6) ஏமாற்று வாதங்கள்
அமீர் வாதமும் அயோக்கியத்தனமும்
இன்று இஸ்லாத்தை விட்டு விட்டு இன்னொரு மார்க்கம் கண்ட காதியானிகள் முதல் தூய இஸ்லாத்தை அனைத்து துறைகளிலும் கடைப்பிடிப்போம் என்று சொல்லக்கூடிய அமைப்புக்களும் சிறு தலைவர்களைக் கொண்ட சின்னஞ் சிறு கூட்டங்களும், குர்ஆன் கூறும் ஜிஹாதை குறுகிய அளவில் விளங்கிக் கொண்டு செயற்படும் குழுக்களும் தத்தமது அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற வாதத்தையே எடுத்து வைக்கின்றன.
உண்ணும் போது உன்னை அமீர் கூப்பிட்டாலும் ஓடி வர வேண்டும்
உறங்கும் போது உன்னை அமீர் கூப்பிட்டாலும் ஓடி வர வேண்டும்
என்று மூளைச் சலவை செய்கின்றன.
அமீருக்குக் கட்டுப்பட வேண்டும்; இல்லையேல் காஃபிராக ஆகி விடுவாய் என்று ஒவ்வொரு அமைப்புமே தத்தமது உறுப்பினர்களை அச்சுறுத்தி வைத்துள்ளன.
எனவே நாம் மேலே எடுத்து வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது அமீர் என்று சொல்லப்படக் கூடியவர்களிடம் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்கக் கடமைப்பட்டுள்ளோம்.
தங்களை அமீர் என்று சொல்லக் கூடியவர்கள் முழுமையான ஆட்சி அதிகாரம் படைத்த மன்னர் என்ற கருத்தில் அமைந்த கலீஃபா, இமாம், சுல்த்தான், மலிக், அமீருல் முஃமினீன், அமீருல் ஆம்மா என்ற பொருளில் தங்களை அமீர் என்று சொல்லிக் கொள்கிறார்களா?
அல்லது மன்னர்களால் பல பகுதிகளுக்கு, பல பணிகளுக்காக நியமிக்கப்பட்ட அமீர் என்று தங்களை சொல்லிக் கொள்ளப் போகிறார்களா?
அமீருல் முஃமீனீன் என்ற பொருளில் தங்களை இவர்கள் அமீர் என்று கூறுவார்களேயானால் அது நகைப்புக்குரியது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஏனெனில் அகில உலகையும் அடக்கியாளும் எந்த அதிகாரமும் இவர்களிடம் இல்லை.
ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அல்லது பணிக்காக நியமிக்கப்பட்ட அமீர் என்று பதில் சொல்வார்களானால் எந்தப் பகுதிக்கு நியமிக்கப்பட்டார்கள்? எந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டார்கள்? இவர்களை நியமித்த இமாம் யார்? என்ற கேள்விகளுக்கு இவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.
இமாமாகவோ, அமீராகவோ இருப்பவர்களின் அதிகாரங்களைப் பற்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருந்து நாம் கண்டோம். இந்த அதிகார வரம்புகளை இப்போது அமீர் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் பொருத்திப் பார்த்து முடிவு செய்வது அவசியமாகும்.
அமீர் என்பவர் ஜக்காத்தை வசூலித்து அதை ஏழைகளுக்குப் பங்கிடும் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும். ஜக்காத்தைத் தர மறுப்பவர்களிடம் போர் செய்யும் அதிகாரமும் இருக்க வேண்டும். இன்று எத்தனையோ பணக்காரர்கள் ஜக்காத்தை வழங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் எந்த அமீராவது போர் தொடுத்தார்களா?
தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பேசுவோம். தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரிடமும் ஜக்காத்தை வசூலிக்கும் அதிகாரம் தமிழ் மாநில அமீருக்கு உள்ளதா? எல்லா முஸ்லிம்களிடமும் வேண்டாம், தன்னுடைய அமைப்பின் கீழ் உள்ள உறுப்பினர்களிடத்திலாவது முறைப்படி ஜக்காத்தை எடுத்து ஏழைகளுக்கு வழங்குகிறார்களா? தர மறுப்பவர்களுடன் போர் செய்ய இவர்களால் முடியுமா? நிச்சயமாக முடியாது. எனவே ஹதீஸ்களில் வரும் அமீருக்கும் இவர்கள் கூறும் அமீருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை உணரலாம்.
வரி வசூல் செய்யும் அதிகாரமும் அமீருக்கு உண்டு என்று கண்டோம். தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாத மக்களிடம் போய் வரி வசூல் செய்யக் கூடிய அமீர்கள் யாராவது இருக்கிறார்களா? ஜக்காத்தையே வாங்க முடியாதவர்களிடம் ஜிஸ்யாவைப் பற்றி பேச முடியுமா? அல்லாஹ்வின் தூதர் காட்டிய அமீருக்கும் இவர்கள் சொல்கின்ற அமீருக்கும் உள்ள வித்தியாசத்தை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
கைது செய்யும் அதிகாரமும் அமீருக்கு உண்டு என்று ஹதீஸ்களிலிருந்து அறிந்தோம். நமது அமீர்களிடத்தில் போய் இஸ்லாத்திற்கு மாற்றமாக நடப்பவர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க சொல்வோம். அவ்வாறு அவர் செய்து விட்டால் அமீர் என்று அவரை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்வோம். (அப்போதும் அவரை நியமித்த இமாம் இருக்க வேண்டும்) ஆனால் இங்குள்ள நிலைமை என்ன? தாங்கள் கைதாகி விடக்கூடாது என அஞ்சி ஓடி ஒளிந்து கொள்ளும் நிலையில் தான் அமீர்கள் என்று கூறிக் கொள்வோர் இருக்கின்றார்கள்.
அமீர்கள் என்பவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி நம்மைத் தாக்கி நம்மிடம் உள்ள பொருட்களைப் பறித்துக் கொள்ளும் வலிமை படைத்தவர் என்பதை நாம் அறிவோம். அப்படிச் செய்தால் மறுமையில் அதற்குரிய தண்டனை இருக்கிறது என்பது ஒரு புறமிருக்க இந்த அளவுக்கு அதிகாரத்தை இந்த அமைப்புக்களின் அமீர்கள் பெற்றிருக்கிறார்களா? என்பதே நமது கேள்வி.
யாரேனும் ஒரு அமீர் அப்படிச் செய்தால் அவரின் நிலை என்னவாகும்? என்பதைச் சிந்தித்தால் போதும்.
இஸ்லாம் கூறும் அமீருக்கும் இவர்கள் கூறும் அமீருக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என்பதை இதில் இருந்தும் அறியலாம்.
இவ்வாறு நாம் கூறும் போது அடுத்தவரின் பொருளை அபகரிப்பது அமீரின் தகுதி என்று கூறுவதாக விளங்கக் கூடாது. அமீர் என்பவருக்கு அதற்குரிய சக்தி இருக்க வேண்டும் என்றே கூறுகிறோம். அதுவும் நமது இஷ்டத்திற்குக் கூறவில்லை. ஹதீஸ்களில் வருவதைத் தான் கூறுகின்றோம்.
அமீருக்கு அமைச்சர்கள் உண்டு என்பதைப் பார்த்தோம். இந்த இயக்கங்களின் அமீர்களுக்கு ரானுவ அமைச்சர் யார்? உள்துறை அமைச்சர் யார்? என்று கேட்க வேண்டும். அதெல்லாம் இல்லை என்றால் நீங்கள் அமீரும் இல்லை என்று நாம் அவர்களை நோக்கிக் கூற வேண்டும்.
