தவறுகளை நியாயப்படுத்தாதீர்!
அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
அகில உலகத்தையும் படைத்திருக்கின்ற இறைவன் இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்களைப் பல்கிப் பெருகச் செய்திருக்கின்றான். தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டியாகவும், பின்பற்ற வேண்டிய வழிமுறையாகவும் திருக்குர்ஆன் என்ற மகத்தான பேரருட்கொடையை இறைவன் வழங்கியிருக்கின்றான்.
இந்தப் பேரருட்கொடையின் மூலம் உலக மாந்தர்கள் அனைவரும் அதிகமான படிப்பினைகளையும், பாடங்களையும், வாழ்க்கை வழிகாட்டுதல்களையும் பெற முடியும்.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் திருக்குர்ஆனின் அறிவுரைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால் நாம் செய்து கொண்டிருக்கின்ற ஏராளமான தவறுகளிலிருந்தும், பாவமான காரியங்களிலிருந்தும் விடுபட்டுத் திருந்தி வாழ முடியும்.
பெரும்பாலான மனிதர்களிடத்தில் இருக்கின்ற மிகப் பெரிய அலட்சியப் போக்கு என்னவென்றால், சொல்லப்படுகின்ற உபதேசங்களை, அறிவுரைகளை தங்களின் உள்ளங்களில் ஆழப்பதிய வைக்காமல் வெறுமனே காதுகளால் செவிமடுத்துவிட்டு அப்படியே காற்றிலே பறக்கவிட்டு விடுவதைப் பார்க்கின்றோம்.
எத்தனையோ உபதேசங்களின் மூலமாக ஒவ்வொரு நாளும் நாம் அறிவுறுத்தப்படுகின்றோம். ஆனால் நாம் படிக்கின்ற, செவிமடுக்கின்ற அத்தகைய உபதேசங்கள், அறிவுரைகள், போதனைகள் நம்முடைய உள்ளங்களைத் தட்டி எழுப்பி, நாம் செய்து கொண்டிருக்கின்ற தவறான காரியங்களிலிருந்தும், பாவமான செயல்களிலிருந்தும், அட்டூழியங்களிலிருந்தும், அழிச்சாட்டியங்களிலிருந்தும் நம்மை மீட்டெடுக்கின்றதா? என்று நம்மை நாம் சுய பரிசோதனை செய்யக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர், செய்த தவறுகளிலிருந்து நம்மை மாற்றிக் கொள்வதற்கும், திருத்திக் கொள்வதற்கும் தயங்கிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் சொல்வதாக இருந்தால் நாம் செய்தது, செய்து கொண்டிருப்பது தவறே இல்லை என்ற மனப்போக்கில் விடாப்பிடியாய் நின்று கொண்டு, செய்த தவறை நியாயப்படுத்துவதைப் பார்க்கின்றோம்.
இதுபோன்ற ஏராளமான பாவங்கள், தவறுகள் உதாரணமாக விபச்சாரம், மோசடி, கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள், லஞ்சம், திருட்டு போன்ற பல்வேறு பாவமான காரியங்களைச் செய்து வருகின்றோம். இந்த இழிசெயல்களைச் செய்வது தவறு தான் என்று தெரிந்து கொண்டே இந்தப் பாவங்களை திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கின்றோம்.
இந்தப் பாவங்களை விட்டு நம்மை நாம் தற்காத்துக் கொள்ள திருக்குர்ஆன் அற்புதமான, அழகான போதனையை அழுத்தந்திருத்தமாகவும், ஆணித்தரமாகவும் நம்முடைய உள்ளங்களில் ஆழப்பதிய வைக்கின்றது. திருக்குர்ஆன் கூறும் போதனைகளில் சிலவற்றை இந்த உரையில் காண்போம்..
எந்த ஒரு சமுதாயமும், தனி மனிதரும் தன்னிடத்தில் இருக்கின்ற பாவம் செய்கின்ற குணநலன்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு தன்னிடத்தில் இருக்கின்ற தன்மைகளை மாற்றாத வரைக்கும் அல்லாஹ் அவர்களின் குணங்களை மாற்றவே மாட்டான் என்றும் இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான். மேலும், தங்களைத் தாங்களே திருத்திக் கொண்டால் மட்டும் தான் அவர்களுக்கு ஏற்படுகின்ற தீங்கிலிருந்தும், இழிவுகளிலிருந்தும் அவர்களை அல்லாஹ் பாதுகாப்பான் என்றும் அறிவுரை பகர்கின்றான்.
எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும்போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.
இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர் அல்லாஹ்வின் அருளை எண்ணி நாம் செய்கின்ற தவறுகளிலிருந்து திருந்தி வாழ்வதற்கோ, அந்தத் தவறை நன்மைகளாக மாற்றுவதற்கோ முயற்சி செய்வதில்லை. மாறாக நாம் செய்த தவறை நியாயப்படுத்துதலிலேயே ஈடுபடுகின்றோம். அதற்காக எத்தனை பெரிய சிரமம் ஏற்பட்டாலும், எதிர்ப்புகள் வந்தாலும் நாம் செய்த தவறைக் கண்டுகொள்ளாமல் இதுவெல்லாம் ஒரு தவறா? என்று எண்ணி அந்தப் பாவத்தை அலட்சியப்படுத்துகின்றோம்.
நாம் செய்த தவறை மாற்றிக்கொள்ளாத வரை அல்லாஹ் மாற்ற மாட்டான் என்று இருக்கும் போது, ஒரு தவறு செய்து விட்டால் அப்படியே இறைவனிடத்தில் சரணடைந்து கண்ணீர் விட்டுக் கதற வேண்டுமே ஒழிய, அதை விட்டுவிட்டு நம்முடைய பாவத்தை மறைப்பதற்கோ, திசை திருப்புவதற்கோ முயற்சிக்கக்கூடாது.
வேறுவேறு காரணங்களைத் தேடி நாம் செய்த பாவங்களை நியாயப்படுத்துவதிலிருந்து விலகிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
ஒருவர் தவறிழைத்து, தான் செய்த அந்தத் தவறை ஒத்துக்கொண்டு, வாய்மூடி மௌனமாக இருந்து, தன்னைப் படைத்த இறைவனிடத்தில் பாவமன்னிப்புக் கேட்டு, தன்னைத்தானே திருத்திக் கொண்டால், கெட்ட குணநலன்களை மாற்றிக் கொண்டால் அல்லாஹ் அவர் செய்த அந்தப் பாவத்தை நன்மைகளாக மாற்றுவான்.
மேலும் தான் செய்த பாவத்தை நியாயப்படுத்துவதற்காக வீண் விவாதங்களோ, சண்டை சச்சரவுகளோ செய்து கொண்டிருக்காமல் அதிகமான நல்லறங்கள் செய்து முழுமையாக அல்லாஹ்விடத்தில் திருந்தி தன்னை ஒப்படைத்து விட வேண்டும் என்றும் இறைவன் அறிவுரை கூறுகின்றான்.
திருந்தி, நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரைத் தவிர. அவர்களது தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
திருந்தி, நல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார்.
ஒரு மனிதர் திருந்தி நல்லறங்கள் செய்ய ஆரம்பித்து விட்டாலே அவர் இறைவனை நோக்கித் திரும்புகின்ற பாதப்படிகளை எடுத்து வைக்க ஆரம்பிக்கின்றார். மேலும், நான் திருந்திவிட்டேன். நான் நல்லவனாக மாறிவிட்டேன் என்று ஊர் ஊராக தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பதை விட, நான் திருந்தி விட்டேனா? இல்லையா? என்று என்னுடைய இறைவனுக்குத் தெரியும். உலக மாந்தர்கள் வேறு யாருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணி, நான் திருந்தி அவனை நோக்கி முற்றிலும் திரும்ப ஆரம்பித்து விட்டேன் என்று உள்ளத்தளவில் அமைதி காத்து பொறுமையாக இருக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
ஒரு மனிதர் பாவம் செய்துவிட்டு, அந்தப் பாவத்திற்காக வருந்தி, திருந்தி வாய்மூடி மௌனியாக இருந்து, அதற்கான தண்டனையைப் பெற்றுக் கொண்டாலும், அப்படிப்பட்டவருக்கு மகத்தான கண்ணியத்தை இஸ்லாம் வழங்குகின்றது.
