44) தள்ளாத வயதில் மரணித்தல்
சிலர் தள்ளாத வயது வரை வாழ்ந்து பெரும் அவதிக்கு ஆளாகி மரணிப்பார்கள். படுக்கையிலேயே மலஜலம் கழித்து, பெற்ற பிள்ளைகளாலேயே ஓரம் கட்டப்பட்டு மரணிப்பார்கள். சிலர் சுய நினைவை இழந்த பின்னர் மரணிப்பார்கள். இப்படியெல்லாம் ஒருவர் மரணிப்பது தீயவர் என்பதற்கு ஆதாரமாக அமையாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தள்ளாத வயது வரை வாழ்வதை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.
(புகாரி: 2822, 6365, 6370, 6374, 6390),)
இதை அடிப்படையாகக் கொண்டு தள்ளாத வயதில் மரணம் அடைவது துர்மரணம் என்று கருதக் கூடாது. ஏனெனில் ஒருவர் நீண்ட நாள் வாழ்ந்து இவ்வுலகில் துன்பங்களைச் சந்தித்தால் இதன் காரணமாக அவரது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மறுமையில் அவர் தண்டிக்கப்படாமல் தப்பிக்க உதவும்.
இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்கள்:(திர்மிதீ: 2323),(அஹ்மத்: 7521, 9435)
ஒருவர் நீண்ட நாள் வாழ்ந்து இன்னல்களை அனுபவித்தால் அதுவும் நன்மை தான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
மூமின்களின் காரியங்கள் வியப்பாக உள்ளன. அவரது அனைத்துக் காரியங்களும் அவருக்கு நன்மையாகவே அமைந்து விடுகின்றன. மூமினைத் தவிர மற்றவர்களுக்கு இந்த நிலை இல்லை. அவருக்கு மகிழ்ச்சி ஏற்படால் நன்றி செலுத்துகிறார். எனவே அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்குத் துன்பம் ஏற்பட்டால் பொறுத்துக் கொள்கிறார். எனவே அதுவும் அவருக்கு நன்மையாகி விடுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி)
எனவே முதுமையில் மரணித்தாலும், இளமையில் மரணித்தாலும் இரண்டுமே நன்மையில் தான் முடியும்.
தள்ளாத வயது வரை வாழ்ந்து அதனால் மற்றவர்களுக்குச் சிரமம் தரக் கூடாது என்பதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடியிருக்க வேண்டும் என்பதை மேற்கண்ட சான்றுகளின் மூலம் அறியலாம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் முதுமையில் பார்வை போன பின்பு தான் மரணித்தார்கள். (முஸ்லிம்: 1543)
இப்னு உமர் (ரலி) அவர்களும் தள்ளாத வயதில் பார்வை போன பின்பு தான் மரணித்தார்கள்.
கஃபு பின் மாலிக் (ரலி) அவர்கள் தமது முதுமையில் பார்வையிழந்த நிலையில் தான் மரணித்தார்கள். (புகாரி: 3889, 4676, 6690, 7225)
எனவே தள்ளாத வயதில் அனைவராலும் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒருவர் மரணிப்பதால் அவருக்கு ஏற்பட்டது துர்மரணம் என்று கூற முடியாது.