அடுத்து இஸ்லாத்தைப் பாதுகாக்க போர்ப் படையைத் தயார் செய்து அனுப்பவும், தானே முன்னின்று போரிடவும் அதிகாரம் உடையவர் தான் அமீர் என்று ஹதீஸ்களில் பார்த்தோம்.
இன்று இஸ்லாத்திற்கு எதிராக எத்தனையோ விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வின் ஆலயமாம் பாபர் மசூதி அயோக்கியர்களால் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட போது அதுவும் இந்தத் தேதியில் செய்வோம் எனக் கயவர்கள் அறிவித்து விட்டுச் செய்த போது தூய்மையான இஸ்லாத்தின் தனிப்பெரும் அமீர் நான் தான் என தன்னைச் சொல்லிக் கொள்பவர்கள் ஒரு படையைத் தயார் செய்து அதற்குத் தானே தலைமையேற்றுச் சென்றிருக்க வேண்டுமல்லவா? இல்லையே.
கள்ள பைஅத் வாங்கி ஜிஹாத் என்று மூளைச் சலவை செய்த கூட்டத்தின் அமீராவது அதைச் செய்ததுண்டா? வசூல் வேட்டைக்கும் மட்டும் தான் ஜிஹாத் வேடமா?
பாபர் பள்ளியை இடித்துவிட்டு அதிலும் திருப்தியடையாத ஓநாய்கள் மும்பையில் முஸ்லிம்களைக் கருவறுத்தார்களே! கத்னா செய்திருக்கிறானா என்று ஆடைகள் விலக்கிப் பார்க்கப்பட்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்களே? அதற்காவது எந்த அமீராவது ஒரு படையைத் தயாரித்து அனுப்பினார்களா? இல்லையே?
கோவையில் கயவர்கள் சிலர் காவலர் ஒருவரைக் கொன்றதால் ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மீதும் பழியைப் போட்டு அங்கு முஸ்லிம்கள் துப்பாக்கி குண்டுக்குப் பலியானார்கள்! அப்போதாவது இந்த இயக்கத் தலைவர்கள் படையை அனுப்பினார்களா? இல்லவே இல்லை.
கோவையில் அநியாயமாக முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போதும், அதைத் தொடர்ந்து முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்ட போதும் தட்டிக் கேட்க தனது படையை அனுப்பினார்களா? இல்லையே! அவ்வாறு படையை அனுப்புவதற்கு இவர்கள் சக்தியாவது பெற்றிருக்கிறார்களா? இல்லை. அப்படியானால் இவர்கள் யாருக்கு அமீர்?
அல்குர்ஆன் வசனத்தையும், ஹதீஸ்களையும் தங்கள் அமீர் பதவிக்கு ஆதாரமாகக் காட்ட இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அடுத்ததாக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் அமீரிடம் இருக்க வேண்டும் என்பதைப் பார்த்தோம். இன்றைய அமீர்களிடத்தில் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் சிறிதேனும் கொடுக்கப்பட்டுள்ளதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவ்வாறு இவர்கள் தீர்ப்பு வழங்கினால் அதற்குக் கட்டுப்பட யாராவது இருக்கிறார்களா? என்றால் இல்லை என்றே கூற வேண்டியுள்ளது. அப்படியென்றால் இஸ்லாம் கூறிய அமீருக்கும் இந்த அமீருக்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாகவில்லையா?
தீர்ப்பு வழங்கும் அதிகாரம் மட்டுமல்ல. அதைச் செயல்படுத்தி தண்டனை வழங்கும் அதிகாரமும் அமீருக்கு இருக்க வேண்டும் என்பதை ஹதீஸ்கள் மூலம் அறிந்தோம்.