இந்தச் செய்தியை ஆழ்ந்து படிக்கின்ற அனைவருக்கும் கண்களிலே கண்ணீர் ததும்பும். ஏனென்றால் இந்த நபித்தோழர், தான் செய்த பாவத்தைத் திசைதிருப்ப முற்படாமல், வீண் விவாதங்களில் ஈடுபடாமல், பாவத்தை மறைப்பதற்குப் பல்வேறு விதமாக யுக்திகளைக் கையாளாமல், பழிப்போரின் பழிச்சொல்லுக்கு அஞ்சாமல் தன்னைத்தானே மாற்றிக் கொண்டு அதற்கான கடும் தண்டனையையும் அனுபவிக்கின்றார்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாஇஸ் பின் மாலிக் எனப்படும் அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் மானக்கேடான ஒரு செயலைச் செய்து விட்டேன். ஆகவே, எனக்குத் தண்டனையை நிலைநாட்டுங்கள்’’ என்று கூறினார். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலமுறை திருப்பி அனுப்பினார்கள்.
பிறகு அவருடைய குலத்தாரிடம் விசாரித்தார்கள். அதற்கு அம்மக்கள், “அவரைப் பற்றித் தவறாக எதையும் நாங்கள் அறியவில்லை. ஆயினும், அவர் ஒரு செயலைச் செய்துவிட்டு, “தம்மீது தண்டனை நிறைவேற்றப்பட்டால் தவிர அக்குற்றத்திலிருந்து தம்மால் வெளியேற முடியாது என்று கருதுகிறார்’’ என்று கூறினர்.
பிறகு மாஇஸ் (ரலி) அவர்கள் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவருக்குக் கல்லெறி தண்டனையை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நாங்கள் அவரை ‘பகீஉல் ஃகர்கத்’ பொது மைய வாடிக்கு அழைத்துச் சென்றோம். (கல்லெறியும்போது தப்பி ஓடாமலிருப்பதற்காக) அவரை நாங்கள் கட்டி வைக்கவுமில்லை. (அவரை நிறுத்துவதற்காக) நாங்கள் குழியும் தோண்டவில்லை.
அவரை எலும்பு, மண் கட்டி, சுட்ட செங்கல் ஆகியவற்றால் அடித்தோம். அடி தாங்க முடியாமல் அவர் ஓடினார். அவருக்குப் பின்னால் நாங்களும் ஓடினோம். இறுதியில் அவர் (பாறைகள் நிறைந்த) ‘அல்ஹர்ரா’ என்ற பகுதியின் முனைக்குச் சென்று எங்களுக்காக நிமிர்ந்து நின்றார். நாங்கள் அவர் மீது ‘ஹர்ரா’வின் பெருங்கற்களை எறிந்தோம். அவர் அமைதியாகி விட்டார்.
ஆதாரம்: (முஸ்லிம்: 3497)
…பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது மக்கள் வந்து, சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) “மாஇஸ் பின் மாலிக்குக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்’’ என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ், மாஇஸ் பின் மாலிக்கின் பிழையைப் பொறுப்பானாக!’’ என்று வேண்டினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரினார். அது ஒரு சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாகும்’’ என்று கூறினார்கள்…
ஆதாரம்: (முஸ்லிம்: 3499)
ஒரு நபித்தோழர் தவறிழைத்துவிட்டு, தான் செய்த தவறை நியாயப்படுத்தாமலும், மறைத்து விடாமலும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய தவறை ஒத்துக்கொண்டு தனக்குரிய தண்டனையைத் தர வேண்டும் என்று அடம்பிடிக்கின்றார்.
இன்றைய காலகட்டத்தில் நாம் ஒரு தவறைச் செய்துவிட்டால் பிறர் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே அல்லது கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பிறகே நாம் செய்த அந்தத் தவறு வெளியே வருகின்றது. ஆனால் மாயிஸ் (ரலி) அவர்கள் தான் செய்த தவறை, தானே முன் வந்து நபி (ஸல்) அவர்களிடம் வந்து பிரகடனப்படுத்துகின்றார்.
