தீங்குசெய்தோருக்கு மனிதநேயம்
அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
இஸ்லாம் மனிதநேயம் குறித்து ஏராளமாக உபதேசங்களை செய்தாலும், தீங்குசெய்தோருக்கும் கூட மனிதநேயத்தை கடைபிடிபிக்க வேண்டும்என்று இஸ்லாம் சொல்லி காட்டுகிறது. அது குறித்து சொல்லப்பட்டுள்ளதை இந்த உரையில் காண்போம்..
நிறைய இன்னல்களை கொடுத்த யூதர்களிடத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய மனிதநேயத்திற்கு அளவே இல்லை. தீமைசெய்தோருக்கும் நன்மை செய் என்று இறைவன் அவர்களுக்குக் கூறியதை முழுமையாகக் கடைபிடித்தார்கள்.
நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.
ஒரு யூதப் பெண்மனி நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விஷம் தோய்க்கப்பட்ட ஆட்டை கொண்டு வந்து கொடுத்தாள். நபி (ஸல்) அவர்களும் அதை உண்டுவிட்டார்கள். இதையறிந்த சஹாபாக்கள் அப்பெண்மனியை நபியவர்களிடம் அழைத்து வந்து இவளை நாங்கள் கொன்றுவிடட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : (புகாரி: 2617)
அப்பெண்மனி வைத்த விஷத்தின் தாக்கம் நீண்ட நாட்கள் பெருமானாருக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. அவர்கள் மாத்திரம் ஒரு கட்டளை போட்டிருந்தால் அப்பெண்மனியை சஹாபாக்கள் கொன்றிருப்பார்கள். அவளை கொலைசெய்தால் அதை யாரும் குற்றம் என்று கூறவும் மாட்டார்கள். என்றாலும் மனிதநேயம் அவர்களிடத்தில் மிகைத்திருந்ததால் தன்னைக் கொல்ல நினைத்தவளை கொலை செய்ய நபி (ஸல்) அவர்களின் உள்ளம் இடம்கொடுக்கவில்லை. இதேப் போன்று இன்னொரு சம்பவமும் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டது.
قَاتَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحَارِبَ خَصَفَةَ بِنَخْلٍ، فَرَأَوْا مِنَ الْمُسْلِمِينَ غِرَّةً، فَجَاءَ رَجُلٌ مِنْهُمْ يُقَالَ لَهُ: غَوْرَثُ بْنُ الْحَارِثِ، حَتَّى قَامَ عَلَى رَأْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالسَّيْفِ، فَقَالَ: مَنْ يَمْنَعُكَ مِنِّي؟ قَالَ: «اللَّهُ» ، فَسَقَطَ السَّيْفُ مِنْ يَدِهِ، فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَنْ يَمْنَعُكَ مِنِّي؟» قَالَ: كُنْ كَخَيْرِ آخِذٍ، قَالَ: «أَتَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ» ، قَالَ: لَا، وَلَكِنِّي أُعَاهِدُكَ أَنْ لَا أُقَاتِلَكَ، وَلَا أَكُونَ مَعَ قَوْمٍ يُقَاتِلُونَكَ، فَخَلَّى سَبِيلَهُ، قَالَ: فَذَهَبَ إِلَى أَصْحَابِهِ، قَالَ: قَدْ جِئْتُكُمْ مِنْ عِنْدِ خَيْرِ النَّاسِ
நபி (ஸல்) அவர்கள் ஒரு போரை முடித்துவிட்டு தம் தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். இளைப்பாறுவதற்காக ஒவ்வொருவரும் ஒரு மரத்தடியில் தங்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் தனியாக சென்று ஒரு மரத்திற்கு அடியில் இளைப்பாறினார்கள். திடீரென்று ஒருவர் நபி (ஸல்) அவர்களை கொலை செய்வதற்காக தன் கையில் வாளை எடுத்துக்கொண்டு முஹம்மதே இப்போது உன்னை யார் காப்பாற்றுவார் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் காப்பாற்றுவான் என்று கூறினார்கள். பின்பு அவர் கையில் இருந்த வாள் கீழே விழுந்தவுடன் நபியவர்கள் அந்த வாளை எடுத்துக் கொண்டு இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்?