இன்று யாராவது விபச்சாரம் செய்து விட்டால் அதை இங்கிருக்கும் அமைப்புக்களின் அமீரிடத்தில் தெரிவித்தால் அந்த அமீர் விபச்சாரம் செய்தவனைக் கல்லெறிந்து கொல்ல உத்தரவிட வேண்டும். அதுமட்டுமல்ல யாராவது திருடிவிட்டால் அவனை விசாரித்து அவன் கையை வெட்ட வேண்டும். இப்படியே எண்ணற்ற குற்றவியல் சட்டங்களை அமீராக இருப்பவர் நிறைவேற்ற வேண்டும்.
அவ்வாறு குற்றவியல் சட்டங்களை நிறைவேற்ற முடியுமா? அப்படியே நிறைவேற்றினாலும் அடுத்து இந்த அமீர் எங்கு இருப்பார்? அவரே தண்டனைக்குள்ளாகி இருக்க மாட்டாரா?
குர்ஆனும், ஹதீஸூம் கூறிய அமீர்கள் இவர்களில்லை என்பது இதிலிருந்து விளங்கவில்லையா? இஸ்லாம் கூறக் கூடிய சட்டங்களைச் செயல்படுத்த முடியாதவர் எப்படி இஸ்லாம் கூறக்கூடிய அமீராக இருக்க முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?.
இது வரை நாம் கூறிய விஷயங்களை நன்றாகச் சிந்தித்தால் அமீர் என்பதற்கு இஸ்லாம் கூறும் இலக்கணம் விளங்கும்.
அதாவது அதிகாரம் இருப்பவர் தான் இஸ்லாத்தில் அமீராகக் குறிப்பிடப்படுகின்றார். அமீருக்குக் கட்டுப்படுவதை வலியுறுத்தும் ஹதீஸ்களும் அத்தகைய அதிகாரமுடைய அமீருக்குக் கட்டுப்படுவதையே வலியுறுத்துகின்றன என்பதை விளங்கலாம்.
மேலும் இந்த அதிகாரங்களில் எதுவுமே இல்லாத இயக்கங்களின் தலைவர்களை அமீர் என்று கூறுவதையோ அவருக்குக் கட்டுப்படாதவர் காஃபிராகி விடுவார் என்று கூறுவதையோ ஏற்றுக் கொள்ள முடியாது.
போட்டி அமீருக்கு வழங்கப்படும் தண்டனை.
யார் ஓர் இமாமிடத்தில் பைஅத் செய்து அவரிடத்தில் கைப்பிடித்து உளமாற உறுதி வழங்குகின்றாரோ அவர் இயன்ற வரை அந்த இமாமுக்குக் கட்டுப்படுவாராக! அவருக்குப் போட்டியாக இன்னோருவர் கிளம்பி விட்டால் அந்த போட்டியாளரின் கழுத்தைத் துண்டித்து விடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல் : (முஸ்லிம்: 3759)
ஒரு அமீர் இருக்கும் போது அவருக்குப் போட்டியாக இன்னொருவர் கிளம்பினால் அவரைக் கொல்ல வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. நபியவர்களின் இந்தக் கட்டளை தான் அமீர்களைக் கண்டு பிடிக்க சரியான உரை கல்லாகும்.
இன்று தமிழத்தில் மட்டுமே நூற்றுக்கணக்கான சங்கங்கள், அமைப்புகள், ஜம்மிய்யாக்கள் உள்ளன என்பதை முன்பே குறிப்பிட்டோம். இவற்றில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அமீர்கள் உள்ளனர். மேற்கண்ட ஹதீஸின்படி ஒருவர் இருக்கும் போது இன்னொருவர் அமீர் என்றால் அவரைக் கொல்ல வேண்டும்.
அப்படியானால் யார், யாரைக் கொல்வது?
அடுத்த இயக்கத்தில் உள்ள அமீரைப் பற்றிக் கூட கூற வேண்டியதில்லை. தங்கள் அமைப்பிலேயே போட்டி அமீர் வந்தால் என்ன செய்வார்கள்? அவரைக் கொல்ல வேண்டும் என்று இவர்கள் கொள்கை அளவில் கூட ஒத்துக் கொள்வதில்லை.