இன்னும் சொல்வதாக இருந்தால் தன்னைச் சுற்றி இருக்கின்ற மனிதர்கள் தன்னைப் பற்றித் தவறாகப் பேசுவார்களே, கேவலமாக நினைப்பார்களே, இத்தனை காலம் நல்லவன் மாதிரி வேடம் போட்டாயா? என்று கேட்பார்களே என்றெல்லாம் எண்ணி மாயிஸ் அவர்கள் தவறை நியாயப்படுத்தவில்லை. தான் மாறாத வரை அல்லாஹ் நம்மை மாற்ற மாட்டான் என்ற ஒரே ஒரு அடிப்படையை உள்ளத்தில் ஆழப்பதிய வைத்தவராகத் தான் செய்த தவறை நன்மையாக மாற்றுவதற்குப் போராடுகின்றார்.
ஊர் முழுக்க சேர்ந்து கல்லால் ஓட ஓட விரட்டிப் பிடித்து அடிக்கின்றார்கள். வேதனையின் உச்சத்திலே இருந்த நேரத்தில் கூட அந்த மாயிஸ் (ரலி) அவர்கள் வாய் திறந்திருப்பாரா? நீங்களெல்லாம் யோக்கியர்களா? நல்லவர்களா? என்று கேட்டாரா? அல்லது தவறை நியாயப்படுத்த பல்வேறு காரணங்கள் கூறி திசை திருப்பினாரா? வீண் விவாதங்களில் ஈடுபட்டாரா? நான் தவறு செய்ததற்கு என்ன சாட்சி இருக்கின்றது என்று கேட்டாரா? என்பதையெல்லாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்!
செய்த தவறை ஒத்துக்கொண்டு அமைதியாக இருந்த காரணத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு ஒரு சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் போதுமானது என்று நபி (ஸல்) அவர்கள் அவரைக் கண்ணியப்படுத்தினார்கள். இப்படி தன்னைத் தானே மாற்றிக்கொண்டு தன்னுடைய தவறை நியாயப்படுத்தாமல், வாய்மூடி மௌனமாக இருந்தவர்களுக்கு இஸ்லாம் மகத்தான கண்ணியத்தை வழங்குகின்றது.
ஒரு மனிதர் தவறிழைத்து விட்டால் எவ்வளவு பழிச்சொல்லுக்கு ஆளானாலும், அவப் பெயர் வந்து தொற்றிக் கொண்டாலும், கேவலப்படுத்தினாலும், அவமானப்படுத்தினாலும் தான் செய்த தவறை நியாயப்படுத்தக் கூடாது. நான் இந்தத் தவறை இப்படித்தான் செய்தேன்! அப்படித்தான் செய்தேன் என்று வீண் விவாதங்களில் ஈடுபடாமல் வாய்மூடி அமைதியாக இருப்பது தான் அவருக்குச் சிறந்தது, பரிசுத்தமானது, கண்ணியம் தரக்கூடியது.
தவறு செய்த ஒரு நபித்தோழர் எவ்வித சஞ்சலத்துக்கும் ஆளாகாமல், பழிப்போரின் பழிச்சொல்லுக்கு அஞ்சாமல் வாய்மூடி மௌனியாக இருந்த அற்புதமான சம்பவம்;
அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் ‘தபூக்’ போரில் கலந்து கொள்ளாமல் தாம் பின்தங்கிவிட்டது குறித்துக் கூறியதை நான் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னை (இஸ்லாம் எனும்) நேர்வழியில் செலுத்திய பிறகு அவன் எனக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை என்னவென்றால், (தபூக் போரில் நான் கலந்து கொள்ளாதது குறித்து வினவியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் (மற்றவர்களைப் போல) பொய்யுரைக்காமல் உண்மை பேசியது தான். அவ்வாறு நான் பொய் சொல்லியிருந்தால் பொய் கூறிய(மற்ற)வர்கள் அழிந்ததைப் போல நானும் அழிந்து போயிருப்பேன்.
ஆதாரம்: (புகாரி: 4673) (ஹதீஸ் சுருக்கம்)
மற்றொரு செய்தியில்,
…(அந்த அறப்போருக்குச் செல்லாமல்) பின்தங்கி விட்டவர்களில் எங்களைத் தவிர வேறெவரிடமும் பேசக் கூடாதென்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கவில்லை.
