தவறான புரிதலால் ஏற்படும் குழப்பங்கள்
தவறான புரிதலால் ஏற்படும் குழப்பங்கள்
வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருக்கும் கணவன், மனைவியிடம் போனில் பேசிக் கொண்டிருப்பார். ஏதாவது ஒரு முக்கியமான பிரச்சனையைப் பேசிக் கொண்டிருக்கும் போது செல்போன் துண்டிக்கப்பட்டுவிட்டால் வேண்டு மென்றே துண்டித்துவிட்டாள் என்று கணவனும், கோபத்தில் போனைத் துண்டித்துவிட்டார் என்று மனைவியும் நினைக்கின்ற காரணத்தினால் இருக்கின்ற சின்ன சின்ன பிரச்சனைகளையும் கூட பெரிதாகச் சித்தரிக்கின்ற மனநிலை இன்று பெரும்பாலான நபர்களிடத்தில் காணப்படுகின்றது. இந்தக் காரணத்துக்காகவே விவாகரத்துச் செய்து கொண்ட தம்பதிகளும் உண்டு.
சிலர் அவசரத் தேவைக்காக போன் செய்யும் போது எதிர்முனையில் உள்ளவர் போனை எடுக்காமல் இருப்பார். ஒருவேளை செல்போனில் பேலன்ஸ் தீர்ந்திருக்கலாம்; டவர் பிரச்சனையாக இருக்கலாம்; அல்லது ஏதேனும் வேலையில் இருக்கலாம்; கழிவறை, குளியலறையில் இருக்கலாம்; அல்லது பயணத்தில் இருக்கலாம் என்று மனதை தேற்றிக் கொண்டால் பிரச்சனையும், மன அழுத்தமும் குறையும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.
நேருக்கு நேர் பேசும் போதே பிரச்சனைகள் அதிகமாக வரும் போது போனில் பேசும் போது என்ன நிலையாகும் என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பிரிந்திருக்கும் போது பல மனக் குழப்பத்தினாலும் பார்க்க முடியவில்லையே என்ற தவிப்பிலும் வேலைப்பளு மற்றும் உடல் உபாதைகளினாலும் ஏற்படுகின்ற மனவலியில் கடும் கோபம் ஆண்களுக்கு ஏற்படும். அதை யாரிடத்தில் வெளிப்படுத்துவது என்பதை அறியாமல் தனக்குக் கிடைத்த அடிமை மனைவி தானே என்று மனைவியிடம் பேசும் போது சிறிய பிரச்சனையை கணவன் பெரும் பிரச்சனையாக ஆக்குவதை காண்கின்றோம். இதில் அவளை மட்டும் குற்றம் சாட்டாமல் அவளது குடும்பத்தில் உள்ள அனைவரையும் அவன் குற்றவாளியாக ஆக்கி பழைய பல விஷயங்களை தோண்டி எடுத்து அதற்குக் காரணத்தையும் தேட ஆரம்பித்துவிடுகின்றான்.
தன் மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும்; அவளுக்குத் தேவையான நகை நட்டுகள், வீடுகள், சொத்துக்கள் சேர்க்க வேண்டும் என்று தான் மனிதன் வெளிநாட்டை நோக்கிக் கடல் கடந்து செல்கின்றான். ஆனால் எந்த சந்தோஷத்தை அவளுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தானோ அதையே மறந்து, கீழ்த்தரமாக அவளிடத்தில் நடந்தும் கொள்கின்றான். தனது உணர்வுகளையும், ஆசாபாசங்களையும் சாகடித்துக் கொண்டு தன்னைத் தானே நொந்தும் கொள்கின்றான். தன்னை நம்பி வந்தவளையும் நோகடிக்கின்றான்.
இதே போன்று தான் பெண்களும். கணவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளாமல், உங்கள் அம்மா இப்படிச் சொன்னார்; அப்படிச் சொன்னார் என்றெல்லாம் குறை சொல்லி டென்ஷனை ஏற்றி விடுவார்கள்.