ஒரு இயக்கத்தின் கொள்கை சரியில்லை என்றால் சர்வ சாதாரனமாக அந்த இயக்கத்திலிருந்து பிரிந்து இன்னொரு இயக்கத்தைத் துவங்குகிறார்கள். இப்போது முதல் இயக்கத்தின் அமீர் என்பவர் இந்த ஹதீஸைச் செயல்படுத்துவாரா? நிச்சயமாகச் செய்ய மாட்டார். அப்படியானால் இவர்களின் மனசாட்சிக்கு தாங்கள் கூறுவது தவறு என்பது தெரிந்திருந்தும் அமீர் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் என்ன சந்தேகம்?
பயணத்தில் அமீர்.
ஆட்சியும், அதிகாரமும் பெற்றவர் தான் அமீர் என்று குறிப்பிடப்படுகின்றார். அத்தகையவருக்குக் கட்டுப்படுவதைத் தான் அமீருக்குக் கட்டுப்படுவது குறித்த ஹதீஸ்கள் கூறுகின்றன என்பதை இது வரை கண்டோம்.
ஆட்சி, அதிகாரம் வழங்கப்படாதவர் அமீர் எனக் குறிப்பிடப்பட்டதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் காண முடியவில்லை.
நாம் தேடிப்பார்த்த வகையில் பயணத்தில் மூவர் சென்றால் அதில் ஒருவர் அமீராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஹதீஸ் தான் இவர்களின் ஒரே ஆதாரமாக உள்ளது.
மூன்று பேர் பயணம் புறப்பட்டால் ஒருவரை அமீராக்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகின்றதே! இந்த அமீரிடம் ஆட்சியும் அதிகாரமும் கிடையாதே என்று வாதிட முடியும்.
எனவே இது குறித்து விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.
மூவர் பயணத்தில் புறப்பட்டால் அவர்கள் தம்மில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி) , நூல்: (அபூதாவூத்: 2608) (2241)
ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் என்று நபியவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இதை அபூ ஸலமா நாஃபிவு இடம் கூறிய போது நீங்கள் எங்கள் அமீராக இருங்கள் என்று நாஃபிவு கூறினார்.
நூல்: (அபூதாவூத்: 2608) (2242)
இவ்விரு ஹதீஸ்களிலும் ஃபல் யுஅம்மிரூ (அமீராக்கிக் கொள்க) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. மூவர் பயணம் சென்றால் அதில் ஒருவர் அமீராக இருக்கட்டும் என்ற வாசகம் அதிகாரம் இல்லாதவர்களுக்கும் அமீர்கள் எனக் கூறலாம் என்பதற்கு ஆதாரமாக உள்ளது என்று வாதிடுகின்றனர்.
பிரயாணத்தில் அமீராகத் தேர்வு செய்யப்பட்டவர் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களை நிலை நாட்ட முடியாது. கட்டாயப்படுத்தி ஸக்காத்தை வசூலிக்க முடியாது. இன்ன பிற அமீரின் கடமைகளை அவரால் செய்ய இயலாது. அவ்வாறு இருந்தும் அவர் அமீர் எனக் கூறப்பட்டுள்ளது. இது முன்னர் நாம் எடுத்துக் காட்டிய அனைத்து ஆதாரங்களுக்கும் எதிராக இருப்பது போல் தோன்றுகிறது.
