திருக்குர்ஆனைத் திருப்பிப் பாருங்கள்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

அகில உலகத்திற்கும் இறுதித்தூதராக நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பி, திருக்குர்ஆன் என்ற மகத்தான பேரருட்கொடையை வழங்கியிருக்கின்றான். இந்தத் திருக்குர்ஆன் மூலமாக உலகம் அழிகின்ற நாள் வரைக்கும் உள்ள மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கை வழிகாட்டுதல்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இறைவன் ஏராளமான இடங்களில் அறிவுரை கூறுகின்றான்.

ஆனால் இன்றைக்குப் பெரும்பாலானோர் திருக்குர்ஆன் வழிகாட்டித் தந்திருக்கின்ற அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் தங்களுடைய மனம் போன போக்கில், அதிகமான தவறுகளில் மூழ்கித் திளைத்து, இறைவனின் அருட்கொடைகளை விளங்காமல் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

உண்மையாகவே திருக்குர்ஆனின் போதனைகளையும், அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் ஒவ்வொருவரும் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தால் தங்களுடைய வாழ்க்கையில் செய்து கொண்டிருக்கின்ற, அரங்கேற்றிக் கொண்டிருக்கின்ற ஏராளமான தவறுகளிலிருந்தும், பாவங்களிலிருந்தும் விலகி இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்ற அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துகின்ற நல்ல மனிதர்களாக வாழலாம்.

திருக்குர்ஆனைப் படிப்பதற்கும், சிந்திப்பதற்கும் நேரத்தை ஒதுக்காததன் விளைவாகப் பல்வேறு விதமான பேரிழப்புகளை, சோதனைகளை நம்மை அறியாமலேயே அடைந்து கொண்டிருப்பதையும், இறைவனின் வல்லமையையும், ஆற்றலையும் அறியாமல் வாழ்ந்து கொண்டிருப்பதையும் பார்க்கின்றோம்.

ஒருபுறம் திருக்குர்ஆன் அரபி மொழியில் இறக்கப்பட்டிருப்பதால், அரபி மொழியில் குர்ஆனை ஓதினாலும், மனனம் செய்தாலும் ஏராளமான நன்மைகளைக் கொள்ளையடித்து விட முடியும். மற்றொரு புறம்,  ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குர்ஆனைப் படிக்கும் போது இறைவன் மனிதர்களுக்கு வழங்கியிருக்கின்ற பேரருட்கொடைகளை விளங்கி, சிந்தித்து, ஆய்வுசெய்து நம்முடைய மேனிகளை சிலிர்க்க வைக்கின்ற அளவுக்கு இறைவனின் பாக்கியங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.

அவ்வாறு திருக்குர்ஆன் நம்மை சிந்திக்க வைக்கின்ற சில வசனங்களை இந்த உரையில் பார்ப்போம்..

படிப்பதற்கும், சிந்திப்பதற்கும் எளிதானது

உலகில் இருக்கின்ற எத்தனையோ மதங்களில் ஏராளமான வேதங்கள் அந்த மதத்தைச் சார்ந்த மக்களால் பின்பற்றப்பட்டுக் கொண்டிருந்தாலும், அகில உலகத்திற்கும் இறக்கியருளப்பட்ட குர்ஆன் எனும் வேதத்தை அற்புதமான முறையிலும், விளங்குவதற்கும், படிப்பதற்கும், சிந்திப்பதற்கும் எளிதான முறையிலும் இறைவன் வழங்கியிருக்கின்றான்.

இதோ, இறைவனின் சவாலான வார்த்தைகள்;

اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ‌ؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا‏

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 4:82)

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ

இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

(அல்குர்ஆன்: 54:22)

اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا‏

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?