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறேதுவும் கடவுள் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை இதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஆனால் இனிமேல் உங்களுக்கு எதிராக நான் போரிடமாட்டேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன் என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரை தண்டிக்காமல் விட்டுவிட்டார்கள். அவர் தன்னுடைய தோழர்களிடத்தில் சென்று மக்களிலேயே மிகவும் சிறந்த ஒருவரிடமிருந்து நான் வந்திருக்கிறேன் என்று கூறினார்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : (அஹ்மத்: 14929) (14401)
கொலை செய்ய வந்தவரை தண்டிக்காமல் நபி (ஸல்) அவர்கள் மன்னித்து விட்டது அவர்களின் பரந்த மனப்பான்மையும் அவர்கள் எதிரிகளிடத்தில் காட்டிய மனிதநேயத்தையும் காட்டுகிறது. அவர்கள் நினைத்திருந்தால் ஒரு சப்தமிட்டு அனைத்துத் தோழர்களையும் வரவழைத்து அவரை ஒரு கை பார்த்திருக்கலாம். ஆனால் நபியவர்கள் அப்படி செய்யவில்லை. இஸ்லாத்தை அவர் ஏற்க மறுத்த போதிலும் எதிராக இனிமேல் போர் செய்யமாட்டேன் என்ற உறிதிமொழி அளித்தவுடன் அவரை தண்டிக்கவில்லை. இது இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்று கூறுபவர்களுக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது.
தன்னை எதிர்ப்பவர்களை எதிர்த்து இஸ்லாம் போரிட்டதேத் தவிர போரில் ஈடுபடாத அப்பாவிகளை தாக்ககுவதை இஸ்லாம் விரும்பவில்லை. உலகத்தையே ஆட்டிப்படைக்கின்ற அமெரிக்கா, ஈராக் எதிரிகளை நடத்திய விதத்தைப் பார்த்து உலகம் முழுவதிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. கொஞ்சம் கூட மனித உணர்வுகள் இல்லாமல் நாய்களை விட்டு வெறுமேனியில் அவர்களை கடிக்கவிட்டது. இன்னும் மோசமான கொடுமைகளைச் செய்தது.
நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட போது அவர்களுடைய எதிரிகள் அனைவரும் அவர்கள் முன்னிலையில் நின்றார்கள். கருணை வடிவான நபி (ஸல்) அவர்கள் அவர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கிவிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரலி) அவர்களை வஹ்ஷீ என்ற கருப்புற நிற அடிமை கொன்றார். பெருமானாருக்கு விருப்பமாக இருந்த ஹம்ஸா (ரலி) அவர்கள் கொலையுண்டதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மக்காவை அவர்கள் கைப்பற்றியப் போது வஹ்ஷீயும் பெருமானாருக்கு முன்னால் இருந்தார்.
நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்து நீ தான் வஹ்ஷீயா? ஹம்ஸாவை கொன்றவர் நீ தானா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். வஹ்ஷீயைப் பார்க்கும் போதெல்லாம் ஹம்ஸா (ரலி) அவர்களின் ஞாபகம் வந்ததால் அவரிடத்தில் நபி (ஸல்) அவர்கள் தயவு செய்து உங்கள் முகத்தை என்னிடத்தில் காட்டாமல் இருக்க முடியுமா? என்று பணிவுடன் வேண்டிக்கொண்டார்கள். இதன் பின்பு வஹ்ஷீ இஸ்லாத்தை தழுவிக்கொண்டார்.
அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் பின் அதீ (ரஹ்)
நூல் : (புகாரி: 4072)
இன்றைக்கு நீதி என்பது அநீதியாக மாறிக்கொண்டிருக்கிறது. நீதி வழங்குவதாகக் கூறிக்கொண்டு தனக்குப்பிடித்தவருக்குச் சாதகமாகவும் பிடிக்காதவருக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றது. வெறுப்பும் பகைமையும் நீதம் செலுத்தவிடாமல் தடுத்துவிடுகிறது. ஆனால் இஸ்லாம் பகைவர்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் மனிதநேயத்தை கருத்தில் கொண்டு நீதம் செலுத்த வேண்டும் என்று கட்டளையிடுகின்றது.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதமாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதமாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
நபி (ஸல்) அவர்களை வெறுத்தவர்கள் கூட நபியவர்களிடத்தில் வந்து தீர்ப்புக் கேட்டார்கள். இதற்குக் காரணம் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையே காரணம். நபி (ஸல்) அவர்களும் யூதன் கிரிஸ்தவன் முஸ்லிம் என்று பார்க்காமல் மனிதநேயத்துடன் நடந்துகொண்டார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சிறந்த சான்றாக உள்ளது.
யூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டிய போது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர் மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக (நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன் என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டுவிட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து நபி (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்துகொண்டிருக்க மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக என்றா கூறுகிறாய்? என்று கேட்டார்.
உடனே அந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அபுல்காசிம் அவர்களே (என் உயிர் உடைமை மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்துள்ளீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி நீ ஏன் இவருடைய முகத்தில் அறைந்தாய்? என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு பாராட்டாதீர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 3414)
யூதர் எடுத்துவைத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு அந்த அன்சாரித்தோழரிடம் ஏன் அடித்தாய் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதும் பின்பு அவரைக் கண்டித்ததும் மாற்றார்களிடத்தில் பெருமானார் காட்டிய மனிதநேயத்தை எடுத்துரைக்கிறது.
இன்றைக்கு அடிமை நிலை இல்லாவிட்டாலும் சிலர் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் வேலையாட்களை அடிமைகளைப் போன்று நடத்துகிறார்கள். வேலையாட்களை அடித்தும் கெட்டவார்த்தைகளால் அவர்களைத் திட்டியும் துன்பம் கொடுக்கிறார்கள். இதைத் தட்டிக்கேட்க யாருக்கு வேண்டுமானால் உரிமையுள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அடிமைகள் ஆடுமாடுகளைப் போன்று நடத்தப்பட்டார்கள். மார்க்கட்டில் காய்கறிகள் விற்கப்படுவதைப் போன்று அடிமைகள் விற்கப்பட்டார்கள். நம்முடைய ஆட்டை நாம் அறுத்தால் அடித்தால் யாரேனும் கேள்விகேட்பார்களா? இல்லை.
அதுபோல் ஒருவரது அடிமையை அவர் அடித்தால் அவரை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது. இப்படிப்பட்ட கொடூரமான காலத்தில் நபியாகத் தோன்றிய முஹம்மத் (ஸல்) அவர்கள் அடிமைகளும் மனிதர்கள் தான் என்பதை உலகிற்கு உணர்த்தினார்கள். அவர்களிடத்திலும் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கற்றுத்தந்தார்கள். அடிமைகளுக்கு கொடுமைகள் இழைக்கப்படும் போதெல்லாம் அதை எதிர்த்து குரல் கொடுத்தார்கள். இதைப் பின்வரும் செய்திகள் உறுதிபடுத்தும்.
நான் ஒருவரை (அவருடையத் தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) இவரது தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா? என்று கேட்டார்கள். பிறகு உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான்.