ஆகவே மக்கள் எங்களிடம் பேசுவதைத் தவிர்த்தனர். இந்த விவகாரம் நீண்டு கொண்டே சென்றது. நானும் இதே நிலையில் இருந்து வந்தேன். (அப்போது) எனக்கிருந்த கவலையெல்லாம், (இதே நிலையில்) நான் இறந்துவிட நபி (ஸல்) அவர்கள் எனக்கு (ஜனாஸா)த் தொழுவிக்காமல் இருந்து விடுவார்களோ! அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட மக்கள் மத்தியில் இதே நிலையில் நான் இருக்க, அவர்களில் யாரும் என்னிடம் பேசாமலும் (நான் இறந்து போனால்) எனக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்தப்படாமலும் போய்விடுமோ என்பதுதான்.
அப்போதுதான் அல்லாஹ் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து தன் தூதருக்கு அருளினான். (எங்களுடன் பேசக்கூடாதென மக்களுக்குத் தடை விதித்ததிலிருந்து ஐம்பது நாட்கள் முடிந்த பின்) இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி நேரம் எஞ்சியிருந்தபோது இது நடந்தது.
ஆதாரம்: (புகாரி: 4677)
மக்களும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தன்னை வெறுத்து ஒதுக்குகின்ற காரணத்தினால் தான் மரணித்து விட்டால் தனக்கு ஜனாஸா தொழ மாட்டார்களோ என்று அஞ்சுகின்றார்.
கஅப் இப்னு மாலிக் தொடர்பாக (புகாரி: 4418) இல் மிக நீண்ட செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நீண்ட செய்தியின் சாராம்சம்:
கஅப் (ரலி) அவர்கள் தபூக் போரில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இருந்தும் கூட கலந்து கொள்ளாமல் இருக்கின்றார். நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்து திரும்பியவுடன் பொய்யான காரணங்களைக் கூறி சாக்குப் போக்கு சொல்லி சமாளித்து விடலாம் என்று நினைக்கின்றார்.
தன்னுடைய குடும்பத்தாரில் கருத்துள்ள ஒவ்வொருவரிடமும் ஆலோசனை கேட்கின்றார். ஆனால், பொய் சொன்னால் அல்லாஹ் அறிவித்து கொடுத்து விடுவானே என்று பயந்து உண்மையை ஒப்புக் கொள்கின்றார். தன்னுடன் இருப்பவர்களெல்லாம், நீங்கள் பொய் சொல்லி தப்பித்திருக்கலாமே என்று இவரை உசுப்பேற்றுகின்றனர்.
பனூ சலீமா குலத்தார் இவரைக் கடுமையான முறையில் திட்டுகின்றார்கள்.
இவரைப் போன்று இன்னும் இரண்டு நபர்களுக்கும் இதே நிலைமை ஏற்பட்டது.
மக்கள் அனைவரும் இம்மூவரையும் முற்றிலுமாகப் புறக்கணிக்க ஆரம்பிக்கின்றனர்.
மற்ற இருவரும் வீட்டில் அமர்ந்து அழுது கொண்டிருக்க கஅப் மட்டும் ஐந்து நேரத் தொழுகைகளிலும், கடைவீதிகளிலும் நடமாடிக் கொண்டிருந்தார்.
அபூகத்தாதா (ரலி) என்ற தன்னுடைய உறவினரின் வீட்டிற்குச் சென்று அவரிடத்தில் ஸலாம் கூறுகின்றார். அவரோ பதில் ஸலாம் சொல்லவில்லை. கஅப் கண்ணீர் விட்டுக் கதறி அழ ஆரம்பித்து விடுகின்றார்.
கஸ்ஸான் நாட்டு அரசனிடமிருந்து ‘முஹம்மத் உங்களை வெறுத்து புறக்கணித்து விட்டார். எனவே நீங்கள் எங்களிடம் வந்து விடுங்கள்’ என்ற கடிதம் வருகின்றது.
அந்தக் கடிதத்தை அடுப்பில் தூக்கிப் போட்டு எரித்து விடுகின்றார்.
சிறிது நாட்களில் உங்கள் மனைவியரை விட்டு விலகிவிட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து கட்டளை வருகின்றது.
தனது மனைவியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றார்.