(அல்குர்ஆன்: 47:24)

இறைவன் தனது திருமறையில், குர்ஆனைச் சிந்தியுங்கள்! இந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து வந்திருந்தால் முரண்பாட்டுக் களஞ்சியமாக இருந்திருக்கும் என்றும், இந்தக் குர்ஆன் விளங்குவதற்கு எளிதானது. படிப்பினை பெற மாட்டீர்களா! என்ற அன்பான அழைப்பையும், குர்ஆனைச் சிந்திக்க மாட்டீர்களா! உங்கள் உள்ளங்களில் பூட்டுக்கள் இருக்கின்றதா? என்றும்,

இதுபோன்ற ஏராளமான கேள்விக்கணைகளைத் தொடுத்து  திருக்குர்ஆனின் தனித்தன்மையையும், இதுபோன்ற ஒரு வேதம் உலகத்தில் இல்லவே இல்லை; திருக்குர்ஆனைப் போல் யாராலும் இயற்றவும் முடியாது என்று இறைவன் தன்னுடைய சவாலான வார்த்தைகளால் சிந்திக்கச் சொல்கின்றான்.

சிந்திக்க வேண்டாமா?

திருக்குர்ஆன் மனிதர்களிடத்தில் கேட்கின்ற மிக முக்கியமான கேள்வி? சிந்திக்க மாட்டீர்களா? படிப்பினை பெற மாட்டீர்களா? உள்ளங்களில் பூட்டுக்கள் உள்ளனவா? என்பவை தான்.

இன்னும் கூடுதலாக இறைவன் மனிதர்களுக்கு வழங்கியிருக்கின்ற இறைவேதத்தின் அடிப்படை நோக்கமே மனிதர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

قُلْ لَّاۤ اَقُوْلُ لَـكُمْ عِنْدِىْ خَزَآٮِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ الْغَيْبَ وَلَاۤ اَقُوْلُ لَـكُمْ اِنِّىْ مَلَكٌ‌ ۚ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰٓى اِلَىَّ‌ ؕ قُلْ هَلْ يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ‌ ؕ اَفَلَا تَتَفَكَّرُوْنَ

‘‘நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 6:50)

 وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

(அல்குர்ஆன்: 16:44)

اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـٴًـــا‏

“முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம்” என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?

(அல்குர்ஆன்: 19:67)

ஒட்டுமொத்தமாக, திருக்குர்ஆனை நடுநிலைக் கண்ணோட்டத்தோடு சிந்தனையைக் கூர்மையாக்கி ஆய்வு செய்து பார்த்து ஏற்றுக் கொண்டால் உண்மையான மார்க்கம், உண்மையான வேதம் எது? என்பதை இலகுவான முறையில் அனைவராலும் விளங்கிக் கொள்ள முடியும் என இறைவன் அறிவுரை பகர்கின்றான்.

உண்ணும் உணவைச் சிந்திப்பார்களா?

மனிதர்களாகிய நாம் அன்றாடம் ஏராளமான உணவுப் பொருட்களை உண்ணுகின்றோம். அவ்வாறு உண்ணுகின்ற காரணத்தினால் தான் நம்மால் இந்த உலகத்தில் உயிரோடும், திடகாத்திரமான உடலோடும் வாழ முடிகின்றது. நம்முடைய வாழ்க்கைக்கு அவசியத் தேவையான உணவை நாம் எங்கிருந்து பெறுகிறோம்? அது எப்படி உருவாக்கப்படுகின்றது? அதை பூமியிலிருந்து வெளியே கொண்டு வருவது யார்? என்பது போன்ற ஏராளமான விஷயங்களை நாம் சிந்திக்க ஆரம்பித்தால் அதிகமான படிப்பினைகளை நம்மால் பெற முடியும்.

திருக்குர்ஆனைப் புரட்டிப் பார்க்கின்ற ஒவ்வொருவருடைய சிந்தனை உணர்வுகளையும் மிக இலகுவான முறையில் திருக்குர்ஆன் தூண்டி விடுகின்றது.

قُتِلَ الْاِنْسَانُ مَاۤ اَكْفَرَهٗؕ‏

மனிதன் சபிக்கப்பட்டு விட்டான். அவன் எப்படி நன்றி கெட்டவனாக இருக்கிறான்?

