திருமணத்துக்கு பத்திரிகை அடிக்கலாமா?

கேள்வி-பதில்: திருமணம்

திருமணத்துக்கு பத்திரிகை அடிக்கலாமா?

அவசியம் எனில் சாதாரண காகிதத்தில் குறைந்த செலவில் அச்சிட்டுக் கொண்டால் அது குற்றமாகாது. தவிர்ப்பது நல்லது.

பத்திரிகை அடித்தல், திருமண மண்டபம் பிடித்தல் போன்றவை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காலத்தில் இல்லாமல் பிற்காலத்தில் உருவானதாகும். இதற்கு நேரடியான அனுமதியை அல்லது நேரடியான தடையை நாம் குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ காண முடியாது. ஆனாலும் இஸ்லாமியத் திருமணத்துக்கு என பொதுவான ஒழுங்கும் நெறியும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதற்கு முரணில்லாத வகையில் தான் திருமணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.

குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டும் என்பதும் அந்த விதிகளில் ஒன்றாகும். பத்திரிகை பெரும்பாலும் தேவை இல்லை என்றாலும் சில நேரங்களில் பத்திரிகை அவசியம் என்ற நிலை ஏற்பட்டால் சாதாரண காகிதத்தில் குறைந்த செலவில் அச்சிட்டுக் கொண்டால் அது குற்றமாகாது. ஆனால் இன்று பத்திரிகைக்கு செய்யப்படும் செலவு அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளது. ஒரு பத்திரிகைக்கு செய்யப்படும் செலவில் ஒரு மனிதனுக்கு வயிறார உணவு வழங்க முடியும். அந்த அளவுக்கு பணம் விரயமாக்கப்படுகிறது.

 

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்துகொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம்செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

(அல்குர்ஆன்: 7:31)

அவர்கள் செலவிடும் போது விரையம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும்.

(அல்குர்ஆன்: 25:67)

 

பத்திரிகை அடிக்கும் போதும் மண்டபங்கள் பிடிக்கும் போதும் இந்த வசனங்களுடன் நம்முடைய செயலைப் பொருத்திப் பாருங்கள். நாம் செய்யும் இச்செயலை மனிதர்கள் முன்னால் எதையாவது கூறி நியாயப்படுத்த முடியும். படைத்த இறைவனிடம் அது எடுபடுமா என்று சிந்தியுங்கள். எடுபடாது என்றால் அதைத் தவிர்த்து விடுங்கள். ஷைத்தானின் உற்ற நண்பன் என்ற பட்டம் நமக்கு வேண்டாம்