பிறகு அல்லாஹ் தள்ளிவைக்கப்பட்ட மூவரையும் மன்னித்து விட்டேன் என்று (அல்குர்ஆன்: 9:117,118) வசனத்தை இறக்கி மன்னிப்பளிக்கின்றான்.
ஆதாரம்: (புகாரி: 4418) (ஹதீஸ் சுருக்கம்)
இந்தச் செய்தியை நன்றாகக் கூர்ந்து படித்துப் பாருங்கள்! தான் செய்த தவறை மாற்றிக் கொண்டு அதற்காக என்னென்ன வேதனைகளையெல்லாம் அனுபவிக்கின்றார். தன்னைப் பற்றி ஊர் முழுக்கத் தவறாகப் பேசுகின்றார்கள்; வெறுத்து ஒதுக்குகின்றார்கள்; கடுமையான மன உளைச்சல் ஏற்படுகின்றது; என்றாலும் அமைதி காக்கின்றார்.
அவர் வேண்டுமென்றே போருக்குச் செல்லக்கூடாது என்று திட்டம் தீட்டினாரா? இல்லை. மேலும் நான் செய்ததெல்லாம் பெரிய தவறா? ஏன் என்னை இப்படி அலைக்கழிக்கின்றீர்கள் என்று கேட்டு விவாதம் செய்தாரா? அல்லது பதிலடி என்ற பெயரால் மக்களிடத்தில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தினாரா? எந்தத் தவறான வழியையும் அவர் கையிலே எடுக்கவில்லை.
அவரெடுத்த மிகப்பெரும் ஆயுதம் வாய்மூடி இருந்து அமைதியைக் கடைபிடித்தது. வெறுத்து ஒதுக்கினாலும், அடித்து விரட்டினாலும், ஸலாமுக்குப் பதில் சொல்ல மறுத்தாலும் நான் பொறுமையாக இருப்பேன், வாய்திறக்க மாட்டேன், என்னுடைய தவறை நியாயப்படுத்த மாட்டேன், என்னை நானே மாற்றிக் கொள்வேன் என்று சொல்லி சாதித்துக் காட்டுகின்றார். இவரைப் பற்றி அல்லாஹ்வே சிலாகித்து குர்ஆனில் வசனம் இறக்குகின்ற அளவுக்கு இவரின் அமைதி இவரை மாற்றி இருக்கின்றது.
ஒரு மனிதர் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளாமல் தன்னுடைய தவறை நியாயப்படுத்திக் கொண்டிருந்தால் அவருக்கு மறுமையில் கடுமையான இழிவு ஏற்படும் என்று இறைவன் எச்சரிக்கின்றான்.
“செயல்களில் நட்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’’ என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.
அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம்.
சில மனிதர்கள் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளாமல், தாங்கள் அழகிய செயல்களைச் செய்கின்றோம் என்று நினைப்பவர்களுக்கு நாளை மறுமையில் நன்மை, தீமையை நிறுத்துப் பார்க்கின்ற மீஸான் தராசையே நிறுவ மாட்டோம் என்று அல்லாஹ் கடுமையான முறையில் எச்சரிக்கை செய்கின்றான்.
மேலும் இறைவன்;
யாருக்குத் தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அவனும் அழகானதாகக் கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான்.
யார் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளாமல் தீமையான காரியத்தைச் செய்துவிட்டு, நான் தான் யோக்கியன், நல்லவன்; நான் தான் சொர்க்கவாசி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பதை விட, ஒரு தவறு செய்துவிட்டால் திருந்தி நல்லவனாக வாழ்ந்து செய்த தவறை நியாயப்படுத்தாமல் வாய்மூடி இருந்து, தன்னைத்தானே மாற்றிக் கொள்வதே சிறந்தது.
எனவே இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் மனிதன் என்ற அடிப்படையில் தவறிழைத்து விட்டாலும் தவறைத் தன்னளவில் திருத்திக் கொண்டு, தன்னுடைய குணத்தை நன்மைகளை நோக்கித் திருப்பி, நம்மை நாம் மாற்றிக்கொள்ள முயற்சி செய்வோம்! ஏனெனில் நாம் மாறாத வரை அல்லாஹ் நம்மை மாற்ற மாட்டான். அவ்வாறு தவறை திருத்தி வாழும் நன்மக்களாய் அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.