45) திடீர் மரணம்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

சிலர் மரணத்தின் எவ்வித அறிகுறியும் இல்லாமல் திடீரென்று மரணித்து விடுவார்கள். வெள்ளம், மழை, சுனாமி, தீ விபத்து, வாகன விபத்து என்று பல வகையிலும் மனிதர்கள் மரணிக்கிறார்கள்.

திடீர் என்று மரணம் அடைவது துர்மரணம் என்று பரவலாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கும் ஆதாரம் இல்லை.

திடீர் மரணத்தை விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடியதாக சில ஹதீஸ்கள் உள்ளன. இது துர்மரணம் என்பதற்காகக் கூறப்பட்டதாக நாம் புரிந்து கொள்ளக் கூடாது.

ஏனெனில் திடீர் மரணம் என்பதும் நல்ல மரணமே என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

பிளேக் நோயில் இறந்தவர்கள், வயிற்றுப் போக்கில் இறந்தவர்கள், தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள், இடிபாடுகளில் இறந்தவர்கள், மற்றும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் ஆகியோர் உயிர் தியாகிகள் (ஷஹீத்கள்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 654, 721, 2829),

ஷஹீத்கள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள் யார் போருக்குச் சென்று கொல்லப்படுகிறாரோ அவர் தான் என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் என் சமுதாயத்தில் உயிர் தியாகிகள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் ஷஹீத் ஆவார். வயிற்றுப் போக்கால் இறந்தவர் ஷஹீத் ஆவார். பிரசவத்தின் போது மரணிக்கும் பெண்ணும் ஷஹீத் ஆவார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)

(அஹ்மத்: 17129, 21627, 21628, 21644, 21694)

பிளேக் நோய் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஷஹாதத் (உயிர் தியாகி) என்ற நிலையைத் தரும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(புகாரி: 2830, 5732)

ஈமானுடன் வாழும் ஒருவருக்கு இது போல் ஏற்படும் திடீர் மரணம் நன்மையைத் தான் தரும் என்பதை இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பல நபித்தோழர்களுக்குத் திடீர் மரணம் நிகழ்ந்துள்ளது. அதைத் துர்மரணம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருதவில்லை.

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் தாய் திடீரென்று மரணித்து விட்டார். அவர் பேசியிருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருப்பார். எனவே அவர் சார்பில் நான் தர்மம் செய்தால் அவருக்கு அதன் நன்மை கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 1388, 2760)

இது போல் திடீர் மரணம் அடைந்த எவரது மரணத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துர்மரணம் என்று கூறியதில்லை.