(அல்குர்ஆன்: 80:17)

فَلْيَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖۤۙ‏
اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّا ۙ‏
ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّا ۙ‏
فَاَنْۢبَتْنَا فِيْهَا حَبًّا ۙ‏
وَّ عِنَبًا وَّقَضْبًا ۙ‏
وَّزَيْتُوْنًا وَّنَخْلًا ؕ‏
وَحَدَآٮِٕقَ غُلْبًا ۙ‏
وَّفَاكِهَةً وَّاَبًّا ۙ‏
مَّتَاعًا لَّـكُمْ وَلِاَنْعَامِكُمْؕ‏

மனிதன் தனது உணவைக் கவனிக்கட்டும்!

நாமே தண்ணீரை (வானிலிருந்து) ஊற்றினோம்.

பின்னர் பூமியை முறையாகப் பிளந்தோம்.

உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயன்படுவதற்காக தானியத்தையும், திராட்சையையும், புற்பூண்டையும், ஒலிவ மரத்தையும், பேரீச்சை மரத்தையும், அடர்ந்த தோப்புகளையும், கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம்.

(அல்குர்ஆன்: 80:24-32)

இந்த வசனங்களை நன்றாகப் படித்துப் பாருங்கள்! இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்ற, அற்புதமான பேரருட்கொடையை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

பூமியின் இயற்கைப் பண்பு என்னவென்றால், பூமிக்குள் எந்தப் பொருட்களை வைத்துப் புதைத்தாலும், அந்தப் பொருட்களை தனக்கே உரிய பாணியில் மிச்சம் வைக்காது இல்லாமல் ஆக்கிவிடும். உதாரணமாக ஒரு மரக்கட்டையை புதைத்து வைத்தாலோ, ஒரு இரும்பை புதைத்து வைத்தாலோ, ஒரு மனிதனைப் புதைத்து வைத்தாலோ, மக்கும் பொருட்கள், மக்காத பொருட்கள் இதுபோன்ற எந்தப் பொருட்களைப் புதைத்து வைத்தாலும் சரிதான்! சிறிது காலகட்டத்திற்குப் பிறகு தன்னிடத்தில் தங்கிய பொருட்களை இருந்த இடம் தெரியாமல் அழித்து விடும்.

ஆனால், மற்ற பொருட்களைப் பூமியில் வைத்து புதைப்பதைப் போன்று மனிதன் உண்ணுகின்ற உணவுப் பொருட்களின் வித்துக்கள் புதைக்கப்படுகின்றன. பூமிக்குள் வைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் முளைகளாக, இலைகளாக, கிளைகளாக, மரமாக, காய்களாக, கனிகளாக மனிதனுடைய கரங்களுக்கு அள்ளி இறைக்கின்றது. ஏன்? கல், கட்டை, இரும்பு, மனிதன் இதுபோன்ற அனைத்துப் பொருட்களையும் சாப்பிடத் தெரிந்த மண்ணுக்கு, கைவிரல்களால் நசுக்கினால் இல்லாமல் போகக்கூடிய சின்னஞ்சிறிய விதையைச் சாப்பிடுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? சிந்தித்தோமா?

நீ அதைச் சாப்பிட்டால் மனிதன் சாப்பிடுவதற்கு ஒன்றும் இருக்காது; எனவே அதைச் சாப்பிடக்கூடாது என்று கூறியது போல் மண்ணை இறைவன் தடுத்து வைத்திருக்கின்றான்.

இன்னும் சொல்வதாக இருந்தால், ஒரு விதையை விதைப்பவர், பூமிக்குள் குழிதோண்டி உள்ளே  வைக்க மட்டும்தான் அவரால் முடியும். உள்ளே வைக்கப்பட்ட விதைகள் பூமியை கிழித்துக் கொண்டு வெளியே வந்து இலைகளாக, கிளைகளாக, காய்கனிகளாகப் பலன் தர வேண்டுமானால் அது படைத்த இறைவனால் மட்டுமே முடியும் என்று திருக்குர்ஆன் சொல்கின்றது.

