தீமைகளைக் கண்டிப்போம்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

முன்னுரை

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!

பொதுவாகத் தீமைகள் செய்வது மனிதனின் இயல்பாக இருந்தாலும் தீமைகளைக் கண்டிப்பதும் எச்சரிப்பதும் இல்லாவிட்டால் தவறுகள் பெருகி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை. நன்மையை மட்டும் ஏவி, தீமையைக் கண்டு கொள்ளாமல் செல்பவர்களால் எக்காலத்திலும் மக்களை திருத்த முடியாது.

இதற்குப் பொருத்தமான உதாரணமாக தப்லீக் ஜமாஅத்தினரை எடுத்துக் கொள்ளலாம். நன்மை வந்து விட்டால் தீமை தானாகச் சென்று விடும் என்று சொல்லிக் கொண்டு நன்மையை மட்டும் ஏவி வந்தார்கள். இதனால் நன்மையைச் செய்யும் நல்லவர்கள் ஒரு பக்கம் உருவானாலும் சமுதாயத்தில் வட்டி, வரதட்சணை, இணை வைப்பு, ஒழுக்கக் கேடுகள் இன்னும் ஏராளமான பாவங்கள் தொடர்ந்து இருந்து கொண்டே வந்தது.

மேலும் அவர்களால் உருவாக்கப்பட்டவர்களில் பலர் நன்மையான காரியங்களில் ஈடுபடுவதைப் போல் தீமையான காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே தான் தீமைக்குத் துணை போவது என்பது இவர்களுக்கு ஒரு பாவமாகவே தெரிவதில்லை.

ஆனால் தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி தொடங்கியது முதல், நன்மைகளை எடுத்துரைப்பதைக் காட்டிலும் தீமைகளை அகற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவைகளைக் களைவதில் தவ்ஹீத் மார்க்க அறிஞர்கள் பெரும்பாடுபட்டார்கள். அவர்களின் அதிகமான உரைகள் தீமைகளைக் கண்டித்த வண்ணமே இருந்தது. குற்றங்களைக் கண்டித்ததோடு மட்டுமில்லாமல் எந்த ஒரு சூழ்நிலையிலும் தீமைக்கு யாரும் துணை போய்விடக் கூடாது என்றும் மக்கள் மனதில் பதியச் செய்தார்கள்.

இதன் விளைவாக சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த வரதட்சணை, வட்டி, இணை வைப்பு, அனாச்சாரங்கள் போன்ற பாவங்களிலிருந்து கணிசமான மக்கள் விலகிக் கொண்டார்கள். சிறு சிறு தவறுகளைத் தவிர்த்து முழுக்க முழுக்க நன்மைகளை மட்டுமே செய்யும் மக்கள் உருவானார்கள். இந்த மக்கள் தங்களின் வாழ்க்கையின் மூலம் இவையெல்லாம் பாவங்கள் என்று மக்களுக்கு உணர்த்தியதால் மற்ற கொள்கையில் உள்ளவர்களும் இத்தீமைகளை உணர்ந்து கொண்டார்கள். பலர் தங்களை திருத்திக் கொண்டார்கள்.

ஒரு காலத்தில் தவறே கிடையாது என்று கருதி, பகிரங்கமாகச் செய்யப்பட்டு வந்த பாவங்கள் இன்றைக்கு மறைமுகமாகச் செய்யப்படும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மறுமலர்ச்சிகள் எல்லாம் தீமைகளுக்கெதிராகக் குரல் கொடுத்ததன் விளைவாகத் தான் ஏற்பட்டது.

வெற்றி பெறுபவர்கள் யார்?

தீமைகளை கண்டிப்பது அவசியமானது என்பதால் தான் நன்மைகளை ஏவ வேண்டும் என்று இறைவன் கூறும் போது, தீமைகளைத் தடுக்க வேண்டும் என்றும் இணைத்தே கூறுகிறான். நன்மையை ஏவுவதுடன் தீமையைத் தடுப்பவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்: 3:104)

தீமைகளைக் கண்டிப்பது நல்லவர்களின் பண்பாகும். இக்காரியத்தைச் செய்பவர்கள் தான் சிறந்தவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰه

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!

(அல்குர்ஆன்: 3:110)

اَ لَّذِيْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ‌ ؕ وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ‏

அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது.

(அல்குர்ஆன்: 22:41)

 وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ۘ يَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள்.

(அல்குர்ஆன்: 9:71)

اَلتَّاۤٮِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السّاۤٮِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ

(அவர்கள்) மன்னிப்புத் தேடுபவர்கள்; வணங்குபவர்கள்; (இறைவனைப்) புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; ருகூவு செய்பவர்கள்; ஸஜ்தாச் செய்பவர்கள்; நன்மையை ஏவுபவர்கள்; தீமையைத் தடுப்பவர்கள்.