ஆகவே எவருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கின்றாரோ அவர் தன் சகோதரருக்கு தான் உண்பதிலிருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதிலிருந்தே உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படியே அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி),
நூல் : (புகாரி: 2545)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:
உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டுவந்தால் அவர் அப்பணியாளனைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்கவில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரு வாய்கள் கொடுக்கட்டும். ஏனெனில் அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டிருப்பார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 2557)
நாகரீகம் வளர்ந்து சமத்துவம் பேசப்படுகின்ற இந்தக்காலத்தில் கூட நபி (ஸல்) அவர்கள் சொல்லித் தந்த மனிதநேயம் கடைபிடிக்கப்படுவதில்லை. ஆனால் அன்றைக்கே எஜமான் தான் எதை உண்ணுகிறாரோ எதை உடுத்துகிறாரோ அதையே தன் அடிமைக்கு உண்ணக்கொடுக்கட்டும் உடுத்தக்கொடுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றால் இதை விட பெரிய மனிதநேயம் யாரிடத்தில் இருக்க முடியும்?
இஸ்லாம் எல்லாநிலைகளிலும் மனிதநேயத்தை கடைபிடிக்கிறது. ஆன்மீகத்தில் கூட மனிதநேயத்துடன் நடந்துகொள்கிறது. இன்றைக்கு ஆன்மீகம் என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமான இறைவழிபாடுகள் தினந்தோறும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. மொட்டைத் தலையில் தேங்காயை உடைப்பதை இறைவன் விரும்புகிறான் என்று நினைக்கின்றனர். மண்டை உடைந்து இரத்தம் பீறிட்டு வருவதைப் பார்த்தும் அர்ச்சகருக்கு இரக்கம் வரவில்லை. கடவுளுக்காக வெறுமேனியில் சாட்டையைக் கொண்டு அடித்துக்கொள்கிறார்கள்.
நெருப்பில் குதித்து காலைப் புண்ணாக்கிக்கொள்கிறார்கள். கடவுளை நெருங்க வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதை இஸ்லாம் ஒருபோதும் விரும்பவே விரும்பாது. ஆன்மீகத்தையும் மனிதநேயப்பார்வையுடன் பார்க்கிறது. எனவே தான் இதுபோன்ற வழிபாடுகளுக்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை.
நபி (ஸல்) அவர்கள் உரைநிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். எனவே அவரைப் பற்றி (மக்களிடத்தில்) விசாரித்தார்கள். மக்கள் அவர் அபூஇஸ்ராயீல் ஆவார். உட்காராமல் வெயிலில் நிற்பதாகவும் பேசாமல் இருப்பதாகவும் நோன்புவைப்பதாகவும் அவர் நேர்ச்சை செய்துள்ளார் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவரை பேசச் சொல்லுங்கள். அவர் நிழலில் வந்து அமரட்டும். நோன்பை பூர்த்தி செய்யட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : (புகாரி: 6704)
இந்த செய்தி ஆன்மீகம் என்றப் பெயரில் தன்னை துன்புறுத்தக் கூடாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆன்மீகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மாபெரும் மகானாக ஆக வேண்டும் என்றால் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். சாதாரண மனிதனுக்கு இருக்கின்ற ஆசைகள் அவனிடத்தில் இருக்கக்கூடாது என்று எண்ணுகிறார்கள். ஆனால் இஸ்லாம் மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட மார்க்கம் அல்ல என்பதால் அவசியம் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. பின்வரும் சம்பவம் ஆன்மீகத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய மனிதநேயத்தை தெளிவாகக் காட்டுகிறது.
நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி (ஸல்) அவர்களுடன் வந்தேன். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்கக்குணமுடையவராகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டும் என்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக்கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்துவிடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் பெரியவர் இமாமாக இருக்கட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி),
நூல் : (புகாரி: 628)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையை துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கின்றேன். (எனக்குப் பின்னால் தொழுதுகொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதினால் தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுகிறேன்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),
நூல்: (புகாரி: 707)
இத்தகைய அரும்பெரும் மார்க்கத்தை பெற்றும் கூட சில இஸ்லாமியப் பேர்தாங்கிகள் நடத்தும் கொடூரத்தாக்குதல்களினால் இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்பட்டுவிடுகின்றது. இஸ்லாமியப் பெயர்தாங்களான இவர்கள் மருத்துவமனைகளிலும் மக்கள் கூடும் மார்க்கெட்டுகளிலும் ஈவு இரக்கமின்றி குண்டுகளை வைத்துவிடுகின்றார்கள். அவர்கள் இதை சரி என்று எண்ணிக்கொண்டு செய்கிறார்கள். இதைப் பார்ப்பவர்கள் இஸலாம் தீவிரவாதத்தை போதிக்கின்ற மார்க்கம் போல என்று தவறாக எண்ணிவிடுகிறார்கள்.