இழக்கக்கூடாததை இழந்துவிடாதீர்
உறவுகளுக்குப் பாலமாக இருக்கின்ற அன்பையும், பாசத்தையும் பிறந்த மண்ணிலே தொலைத்து விட்டு, அதை வெளிநாடுகளில் தேடுவதில் அர்த்தமில்லை. தவறான விஷயங்களுக்குத் துணைபோகும் தனிமை, சந்தேகப்பார்வை, தந்தையின் கண்காணிப்பு இல்லாமல் வளரும் இளைய சமுதாயம், தனக்குப் பிறந்த குழந்தையின் முகத்தை பார்க்க முடியாமை, பெற்றோரின் இறுதிக் காரியங்களில் கலந்து கொள்ள முடியாமை இது போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் வெளிநாட்டு வாழ்க்கையில் கொட்டிக் கிடக்கின்றன.
வீடுவாசல், நகைநட்டுகள், சொத்துபத்துக்கள் சேர்க்க வேண்டும் என்ற பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அன்பான கணவன், அரவணைக்கும் பிள்ளைகள், பிரச்சனைகள் என்றால் ஓடிவரும் சகோதரன், தோள்கொடுக்கும் தோழன் போன்ற உண்மையான உறவுகளை இழந்து காலத்திற்கும் வருந்தாதீர்கள். பணம் மட்டும் வாழ்க்கையல்ல! அதையும் தாண்டி நாம் அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் நம் வாழ்க்கை முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன என்பதை உணர்ந்து அதற்கேற்ப நம் செயல்பாடுகளையும், எண்ணங்களையும் மாற்றிக்கொண்டால் நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக வாழலாம்.
ஒளிவு மறைவு இல்லாத இல்லறம்
பல கணவன்மார்கள் தங்களின் மனைவியிடம் தன்னைப் பற்றியும் தனது மனச்சுமைகளான பொருளாதாரம், உடல்நிலை போன்றவற்றைப் பற்றியும் முறையாக வெளிப்படுத்துவதில்லை. இதுவும் கணவன் மனைவிக்கு மத்தியில் பல மனக்கசப்புகளுக்குக் காரணமாக ஆகிவிடுகின்றது.
ஒரு இரகசியம் தனக்குத் தெரியவில்லையென்றால் மண்டை கபாளமே சுக்கு நூறாக ஒடிந்தது போலத் தோன்றும் குணமுள்ள பெண்களுக்கு, தனது கணவனின் அந்தரங்கம் மற்றும் வெளிப்டையான செயல்களுக்குக் காரணம் தெரியவில்லையென்றால் எப்படியிருக்கும்? கணவனின் உடல் மற்றும் மனநிலை, குடும்பச்சூழல், பொருளாதார சூழ்நிலைகள் கண்டிப்பாக மனைவிக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
தான் எப்படிப்பட்டவரைத் திருமணம் செய்திருக்கின்றோம், அவரது தகுதி என்ன? அவரால் நமக்கு எந்தளவிற்கு செலவு செய்ய முடியும் என்பதை விளங்காத பல பெண்கள், தாங்கள் ஏதோ டாடா பிர்லாவைத் திருமணம் முடித்ததாக நினைத்துக் கொண்டு கணவனின் சூழ்நிலைகளை அறியாமல் கண்மூடித்தனமாக செலவுசெய்வதைக் காண்கின்றோம்.
எனவே கணவன் மனைவி இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர்கள் நன்கு புரிந்திருக்க வேண்டும். ஆணும் பெண்ணும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். திருமணம் என்ற ஒப்பந்தத்தில் இருவரும் இணையும் போது புரிதல் மற்றும் விட்டுக்கொடுத்தல் என்பவை மட்டும் இல்லையென்றால் அந்த இல்லற வாழ்க்கை இனிய வாழ்க்கையாக இல்லாமல் விபரீதத்தில் போய் முடிந்துவிடும்.
கணவன், மனைவி ஆகிய இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு, கலந்துரையாடி வாழ்க்கையைத் தொடர்ந்தால் இல்லறம் இனிமையாக இருக்கும்.