விவசாயி என்னதான் விதையைப் பூமிக்குள் புதைத்து தண்ணீரை ஊற்றினாலும், பூமிக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதும், பூமியை முறையாகப் பிளப்பதும் இறைவனின் கைவசமே உள்ளது. வேறு யாருக்கும் பூமியை பிளக்க அதிகாரமில்லை, பிளக்கவும் முடியாது என்று திருக்குர்ஆன் சவால் விடுகின்றது.

இந்தக் குர்ஆன் வசனங்களை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்! திருக்குர்ஆனை எடுத்து புரட்டிப் பார்த்தால், படித்துப் பார்த்தால் நம்முடைய மேனிகளையெல்லாம் சிலிர்க்க வைக்கின்ற அளவுக்கு அளப்பெரிய உண்மையையும், மகத்துவத்தையும், குர்ஆனின் அற்புதத்தையும் இந்த வசனங்களின் மூலமாக நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

ஐந்து அருட்கொடைகள்

மனிதர்களுக்கு உடல் உறுப்புகள் மூலமாக ஏராளமான அருட்கொடைகளை இறைவன் வழங்கியிருக்கின்றான். அதிலும் குறிப்பாக இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற ஏராளமான அருட்கொடைகளில் மிகமிக முக்கியமானது இரண்டு கண்கள், நாவு, இரண்டு உதடுகள்.

இதைத் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகின்றான்.

اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَيْنَيْنِۙ‏
وَلِسَانًا وَّشَفَتَيْنِۙ‏

அவனுக்கு இரண்டு கண்களையும், நாவையும், இரு உதடுகளையும் நாம் அமைக்கவில்லையா?

(அல்குர்ஆன்: 90:8,9)

وَاللّٰهُ اَخْرَجَكُمْ مِّنْۢ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ لَا تَعْلَمُوْنَ شَيْئًا ۙ وَّ جَعَلَ لَـكُمُ السَّمْعَ وَالْاَبْصٰرَ وَالْاَفْـِٕدَةَ‌ ۙ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில் உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான்.

(அல்குர்ஆன்: 16:78)

وَهُوَ الَّذِىْۤ اَنْشَاَ لَـكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ‌  ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ‏

அவனே உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

(அல்குர்ஆன்: 23:78)

இறைவன் மனிதர்களுக்குக் கண்களையும், காதுகளையும், உள்ளங்களையும், உதடுகளையும் அருட்கொடையாக வழங்கியிருக்கின்றான். ஒவ்வொரு உடல் உறுப்புகளையும் தனித்தனியே ஆய்வு செய்து சிந்திக்க ஆரம்பித்தால் உண்மையாகவே திருக்குர்ஆனின் வசனங்களை உண்மைப்படுத்தும் அளவுக்கு, நம்முடைய உள்ளங்களை நேர்வழியின்பால் புரட்டிப் போடும் விதமாகவும், இறைவனுக்கு இன்னும் அதிகமதிகம் நன்றி செலுத்தும் விதமாகவும் ஏராளமான மாற்றங்களை நம்மளவில் நாம் பெற முடியும்.

மனிதர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற இந்த ஐந்து அருட்கொடைகளைப் பற்றி மட்டும் நாம் அலச ஆரம்பித்தாலே ஏராளமான வல்லமையை, ஆச்சரியங்களை நாம் பெற முடியும்.

கண்கள் ஓர் அதிசயம்:

அறிவியல் சக்திக்கு எட்டியவரை ஒரே ஒரு கருவியில் தான் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட நிறங்களைப் பிரித்து அறிய முடியும். இது ஒரு நுண்கருவி. விஞ்ஞானத்தின் பல்வேறு வகை நிறச் சேர்க்கைகளால் 5 லட்சம் வகை நிறங்களை உருவாக்கக் கூடும். இந்த சிறு கருவியால் மட்டுமே அத்தகைய நிற வித்தியாசங்களை உணர்ந்தறிய இயலும்.

