தாடி வளர்ப்பதினால் ஏற்படும் ஆன்மீக, அறிவியல் நன்மைகள்.

பயான் குறிப்புகள்: குர்ஆன் கூறும் அறிவியல்

தாடி வளர்ப்பதினால் ஏற்படும் ஆன்மீக, அறிவியல் நன்மைகள்.

இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக நடைமுறைக்கு அமையவே (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ஆதாரம்:(அபூதாவூத்: 3512)

இஸ்லாத்தின் பார்வையில் தாடி. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள், தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி) , ஆதாரம்: புஹாரி 5892

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்:(முஸ்லிம்: 435)

மேற்கண்ட செய்திகளில் இருந்து இஸ்லாம் தாடி வளர்ப்பதைக் வலியுறுத்திப் பேசுவதையும், அந்நிய கலாச்சாரத்திற்கு ஒப்பாக விதவிதமாக ஒவ்வொரு வடிவங்களில் தாடி வளர்ப்பதை தடை செய்வதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

அல்லாஹ்வின் படைப்பில் அவன் எந்த ஒன்றையும் வீணாக படைக்கவில்லை.

வானத்தையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம் எனும் கேடு உள்ளது. (அல்குர்ஆன்: 38:27)

ஆண்களுக்கு மட்டும் விசேஷமாக முகத்தில் தாடி வளரும் வன்னம் அல்லாஹ் படைத்திருக்கின்றான் என்றால் அதை முழுவதுமாக மழித்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தாடி மழித்துக் கொள்வதற்குறிய ஒன்றாக இருந்திருந்தால் இறைவன் மனிதனைப் படைக்கும் போதே பெண்களைப் போல் ஆண்களுக்கும் தாடி வளராத வன்னம் படைத்திருப்பான்.

தாடி வைப்பதில் ஏராளமான நன்மைகள் இருப்பதனால் தான் இஸ்லாம் தாடி வைப்பதை வலியுறுத்துகின்றது. விஞ்ஞான, மருத்துவ ஆய்வுகளும் இதை ஊர்ஜிதம் செய்கின்றன.

விஞ்ஞான ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.

சமூக மனோ தத்துவவியலாளர் Dr.Freedman என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி ஆண்கள் தாடி வைப்பதன் மூலம் பெண்கள் மத்தியில் கவர்ச்சியுள்ளவர்களாகவும், ஆண்மையுள்ளவர்களாகவும் இருப்பதுடன் பெண்கள், தாடி வைத்திருக்கும் ஆண்கள் மத்தியில் அவர்களது பெண் தன்மையை உணரக்கூடியவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

1973ல் கலிபோனிய ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியலாளர் Robert J. Pelligrini என்பவர் தாடி வைத்த 22 – 25 வயதெல்லையுடைய எட்டு இளம் ஆண்களை தமது பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதாவது இந்த எட்டு ஆண்களையும் கீழுள்ள நான்கு நிலைகளில் புகைப்படம் எடுத்தார்.

  1. முழு தாடியுடன்

2. முகத்தின் இரு பக்கங்களில் சிறு கோடு போன்ற சிறிய தாடியுடன்

3. மீசையுடன்

4. தாடி முழுவதும் மழித்து (தாடி இல்லாமல்)

ஒவ்வொருவரிலிருந்து பெறப்பட்ட நான்கு புகைப்படங்களாக மொத்தம் 32 புகைப்படங்களை மனோதத்துவவியல் படிக்கும் 64 ஆண் மாணவர்களுக்கும், 64 பெண் மாணவர்களுக்குமாகக் கொடுத்து புகைப்படங்களில் உள்ளவர்களின் உருவங்களை மதிப்பிடுமாறு கூறினார். ஒவ்வொரு புகைப்படமும் இரு ஆண், இரு பெண் வீதம் மதிப்பிடப்பட்டது.

Pelligrini இன் ஆய்வின் முடிவில் பெறப்பட்ட முடிவானது முகத்தில் அதிகளவில் முடியுள்ளவர்கள் தோற்றத்தில் ஆண்மையுள்ளவர்களாகவும்,அழகிய தோற்றமுடையவர்களாகவும், கம்பீரமுடையவர்களாகவும்,தக்க வளர்ச்சியுள்ளவர்களாகவும், துணிவுள்ளவர்களாகவும், பெருந்தன்மையுடையவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், கவர்ச்சியானவர்களாகவும் இருக்கின்றனர் என்பதாகும்.

தாடி வைப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்.

மருத்துவ ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதானது ஒரு மனிதனை தொண்டை, பல்ஈறு சம்பந்தமான நோய்களிலிருந்து தடுக்கின்றது. மேலும், தாடியானது முகத்தின் சருமத்திற்கு கெடுதி விளைவிக்கக்கூடிய இரசாயன வகைகளிலிருந்தும், மாசுள்ள வளிமண்டலத்திலிருந்தும் கெடுதி ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படும்.

