தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்

பயான் குறிப்புகள்: கொள்கை

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்

இன்றைக்கு இஸ்லாமியர்கள் பல அமைப்பினராகவும், பல்வேறு கொள்கையினராகவும் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு அமைப்பினரும், கொள்கையினரும் தாங்கள் செல்லும் வழியே மேலானது எனவும் போதிக்கின்றனர். ஆனால் குர்ஆனும், நபி வழியும் எதனை மேலானது என்றும், எது இம்மையிலும், மறுமையிலும் நமக்குப் பலன் தரக்கூடியது என்றும் வலியுறுத்துகிறதோ அதற்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் எதனை முதன் முதலாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதைத் திருக்குர்ஆன் மூலம் நாம் காண்போம். இதோ அல்லாஹ் கூறுகிறான்.

47:19 فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَلِلْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنٰتِ‌ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوٰٮكُمْ

அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக!

(அல்குர்ஆன்: 47:19)

ஒவ்வொருவரும் ஓரிறைக் கொள்கையைத் தான் முதன் முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் வலியுறுத்துகிறது. ஆனால் பெரும் பாலான முஸ்லிம்கள் இந்த விஷயத்தில் கவனமற்றவர்களாகவே உள்ளனர்.

இவ்வாறு நாம் கூறும் போது, நாங்கள் ஓர் இறைவனைத் தானே வணங்குகிறோம் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கூறுகின்றனர். அல்லாஹ்வை இறைவன் என்று கூறுவதால் மட்டுமே ஒருவன் ஏகத்துவக் கொள்கையை ஏற்றவனாகக் கருதப்பட மாட்டான். மாறாக இறைவனுக்குரிய ஒரு பண்பை அவனல்லாதவர்களுக்கு இருப்பதாகக் கருதினாலோ அல்லது அல்லாஹ் அல்லாத ஒரு பொருளுக்கு இறைத் தன்மை இருப்பதாக நம்பினாலோ அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவான்.

மறுமையில் நிரந்தர நரகத்திற்குச் சொந்தக்காரனாகி விடுவான். இதன் காரணமாகத் தான் இறைவன் இந்தக் கொள்கையைக் கற்றுக் கொள்ளுமாறு மேற்கண்ட வசனத்தில் கட்டளையிடுகிறான்.

அல்லாஹ் நம்மைப் படைத்ததன் நோக்கம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமை, அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை வணங்குவதாகும். அல்லாஹ் அடியார்களுக்குச் செய்யும் கடமை தனக்கு எதையும் இணை கற்பிக்காதவரை வேதனை செய்யாமல் இருப்பதாகும்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)

(புகாரீ: 2856)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனைச் சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(புகாரீ: 1238)

இஸ்லாத்தின் முதல் தூண் ஏகத்துவக் கொள்கை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்து (தூண்கள்) மீது நிறுவப்பட்டுள் ளது. (அவை:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழி அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

(முஸ்லிம்: 20)

இறை நம்பிக்கையின் முதல் நிலை ஏகத்துவக் கொள்கை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கையானது எழுபதுக்கும் அதிகமான அல்லது அறுபதுக்கும் அதிகமான கிளைகள் கொண்ட தாகும். அவற்றில் உயர்ந்தது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளை தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 58)

ஓரிறைக் கொள்கைக்கு நேர் எதிரானது இணை வைப்புக் காரியங்களாகும். இந்த இணை வைப்புக் காரியங்களின் பேராபத்தை ஒருவன் உணர்ந்து கொண்டால், மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக இதைக் கற்றுக் கொள்வதற்குத் தான் முக்கியத்துவம் தருவான்.

இதை அறியாதவர்களாக இருப்பதால் தான் இதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

இவை ஒரு மனிதனுக்கு எவ்வளவு பேராபத்தானவை என்பதைப் பின்வரும் சான்றுகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

ஓரிறைக் கொள்கையின் மகிமை

இறைவனுக்கு இணை கற்பிக்காத வர்கள் எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் என்றாவது ஒரு நாள் சுவர்க்கம் சென்று விடுவார்கள். இதிலிருந்தே நாம் ஓரிறைக் கொள்கையின் மகிமையை விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் திருப் தியை நாடி லாயிலாஹ இல்லல்லாஹ் என்று எவரேனும் சொன்னால் அல்லாஹ் நரகத்தை அவர் மீது தடை செய்துவிடுகிறான் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இத்பான் பின் மாலிக்(ரலி)

(புகாரி: 4250)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (மிஃராஜ் பயணத்தின் போது) மூன்று (கட்டளைகள்) வழங்கப்பட்டன. அவையாவன: 1. ஐவேளைத் தொழுகைகள் வழங்கப் பட்டன. 2. அல்பகரா அத்தியா யத்தின் இறுதி (மூன்று) வசனங்கள் அருளப்பெற்றன. 3. அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர் களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப் (படுவதாக அறிவிக்கப்)பட்டது.

