பு ஒரு போதும் முஃமின்களிடம் இருக்கக் கூடாது. இது வழிகெட்டவர்களின் பண்பாகும். இதனை யூதர்களிடம் இருந்த கெட்ட குணங்களில் ஒன்றாகத் திருமறை கூறுகிறது. ஆகவே அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத் தரும் இத்தன்மையை விட்டு நாம் என்றும் விலகி இருக்க வேண்டும்.
பின்னர் நீங்கள் உங்களை (சேர்ந்தவர்களை)க் கொலை செய்தீர்கள். உங்களில் ஒரு பகுதியினரை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டினீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமான காரியத்திலும், வரம்பு மீறலிலும் உதவிக் கொண்டீர்கள்! உங்களிடம் (யாரேனும்) கைதிகளாக வந்தால் (உங்கள் வேதத்தில் உள்ளபடி) ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்கிறீர்கள். (அதே வேதத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீட்டிலிருந்து) வெளியேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது.
வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.
மனிதர்களிடம் நல்ல செயல்களும் இருக்கும்; கெட்ட செயல்களும் இருக்கும். ஆனால் அதன் அளவும் விதமும் ஆட்களுக்கு ஆள் வேறுபடும்.
ஒருவரிடம் இருக்கும் நல்ல பண்புகளை மட்டும் கவனத்தில் கொண்டு அவர் செய்யும் தீமையான காரியங்களுக்கு ஆதரவு அளித்துவிடக் கூடாது. அவர்கள் சாமானியர்களாக இருப்பினும் சரி; செல்வாக்கு கொண்டவர்களாக இருப்பினும் சரியே.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(எனக்குப் பின்) சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். யார் (தீமையைத் தெளிவாக) அறிந்துகொண்டாரோ அவர் பிழைத்தார். யார் வெறுத்தாரோ அவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணைபோனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)” என்று கூறினார்கள்.
மக்கள், “அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை; அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 3775)
மக்களுக்கு நல்லது செய்யப் போகிறோம் என்று அரசியல் களத்தில் குதித்து கையெடுத்துக் கும்பிடுவது, காலில் விழுவது, கொடிக்கு மரியாதை அளிப்பது, எழுந்து நிற்பது, மாலை போடுவது என்று பலவகையான தடுக்கப்பட்ட காரியங்களுக்கு மௌன சாட்சிகளாக இருப்பவர்கள் இனியாவது சிந்திக்கட்டும்.
எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் நியாயம் யார் பக்கம் இருக்கிறது; அநியாயம் யார் பக்கம் இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். நியாயத்தின் பக்கம் குரல் கொடுக்க வேண்டுமென மார்க்கம் வழிகாட்டுகிறது. அதை விடுத்து, தமது கொள்கை அல்லது ஊர் அல்லது குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதற்காக அவரிடம் இருக்கும் கெட்ட செயல்பாடுகளை ஒருபோதும் ஆதரித்து விடக்கூடாது.
இனரீதியான சிந்தனைகளுக்கு அடிமையாகி தவறான காரியங்களுக்கு கண்மூடித்தனமாக வக்காலத்து வாங்குவதை நபியவர்கள் கடுமையாகக் கண்டித்து இருக்கிறார்கள்.
மௌடீகத்தின் கொடிக்குக் கீழே இன மாச்சரியத்திற்கு அழைப்பு விடுக்கவோ, இன மாச்சரியத்திற்காக ஒத்துழைக்கவோ செய்து அதற்காகக் கொல்லப்படுபவர் அறியாமைக் கால மரணத்தையே சந்திப்பார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி)
நூல்: (முஸ்லிம்: 3770)
இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரம் இறைச் செய்தி மட்டுமே. அவ்வகையில் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தான் எந்த அமலையும் செய்ய வேண்டும். அதன்படி செய்யப்படுகிற காரியங்களுக்கு மட்டுமே நாம் உதவி செய்ய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் (மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் என்னையும் சேர்த்து ஒரு சிறு கூட்டத்தை நபி (ஸல்) அவர்கள் வேறு வழியாக அனுப்பி வைத்தார்கள்.“நாம் சந்திக்கும் வரை கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கடலோரமாகச் சென்று திரும்பிய போது என்னைத் தவிர அனைவரும் இஹ்ராம் கட்டினர். நான் மட்டும் இஹ்ராம் கட்டவில்லை.
