தற்கொலை – நிரந்தர நரகமே பரிசு!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!

பெருகி வரும் தற்கொலை கலாச்சரம்

ஓர் இளம் பெண்ணுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்படுகின்றது. ஏன் என்று பார்க்கும் போது அவள் ஒரு ப்ளஸ் டூ மாணவி! தேர்வு நேரம் நெருங்குகிறது. அதனால் இந்த வாந்தியும் வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது என்று மனநோய் நிபுணர் சரியான காரணத்தைக் கண்டறிகின்றார்.

உள் மனதில் ஏற்படும் உயர் அழுத்தம் இப்படி உடல் ரீதியான அதிர்ச்சி அலைகளை, வாந்தி பேதியை உருவாக்கி விட்டுள்ளது. இத்தனைக்கும் அந்த மாணவி கல்வியில் முதல் தரத்தை அடைந்தவள். தான் தோற்று விடுவோமோ என்ற எண்ணம், பரீட்சையைத் தட்டிக் கழித்து விட வேண்டும் என்ற எல்லைக்கு அவளைத் துரத்திச் சென்றுள்ளது.

சரியான ஆலோசனை, ஆறுதல் வழங்கப்பட்ட பிறகு அவள் சரியான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றாள்.

இவ்வாறு இந்த மாணவியின் மன நிலை மட்டுமல்ல! மொத்த மாண சமுதாயத்தின் மன நிலையும் இப்படித் தான் ஆகி விட்டது. பள்ளி வாழ்க்கையில், பாடத்தில், பரீட்சையில் தோல்வி என்பது சகஜமான ஒன்று தான் என்று அதை எடுத்துக் கொள்வதற்கு மாணவ சமுதாயம் தயாரில்லை. தோல்வியை நாங்கள் தாங்கிக் கொள்ள மாட்டோம் என்ற நிலைக்குச் சென்று விட்டனர்.

இதன் உச்சக்கட்டம் தான் மாணவ, மாணவியரின் தற்கொலைகள். இராயப்பேட்டையைச் சேர்ந்த இனியன் ராஜ் என்ற மாணவன் தமிழ்நாடு தொழில்சார் துறை நுழைவுத் தேர்வில் ((TNPCEE)) குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்து கொள்கின்றான். அடுத்த நாள் குரோம்பேட்டை குருபாபு என்ற மாணவன் ப்ளஸ் டூ பரீட்சையில் தோல்வி என்பதால் தன்னுடைய உயிரைத் தானே பறித்துக் கொண்டான்.

National Crime Record Bureau Statistics எனப்படும் தேசிய குற்றப் பதிவுத் துறையின் புள்ளி விவரப்படி, ஒவ்வொரு ஆண்டுத் தேர்வு முடிவு வெளியானதும் தமிழ்நாட்டில் மட்டும் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சராசரியாக 200 பேர் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். தேசிய அளவில் இந்த எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தொட்டு விட்டது.

இது ஹிந்து நாளேடு தரும் உதிரத்தை உறைய வைக்கும் தகவல் ஆகும். ஜூனியர் விகடன் இந்த விவகாரத்தை அலசும் போது,

“தற்கொலைச் சாவுகள் பற்றிய புள்ளி விவரங்கள் நம்பிக்கைக்குரியவை அல்ல. ஏனென்றால் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து திரட்டப்படும் தகவல்களை அடிப்படையாக வைத்துத் தான் நேஷனல் கிரைம் ரெக்கார்ட் பீரோ, தற்கொலை பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கின்றது. ஆனால் மாநிலத்தில் நடக்கும் எல்லா தற்கொலைகளுமே போலீஸின் கவனத்திற்கு வந்து விடுவதில்லை. பல தற்கொலைகள் விபத்து என்றோ, நோயால் மரணம் என்றோ சொல்லி உண்மை மறைக்கப்பட்டு விடும். தேர்வு முடிவுகளால் தற்கொலைக்குத் தூண்டப்படும் மாணவர்களின் எண்ணிக்கை நாமெல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிக மிக அதிகம்.

அது மட்டுமல்ல… தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் ஐந்து பேரில் ஒருவர் தான் உயிர் இழக்கின்றார் என்கிறது புள்ளி விவரம். இந்தப் புள்ளி விவரத்தின் படி பார்த்தால் ஆண்டு தோறும் தமிழகத்தில் தற்கொலை செய்ய முயற்சிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் என்பது புரியும்” என்று ஸ்நேகா தற்கொலைத் தடுப்பு மையத்தின் இயக்குநர் கூறுகின்றார் என்று ஜூனியர் விகடன் குறிப்பிடுகின்றது.

இது நமது உதிரத்தை மேலும் உறை நிலைக்குக் கொண்டு செல்கின்றது.