(முஸ்லிம்: 279)

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்த போது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக் கொண்ட போது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்-, பிறகு அதே நம்பிக்கையில் இறந்து விடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நான், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்) என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அவர் விபசாரம் புரிந் தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்) என்று சொன்னார்கள்.

நான் (மூன்றாவது முறையாக) அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே) என்று கூறினார்கள்.

(புகாரி: 5827)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்றும் ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்றும், அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (ஆகு எனும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்) என்றும், அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர் என்றும், சொர்க்கம் உண்மை தான் என்றும், நரகம் உண்மை தான் என்றும், எவர் (உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் அவரது செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்.

அறிவிப்பவர்: உபாதா (ரலி)

(புகாரி: 3435)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நான் சொர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்! என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,  நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்;

 ரமளானில் நோன்பு நோற்க வேண்டும் என்றார்கள். அதற்கவர், என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதை விட அதிகமாக வேறெதைதையும் செய்ய மாட்டேன் என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், சொர்க்க வாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்! என்றார்கள்.

(புகாரி: 1396)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தமது உள்ளத்தில் ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது இதயத்தில் ஒரு மணிக்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் லாயிலாஹ இல்லல்லாஹ் சொன் னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில் லாயிலாஹ இல்லல்லாஹ் சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 44)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு பயணத்தில் வாகனம் ஒன்றில்) நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் முஆத் (ரலி) அவர்கள் அமர்ந்திருக்கும் போது, நபி (ஸல்) அவர்கள், “முஆத் பின் ஜபலே!‘ என்று அழைத்தார்கள். “அல்லாஹ் வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)‘ என்று முஆத் (ரலி) அவர்கள் பதிலளித் தார்கள். முஆதே! என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)‘ என மீண்டும் முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

இவ்வாறு மூன்று முறை (அழைப்பும் பதிலும்) நடந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உளப்பூர்வமாக உறுதி கூறும் எவருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்து விட்டான்‘ என்று கூறினார்கள்.

உடனே முஆத் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடட்டுமா? (இதை கேட்டு) அவர்கள் மகிழ்ச்சி அடைவார்களே!‘ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(இல்லை; வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் (அதைக் கேட்டுவிட்டு) அவர்கள் (இது மட்டும் போதுமே என்று நல்லறங்களில் ஈடுபடாமல்) அசட்டையாக இருந்து விடுவார்கள்‘ என்று கூறினார்கள்.

(கல்வியை மறைத்த) குற்றத் திலிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தறுவாயில் இந்த ஹதீஸை முஆத் (ரலி) அவர்கள் (மக்களுக்கு) அறிவித்தார்கள்.

(புகாரி: 99)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். எங்களுடன் அமர்ந்திருந்த சிலரில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். அப்போது எங்களிடையேயிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். நெடு நேரமாகியும் அவர்கள் எங்களிடம் (திரும்பி) வரவில்லை. அவர்களுக்கு (எதிரிகளால்) ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; நாங்கள் பீதி அடைந்தவர்களாக (அங்கிருந்து) எழுந்தோம்.

பீதியுற்றவர்களில் நானே முதல் ஆளாக இருந்தேன். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடிக்கொண்டு புறப்பட்டேன். பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த அன்சாரிகளுக்குச் சொந்தமான ஒரு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். அத்தோட்டத்தின் வாசல் எங்கே என்று (தேடியவனாக) அதைச் சுற்றி வந்தேன்.

ஆனால் (அதன் வாசலைக்) காணவில்லை. அத்தோட்டத்திற்கு வெளியே இன்னொரு தோட்டத்திலிருந்து வாய்க்கால் ஒன்று அதனுள் சென்று கொண்டிருந்தது. உடனே நான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று (என் உடலைக்) குறுக்கிக் கொண்டு (அந்த வாய்க்கால் வழியே தோட்டத்திற்குள்) நுழைந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.