தாடி சருமத்தை மூடி காணப்படுவதால் sebaceous சுரப்பிகளின் மூலம் பக்டீரியா தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கப்படுவதால் முகப்பருக்கள், புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும். தாடி முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நாடியையும் அபாயங்களிலிருந்து காப்பாற்றும். அத்துடன் தாடி வைப்பதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

மாற்று மத அமெரிக்க மருத்துவர் Charles Holmes  என்பவரின் கருத்து.

இந்த மருத்துவர் கூறுகின்றார் “எனக்குப் புரியவில்லை ஏன் மக்கள் தாடி வைப்பதில் அதிருப்தி அடைகின்றனர். மக்கள் தலையில் முடி வளர்த்திருக்கும் போது முகத்தில் முடி வளர்ப்பதில் என்ன தவறு இருக்கின்றது? தலை முடி கொட்டும் போது வெட்கத்திற்குள்ளாகும் மனிதன் தாடியை முழுவதுமாக மழிப்பது என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகின்றது.

நீண்ட தாடியானது மனிதனின் கழுத்துப் பகுதியை குளிர்த் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது. நாம் அறிந்த வகையில் தாடி வளர்ப்பதானது மத அனுஷ்டானம் மட்டும் இன்றி மனிதனுக்கு நிறைய நன்மை பயக்கக்கூடியதாகவுள்ளது. முன்னைய காலத்து மருத்துவர்கள், தத்துவஞானிகள் கூட தாடி வளர்த்திருக்கிறார்கள். உதாரணமாக சார்ள்ஸ் டார்வின், லுயிஸ் பெஸ்டர், ஆபிரகாம் லிங்கன் இன்னும் பலர். ஆனால் மக்கள் சமீப காலமாகத் தான் மக்கள் தாடி வைப்பதிலிருந்து விலகி நடக்கின்றனர்”.

முஸ்லிம்கள் ஏன் தாடி வளர்ப்பதில் பின்வாங்குகின்றனர்?

அநேக முஸ்லிம் சகோதரர்கள் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டினாலும் அவர்களின் மனைவிமார்களுக்காக வேண்டி தாடியை மழிக்கும் நிலையை காணக்கூடியதாகவுள்ளது. இன்று பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் தங்கள் கணவர்கள் தாடி வளர்ப்பதை இழிவாகக் கருதுகின்றனர். மீசையை ஒட்ட கத்தரித்து தாடியை வளர்ப்பது இறைத் தூதர் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட சிறந்த காரியம் என்பதை இப் பெண்கள் மறந்து விட்டனர். தாடி வைக்காத கணவர்களுக்கும் தாடியின் சிறப்பையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக்கூறி கணவர்களுக்கு தாடி வைக்க ஊக்குவிக்கக்கூடியவர்களாக பெண்கள் இருக்க வேண்டும்.

மேலும், ஊடகங்களும் தாடி வைத்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக் காட்டுவதால் இன்று மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் ஆசிய நாட்டவர்கள் கூட தாடி வைப்பதில் பயந்த நிலையில் உள்ளனர்.

மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாடி வளர்ப்பதை வலியுறுத்தியது மட்டுமல்லாமல் அதை எவ்வாறு அழகாகவும், மற்றவர்கள் விரும்பும் வன்னம் வைக்க வேண்டும் எனவும் காட்டித் தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை. ஆகவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி 5899

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசி வந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களுடைய தலையிலும் அவர்களுடைய தாடியிலும் என்னால் காண முடிந்தது.

ஆதாரம்: புஹாரி 5923

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் ஏராளமான பெண்கள் ஆண்களுக்க ஒப்பாகவே தம் உடைகளையும், தலை முடிகளையும் வைத்துக் கொள்கின்றனர். அதேபோல் இன்று பல ஆண்கள் மத்தியில் பெண்களைப் போல் தலை முடி வளர்ப்பதும் பிரபல்யம் ஆகி வருகின்றது.  அநேக சந்தர்ப்பங்களில் அவர்களுக்கிடையில் ஆணா, பெண்ணா என்ற வித்தியாசமே தெரியாதுள்ளது. இத்தகைய நிலையில் ஆண்கள் தாடி வைப்பதானது அவர்களுக்கு சிறப்பான தனித்துவத்தைக் காட்டுவது மட்டுமில்லாமல் ஆண்களைப் போல் தம் நடை, உடை, பாவனையை அமைத்துக் கொள்ள விரும்பும் பெண்களுக்கும் தாடி சாவு மணியாக அமையும்.

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே தாடி வைத்தல் என்ற நபி வழியை நடை முறைப்படுத்தி இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக!

Source :http://nallurdawa.blogspot.com/2014/03/blog-post_22.html#more