அறிவியல் பார்வையில் இஸ்லாமும் தூய்மையும்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இன்றைய உலகம் அறிவியல் முன்னேற்றத்திற்கு பஞ்சமில்லாமலும், அதே நேரத்தில் பலவிதமான நோய்களுக்கும் பஞ்சமில்லாமல் மாறிவிட்டது. வருடத்திற்கு ஒரு நோய் பிரபலமாகி கொண்டே வருகிறது. ஒரு வருடத்தில் சார்ஸ் இன்னொரு வருடத்தில் பறவைக் காய்ச்சல் இப்பொழுது பன்றிக் காய்ச்சல் என்று அச்சுறுத்திவருகிறது…

அதிலும் குறிப்பாக உலக அளவில் தூய்மையில் முதலிடத்தை பிடிக்கும் சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள்தான் இந்நோயின் பிறப்பிடமாக உள்ளன. அந்நாடுகளிலிருந்துதான் பிற நாடுகளுக்கு அந்நோய்களும் விமானங்கள், கப்பல்கள் வழியாக இறக்குமதியும் செய்யப்படுகின்றன.

இந்நேரத்தில் நம்முடைய மனதில் ஒரு நியாயமான கேள்வி எழலாம். அந்நாடுகள் உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாடுகளாகவும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் முன்னேற்றம் பெற்றவையாகவும் உள்ளனவே! இதை வைத்து கொண்டு மிகத் தூய்மையாகவும், நோய் தடுப்பு முறைகளை மேற்கொண்டிருக்கலாமே? இது ஏறக்குறைய உண்மையான கருத்துதான்.

ஆனால் நோய் வந்த பின் அதற்கான மருத்துவமும் மருந்தும் எடுத்து கொள்கிறார்களே தவிர அதற்கான நோய் தடுப்பு முறைகளையும் சரியான தூய்மையையும் அறியாதவர்களாகத்தான் இன்றைய அறிவியல் முன்னேற்றமடைந்தவர்களை காண முடிகிறது.

ஆனால் 1400 வருடங்களுக்கு முன் எந்த நவீன வளர்ச்சியுமடையாத இருண்ட காலத்தில், இஸ்லாம் நவீனவாதிகளுக்கு தூய்மையையும் நோய் தடுப்பு முறைகளையும் பாடமாக கற்றுத் தருகிறது. அதிலும் இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கமாக இருப்பதால் தூய்மையை கண்மூடித்தனமாக போதிக்காமல் இன்றைய விஞ்ஞானி உயர் தொழில்நுட்ப அறிவியல் சாதனங்களை வைத்து கொண்டு பல வருடங்களாக ஆய்வு செய்து ஒரு நோய்க்கான காரணிகளையும் அதன் தடுப்பு முறையான தூய்மையின் அவசியத்தை எவ்வாறு கூறுவானோ அதை போன்று கூறுகிறது.

ஆரம்ப கால கட்டளை

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்து சொல்லுமாறு கட்டளையிட்டபோது முதலில் அவர்களுக்கு சொன்ன கட்டளை…

وَثِيَابَكَ فَطَهِّرْ
وَالرُّجْزَ فَاهْجُرْ

உன் ஆடையை தூய்மைப்படுத்துவீராக. அசுத்தத்தை வெறுப்பீராக.

(அல்குர்ஆன்: 74:4,5)

இஸ்லாத்தில் ஆரம்ப போதனைகளில் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற கட்டளையும் இருந்தது என்பதை நம்மால் விளங்க முடிகிறது. இன்னும் இஸ்லாம் இறைவனை நம்புகின்ற நம்பிக்கையில் ஒரு பகுதியாகவே தூய்மையை கூறுகிறது.

عَنْ أَبِى مَالِكٍ الأَشْعَرِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
الطُّهُورُ شَطْرُ الإِيمَانِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தூய்மை என்பது இறை நம்பிக்கையில் பாதி.

அறி: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)
நூல்: (முஸ்லிம்: 381) 

இஸ்லாத்தில் இறைவனை வணங்குவதற்கு அடையாளமான தொழுகைக்கு கூட தூய்மை அவசியம் என்று இஸ்லாம் கூறுகிறது. இல்லையென்றால் அந்த வணக்கம் கூட ஏற்றுக் கொள்ளப்படாது.

لاَ تُقْبَلُ صَلاَةٌ بِغَيْرِ طُهُورٍ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தூய்மையில்லாமல் தொழுகை இல்லை.