அப்போது அவர்கள், “அபூ ஹுரைராவா?’ என்று கேட்டார்கள். நான், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!‘ என்றேன். “என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள். “நீங்கள் எங்களிடையே இருந்து கொண்டிருந்தீர்கள். (திடீரென) எழுந்து சென்றீர்கள். நெடு நேரமாகியும் நீங்கள் எங்களிடம் திரும்பவில்லை. எனவே, (எதிரிகளால்) ஏதேனும் உங்களுக்கு ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; பீதியுற்றோம். நான் தான் பீதியுற்றவர்களில் முதல் ஆளாவேன். எனவே தான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று உடலைக் குறுக்கிக் கொண்டு இந்தத் தோட்டத்திற்கு வந்தேன். இதோ மக்கள் என் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள்‘ என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஹுரைரா! (என்று என்னை அழைத்து) தம் காலணிகள் இரண்டையும் என்னிடம் கொடுத்து, “இவ்விரு காலணி களையும் கொண்டு செல்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற் செய்தி சொல்!” என்று கூறினார்கள்.

நான் உமர் (ரலி) அவர்களையே முதலில் சந்தித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இவை என்ன காலணிகள், அபூஹுரைரா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான் “இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலணிகள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சாட்சியம் கூறுகின்ற எவரை நான் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுமாறு சொல்லி, இக்காலணிகளை (ஆதாரமாக)க் கொடுத்து என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்” என்று சொன்னேன்.

உடனே உமர் (ரலி) அவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள். நான் மல்லாந்து விழுந்தேன். “திரும்பிச் செல்லுங்கள், அபூஹுரைரா!‘ என்று சொன்னார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த உமரும் அங்கே எனக்குப் பின்னால் வந்து நின்றார். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூஹுரைரா! உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள்.

“நான், உமரைச் சந்தித்து நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை அவரிடம் தெரிவித் தேன். அவர் என் மார்பில் ஓர் அடி அடித்தார். நான் மல்லாந்து விழுந்து விட்டேன். பிறகு, திரும்பிச் செல்லுங் கள் என்று கூறினார்” என்றேன்.

அப்போது உமர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்?’ என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உள்ளத்தால் உறுதிகொண்ட நிலையில் சாட்சியம் சொல்பவர் எவரைச் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுமாறு கூறி உங்கள் காலணிகளைக் கொடுத்து நீங்கள்தாம் அபூஹுரைராவை அனுப்பி வைத்தீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம் என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்கள்! ஏனெனில், மக்கள் அதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அவர்கள் (நற்)செயல் புரிய விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வாறே அவர்களை விட்டுவிடுங்கள் (அவர்கள் நற்செயல் புரியட்டும்)” என்று சொன்னார்கள்.

(முஸ்லிம்: 52)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத் திலிருந்து ஒரு மனிதனைத் தனியாக நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும்.

பிறகு அல்லாஹ் அவனிடம் “இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா?” என்று கேட்பான். “என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள்தான்)” என்று அவன் கூறுவான். “(நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் என் இரட்சகனே ஏதுமில்லை என்று கூறுவான்.

அப்போது அல்லாஹ் கூறுவான். “அவ்வாறில்லை உனக்கு நம்மிடத் தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது‘ என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும் அதில் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு (வணக் கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் நிச்சயமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்று சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும்.

“நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார்‘ என்று அல்லாஹ் கூறுவான். “என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?)’ என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் “நிச்சயமாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய்‘ என்று கூறுவான். அந்தப் பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்தச் சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடி விடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது.

அறிவிப்பவர்: அம்ருப்னு ஆஸ் (ரலி)

(திர்மிதீ: 2563)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் (தனக்கு இணை வைக்காத ஒரு அடியானைப் பார்த்து) “ஆதமுடைய மகனே நீ பூமி நிறைய பாவத்துடன் என்னிடம் வந்திருக்கின்றாய். (ஆனால்) நீ எனக்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்கவில்லை. எனவே நான் உனக்கு பூமி நிறைய பாவ மன்னிப்பை வழங்குகின்றேன்” என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூதர்(ரலி)

(அஹ்மத்: 20349)

நம்மை மறுமையில் காப்பாற்றக் கூடியது இந்த ஏகத்துவம் மட்டும் தான். நாம் அதில் தவறிழைத்து விட்டோம் என்றால் அதை விடப் பேரிழப்பு வேறோன்றுமில்லை. நாம் மக்களுக்குச் செய்கின்ற சேவை களிலேயே மிகச் சிறந்த சேவை அவர்களுக்குச் சத்தியத்தை எடுத்துரைப்பது தான்.

இன்றைக்கு இதைத் தவிர மற்ற அனைத்துப் பணிகளுக்கும் பெரும் கூட்டம் இருக்கிறார்கள். இந்த சத்தியப் பிரச்சாரத்தை எடுத்துரைப்பதற்குத் தான் அனைவரும் தயங்குகிறார்கள்.