மாணவ மாணவியரின் மன அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் அவர்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்நேகா தற்கொலை தடுப்பு மையத்தின் இயக்குநர் இது பற்றிக் குறிப்பிடுகையில், இவ்வமைப்பில் தொடர்பு கொள்கின்ற 60 சதவிகிதம் பேர் நாங்கள் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என்று தெரிவிப்பதாகக் கூறுகின்றார்.

தற்கொலை வளரத் தகுந்த காரணம்

மாணவ, மாணவியரிடம் மிக வேகமாகப் பரவி வரும் தற்கொலைக் கலாச்சாரத்துக்கான காரணம் என்ன? என்று கல்வியாளர்கள் ஆய்கையில், அதற்கு முதல் காரணம் பெற்றோர்கள் தான் என்று குறிப்பிடுகின்றனர். தங்களது பிள்ளைகளிடம் நீ டாக்டராக வேண்டும், இஞ்சினியராக வேண்டும் என்று வெறித்தீயை ஏற்றி வளர்ப்பது போல், தங்களிடமும் வளர்த்துக் கொள்கின்றனர். பிள்ளைகள் தங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை எனும் போது அவர்கள் மீது எரிந்து விழுகின்றார்கள். இதைத் தாங்க முடியாத பிள்ளைகள் எரிந்து சாம்பலாகின்றார்கள். அல்லது கயிற்றில் தொங்கி சவமாகி விடுகின்றார்கள். இது தற்கொலைக்கான முக்கியக் காரணம்.

இந்தக் காரணத்தை யாராலும் மறுக்க முடியாது. இது நூறு சதவிகிதம் உண்மையாகும். ஆனால் மாணவ, மாணவியரிடம் உருவாகியுள்ள தற்கொலைக் கலாச்சாரத்திற்கு அவர்களை மட்டும் நாம் பொறுப்பாக்கி விட முடியாது.

மாணவி மாணவியர்களான நமது பிள்ளைகள் இது போன்ற மன அழுத்தம் ஏற்படும் போது அதற்குத் தற்கொலைதான் தீர்வு என்ற முடிவுக்கு ஏன் வருகின்றார்கள்? எப்படி வருகின்றார்கள்?

அதற்கு ஒரு முன் மாதிரி இருக்கப் போய் தான், சமுதாயத்தில் 30 வயதைத் தாண்டி விட்டவர்கள், பக்குவம் பெற்ற முதிய வயதினர், ஆண் பெண் என்று வித்தியாசம் பார்க்காமல் இது போன்ற மன அழுத்தத்தின் போது தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த முன் மாதிரியை பள்ளி மாணவர்கள் கடைப்பிடிக்கின்றார்கள், கைக் கொள்கின்றார்கள். மாணவ மாணவியர் தாங்களாக தற்கொலையைக் கண்டு பிடித்து விடவில்லை. சமுதாயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் ஆசாமிகள்தான் காரணம் எனும் போது மாணவ சமுதாயத்தை மட்டும் பொறுப்பாக்குவது எந்த வகையில் நியாயம்? எனவே நமது பார்வையில் முதல் பொறுப்பாளர்கள் சமுதாயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் இந்த ஆசாமிகள் தான்.

இரண்டாவது காரணம், தற்கொலையைப் போற்றும் நல்ல தங்காள் கதைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவையாகும்.

ஊரில் தற்கொலைகள் எங்கேனும் ஒன்றிரண்டு நடக்கும். அதுவும் பூட்டிய வீட்டின் அறைக்குள் நடக்கும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவார்கள். தொங்கும் உடலைக் கீழே இறக்கி, இந்தக் காதுக்கு இந்தக் காது தெரியாமல் அடக்கி விடுவார்கள். இது தான் ஊரில் நடக்கும் தற்கொலையின் நிலை! இது நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் தற்கொலை! இது சமூகத்தில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

ஆனால் திரைப்படத்திலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் இந்தக் காட்சிகள் சர்வ சாதாரணமாகக் காட்டப்படுகின்றன.

காதல் தோல்வி என்றதும் காதலன் அல்லது காதலி அல்லது இருவரும் இணைந்து மலை உச்சியிலிருந்து கீழே விழுதல், விஷம் அருந்துதல், கயிற்றில் தொங்குதல் போன்ற காட்சிகள் திரும்பத் திரும்பக் காட்டப்படுகின்றன. இதைப் பார்க்கும் பெரியவர்களே இதற்குப் பலியாகி விடுகின்றார்கள் எனும் போது பச்சை மனம் கொண்ட பருவ வயதுப் பிள்ளைகளின் நிலை என்ன?

சிறு சிறு விவகாரங்களுக்கு எல்லாம் தற்கொலை செய்து கொள்வதாகக் காட்டப்படும் போது, அது அவர்களின் உள்ளங்களில் மிக எளிதாகப்பட்டு பதிந்து விடுகின்றது. தற்கொலையைப் புகழும் கதைக் கலாச்சாரம் தொடரும் வரை தற்கொலைக் கலாச்சாரமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். கதையாவது ஒரு குறிப்பிட்ட எல்லையில் நின்று விடுகின்றது.