அறி: இப்னு உமர் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 382) 

இவ்வாறு எந்த ஒரு கட்டத்திலும் இஸ்லாம் தூய்மையை போதிக்காமல் இருந்ததில்லை. ஒரு முஸ்லிமுக்கு தூய்மை அவசியம் என்பதை இவைகளின் மூலமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இஸ்லாம் ஒரு மனிதன் தூங்கி எழுந்ததிலிருந்தே தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ فَلْيُفْرِغْ عَلَى يَدِهِ ثَلَاثَ مَرَّاتٍ قَبْلَ أَنْ يُدْخِلَ يَدَهُ فِي إِنَائِهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தூங்கி விழித்தெழுந்தால் மூன்று முறை தன் கையை கழுவுகின்றவரை பாத்திரத்தில் கையை நுழைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 468) 

இந்த உலகில் கண்ணுக்கு தெரிந்த உயிரினங்களைப்போல கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும் உள்ளன. அவைகளில் சில நமக்கு நன்மை தரக்கூடியன. பெரும்பலானவை நமக்கு தீங்கு விளைவிப்பவைகள். இவைகளை நாம் சாதாரண கண்களால் பார்க்க முடியாது. அவைகளை பெரிதுபடுத்திக் காட்டக்கூடிய நுண்ணோக்கிகளால் மட்டுமே காண முடி யும்.

அவைகள் நீரிலும் நிலத்திலும் அசுத்தமான இடங்களிலும், ஏன் நம்முடைய உடலில் கூட வாழக்கூடியன. இன்னும் நம் உடல் தான், அவைகள் வளர்வதற்கு ஏற்ற இடமாகவும் அதற்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்குமிடமாகவும் உள்ளது. இவ்வாறு அவைகள் நம் உடலில் வாழ்ந்தால் பல விதமான நோய்களுக்கும் நம்முடைய உடல் உறுப்புகளின் கோளாறுகளுக்கும் வழி வகுக்கிறது. இன்னும் நமது உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நுண் கிருமிகள் தொற்றுவதற்கு முதல் காரணம் நம்முடைய இரண்டு கைகள்தான். இதன் வழியாக தான் எல்லாவிதமான கிருமிகளும் தொற்றுகின்றன. இதனால் தான் இன்றைக்கு பன்றிக் காய்ச்சல் பற்றிய அரசின் எச்சரிக்கை அறிக்கையில் அது வரமால் தடுக்க வெளியே சென்று வந்தால் இரண்டு கைகளையும் நன்கு கழுவ வேண்டும் என்று கட்டளையை போடுகிறது.

கண் முண்ணே ஆதாரம்

”இன்னும் அமெரிக்காவில் ஒருவருக்கு மூளையில் ஒருவகையான நுண் கிருமி உருவாக்கிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது அவருடைய உயிருக்கே மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கக் கூடியதாக மாறி கடைசியில் அந்த நுண் கிருமியை அகற்ற முடியாது எனவும் அவர் ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறி விட்டனர்.

இதற்கான காரணத்தை உயிரியில் ஆய்வாளர்களும் மருத்துவர்களும் விளக்கும்போது இது கைகளை சரியாக கழுவாமல் தூய்மையின்றி குடிப்பதாலோ உண்பதாலோ இந்த நோய்கிருமிகள் கைகள் வழியாக பரவி மூளைக்கு செல்லக்கூடியது என்று கண்டுபிடித்துள்ளனர்” 

(ஆதாரம் : மான்ஸ்டர்ஸ் இன்ஸைட் மீ டிஸ்கவரி சேனல்)

இவ்வளவு பிரச்சினைகளை உருவாக்கும் இந்ந நோய் கிருமிகள் பல்வேறு அறிவியல் ஆய்வுகள் நடத்தித்தான் இந்த காலத்தில் சொல்ல முடிகிறது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பாக எந்த அறிவியல் வளர்ச்சியும் அடையாத காலகட்டத்தில் கண்ணுக்கு தெரியாத பொருட்களை பன்மடங்கு பெரிதுபடுத்தி பார்க்கக்கூடிய நுண்ணோக்கிகள் இல்லாத காலத்தில் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராக இருப்பதால் மட்டுமே கூறியிருக்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் தூங்கி எழுந்ததிலிருந்தே தூய்மையாகவும் நோய்கள் தாக்காமல் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் இன்னொரு கட்டளையையும் இஸ்லாம் இடுகிறது.

