27) தவறு செய்யும் போது கண்டிக்க வேண்டும்

நூல்கள்: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

பிள்ளைகள் மேல் வைத்துள்ள பாசத்தினால் அவர்கள் தவறு செய்யும் போது கண்டிக்காமல் இருந்துவிடக்கூடாது. பெரும்பாலான குழந்தைகள் கெட்டுச் சீரழிந்ததற்கு பெற்றோர்களின் அளவுகடந்த பாசம் தான் காரணம். பிள்ளைகளை கண்டிப்பதன் மூலம் அவர்களுக்கு நன்மைத் தான் செய்கிறோம் என்பதை பெற்றொர்கள் கவனத்தில் வைக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும்.

 (அல்குர்ஆன்:)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.

அறி : இப்னு உமர் (ரலி),

நூல் : புகாரி (2409)

பெற்றோர்களின் அலட்சியப்போக்கினால் பிள்ளைகள் தவறானப் பாதைக்குச் சென்றால் மறுமையில் பெற்றோர்களுக்கு எதிராக பிள்ளைகளே அல்லாஹ்விடத்தில் வாதிடுவார்கள். இருமடங்கு அவர்களுக்குத் தண்டனைத் தருமாறு இறைவனிடம் கேட்பார்கள். இப்படிப்பட்ட மோசமான நிலைக்கு நாமும் நமது பிள்ளைகளும் சென்றுவிடக்கூடாது என்றால் பிள்ளைகளை இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்க வேண்டும்.

“எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்” எனவும் கூறுவார்கள். “எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!” எனவும் கூறுவார்கள்.

 (அல்குர்ஆன்:)

சிறுவர்கள் மார்க்கம் தடுத்தக் காரியங்களைச் செய்யும் போது சிறுவர்கள் தானே என்று பெற்றோர்கள் கண்டும் காணாமல் செல்கிறார்கள். இது தவறாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வார்கள்.

ஆரம்பித்திலிருந்தே தூய இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்கும் போது இஸ்லாம் என்ற ஒளி அவர்களின் சொல் செயல்பாடு ஆகியவற்றில் கலந்துவிடுகிறது. இளைஞர்களாக மாறினாலும் சிறுவயதில் கற்றுக்கொடுக்கப்பட்ட நல்ல பழக்கவழக்கங்கள் அவர்களிடத்தில் தொடர்ந்து நீடித்திருக்கும்.

தன் பேரக்குழந்தைகளில் ஒருவர் தவறு செய்ய முற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரரைத் தடுத்ததோடு அவருக்கு நல்லுபதேசமும் செய்தார்கள்.

மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு “முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?” எனக் கேட்டார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (1485)