ஆனால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் அமீராக்கிக் கொள்ளட்டும் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும் இவரை விட பலமான அறிவிப்பாளர்கள் அமீராக்கிக் கொள்ளட்டும் என்பதற்கு பதிலாக இமாமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளதால் அதுவே சரியான அறிவிப்பாகும். எனவே இந்த ஹதீஸ் இது வரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுடன் முரண்படுகிறது என்ற வாதம் அடிபட்டு விடுகிறது. இது குறித்த விபரங்களை விரிவாக நாம் காண்போம்
அபூ தாவூதில் இடம் பெற்ற முதல் ஹதீஸின் அறிவிப்பாளர்கள் வருமாறு :
1- நபிகள் நாயகம் கூறியதாக அபூ சயீதுல் குத்ரி
2- அபூசயீதுல் குத்ரீ கூறியதாக அபூஸலமா
3- அபூஸலமா கூறியதாக நாஃபிவு
4- நாஃபிவு கூறியதாக முஹம்மத் பின் அஜ்லான்
5- முஹம்மத் பின் அஜ்லான் கூறியதாக ஹாதிம் பின் இஸ்மாயீல்
6- ஹாதிம் பின் இஸ்மாயீல் கூறியதாக அலி பின் பஹ்ர்
7- அலீ பின் பஹ்ர் கூறியதாக அபூ தாவூத்
அபூ தாவூதில் இடம் பெற்ற இரண்டாவது ஹதீஸின் அறிவிப்பாளர்கள்.
1- நபிகள் நாயகம் கூறியதாக அபூஹுரைரா
2- அபூஹுரைரா கூறியதாக அபூஸலமா
3- அபூஸலமா கூறியதாக நாஃபிவு
4- நாஃபிவு கூறியதாக முஹம்மத் பின் அஜ்லான்
5- முஹம்மத் பின் அஜ்லான் கூறியதாக ஹாதிம் பின் இஸ்மாயீல்
6- ஹாதிம் பின் இஸ்மாயீல் கூறியதாக அலி பின் பஹ்ர்
7- அலீ பின் பஹ்ர் கூறியதாக அபூ தாவூத்
ஆய்வுக்குள் நுழையும் முன் இந்த அறிவிப்பாளர்களின் பெயர்ப் பட்டியலை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த ஆய்வுக்கு இந்தத் தகவலை நினைவுபடுத்திக் கொள்வது அவசியமாகும்.
இவ்விரு ஹதீஸ்களும் அலீ பின் பஹ்ர் என்பவர் வழியாக இமாம் அபூ தாவூதுக்குக் கிடைத்துள்ளது.
அபூ தாவூதை விட வயதில் மூத்தவர்களான ஹதீஸ்கலை அறிஞர்கள் இமாம் அபூ சுர்ஆ, இமாம் அபூ ஹாதம் ஆகியோருக்கும் இந்த ஹதீஸ்கள் கிடைத்தன. இவ்விருவருக்கும் அலீ பின் பஹ்ர் வழியாக அந்த ஹதீஸ் கிடைக்கவில்லை. மாறாக அவருக்கு முந்தைய அறிவிப்பாளரான ஹாதிம் பின் இஸ்மாயில் வழியாக இந்த ஹதீஸ்கள் இவ்விருவருக்கும் கிடைத்துள்ளன.
அதாவது இமாம் அபூ தாவூத் எவரிடம் இதைக் கேட்டாரோ அந்த அலீ பின் பஹ்ர் என்பவரும் இந்த இரு இமாம்களும் சம காலத்தவர்கள். இந்த ஹதீஸை அலீ பின் பஹ்ர் யாரிடம் கேட்டாரோ (ஹாதிம் பின் இஸ்மாயீல்) அவரிடம் இவ்விருவரும் கேட்டுள்ளனர். இந்த விபரத்தையும் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் தகவல்களைப் பாருங்கள்.
فقالا : رُوِي عن حاتِمٍ هذا الحدِيثُ بِإِسنادينِ :
قال بعضُهُم : عن حاتِمٍ ، عنِ ابنِ عَجْلان ، عن نافِعٍ ، عن أبِي سلمة ، عن أبِي سعِيدٍ.
قال بعضُهُم : عن أبِي هُريرة.
والصّحِيحُ عِندنا ، واللّهُ أعلمُ : عن أبِي سلمة ، أنَّ النّبِيّ صلى الله عليه وسلم ، مُرسلٌ.