அந்த கருவி வேறு எதுவும் இல்லை, நமது கண்கள்தான். இதனை இயக்குவதற்கு மின்சாரமோ, அணுத்திறனோ தேவையில்லை. இதன் நுட்பங்களைப் புரிந்து கொள்ள பெரிய பொறியியல் வல்லுணர்வு தேவையில்லை.

நமது கண்ணின் கருவிழி வட்டமான விழியின் மையப்பகுதி தான் ஓரப்பகுதியை விட பொருட்களை தெளிவாக பார்த்து அறிகிறது. நல்ல பகல் வெளிச்சத்தில் கருவிழியின் மையமே, அதிக ஒளியை தெரிந்து கொள்கிறது. ஓரப் பகுதியால் மங்கிய ஒளியை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

இதுவே இரவு நேரங்கள் என்றால், கருவிழியின் மையம் குறித்த ஒளியை காணுகின்றது. மாறாக ஓரப்பகுதியில் அதிக வெளிச்சத்தை உணர முடிகின்றது. இதற்குக் காரணம் மிகவும் நுட்பம் வாய்ந்த பார்வைப் புலனாய்வு செல்களே ஆகும். இந்த அமைப்பின் அடிப்படையில், அவற்றுக்கு கழி செல்கள், கூம்பு செல்கள் என்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. 7 மில்லியன் கூம்பு செல்கள் கருவிழியின் மையப் பகுதியில் இருப்பதாகவும், 130 மில்லியன் கழிசெல்கள் கருவிழி ஓரத்தில் அமிழ்ந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இன்னும் சொல்வதாக இருந்தால், நமது கண்கள் ஒரு வினாடியில் 40-ல் ஒரு பங்கு நேரத்தைத்தான் ஒரு முறை இமைப்பதற்கு எடுத்துக் கொள்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 250 மில்லியன் தடவை கண்களை இமைக்கின்றான்.

கண்களில் இருந்து வெளிப்படும் கண்ணீருக்கு ‘பாக்டீரியா’ போன்ற நச்சுக்களை கொல்லும் கிருமி நாசினி குணம் உண்டு. ஒரு மனிதனின் கண்ணீர் சுரபிகளை அகற்றிவிட்டால் நாளடைவில் கண்கள் வறண்டு, இறுதியில் குருடாகிவிடும்.

உண்மையாகவே இறைவனால் நமக்கு வழங்கப்பட்டிருக்கின்ற கண்கள் விலைமதிப்பற்ற ஒரு கேமராதான். கண்களில் லென்ஸ் இருக்கின்றது. கண்களில் இருக்கின்ற “பியூபில்” என்பது கண் கேமராவின் முக்கியப் பணியைச் செய்கின்றது. இன்னும் இந்த “பியூபில்” வெளிச்சம் குறைவான இடங்களில் லென்ஸ்களை விரித்தும், வெளிச்சம் அதிகம் உள்ள இடங்களில் கண்களைச் சுருக்கியும் உதவி செய்கின்றது. இவைகளை இயக்குவதற்கு எந்தச் சாதனங்களும் கிடையாது. அனைத்து செல்களும் தானாகவே இயங்குகின்றது.

இப்படிப்பட்ட அற்புதமான ஒரு கேமராவை கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் வாங்க முடியுமா? முடியவே முடியாது. முடியாது என்று சொல்வதை விட இதுபோன்ற பல்வேறு விதமான அற்புதங்கள் நிறைந்த வசதிகளுடைய கேமரா உலகத்தில் உருவாகவும் இல்லை, யாராலும் உருவாக்கவும் முடியாது.

இப்படிப்பட்ட அற்புதங்களால் அலங்கரிக்கப் பட்ட இரண்டு கண்களை அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கின்றான். இது மாபெரும் பேரருட்கொடை அல்லவா? சிந்தித்தோமா!