ஏனென்றால் இதனை எடுத் துரைக்கும் போது பலவிதமான சோதனைகள் பலவிதங்களிலும் வந்து கொண்டிருக்கும். அப்படி சோதனை கள் வரவில்லையென்றால் நாம் சத்தியத்தைக் கூறவில்லை என்று தான் பொருள்.

சமுதாயம் எவ்வளவு எதிர்த்தாலும், அனைவருமே இந்த சத்தியப் பிரச்சாரத்திற்கு எதிராகக் களமிறங் கினாலும், எவ்வளவு பின்னடைவு களைச் சந்தித்தாலும் இந்த சத்தியப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டோம் என்பதில் உண்மையான தவ்ஹீத்வாதி கள் உறுதியாக இருக்க வேண்டும்.

ஓரிறைக் கொள்கையின் அவசியத்தை இதுவரை கண்டோம். இணை வைத்தலின் தீமைகளைப் பற்றி காண்போம்.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது

4:36 وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ ؕ

 

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!

(அல்குர்ஆன்: 4:36)

6:14 قُلْ اَغَيْرَ اللّٰهِ اَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ‌ؕ قُلْ اِنِّىْۤ اُمِرْتُ اَنْ اَكُوْنَ اَوَّلَ مَنْ اَسْلَمَ‌ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ‏

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக் கிறான். அவன் உணவளிக்கப் படுவதில்லை என்று கூறுவீராக! கட்டுப்பட்டு நடப்போரில் முதலாம வனாக இருக்குமாறு கட்டளையிடப் பட்டுள்ளேன் எனவும் கூறுவீராக! இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர்!

(அல்குர்ஆன்: 6:14)

6:151 قُلْ تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ‌ اَلَّا تُشْرِكُوْا بِهٖ شَيْـٴًـــــا 

வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, நீங்கள் அல்லாஹ் வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது என்பதே.

(அல்குர்ஆன்: 6:151)

மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால் (எனக்குக் கவலையில்லை.) அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவோரை நான் வணங்க மாட்டேன். மாறாக உங்களைக் கைப்பற்றவுள்ள அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கை கொண்ட வனாக இருக்கக் கட்டளையிடப் பட்டுள்ளேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

உண்மை வழியில் நின்று இம்மார்க்கத்தை நோக்கி உமது கவனத்தைத் திருப்புவீராக! இணை கற்பிப்பவராக ஆகி விடாதீர்!

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

(அல்குர்ஆன்: 10:104-106)

قُلْ اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ وَلَاۤ اُشْرِكَ بِهٖؕ اِلَيْهِ اَدْعُوْا وَاِلَيْهِ مَاٰبِ‏

அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும். அவனுக்கு இணை கற்பிக்கக்கூடாது என்று கட்டளை யிடப்பட்டுள்ளேன். அவன் பக்கமே அழைக்கிறேன். மீளுதலும் அவனி டமே உள்ளது என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 13:36)

அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்ட பின்னர் அதை விட்டும் உம்மை (எதுவும்) தடுத்திட வேண்டாம்! உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணை கற்பிப்பவராக நீர் ஆகாதீர்!

 

28:87 وَلَا يَصُدُّنَّكَ عَنْ اٰيٰتِ اللّٰهِ بَعْدَ اِذْ اُنْزِلَتْ اِلَيْكَ‌ وَادْعُ اِلٰى رَبِّكَ‌ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ‌ۚ‏
28:88 وَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ‌ۘ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ كُلُّ شَىْءٍ هَالِكٌ اِلَّا وَجْهَهٗ‌ؕ لَـهُ الْحُكْمُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்: 28:87-88)

72:20 قُلْ اِنَّمَاۤ اَدْعُوْا رَبِّىْ وَلَاۤ اُشْرِكُ بِهٖۤ اَحَدًا‏

நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன் என (முஹம்மதே!) கூறுவீராக! நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 72:20)

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் பாவம்

4:48 اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

(அல்குர்ஆன்: 4:48)

4:116 اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ؕ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا‏

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.

(அல்குர்ஆன்: 4:116)

31:13 وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔؕ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏

 

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும் என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்: 31:13)

இணை வைத்தல் என்பது இவ்வுலகில் மனிதன் செய்யும் பாவங்களிலேயே மிகப்பெரும் பாவமாகும். கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு ஆகிய எந்தப் பாவத்தை எடுத்துக் கொண்டாலும் அவற்றை விட மிகக் கடுமையான பாவமாக இணை வைத்தலைத் தான் நபியவர்கள் கூறியுள்ளார்கள். இதிலிருந்தே இந்த இணை வைத்தலுக்கு எதிரான ஏகத்துவக் கொள்கையை, அதாவது ஓரிறைக் கொள்கையை நாம் கற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளலாம்.