قال أبِي : ورواهُ يحيى بنُ أيُّوب ، عنِ ابنِ عَجْلان ، عن نافِعٍ ، عن أبِي سلمة ، أنَّ النّبِيّ صلى الله عليه وسلم ، وهذا الصّحِيحُ ومِمّا يقوِّي قولنا أن مُعاوية بن صالِحٍ ، وثور بن يزِيد ، وفرج بن فضالة ، حدثوا عنِ المهاصر بن حبيب ، عن أبِي سلمة ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم هذا الكلام.
قال أبُو زُرعة : وروى أصحاب ابن عَجْلان ، هذا الحديث عن أبِي سلمة مرسلا.
قلتُ : من ؟ قال : اللّيث أو غيره
ஹாதிம் பின் இஸ்மாயீல் – முஹம்மத் பின் அஜ்லான் – நாபிவு – அபூ ஸலமா – அபூ ஹூரைரா என்ற அறிவிப்பாளர்கள் வழியாக ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்று நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஹதீஸ் பற்றி அபூ ஸூர்ஆவிடமும் என் தந்தையிடமும் (அபூ ஹாதம்) கேட்டேன். அதற்கு அவ்விருவரும் இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்கள் தொடரில் இடம் பெற்றுள்ளது. ஒன்று அபூ ஹூரைரா மற்றொன்று அபூ ஸயீத் என்று விடையளித்தார்கள்.
நூல் : இப்னு அபீ ஹாத்தம்
அபூதாவூத் எந்த அறிவிப்பாளர் வழியாக இந்த ஹதீஸை அறிவித்துள்ளாரோ அதே ஹதீஸ் பற்றித் தான் இவ்விரு இமாம்களிடமும் கேட்கப்படுகிறது. அமீராக ஆக்கிக் கொள்ளட்டும் (ஃபல் யுஅம்மிரூ) என்ற இடத்தில் (ஃபல் யவும்முஹூம்) இமாமத் செய்யட்டும் என்று இடம் பெற்றுள்ளது.
அதாவது இமாம் அபூ தாவூதை விட மூத்தவர்களான ஹதீஸ்களை ஆய்வு செய்வதில் மேதைகளாகத் திகழ்ந்த இவ்விரு இமாம்களும் மூவர் பயணம் மேற்கொண்டால் அவர்கள் ஜமாத்தாகத் தொழ வேண்டும், ஒருவர் இமாமத் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிடுகின்றனர். இமாமத் செய்யட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது தான் அமீராக்கட்டும் என்று அபூ தாவூதில் தவறுதலாக இடம் பெற்றுள்ளது என்பதை இத்தகவலில் இருந்து அறியலாம்.
மேலும் பயணத்தில் செல்லும் குழுவுக்கு அமீர் என்பவர் அவசியம் இல்லை. அவர் அதிகாரம் படைத்தவராக இருக்க முடியாது என்பதால் அபூதாவூதை விட மூத்தவர்கள் அபூதாவூதின் ஆசிரியரின் ஆசிரியரிடம் கேட்டுப் பதிவு செய்தது தான் அபூதாவூதின் அறிவிப்பை விட சரியான அறிவிப்பாக இருக்க முடியும்.
இன்னும் பல நூல்களிலும் அமீராக்கிக் கொள்ளட்டும் என்பதற்கு பதிலாக இமாமாக ஏற்படுத்திக் கொள்ளட்டும் என்று இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த விபரம் வருமாறு:
1 . பைஹகீ
2 . முஸ்னத் அபீ யஃலா
مسند أبي يعلى (2/ 319):
قال حسين سليم أسد : إسناده حسن
3 . முஸ்னத் தயாலிஸீ
4 . நஸயீ குப்ரா
5 . தப்ரானி அவ்சத்
6 . நஸயீ
قال الشيخ الألباني : صحيح
7 . முஸ்னத் அஹ்மத்
تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم
8 . தாரிமி
9 . இப்னு குஸைமா
மேற்கண்ட அனைத்து அறிவிப்புக்களிலும் பிரயாணத்தில் அமீரை ஏற்படுத்துங்கள் என்பதற்கு பதிலாக இமாமை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்ற வாசகம் தான் இடம் பெற்றுள்ளது.