இன்னும் சொல்லப்போனால், கண்களின் விழித்திரைகள் மூளைக்குப் பின்னால் ஏன் இருக்கின்றது? கண்களின் பிம்பங்கள் இடப்புறம், வலப்புறம் எப்படி மாறுகின்றது? தலைகீழான பிம்பங்கள் சரியாவது எப்படி? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு அறிவியலாளர்களும், விஞ்ஞானிகளும் தலையை பிய்த்துக் கொண்டு தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

உதடுகள் ஓர் அதிசயம்

மனிதர்களுக்கு இறைவன் வழங்கியிருக்கின்ற அருட்கொடைகளில் மிகவும் அவசியமானது நாவு மற்றும் இரு உதடுகள். உதடுகளைப் பெற்றிருக்கின்ற நாம் இந்த உதடுகளின் உதவியினால்தால் நம்மால் நம்முடைய கருத்துக்களையும், பேச்சுக்களையும் தங்குதடையின்றி பேச முடிகின்றது.

நாக்கு நம்மை பேசுவதற்குத் தூண்டுகின்றது. இரண்டு உதடுகளினால் தான், அந்த உதடுகள் விரித்துக் கொடுக்கின்ற காரணத்தினால்தான் நாம் நினைத்தவர்களையும், பொருட்களையும் நம்மால் அழைக்க முடிகின்றது. இரண்டு உதடுகளையும் பிடித்துக் கொண்டு ஒரு நபரையோ, ஒரு பொருளையோ அழைத்துப் பாருங்கள். நாம் என்ன பேசுகின்றோம் என்று விளங்க முடியாத அளவுக்கு அந்த வார்த்தைகள் புரியாப் புதிராய் இருக்கும்.

உலகத்தில் வாழ்கின்ற எத்தனையோ நபர்களுக்கு இந்த உதடுகள் கொடுக்கப்படாமலோ, அல்லது கொடுத்தும் குறைவுடனோ இருப்பவர்களுக்குத்தான் இந்த உதடுகளின் மதிப்பு தெரியும்.

சில மனிதர்களுக்கு உதடுகள் அலங்கோலமாகக் கொடுக்கப்பட்டு, முகத்தைப் பார்த்தாலே சக மனிதர்களால் அருவருப்பாகப் பேசி, கேலி கிண்டல் செய்யக்கூடிய நிலையைப் பார்க்கிறோம்.

ஒருவேளை இறைவனுடைய படைப்பில் மூக்கு இருந்த இடத்தில் உதடுகளையும், உதடுகள் இருக்கின்ற இடத்தில் மூக்கையும் வைத்துக் கற்பனை செய்து பாருங்கள்! நம்முடைய முகங்களை பார்ப்பதற்கே சகிக்க முடியாத அளவுக்கு இருந்திருக்கும்.

எந்தப் பொருளை எந்த இடத்தில் வைத்தால் கன கச்சிதமாகப் பொருந்துமோ அப்படிப்பட்ட இடத்தில் அந்தப் பொருட்களை வைத்து தன்னுடைய படைப்பின் ஆற்றலை இறைவன் வெளிப்படுத்தியிருக்கின்றான். இப்போது விளங்குகின்றதா? உதடுகள் விலைமதிப்பற்ற பேரருட்கொடை என்று.

இதுபோன்ற ஏராளமான அருட்கொடைகளை, திருக்குர்ஆனைப் புரட்டுகின்ற வேளையில் சிந்தித்துப் பார்த்தால் இறைவனின் பேரருட்கொடைகளுக்காக அனுதினமும் நன்றி செலுத்திக் கொண்டே இருந்தாலும் போதாது.

நம்முடைய வாழ்நாளில் ஒரு நொடி கூட வீணாக்காமல் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தாலும், கண்கள் என்ற ஒரு அருட்கொடைக்காகக் கூட நம்மால் நன்றி செலுத்தி முடிக்க முடியாது. திருக்குர்ஆனின் பக்கங்களைத் திருப்பிப் பார்ப்போம்!! படிப்பினை பெறுவோம்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.