இவ்வாறு நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது என் தோழர்கள் காட்டுக் கழுதைகளைக் கண்டனர். நான் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி, ஒரு பெண் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னேன். அனைவரும் ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை சாப்பிட்டோம். “நாம் இஹ்ராம் கட்டியிருக்கும் நிலையில் வேட்டையாடப்பட்ட இறைச்சியை உண்ணலாமா?’’ என்றும் தோழர்கள் (ஒருவரையொருவர்) கேட்டுக் கொண்டனர்.
எஞ்சிய இறைச்சியை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். என் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருந்தோம்: அபூகத்தாதா இஹ்ராம் கட்டவில்லை; அப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம். அபூகத்தாதா அவற்றைத் தாக்கி அதில் ஒரு பெண் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார். ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம்.
“நாம் இஹ்ராம் கட்டியிருக்கும் போது வேட்டையாடப்பட்ட மாமிசத்தை உண்ணலாமா?’’ என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக் கொண்டோம். பிறகு, எஞ்சிய மாமிசத்தை எடுத்து வந்திருக்கிறோம்!’’ என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவருக்குக் கூறினாரா? அல்லது அதை சுட்டிக் காட்டி சைகை செய்தாரா?’’ என்று கேட்டார்கள். நபித் தோழர்கள் “இல்லை!’’ என்றனர்.“அப்படியானால் எஞ்சிய மாமிசத்தை உண்ணுங்கள்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)
நூல்: (புகாரி: 1824)
ஹஜ்ஜு அல்லது உம்ராவுக்குச் செல்பவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் போது வேட்டையாடுவது கூடாது. அவர்கள் வேட்டையாடுவது எப்படி குற்றமோ அது போன்று வேட்டையாடுவதற்கு உதவுவதும் குற்றம் என்பதை மேற்கண்ட செய்தியின் மூலம் விளங்க முடிகிறது.
மார்க்க வரம்புகளை நாம் மீறாவிட்டாலும் அவ்வாறு மீறுபவர்களுக்கு உதவி செய்வதும் தவறு என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். எனவே, ஷிர்க் மற்றும் பித்அத்தான செயல்களைச் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது. அவற்றுக்குக் கடுகளவும் உதவி செய்யாமலும் இருக்க வேண்டும்.
பொருளாதாரம் அளிப்பது, ஆலோசனை வழங்குவது, உடல் உழைப்பு கொடுப்பது மட்டுமல்ல! தீமையான காரியம் நடைபெறும் இடத்திற்கே செல்லக் கூடாது. ஏனெனில், ஒரு வகையில் ஆராய்ந்து பார்த்தால் அதுவும் அந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு உதவுவதாகவே இருக்கிறது.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்!
(அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே! என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.
நமது வசனங்களில் (குறை காண்பதற்காக) மூழ்கிக் கிடப்பவர்களை நீர் காணும் போது அவர்கள் வேறு செய்தியில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக! ஷைத்தான் உம்மை மறக்கச் செய்தால் நினைவு வந்த பின் அநீதி இழைத்த கூட்டத்துடன் நீர் அமராதீர்!
…உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும், முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்), அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: (முஸ்லிம்: 78)
தடுக்கப்பட்ட காரியங்களைச் செய்யாமல் இருப்பதைப் போல அவை நடைபெறும் இடங்களுக்குப் போகாமல் இருக்கும் போதுதான் நம்முடைய இறைநம்பிக்கை முழுமை பெறும்; உறுதி பெறும்.