பின்வரும் ஹதீஸ்கள் இணை வைத்தல் எவ்வளவு கடுமையான குற்றம் என்பதற்குத் தெளிவான சான்றுகளாகும்.

நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று சொன்னார்கள். நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்” என்று சொல்லிவிட்டு பிறகு எது? என்று கேட்டேன். “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று சொன்னார்கள். நான், பிறகு எது? என்று கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவி யுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

(புகாரி: 4477)

நபி (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 2653)

அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அவை எவை? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப் படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான இறை நம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 2766)

இணை கற்பித்தால் நல்லறங்கள் அனைத்தும் அழிந்து விடும்

இணை கற்பித்தல் என்பது மனிதனின் உடலில் புகுந்த விஷத்திற்குச் சமமாகும். ஒருவன் உளூ இல்லாமல் ஆயிரம் ரக்அத்துகள் தொழுதாலும், ஆயிரம் வருடங்கள் தொழுதாலும் அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது. அதுபோல் ஒருவன் இணை வைத்துக் கொண்டு எவ்வளவு தொழுதாலும், நோன்பு வைத்தாலும், ஹஜ் செய்தாலும், தான தர்மங்கள் செய்தாலும் அவனுடைய எந்த நல்லறமும் நன்மையாக மாறாது. அவையனைத்தும் அழிந்து போய் விடும். நாம் செய்யும் நல்லறங்கள் நன்மையாக மாறுவதற்காவது நாம் ஓரிறைக் கொள்கையையும், அதற்கு எதிரான இணை கற்பிக்கும் காரியங்களையும் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

6:88 ذٰ لِكَ هُدَى اللّٰهِ يَهْدِىْ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ؕ وَلَوْ اَشْرَكُوْا لَحَبِطَ عَنْهُمْ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ‏

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

(அல்குர்ஆன்: 6:88)

39:65 وَلَـقَدْ اُوْحِىَ اِلَيْكَ وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَ‌ۚ لَٮِٕنْ اَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏
39:66 بَلِ اللّٰهَ فَاعْبُدْ وَكُنْ مِّنَ الشّٰكِرِيْنَ‏

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

(அல்குர்ஆன்: 39:65-66)

9:17 مَا كَانَ لِلْمُشْرِكِيْنَ اَنْ يَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِيْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ بِالـكُفْرِ‌ؕ اُولٰۤٮِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ ۖۚ وَ فِى النَّارِ هُمْ خٰلِدُوْنَ‏

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 9:17)

98:6 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَ الْمُشْرِكِيْنَ فِىْ نَارِ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ ؕ‏

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

(அல்குர்ஆன்: 98:6)

இணை கற்பித்தலுக்கு மன்னிப்பே கிடையாது

4:48 اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏

தனக்கு இணை கற்பிக்கப்படு வதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோ ருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

(அல்குர்ஆன்: 4:48)

5:72 لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ‌ ؕ وَقَالَ الْمَسِيْحُ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ‌ ؕ اِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَـنَّةَ وَمَاْوٰٮهُ النَّارُ‌ ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ‏

 

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனு மாகிய அல்லாஹ்வை வணங்குங் கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை என்றே மஸீஹ் கூறினார்.

(அல்குர்ஆன்: 5:72)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் அமல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காட்டப் படுகின்றன. அப்போது அந்நாளில் கண்ணியமும் மகத்துவம் பொருந்திய அல்லாஹ் தனக்கு இணை வைக்காத ஒவ்வொருவரையும் மன்னிக்கிறான். ஆனால் தனக்கும் தன்னுடைய சகோதரருக்கும் மத்தியில் பகைமை யாரிடம் இருக்குமோ அவரை மன்னிப்பதில்லை. இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்! இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்! என்று சொல்லப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 4654)

இறைவனுக்கு இணை வைத்து விட்ட ஒருவன் மறுமையில் இவ்வுலக அளவிற்குத் தங்கத்தைக் கொடுத் தாலும் நரக வேதனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதைப் பின்வரக்கூடிய ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஒரு காஃபிர் (அல்லாஹ்வின் முன்னிலையில்) கொண்டு வரப்படுவான். “உனக்கு பூமி நிறைய தங்கம் இருந்தால் நீ (நரக வேதனையிலிருந்து தப்பிப்ப தற்காக) அதனை ஈடாகக் கொடுத்து விடுவாயா? நீ என்ன கருதுகின்றாய்?” என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் ஆம் என்று கூறுவான். இதை விட மிக இலேசான ஒன்றை (எனக்கு இணை கற்பிக்காதே என்று) தானே நீ உலகத்தில் கேட்கப்பட்டாய். (ஆனால் இணை வைத்து நிரந்தர நரகத்தில் வீழ்ந்து விட்டாய்) என்று அவனுக்கு கூறப்படும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 6538)