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ
«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَلْيَسْتَنْثِرْ ثَلاَثَ مَرَّاتٍ فَإِنَّ الشَّيْطَانَ يَبِيتُ عَلَى خَيَاشِيمِهِ».

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
”உங்களில் ஒருவர் தூங்கி எழுந்தால் அவருடைய மூக்கில் மூன்று முறை தண்ணீரை செலுத்தி அதை சிந்தட்டும். ஏனென்றால் ஷைத்தான் அவருடைய மூக்குத் துவாரத்தில் இருக்கிறான்.”

அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 403) 

இவ்வாறு காலையில் மட்டுமல்லாமல் இறைவனை வணங்குவதற்காக உளூ என்ற தூய்மையை செய்யும்போது மூக்கை சுத்தம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி கூறுகிறார்கள்.

إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَسْتَنْشِقْ بِمَنْخِرَيْهِ مِنَ الْمَاءِ ثُمَّ لِيَنْتَثِرْ

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
உங்களில் ஒருவர் உளூ செய்தால் அவர் மூன்று முறை மூக்கை சுத்தம் செய்யட்டும்.

அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 401) 

அது மட்டுமல்லாமல் ஒரு நாளில் 5 தடவைகள் தொழுகைக்கு செல்லும்போதும் அதற்கென்ற பிரத்தியோக தூய்மைகளையும் இஸ்லாம் கூறுகிறது.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ‌ ؕ

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் தொழுகைக்கு தயாரானால் உங்கள் முகங்களையும் கைகளை முழங்கை வரைக்கும் கழுவிக் கொள்ளுங்கள். உங்களுடைய தலைகளை நீரால் தடவுங்கள். உங்கள் கால்களை கரண்டை வரை கழுவிக் கொள்ளுங்கள்.

(அல்குர்ஆன்: 5:6)

இவை தவிர உடலிலுள்ள மற்ற உறுப்புகளையும் தூய்மைபடுத்தவும் இஸ்லாம் கட்டளையிடுகிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِلَّهِ تَعَالَى
عَلَى كُلِّ مُسْلِمٍ حَقٌّ أَنْ يَغْتَسِلَ فِي كُلِّ سَبْعَةِ أَيَّامٍ يَوْمًا.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாரத்தில் ஒரு நாளாவது தன் தலையும் உடலின் மற்ற பகுதிகளையும் கழுவுவது ஒரு முஸ்லிம் மீது கடமை.

அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 898) 

இஸ்லாம் சொல்லக்கூடிய தூய்மை முறைகளையும் நோய் தடுப்பு முறைகளையும் பல ஆண்டுகள் ஆய்வு செய்து 1981, 1982, 1986 ஆகிய ஆண்டுகளில் குவைத்தில் இஸ்லாமிய மருத்துவ மாநாடு நடந்தது. அதில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகள் மருத்துவ உலகை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. அந்த ஆய்வு முடிவுகள் இதோ:

உளுவில் வாய் கொப்பளிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஒரு நாளைக்கு ஐவேளையிலும் தொழுகைக்காக உளுச்செய்யும் போது வாய் கொப்பளிக்கிறோம். இது வாயில் உள்ள கணக்கற்ற நுண் கிருமிகளை அகற்றுகிறது. வாயில் இருக்கக் கூடிய அந்த கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகளின் வகைகளே 500 யை தாண்டிவிடும். வாயில் ஒரு மில்லி மீட்டருக்கு சுமார் 1 கோடி நுண் கிருமிகள் உள்ளன. அவைகள் கண்ணுக்கு தெரியாத புஞ்சை நுண்கிருமி வகைகளும் அதன் லார்வா முட்டைகளுமாக உள்ளன. அவைகள் பற்களுக்கிடையேயுள்ள உணவுத் துகள்களை சாப்பிடுகிறது. இன்னும் பலவிதமான அந்த உணவுத் துகள்களின் மூலம் அதிக எண்ணிக்கையில் அமிலங்கள் சுரப்பதால் இவ்வகையான கிருமிகள் வளர்வதற்கு காரணமாக அமைகின்றன. இவைகள் வாய்க்கும் பற்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாம் வாய் கொப்பளிப்பதால் எண்ணற்ற நுண்கிருமிகள் அகற்றப்படுகின்றன.

பல் துலக்குதல்

இஸ்லாம் பல் துலக்குவதற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்குகிறது.

السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பல் துலக்குவது வாய்க்கு சுத்தத்தையும், இறைவனிடத்தில் பொருத்தத்தையும் பெற்றுத் தருகிறது.

அறி: ஆயிஷா (ரலி)
நூல்: (நஸாயீ: 5) 

لَوْلا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي، لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னுடைய சமுதாயத்திற்கு சிரமம் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின்போதும் பல் துலக்குவதை கடமையாக்கியிருப்பேன்.

அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (அஹ்மத்: 607) , 8827

பல் துலக்குவதால் ஏற்படும் நன்மைகள்

பிரவ்ன் ஜாக்கப் என்ற உயிரியல் ஆய்வாளர் 1979 ஆம் ஆண்டு சில ஆய்வறிக்கைகளை வெளியிடுகிறார்.

அவைகள் பின்வருமாறு :
மனித வாய் பகுதியில் நோய் ஏற்படுத்தக்கூடிய நுண்கிருமிகள் உள்ளன. அவைகளில் முக்கியமானது ஸ்டரப்டோகோக்கி என்ற பாக்டீரியாக்கள். இவை 5 வயது முதல் 15 வரை உள்ளவர்களுக்கு ருமெட்டிக் என்ற காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இந்த காய்ச்சல் பல வாரங்களாகவும் மாதங்களாகவும் நீடிக்கிறது. பல் துலக்குவதால் இந்த கிருமிகள் வெளியேற்றபடுகின்றன.

மீதமுள்ள உணவுப் பொருட்கள் நீக்கப்பட்டு பற்களின் மஞ்சள் தன்மையை நீக்கி பிரகாசமாக்குகிறது. பற்களின் ஈறுகளில் உள்ள காயங்களை அகற்றுகிறது. கிருமிகள் வளருவதை தடுக்கிறது.

மூக்கை சுத்தம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

மூக்கை சுத்தம் செய்வதால் பல்வேறு விதமான நன்மைகள் உள்ளன. மூக்கின் உட்பகுதியில் மறைந்திருக்கும் அதிகமான நுண் துகள்களையும் தூசுகளையும் வெளியேற்றுகிறது. அவைகளில் சில காற்றில் பரவக்கூடிய புஞ்சை கிருமிகளின் விதைகளும் கேடு விளைவிக்கும் கிருமிகளாகவும் உள்ளன.

இன்னும் அவைகளில் ஸ்டபிலோகோகஸ் என்ற பாக்டீரியாவும் உள்ளன. அவைகள் மனிதனுக்கு பல விதமான தோல்நோய்களையும், நுரையீரல் வீக்கம், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களையும் உருவாக்குகிறது. ஒரு நாளைக்கு ஐந்து வேளையும் சுத்தம் செய்வதால் இந்த பயங்கரமான கிருமிகள் வெளியேற்றபடுகின்றன.

குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்

தூய்மையின் உச்சகட்டம் நம் உடல் முழுவதும் தண்ணீரால் தேய்த்து குளிப்பதாகும். இதனால் நாம் பல்வேறு விதமான நோய்களிலிருந்து பாதுகாப்பு அடையமுடிகிறது.

மனித உடல் பல்வேறு பாக்டீரியாக்களுக்கும், பூஞ்சை கிருமிகளுக்கும் புகலிடமாக உள்ளது. அவைகள் மனித உடலின் ஒரு சென்டி மீட்டர் பரப்பளவுக்கு பத்தாயிரம் கிருமிகள் முதல் ஒரு இலட்சம்வரை காணப்படுகின்றன. ஈரத்தன்மையுள்ள கழுத்து அக்குள் போன்ற இடங்களில் 2 சென்டி மீட்டருக்கு 10 இலட்சம் முதல் 50 இலட்சம்வரை உள்ளன. நாம் தேய்த்து குளிப்பதனால் 90 சதவீதம் நுண் கிருமிகள் வெளியேற்றப்படுகின்றன.

நோய்கள் பரவாமல் தடுக்க இந்த கண்டுபிடிப்புகளும், பல கருவிகளும் விஞ்ஞான வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் பல ஆண்டுகள் கழித்தே கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இஸ்லாம் இறைவனின் மார்க்கமாக இருப்பதால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தூய்மை முறைகளை கூறிவிட்டது.

இறைவனிடத்தில் நன் மக்களாய் நம் அனைவரும் இருப்போமாக.! அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.!

தவிர்த்துக் கொள்ளுங்கள் அசுத்தம். எஃப். அர்ஷத் அலீ