எனவே, வெறுமனே தலைமட்டும் காட்டிவிட்டு வந்துவிடுகிறேன் எனச் சொல்லிக் கொண்டு மார்க்கத்திற்கு முரணான இடங்களுக்குச் சென்றுவிடக் கூடாது. குறிப்பாக, வரதட்சனை, பெண் வீட்டு விருந்து போன்றவை இடம்பெறும் திருமணங்களில் பங்கெடுப்பவர்கள் ஒரு கணம் யோசிப்பார்களா?
ஏனெனில், எவரேனும் நற்செயல் புரிவதற்கு நம்மால் முடிந்த வகையில் உதவினால் அச்செயல் மூலம் அல்லாஹ்விடம் அவருக்கு கிடைப்பது போன்று நன்மைகள் நமக்கும் கிடைக்கும். இதேபோன்று தான், தீமை செய்வதற்கு உதவினால் செய்பவருக்கு கிடைப்பது போன்ற தண்டனை உதவுபவருக்கும் கிடைக்கும். இதனைப் பின்வரும் ஆதாரங்கள் வாயிலாக அறியலாம்.
நல்லவருடன் இருப்பதற்கும் தீயவருடன் இருப்பதற்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)
நூல்: (புகாரி: 2101)
உலகில் வாழும் போது நம்மைச் சுற்றி இருப்பவர்களோடு இணக்கமாக இருக்க வேண்டும்; எதற்காகவும் பகைத்துக் கொள்ளக் கூடாதென அவர்கள் செய்யும் பாவமான காரியங்களுக்கு ஒத்தாசை அளித்துவிடக் கூடாது. அவ்வாறு செய்தால் மறுமையில் அவர்களோடு சேர்ந்து நாமும் குற்றவாளிகளாகத் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.
அநீதி இழைத்தோரையும், அவர்களுக்குத் துணை நின்றவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி வந்ததையும் ஒன்று திரட்டுங்கள்! அவர்களுக்கு நரகத்தின் பாதையைக் காட்டுங்கள்!
…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது.
அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : (முஸ்லிம்: 1848)
பொதுவாக எந்தவொரு தீமையாக இருந்தாலும் முஃமின்கள் உடந்தையாக இருக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக, சில தீமைகளைக் குறிப்பிட்டுக் கூறி அதற்கு உதவி செய்பவர்களையும் நபியவர்கள் கண்டித்து இருக்கிறார்கள். அந்த விஷயங்களில் நாம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
“பெரும் பாவங்களிலேயே மிகப்பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’’ என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்)’’ என்று சொன்னார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)’’ என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து,
“அறிந்து கொள்ளுங்கள். பொய் சாட்சியமும் (மிகப்பெரும் பாவம்) தான்’’ என்று கூறினார்கள்.‘நிறுத்திக் கொள்ளக் கூடாதா’ என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: (புகாரி: 2654)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 3258)
பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபச்சாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரலி)
நூல்: (புகாரி: 5347)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மது பானத்தையும், அதைப் பருகுபவரையும், பிறருக்கு பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும், அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்பவரையும், அதைச் சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: (இப்னு மாஜா: 3380) (3371)
குடும்பத்தார், உறவினர், அண்டைவீட்டார், நண்பர்கள் என்று எவராக இருந்தாலும் அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்வதற்கு மார்க்கம் அனுமதி அளிக்கிறது; வலியுறுத்துகிறது. அதேசமயம் அவர்கள் செய்யும் தீமையான காரியங்கள் சிறியதாயினும் பெரியதாயினும் அவற்றுக்கு எந்த வகையிலும் துணைபோய் விடக் கூடாதென கண்டிக்கிறது.
இதைப் புரிந்து, பிறர் செய்யும் நன்மையில் பங்கெடுத்து, தீமையில் விலகி இருந்து ஈருலகிலும் வெற்றி பெறும் பாக்கியத்தை வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அருள்வானாக. ஆகவே இறைத்தூதரின் வழி நடந்து இம்மை, மறுமை வெற்றிகளைப் பெறுவோமாக!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.