ஏகத்துவாதிக்கே நபிகள் நாயகத்தின் பரிந்துரை

இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்தினர், இறைநேசர்களாகக் கருதப்படக் கூடிய இறந்தவர்கள் மறுமையில் நமக்காகப் பரிந்துரை செய்வார்கள் என்ற எண்ணத்தில் தர்ஹாக்களில் சென்று அவர்களிடம் பரிந்துரையைக் கேட்கின்றனர். இன்னும் பல்வேறு விதமான இணை வைப்புக் காரியங்களையும் செய்து வருகின்றனர். ஆனால் இணை வைப்புக் காரியங்களைத் தவிர்ந்து ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருப்பவர்களுக்குத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பரிந்துரை செய்ய இயலும் என்பதை நபியவர்கள் பின்வரும் ஹதீஸில் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்கு பாக்கியம் பெறும் மனிதர் யார்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது, “அபூ ஹுரைரா! என்னைப் பற்றிய செய்திகள் மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் எண்ணினேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெறும் பாக்கியமுடையவர் யார் எனில், தூய எண்ணத்துடன் யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர் தாம்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 99)

இன்றைக்கு நம்மைச் சுற்றிப் பெரும்பாலும் கள்ளம் கபடமில்லாமல் அண்ணன் தம்பிகளைப் போன்று பழகிக் கொண்டிருக்கும் பிறமதச் சகோதரர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். கொடியவர்களுக்கு இஸ்லாத்தைச் சொல்வது நம்மீது கடமையென்றால் இந்த அப்பாவி மக்களுக்கு ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொல்வது நம்மீது கடமையில்லையா?

மேற்கண்ட ஹதீஸ்கள் இணை வைப்புக்கு எதிராக நம்முடைய உயிரையும் நாம் கொடுக்கத் தயாராக வேண்டும் என்பதைத் தெளிவு படுத்துகின்றன. இதன் மூலம் ஓரிறைக் கொள்கையை கற்றுக் கொள்வதன் அவசியத்தை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

இணை வைப்பவர்களுக்கு மார்க்கத்தின் மதிப்பு

இணை வைப்பதின் பேராபத் தையும், தவ்ஹீதின் சிறப்பையும் நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இணை வைப்பவர்களை மார்க்கம் எவ்வாறு மதிக்கிறது என்பதை அறிந்து கொள்வதன் மூலம் உணர்ந்து கொள்ள இயலும். பின்வரும் வசனத்தில் இணை கற்பிப்பவர்கள் அசுத்தமானவர்கள் என்று இறைவன் கூறுகிறான்.

 

9:28 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَـرَامَ بَعْدَ عَامِهِمْ هٰذَا‌ ۚ وَ اِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيْكُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۤ اِنْ شَآءَ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ حَكِيْمٌ‏

நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்த மானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ் வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது. நீங்கள் வறுமையைப் பயந்தால் அல்லாஹ் நாடினால் தனது அருளால் உங்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான்.அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 9:28)

அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் எல்லாற்றிற்கும் வழி காட்டுவது போன்று, இணை வைப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் வழி காட்டுகின்றது.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளி யேற்றாதோருக்கும் நன்மை செய்வ தையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

 

60:8 لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا اِلَيْهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏
60:9 اِنَّمَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ قَاتَلُوْكُمْ فِى الدِّيْنِ وَاَخْرَجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ وَظَاهَرُوْا عَلٰٓى اِخْرَاجِكُمْ اَنْ تَوَلَّوْهُمْ‌ۚ وَمَنْ يَّتَوَلَّهُمْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங் களிலிருந்து உங்களை வெளியேற்றி யோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன்: 60:8-9)

இணை கற்பிப்பவர்களுடன் கொடுக்கல் வாங்கல், வியாபாரம் போன்ற உலக விஷயங்களில் உறவு கொள்வதை இந்த வசனங்கள் அனுமதிக்கின்றன.

