தஸ்பீஹ் ஹதீஸ்

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

தஸ்பீஹ் ஹதீஸ்

”உங்கள் விரல்களால் (தஸ்பீஹ் செய்து) எண்ணுங்கள்! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்பட்டு அவைகள் பேச வைக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: யுஸைரா (ர­), நூல்கள்:(அஹ்மத்: 25841),(திர்மிதீ: 3507)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் பற்றி சில அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். இரண்டாவது அறிவிப்பாளர் ஹுமைளா பின்த் யாஸிர் என்பவரும் மூன்றாவது அறிவிப்பாளர் ஹானீ பின் உஸ்மான் என்பவரும் யாரென அறியப்படாதவர்கள். இவ்விருவரையும் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் நம்பகமானவர் என்று கூறவில்லை; இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென அறியப்படாதவரையும் நம்பகமானவர் பட்டிய­ல் இணைத்து விடுவார் என்பதால் அவரின் கூற்று மதிப்பற்றது என்று விமர்சனம் செய்யப்படுகிறது.

இந்தச் செய்தி பலவீனமானதாக இருந்தாலும் நஸயீ என்ற நபிமொழித் தொகுப்பு நூ­ல் ஆதாரப்பூர்வமான செய்தி இடம் பெற்றுள்ளது.

எனினும், கீழ்காணும் ஹதீஸ் சரியானது.
நபி (ஸல்) அவர்கள் தங்கள் கைகளால் தஹ்பீஹ் செய்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­லி)
நூல்: நஸயீ 1331

இந்தச் செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் அதா பின் யஸீத் என்பவர் மூளை குழம்பியவர் என்ற விமர்சனம், இந்த ஹதீஸில் எந்தப் பலவீனத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் அதா பின் யஸீத் என்பவரிடம் இந்தச் செய்தியில் செவியுற்ற ஹம்மாத் பின் ஸைத் என்பவர், இவர் மூளை குழப்பம் ஏற்படுவதற்கு முன்னர் கேட்டவர் என்று யஹ்யா பின் அல்கத்தான் அவர்கள் குறிப்பிடும் செய்தி ‘தஹ்தீபுத் தஹ்தீப்’ என்ற நூ­ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக அமைந்துள்ளதால் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி விரல்களால் தஹ்பீஹ் செய்வது நபிவழி தான். எனினும் முந்தைய ஹதீஸ் ளயீஃபானது.