(அல்குர்ஆன்: 9:112)

فَلَوْ لَا كَانَ مِنَ الْقُرُوْنِ مِنْ قَبْلِكُمْ اُولُوْا بَقِيَّةٍ يَّـنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِى الْاَرْضِ اِلَّا قَلِيْلًا مِّمَّنْ اَنْجَيْنَا مِنْهُمْ‌ ۚ وَاتَّبَعَ الَّذِيْنَ ظَلَمُوْا مَاۤ اُتْرِفُوْا فِيْهِ وَكَانُوْا مُجْرِمِيْنَ‏

உங்களுக்கு முன்சென்ற தலைமுறையினரில் நாம் காப்பாற்றிய சிலரைத் தவிர (மற்றவர்களிலும்) பூமியில் குழப்பம் செய்வதைத் தடுக்கக் கூடிய நல்லோர் இருந்திருக்கக் கூடாதா? அநீதி இழைத்தோர் சொகுசு வாழ்க்கையில் மூழ்கினார்கள். அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தனர்.

(அல்குர்ஆன்: 11:116)

لَوْلَا يَنْهٰٮهُمُ الرَّبَّانِيُّوْنَ وَالْاَحْبَارُ عَنْ قَوْلِهِمُ الْاِثْمَ وَاَكْلِهِمُ السُّحْتَ‌ؕ لَبِئْسَ مَا كَانُوْا يَصْنَعُوْنَ‏

அவர்களின் பாவமான கூற்றை விட்டும், விலக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.

(அல்குர்ஆன்: 5:63)

يٰبُنَىَّ اَقِمِ الصَّلٰوةَ وَاْمُرْ بِالْمَعْرُوْفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلٰى مَاۤ اَصَابَكَ‌ؕ اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‌ۚ ‏

என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும் (என்று லுக்மான் கூறினார்).

(அல்குர்ஆன்: 31:17)

நபி (ஸல்) அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகளில் தீமையைத் தடுப்பதும் ஒன்று என அல்லாஹ் கூறுகிறான்.

اَ لَّذِيْنَ يَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِىَّ الْاُمِّىَّ الَّذِىْ يَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِى التَّوْرٰٮةِ وَالْاِنْجِيْلِ يَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَيَنْهٰٮهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبٰۤٮِٕثَ

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார்.

(அல்குர்ஆன்: 7:157)

அழிவைத் தேடித்தரும் குற்றம்!

தீமையைத் தடுக்காமல் இருப்பது தீயவர்களின் பண்பாகும். அல்லாஹ்வின் அழிவைத் தேடித்தரும் குற்றமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வெள்ளிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கியது போன்று யூதர்களுக்கு சனிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கினான். அந்த நாளின் வணக்கத்தை அவர்கள் பேணாமல் வரம்பு மீறி கடலுக்குச் சென்றதால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர். இந்த வரலாற்றை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

وَسْـــَٔلْهُمْ عَنِ الْـقَرْيَةِ الَّتِىْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ‌ۘ اِذْ يَعْدُوْنَ فِى السَّبْتِ اِذْ تَاْتِيْهِمْ حِيْتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّيَوْمَ لَا يَسْبِتُوْنَ‌ ۙ لَا تَاْتِيْهِمْ‌‌ ۛۚ كَذٰلِكَ ‌ۛۚ نَبْلُوْهُمْ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ‏

”கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.

   وَاِذْ قَالَتْ اُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُوْنَ قَوْمَاْ ‌ ۙ اۨللّٰهُ مُهْلِكُهُمْ اَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا‌ ؕ قَالُوْا مَعْذِرَةً اِلٰى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏

“அல்லாஹ் அழிக்கப் போகிற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகிற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் “உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)” எனக் கூறினர்.

فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖۤ اَنْجَيْنَا الَّذِيْنَ يَنْهَوْنَ عَنِ السُّوْۤءِ وَاَخَذْنَا الَّذِيْنَ ظَلَمُوْا بِعَذَابٍۭ بَــِٕيْسٍۭ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ‏

கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தோரை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம்.

فَلَمَّا عَتَوْا عَنْ مَّا نُهُوْا عَنْهُ قُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِـٮِٕیْنَ‏

தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது “இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!” என்று அவர்களுக்குக் கூறினோம்.”

(அல்குர்ஆன்: 7:163-166)

தீமையைச் செய்தவர்கள், தீமையைத் தடுத்தவர்கள், தீமையைத் தடுக்காதிருந்தோர் ஆகிய மூன்று வகையினரில் தீமையைத் தடுத்தவர்களை மட்டும் காப்பாற்றியதாக இவ்வசனம் கூறுகிறது.

தீமையைச் செய்யாமலும், மற்றவர்களின் தீமையைத் தடுக்காமலும் இருந்தவர்கள் தீமை செய்தோருடன் சேர்த்து அழிக்கப்பட்டனர் என்றும் இவ்வசனம் கூறுகிறது. தீமையைத் தடுக்காமல் தம்மளவில் நல்லவர்களாக வாழ்வோர் இறைவனின் திருப்தியைப் பெற முடியாது என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.