 

31:15 وَاِنْ جَاهَدٰكَ عَلٰٓى اَنْ تُشْرِكَ بِىْ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ ۙ فَلَا تُطِعْهُمَا‌ وَصَاحِبْهُمَا فِى الدُّنْيَا مَعْرُوْفًا‌ وَّاتَّبِعْ سَبِيْلَ مَنْ اَنَابَ اِلَىَّ ‌ۚ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப் படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப் படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

(அல்குர்ஆன்: 31:15)

நமது பெற்றோர்கள் இணை வைப்பில் இருந்தாலும் அவர்களிடம் உலக விஷயத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ள இந்த வசனம் சொல்கிறது. அத்துடன் இந்த வசனம் தான் ஃபித்துன்யா – இவ்வுலகில் என்று குறிப்பிட்டு, முஷ்ரிக்குகளுடன் நாம் கொள்ள வேண்டிய தொடர்பை இம்மை, மறுமை என்று பிரித்துக் காட்டுகின்றது.

இணை கற்பிப்பவர்களிடம் மறுமை, மார்க்க விஷயத்தில் எவ்விதத் தொடர்பும் கொள்ளக் கூடாது என்று ஒரு பட்டியலையே போடுகின்றது.

  1. திருமணம்
  2. பள்ளிவாசல் நிர்வாகம்
  3. பாவ மன்னிப்புத் தேடுதல்
  4. ஜனாஸா தொழுகை

போன்ற மார்க்க விஷயங்களில் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மார்க்கம் வலியுறுத்துகின்றது. இதற்கான ஆதாரங்களை இப்போது பார்ப்போம்.

திருமணம்

2:221 وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّ‌ؕ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ‌ۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ‌ؕ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْؕ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ  ۖۚ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ‌ۚ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ 

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யா தீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந் தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப் பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப் பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 2:221)

ஒரு முஸ்லிமான ஆண், இணை வைக்கும் பெண்ணை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஒரு முஸ்லிமான பெண், இணை வைக்கும் ஆணை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று இந்த வசனம் தெளிவாகக் கட்டளையிடுகின்றது.

பள்ளிவாசல் நிர்வாகம்

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்குத் தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

9:17 مَا كَانَ لِلْمُشْرِكِيْنَ اَنْ يَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِيْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ بِالـكُفْرِ‌ؕ اُولٰۤٮِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ ۖۚ وَ فِى النَّارِ هُمْ خٰلِدُوْنَ‏
9:18 اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ‌ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ‏9:19 اَجَعَلْتُمْ سِقَايَةَ الْحَـآجِّ وَعِمَارَةَ الْمَسْجِدِ الْحَـرَامِ كَمَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَجَاهَدَ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ لَا يَسْتَوٗنَ عِنْدَ اللّٰهِ ‌ؕ وَ اللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‌ۘ‏

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும். அல்லாஹ் வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடு வோரைப் போல் ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரைக் கருது கிறீர்களா? அவர்கள் அல்லாஹ் விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 9:17-19)

பாவ மன்னிப்புத் தேடுதல்

இணை கற்பிப்பவர்கள் இறந்து விட்டால் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவதற்கும் அல்லாஹ் தடை விதித்து விட்டான்.

9:113 مَا كَانَ لِلنَّبِىِّ وَالَّذِيْنَ اٰمَنُوْاۤ اَنْ يَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِيْنَ وَ لَوْ كَانُوْۤا اُولِىْ قُرْبٰى مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِيْمِ‏

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண் டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

(அல்குர்ஆன்: 9:113)

இந்த வசனத்தின் மொழி பெயர்ப்பை நாம் இங்கு இடம் பெறச் செய்துள்ளோம். இந்த வசனம் இறங்கிய காரணங்கள், பின்னணிகள் ஆகியவற்றைப் பார்ப்போம். அந்தக் காரணமும், பின்னணியும் இதன் கருத்தை நம் உள்ளத்தில் பதிய வைக்கத் துணையாக அமையும்.

(நபியவர்களுடைய பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூ ஜஹ்லையும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யா பின் முஃகீராவையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “என் பெரிய தந்தையே! லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதி மொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்” என்று சொன்னார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் “அபூ தாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதி மொழியைக் கூறும்படி அவர்களை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க் கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அபூ தாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, “நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருக்கிறேன்” என்பதாகவே இருந்தது. லா இலாஹ இல்லல்லாஹ் எனும் உறுதி மொழியைச் சொல்ல அவர் மறுத்து விட்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும் வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருப்பேன்” என்று சொன்னார்கள். அப்போது தான், இணை வைப்போருக்காகப் பாவ மன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லை எனும் (அல்குர்ஆன்: 9:113)வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்திய போது) அல்லாஹ், நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான் எனும் (அல்குர்ஆன்: 28:56)வது) வசனத்தை அருளினான்.

