தீண்குலப் பெண்களின் பண்புகள்-2
தீண்குலப் பெண்களின் பண்புகள்-2
திருமணத்திற்கு பின்:-
நபியவர்கள் திருமணம் என்பது எனது வழிமுறை என்று கூறியுள்ளார்கள், பெண்களாகிய நாம் பலவருடங்கள் நம்முடைய பெற்றோர் உறவினர்களோடு பல ஆண்டுகள் வாழ்ந்திருப்போம், இடையில் ஒரு புதிய சொந்தத்தை அல்லாஹ் நம்மோடு இணைத்து வைக்கிறான். அது தான் கணவன் என்கிற உறவு, பல வருடம் நாம் நமது பெற்றோர்களோடு இருந்து வந்தோம் அதனால் அவர்கள் மீது நமக்கு அன்பு வந்தது, ஆனால் இடையில் நம்மோடு இணையும் உறவு அவர்கள் மீது அளவுகடந்த அன்பு வருவது எப்படி? அது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்றாக திருக்குர்ஆன் கூறுகிறது.
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன்: 30:21) ➚.)
கணவனுடைய இன்பம், துன்பம், அனைத்திலும் நாமும் பங்கெடுத்து அவருக்கு கட்டுப்பட்டும் சில சமயங்களில் அறிவுரைகளையும், தன்னம்பிக்கையை ஊட்டும் விதமாக நாம் செயல்பட வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது,
ஹீசைன் பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு தேவைக்காக வந்திருந்தார். தேவையை முடித்துக் கொண்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் உமக்கு கணவர் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார், நபி(ஸல்) அவர்கள் அவரிடத்தில் நீ எவ்வாறு நடந்துக்கொள்கிறாய் என்று கேட்டார்கள். அதற்கு அவர் என்னால் இயலாமல் போனாலே தவிர அவருக்கு நன்மை செய்வதில் நான் குறைவு வைக்கமாட்டேன் என்று கூறினார். நீ எவ்வாறு அவரிடத்தில் நடந்துக் கொள்கிறாய் என்பதை கவனித்துக்கொள் ஏனென்றால் அவர்தான் உனது சொர்க்கமாகும், உனது நரகமுமாகும். என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:-ஹீசைன் பின் மிஹ்ஸன் (ரலி)
இந்த அளவிற்கு மார்க்கம் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடத்தலை ஏவுகிறது, ஆனால் மார்க்கத்திற்கு முரணாக அவர்கள் செயல்பட்டால் அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும், பல பெண்கள் தன்னுடைய கணவர் புகை பிடிக்கிறார்,மது அருந்துகிறார், உடலுக்கு கேடு தரக்கூடிய பாக்கு வகைகளை போடுகிறார் என்று தெரிந்தும் அதை தடுக்காமல் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள், சொன்னால் நம்மை திட்டுவார் கோபம் அடைவார் என்பதற்காக மெளனமாக இருக்கிறார்கள், உண்மையாக கணவன் மீது அன்பு வைத்திருக்கும் எந்த தீண்குலப்பெண்ணும் மெளனமாக இருக்க மாட்டாள்.
நரகத்(தில் விழுவதிலிருந்து (உங்களைத்) தடுக்க உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். (ஆனால்,) நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்து கொண்டிருக்கிறீர்கள்.’
இதுதான் நபிகளார் நம்மீது வைத்த உண்மையான அன்பு, உண்மை அன்புக்கு எடுத்துக்காட்டு அவர்களை தீமை செய்ய விடாமல் தடுப்பது தான். அதை கண்டும் காணாமல் போவது அல்ல. பெண் தனது கணவருக்கு மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் அனைத்து கட்டளைக்கும் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே! உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பெண்கள் திருமணமாகிய பின் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் மட்டும் பொறுப்பாளி என்று சொல்லவில்லை கணவனுடைய வீட்டிற்க்கும் பொறுப்பாளி என்று நபியவர்கள் கூறினார்கள். அந்த பொறுப்பை குறித்து அல்லாஹ் நம்மை விசாரிப்பான், ஆனால் பலப்பெண்கள் இந்த பொறுப்பை உணராததால் தான் பலப்பிரச்சனை வர காரணமாக அமைகிறது.
கணவனுடைய குடும்பத்தை தன் குடும்பமாக நினைக்காததால் வீட்டில் ஏதாவது ஒரு வேலை சொன்னால் கணவனிடத்தில் பெற்றோர்களையும் அவர்களின் சொந்தங்களையும் குறை சொல்வது பிறகு தனிக்குடும்பம் என பிரித்து செல்லும் அளவுக்கு பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க வைப்பது, பலப்பெண்கள் கணவருடைய வீட்டிற்கு சென்று வந்தால் வேலை செய்ய சொல்வார்கள் என்பதற்கு பயந்துக்கொண்டு செல்லாமல் இருக்கிறார்கள், இப்படி செய்யும் பெண்களே இந்த ஷஹாபிய பெண்ணின் பண்பை சற்று சிந்தித்து பாருங்கள்.
அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அறிவித்தார்: என்னை ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) (மக்காவிலிருக்கும் போதே) மணந்துகொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரின் குதிரையையும் தவிர வேறு எச்சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரின் தோல் சுமலையைத்தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து – நானே பேரிச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலை மீது வைத்துச் சுமந்துவருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது. (ஒரு நாள்) நான் என் தலை மீது பேரிச்சங்கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந்தேன். (வழியில்) நான், இறைத்தூதர்(ஸல்) அவர்களை, (அவர் தம் தோழர்களான அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். எனக்குத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக ‘இஃக், இஃக்’ என்ற சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும், நான் (என் கணவர்) ஸுபைர்(ரலி) அவர்களையும், அவரின் ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக்காரராக இருந்தார். நான் வெட்கப்படுவதைப் புரிந்துகொண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். நான் (என் கணவர்) ஸுபைரிடம் வந்து ‘(வழியில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தலையில் பேரிச்சங்கொட்டைகளிருக்க என்னைச் சந்தித்தார்கள்.
அவர்களுடன் அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தனர். நான் ஏறிக்கொள்வதற்காக(த் தம் ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன்” என்று கூறினேன். அதற்கு என் கணவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதைவிட பேரிச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்தது தான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது” என்று கூறினார். (இவ்வாறாக வீட்டுப் பணிகளில் பெரும் பகுதியை நானே மேற்கொண்டு வந்தேன்.) அதற்குப் பிறகு (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) எனக்கு ஓர் அடிமையை (உதவிக்காக) அனுப்பி வைத்தார்கள். அந்த அடிமை குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார். என்னவோ எனக்கு விடுதலை கிடைத்தது போல் இருந்தது.
பொதுவாக இஸ்லாம் நமக்கு வலியுறுத்திய கட்டளைளில் ஒன்று உறவுகளை பேணி அறவணைத்து வாழ வேண்டும் என்கிற கட்டளை. யார் உறவை பேணி வாழ்கிறாரோ அவருக்கு அல்லாஹ் அருள் செய்கிறான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி)
ஆனால் இன்றைக்கு பல பெண்கள் தன் கணவரின் உறவினர்களை பெரிதும் மதிக்காமல் உறவை முறித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இன்னும் சில பெண்கள் ஒரே வீட்டில் இருந்துக் கொண்டே தன் கணவரை பெற்றெடுத்த தாய்மார்களை (மாமியாரை) மாமி- யாரோ என்று நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அது தவறு, அவர்களும் நமது உறவு என்ற மனப்பக்குவம் பெண்களாகிய நமக்கு வரவேண்டும். அனைவரும் பொறுப்பாளிகள் மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொண்குடம் என்று தமிழில் பலமொழி சொல்வார்கள் தவறுகள் அனைவரிடமும் வரும் தான் அதை சகித்துக்கொண்டு இவளின் நிலையில் இருந்து தான் நாமும் வந்திருக்கின்றோம். நமது மாமியார் நம்மிடம் இப்படி நடக்கும் போது நமக்கும் எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதையும் நினைத்து செயல்பட வேண்டும்.
தன் மகளிடம் ஒரு மாதிரியும் தன் மருமகளிடம் வேரு மாதிரியும் நடத்தல் கூடாது. மருமகளை மகளாகத் தான் நடத்தல் வேண்டும். நாம் உறவை பேணி நடந்தால் அல்லாஹ் நம்மை நோக்கி நெருங்கி வருகிறான், நாம் உறவை முறித்தால் அல்லாஹ்வும் நம்மோடு தொடர்பை முறித்துக் கொள்கிறான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், ‘என்ன?’ என்று கேட்டான்.
அதற்கு உறவு, ‘உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன்’ என்று கூறியது. ‘உன்னை (உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்லமுறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுகிறவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்க வில்லையா?’ என்று கேட்டான். அதற்கு உறவு, ‘ஆம் (திருப்தியே) என் இறைவா!’ என்று கூறியது. அல்லாஹ் ‘இது (அவ்வாறுதான்) நடக்கும்’ என்று கூறினான்.
அறிவிப்பாளர் அபூ ஹுரைரா(ரலி),
பல வீடுகளில் மாமியார் மருமகள் கிடையில் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் அவர் இவரை பற்றியும், இவர் அவரை பற்றியும் குறை சொல்லுவது தான். இதை அல்லாஹ் கடுமையாக கண்டிக்கிறான்.
குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொரு மனிதனுக்கும் கேடுதான்.
(அல்குர்ஆன்: 104:1) ➚.)
எனவே தீண்குலப் பெண்களாகிய நாம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு கணவரின் குடும்பத்தையும் தன் குடும்பமாக கருதி வாழ வேண்டும்.
முடிவுரை
தீண்குலப் பெண்களின் சில முக்கிய பண்புகளை மட்டும் தங்களுக்கு கண்முன்னே கொண்டு வந்துள்ளோம், மேற்கூறப்பட்ட பண்புகளை எல்லாம் வாழ்க்கையில் கடைபிடித்து இவ்வுலகில் தீண்குலப் பெண்மனிகளாக வாழ்ந்து வெற்றி பெற்று உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் பிர்தவ்ஸை அடைய வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!