மேலும் முஹம்மத் பின் அஜ்லான் என்ற அறிவிப்பாளர் நாபிவு என்பார் வழியாக அறிவிக்கும் ஹதீஸ்களில் வார்த்தைக் குழப்பம் உள்ளது என்று உகைலி என்ற ஹதீஸ் கலை அறிஞர் கூறுகின்றார். அபூ தாவூதில் இடம் பெரும் ஹதீஸை நாபிவு வழியாகவே முஹம்மத் பின் அஜ்லான் அறிவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முஹம்மத் பின் அஜ்லான் வழியாக மற்றவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களில் மூவர் பயணம் சென்றால் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்று குறிப்பிடப்படுவதே சரியான அறிவிப்பாக இருக்க முடியும் என்பது உறுதியாகிறது.
மேலும் அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. மூவர் இருந்தால் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்று தான் அந்த ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளது.
நூல்: (முஸ்லிம்: 1191) .
ஆகவே பிரயாணத்தில் செல்பவர்கள் தனித்துத் தொழுது விடாமல் மூவரில் ஒருவரை இமாமாக ஏற்படுத்தித் தொழ வேண்டும் என்பது தான் சரியான அறிவிப்பாகும். பயணத்தில் அமீர் ஏற்படுத்துங்கள் என்பது சரியான அறிவிப்பாகாது.
இப்னு அஜ்லான்
நாபிவு
என்ற வழியாக அமைந்திருப்பதே இவ்வாறு முடிவு செய்யப் போதுமான காரணமாகும்.
இஸ்லாத்தில் அமீர் என்ற வார்த்தை ஆட்சி அதிகாரம் இல்லாத எவருக்கும் பயன்படுத்தப்பட்டதில்லை. எனவே அமீருக்குக் கட்டுப்படுங்கள் என்பது ஆட்சி, அதிகாரமில்லாதவர்களுக்குப் பொருந்தாது என்பது சந்தேகமற நிரூபணமாகின்றது.
ஆட்சி, அதிகாரமின்றி, இஸ்லாமிய அரசியல் சட்டங்களை அமுல்படுத்த முடியாத பகுதியில் ஒரு குழுவினர் தமக்கென ஒருவரைத் தலைவராக ஆக்கிக் கொள்வதும், ஆக்கிக் கொள்ளாமலிருப்பதும் அவர்களின் சொந்த அபிப்பிராயத்தில் செய்யப்படும் செயலாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
அவ்வாறு தலைவராக ஆக்கப்பட்டவர் தன்னை அமீர் என கூறிக் கொள்வதும், தனக்கென மற்றவர்கள் கட்டுப்படுவது மார்க்கத்தின் கடமை எனக் கூறுவதும் கட்டுப்படத் தவறினால் மார்க்கத்தில் குற்றமென வாதிடுவதும் மோசடியாகும்.
இன்றைய சங்கங்கள், ஜம்மியாக்கள், இயக்கங்களில் உள்ள தலைவர்களை அமீர் என்று அழைக்காமல் தலைவர் செயலாளர் போன்ற சொற்களால் அல்லது இவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட சொற்களால் அழைத்துக் கொள்ளலாம். மார்க்கத்துடன் முரண்படாத வகையில் அந்த இயக்கத்திற்காக விதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்த விதிகளை மீறுவோர் மீது இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் நான் தான் அமீர். அமீருக்குக் கட்டுப்படுவது மார்க்கக் கடமை; எனக்குக் கட்டுப்பட மறுத்தால் அல்லாஹ்விடம் தண்டணைக்கு உள்ளாவீர்கள் என்று வாதிடுவது அப்பட்டமான மோசடியாகும்.