ஒரு அயோக்கியன் செய்யும் குற்றத்திற்கு அவன் தான் பொறுப்பாளியேத் தவிர அவன் சார்ந்துள்ள மதமோ இனமோ அல்ல. என்னருமை மாற்றுமத அன்பர்களே உங்களிடத்தில் நாங்கள் ஒன்றைக்கூறிக் கொள்கிறோம். இஸ்லாமியர்களின் செயல்பாடுகளைப் பார்த்து இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாதீர்கள்.
இஸ்லாம் என்ன சொல்கிறது என்று சிந்தியுங்கள். தீவிரவாதத்தை இஸ்லாம் கண்டிப்பதைப் போல் எந்த மதமும் கணிடிக்கவில்லை. மனிதநேயம் இல்லாமல் ஒருவன் செயல்பட்டால் அவன் முஸ்லிமாக இருந்தாலும் இஸ்லாம் அவனை ஒருபோதும் அங்கீகரிக்காது. அவன் ஆயிரம் காரணங்களைக் கூறினாலும் அப்பாவி மக்களைக் கொன்றதற்கு நிச்சயம் அவன் இறைவனிடத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஒரு உயிரை அநியாயமாக பறிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் யாருக்கும் வாங்கவில்லை. அப்படி அவன் பறித்தால் அவனுக்கு இறைவன் விடும் எச்சரிக்கையைப் பாருங்கள்.
கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர் களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.
அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி),
நூல் : (புகாரி: 7376)
இஸ்லாம் ஒரு படி மேலேச் சென்று மனிதர்களிடம் நேயத்துடன் நடப்பதைப் போல மிருகத்திடமும் நேயத்துடன் நடக்கச் சொல்கிறது. அவைகளிடத்தில் நன்முறையில் இஸ்லாம் ஒரு படி மேலேச் சென்று மனிதர்களிடம் நேயத்துடன் நடப்பதைப் போல மிருகத்திடமும் நேயத்துடன் நடக்கச் சொல்கிறது. அவைகளிடத்தில் நன்முறையில் நடந்துகொள்வதின் மூலமும் இறைவனை நெருங்கலாம் என்று கூறுகிறது. மிருகத்திடம் நேயத்துடன் நடக்க வேண்டும் என்று கூறுகின்ற இஸ்லாம் மனிதநேயத்தை எவ்வளவு பெரிய அந்தஸ்த்தில் வைத்துள்ளது என்று பாருங்கள்.
ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே அவர் (அங்கிருந்த) கிணற்றில் இறங்கி அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது நாய் ஒன்று தாகத்தால் தவித்து நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) எனக்கு ஏற்பட்டதைப் போன்று (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும் என்று எண்ணிக்கொண்டார்.
உடனே (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு அதை வாயால் கவ்விக்கொண்டு மேலே ஏறிவந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை மன்னித்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை செவியுற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே கால்நடைகளுக்கு (உதவுவதினாலும்) எங்களுக்குப் பலன் கிடைக்குமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஆம்) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 2363)
இஸ்லாம் கூறுகின்ற இத்தகைய மனிதநேயத்தை உலக மக்கள் தெரிந்து உண்மையை உள்ளதுபடி அறிந்து அவர்கள் நேர்வழிபெற இறைவன் அருள்புரிவானாக.!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…..