(புகாரி: 4772)

இணை வைப்பில் இறந்தவர் களுக்கு முஸ்லிம்கள் பாவ மன்னிப்புத் தேடக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் ஐயத்திற்கிடமின்றி மிகத் தெளிவாக விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் தமது தாயாரின் கப்ரைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள் தாமும் அழுது, தம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அழ வைத்து விட்டார்கள். என்னுடைய தாய்க்குப் பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ்விடம் நான் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி தரப் படவில்லை. எனது தாயின் கப்ரைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஏனெனில் அது மரணத்தை நினைவூட்டுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 1622)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கே, அவர்களது தாயாருக் காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு அனுமதி கிடையாது எனும் போது ஷிர்க் (இணை) வைத்து விட்டு இறந்த மற்றவர்களுக்கு எந்த ஒரு முஸ்லிமும் பாவ மன்னிப்புக் கேட்க அனுமதியில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

ஜனாஸா தொழுகை

இணை வைப்பில் இறந்து போனவர்களுக்கு நாம் பாவ மன்னிப்புத் தேட முடியாது என்றாகி விடுகின்றது. ஒரு முஸ்லிம் இறந்தவுடன் நாம் தொழுகின்ற ஜனாஸா தொழுகை தான் நாம் அவருக்காகச் செய்யக் கூடிய தலையாய பாவ மன்னிப்புத் தேடுதலாகும். எனவே ஜனாஸா தொழுகை என்ற இந்தப் பாவ மன்னிப்புப் பிரார்த்தனையை, முஷ்ரிக்குக்காக அதாவது இணை வைத்த நிலையில் இறந்தவருக்காக நாம் செய்ய முடியாது. இதற்குப் பின்வரும் வசனங்களும் வலுவூட்டுபவையாக அமைந்துள்ளன.

9:80 اِسْتَغْفِرْ لَهُمْ اَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْؕ اِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِيْنَ مَرَّةً فَلَنْ يَّغْفِرَ اللّٰهُ لَهُمْ‌ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ

(முஹம்மதே!) அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 9:80)

9:84 وَلَا تُصَلِّ عَلٰٓى اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰى قَبْرِهٖ ؕ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ‏

அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ் வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர். குற்றம் புரிவோராகவே மரணித்தனர்.

(அல்குர்ஆன்: 9:84)

நாம் மேலே பட்டியலிட்ட விஷயங்களில் பள்ளிவாசல் நிர்வாகம் என்பது ஏகத்துவ வாதிகளை நேரடியாகப் பாதித்து விடுவதில்லை. ஆனால் திருமணம், மரணம் போன்ற விஷயங்கள் ஒவ்வொரு ஏகத்துவ வாதியையும் நேரடியாகப் பாதிக்க வைப்பவையாகும்.

இணை வைப்போரைப் புறக்கணித்தல்

9:23 يٰۤاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْۤا اٰبَآءَكُمْ وَاِخْوَانَـكُمْ اَوْلِيَآءَ اِنِ اسْتَحَبُّوا الْـكُفْرَ عَلَى الْاِيْمَانِ‌ ؕ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاُولٰۤٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏
9:24 قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பெற்றோரும், உங்களின் உடன் பிறந்தோரும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும் புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்கு வோரே அநீதி இழைத்தவர்கள். உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன் பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத் தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 9:23-24)

6:106 اِتَّبِعْ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ‌‌ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ‏

(முஹம்மதே!) உமது இறைவனிட மிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

(அல்குர்ஆன்: 6:106)

15:94 فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَ اَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ‏

உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப் போரைப் புறக்கணிப்பீராக!

(அல்குர்ஆன்: 15:94)

இன்றைய முஸ்லிம்கள் மறுமையை, வேதத்தை, இறைத் தூதர்களை நம்புகிறார்கள். ஐந்து வேளை தொழுகின்றார்கள்; நோன்பு நோற்கிறார்கள்; ஹஜ் செய்கிறார்கள்; ஜகாத் கொடுக்கிறார்கள். எனவே இவர்களை எப்படி முஷ்ரிக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்? என்று நினைக்கிறார்கள். அதனால் தான் இவர்களைப் பின்பற்றித் தொழலாம் என்ற வாதத்தை வைக்கின்றார்கள். இப்படிச் சொல்பவர்கள் அல்லாஹ்வின் வசனத்தை வசதியாக மறந்து விடுகின்றார்கள்.

12:106 وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ‏

 

அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.

(அல்குர்ஆன்: 12:106)

அல்லாஹ்வை நம்பிய ஒருவன் இணை கற்பித்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதைத் தான் இந்த வசனம் காட்டுகின்றது.