திருமணத்தின் போது பெண்வீட்டு விருந்துக்கு ஆதாரம் உள்ளதா?
திருமணத்தின் போது பெண்வீட்டு விருந்துக்கு ஆதாரம் உள்ளதா?
கேள்வி :
உம்மு ஹபீபா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நஜ்ஜாஷி மன்னர் திருமணம் செய்து கொடுத்தார். அப்போது அவர் திருமண விருந்து அளித்தார். பெண்ணின் பொறுப்பாளராக இருந்த நஜ்ஜாஷி திருமண விருந்து கொடுத்துள்ளதால் பெண் வீட்டின் சார்பில் திருமண விருந்து கொடுக்கலாம் என்று ஜமாஅத்தே இஸ்லாமியைச் சேர்ந்த ஒருவர் வாதிடுகிறார். இது சரியா?
பதில் :
வரதட்சனை வாங்குவது எவ்வாறு மார்க்கத்திற்கு முரணான காரியமோ அது போன்று பெண்வீட்டு விருந்தும் மார்க்கத்திற்கு முரணாண காரியமாகும். ஆண் பெண்ணுக்கு மனக்கொடை கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண்ணிடமிருந்து திருமணத்தைக் காரணமாக வைத்து எதையும் வாங்கக் கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது.
இதே போன்று திருமண வலீமா விருந்தை ஆண் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண் வீட்டு விருந்து கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது.
திருமணத்தில் பெண் வீட்டார் மீது எந்தச் செலவையும் இஸ்லாம் சுமத்தவில்லை.
ஆனால் இன்றைக்கு சமுதாயத்தில் பெண்வீட்டார் மீது தேவையற்ற சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் சுமைகளை தங்களுடைய கடமைகளாக எண்ணிக் கொண்டு பெண் வீட்டினர் செய்து வருகின்றனர். இவற்றைச் செய்யாவிட்டால் சமுதாயத்தில் அது அவமானம் என்றோ, மாப்பிள்ளை வீட்டார் கோபப்படுவார்கள் என்றோ கருதி சிரமத்துடன் செய்பவர்களும் இருக்கின்றார்கள். பெண்வீட்டு விருந்து என்பதும் இந்தச் சுமைகளில் ஒன்றாகும்.
மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரை நிர்பந்திக்காவிட்டாலும் பெண்வீட்டார் தாங்களாக விரும்பி விருந்தளிப்பதும் கூடாது. திருமணத்துக்காக பெண் வீட்டார் செலவு செய்வது நடைமுறையில் கட்டாயமாகி விட்டதால் தான் இவர்கள் இவ்விருந்தை விரும்பியோ, விரும்பாமலோ நடத்துகிறார்கள்.
பொதுவாக எந்தப் பெண்வீட்டாரும் விரும்பி விருந்தளிக்க முன்வருவதில்லை. இது போன்று கொடுக்காவிட்டால் தங்களது பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டில் உரிய மரியாதை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமே இவர்களைக் கொடுப்பதற்குத் தூண்டுகின்றது. இதில் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்.
இது போன்று விதிவிலக்காக ஒரு சிலர் விரும்பிக் கொடுப்பது பல தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். வரதட்சணை வாங்க்குவோரும் நாங்கள் கேட்காமல் அவர்கள் தான் விரும்பித் தருகிறார்கள் என்று காரணம் சொன்னால் அதை ஏற்க முடியுமா?
வசதி படைத்த பெண் வீட்டார் விரும்பிக் கொடுப்பதாகக் கூறி, டி.வி., பிரிட்ஜ், பைக் திருமண விருந்து என்று அள்ளி வழங்கி விடுகின்றார்கள். இது வசதியில்லாத பெண்களுக்கு ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்துவதையும் மறுக்க முடியாது.
உதாரணமாக ஒரே வீட்டில் ஒரு வசதியான பெண்ணும், ஏழைப் பெண்ணும் மணமுடித்துக் கொடுக்கப்பட்டால் வசதியான பெண் சீர் வரிசைகளைக் கொடுக்கும் போது ஏழைப்பெண்ணுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகின்றது. அவளும் தன் வீட்டாரை நிர்பந்தித்து வட்டிக்கு வாங்கி சீர்வரிசைகளைச் செய்ய பெற்றோரை வற்புறுத்துகிறாள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பிற சமூகத்தினருக்கு ஒப்ப நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவூத்
பெண் வீட்டார் இத்தீமையைச் செய்யும் போது அதைக் கண்டித்து தடுத்து நிறுத்துவது மாப்பிள்ளையின் கடமையாகும். இதை அவர் கண்டிக்கத் தவறினால் அத்தீமையில் அவருக்கும் பங்குள்ளது என்ற அடிப்படையில் அத்திருமணத்தை நாம் புறக்கணித்தே ஆக வேண்டும்.
உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், உம்மு ஹபீபா (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடந்த போது அபிசீனிய நாட்டு மன்னர் நஜ்ஜாஷி வலீமா விருந்து அளித்ததாக ஒரு செய்தி சில ஹதீஸ் நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி ஹாகிம், தலாயிலுன் நுபுவ்வா மற்றும் தபகாத்துல் குப்ரா ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை உம்மு ஹபீபா (ரலி) கூறியதாக இஸ்மாயீல் பின் அம்ர் என்பவர் அறிவிக்கின்றார். இவர் ஹிஜ்ரீ 130 ல் மரணிக்கின்றார். உம்மு ஹபீபா (ரலி) ஹிஜ்ரீ 42 ல் மரணிக்கின்றார்கள். எனவே இவர் உம்மு ஹபீபா (ரலி) அவர்களை இவர் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. இவ்விருவருக்கும் இடையே அறிவிப்பாளர் ஒருவரோ, பலரோ விடுபட்டுள்ளனர். விடுபட்ட அந்த நபர்கள் யார்? அவர்கள் நம்பகமானவர்களா? என்பது உறுதி செய்யப்படவில்லை.
மேலும் இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஸுஹைர் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இந்தக் காரணத்தாலும் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.
இத்துடன் பெண்வீட்டு விருந்து கொடுப்பதற்கு இந்தச் செய்தி எந்த வகையிலும் ஆதாரமாகாது.
நஜ்ஜாஷி மன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சார்பில் உம்மு ஹபீபா (ரலி) அவர்களுக்கு நானூறு தீனார்களை மஹராகக் கொடுத்தார்கள் என்று இதில் கூறப்பட்டுள்ளது. இதில் இருந்து அவர் நபிகள் நாயகத்தின் சார்பிலேயே பொருளாதாரச் செலவு செய்துள்ளார் என்பது தெரிகிறது. எனவே அவர் கொடுத்த விருந்து நபியின் சார்பில் கொடுக்க வேண்டிய வலீமா விருந்துதான் என்ற கருத்தையே இந்த பலவீனமான செய்தி தருகிறது.
எனவே இந்தச் செய்தியின் மூலம் மணமகன் சார்பில் மணமகனுடைய நண்பர் வலீமா கொடுக்கலாம் என்று தான் கூற முடியும்.
மேலும் நஜ்ஜாஷி மன்னருக்கும், உம்மு ஹபீபா (ரலி) அவர்களுக்கும் இடையே எந்த இரத்த பந்த உறவும் கிடையாது. எனவே இதை வைத்து பெண்வீட்டு விருந்து கொடுக்கலாம் என்று வாதிட முடியாது.