ஆனால் சினிமா அதை ஊதிப் பெரிதாக்கி விடுகின்றது. சிறிய புகல்முட்டு ஏற்பட்டவுடன் தற்கொலை செய்வது போல் காட்டப்படும் போது அதைப் பார்ப்பவர்கள், வெகு சீக்கிரம் அதில் ஈர்க்கப்பட்டு விடுகின்றார்கள். அந்தக் காட்சிகளே அவர்களின் கடைசிக் காட்சியாகவும், கதையாகவும் ஆகி விடுகின்றன. இதை இந்த நாட்டில் எந்தப் பத்திரிகையும், அறிவு ஜீவியும் கண்டு கொள்வதே இல்லை. இது தற்கொலைகள் நடப்பதற்கு மிகப் பெரிய முக்கியமான காரணமாகும்.

மன அழுத்தத்திற்கு ஒரு மாமருந்து

மாணவ, மாணவியருக்கு மத்தியில் ஏற்படும் தற்கொலைகளைத் தடுக்கும் முகமாகக் களமிறங்கியிருக்கும் ஸ்நேகா இயக்கத்தின் சிநேகித சிந்தனையை நாம் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். அதே சமயத்தில் தற்கொலை என்பது தமிழ்நாட்டில் மட்டும் உள்ள ஒரு நோயல்ல! படித்தவர்கள் அதிகம் இருக்கும் கேரளாவிலும் இந்தத் தொற்று நோய் இருக்கின்றது.

மலேரியா, காலரா போன்ற தொற்று நோய்களுக்கு மருந்து கண்டு பிடித்த அறிவியல் உலகம், இந்தத் தற்கொலையை அழிக்கவில்லை. அழிக்க முடியாது. அதற்கான மருந்து அறிவியல் துறை வசமோ அல்லது உலகில் ஏனைய மதங்கள், இஸங்கள், ஆன்மீக அமைப்புகள் வசமோ இல்லை. அந்த மருந்து முஸ்லிம்களிடம் மட்டுமே இருக்கின்றது.

அதனால் தான் உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்று அரபகத்தில் தற்கொலை அறவே இல்லை என்று அடித்துச் சொல்லும் அளவுக்கு ஒரு தெளிவு! அதற்கு ஒரே காரணம் இஸ்லாம்!

இஸ்லாம் மார்க்க ரீதியிலும் மனோ தத்துவ ரீதியிலும் ஊட்டிய விதியின் நம்பிக்கையாகும்.

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன்: 57:22,23)

இந்த வசனங்களில் அல்குர்ஆன் விதியைப் பற்றி மிகத் தெளிவாக அடித்துச் சொல்லி விடுகின்றது.

விதி ஓர் இடி தாங்கி

விதியை நம்புவது இஸ்லாமிய நம்பிக்கையில் முக்கியமான ஒரு அம்சம். விதியை நம்ப வேண்டும்; அதே நேரத்தில் நம் செயல்பாட்டை விதியின் மீது பழிபோட்டு விடாமல் அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதியை நம்புவதால் மனித குலத்திற்கு ஏற்படுகின்ற நன்மையை இஸ்லாம் கூறுகிறது.

விதியை நம்பாதவனுக்குத் தாங்க முடியாத இழப்பு ஏற்பட்டால் அதை எண்ணி எண்ணியே அவன் மாய்ந்து போவான்.

விதியை நம்புபவனுக்கு இழப்பு ஏற்பட்டால் “நம் கையில் என்ன இருக்கிறது? எல்லாம் இறைவன் கையில் இருக்கிறது” என்று எண்ணுவான். இந்த இடத்தில் விதி, சுமை தாங்கியாக வந்து நின்று அவனது கவலையைப் போக்கும்.

அளவுக்கு அதிகமான செல்வத்தை, புகழை, மதிப்பை ஒருவன் பெறும் போது அது அவனுக்கு ஆணவத்தை ஏற்படுத்தும். அப்போது “இது எல்லாம் இறைவனின் நாட்டம்” என்று நினைத்துக் கொண்டால் அவன் தன்னடக்கம் பெறுவான்.

இது போன்ற நேரத்தில் விதியின் மீது பழியைப் போட்டு விட்டு கவலையைப் போக்கிக் கொள்ள வேண்டும்; ஆணவத்தை அடக்கிக் கொள்ள வேண்டும்.

நடந்து விட்ட விஷயத்திற்குத் தான் விதியை நினைக்க வேண்டும்; நடக்காத விஷயங்களில் எது விதி என்று நமக்குத் தெரியாத காரணத்தால், விதி இல்லாதது போல் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை 

   لِّـكَيْلَا تَاْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰٮكُمْ‌ؕ

(உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான். (அல்குர்ஆன்: 57:23) இல் உள்ள இந்த வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

மனித மனம் எல்லாவற்றையும் தாங்கும் வலிமை கொண்டதல்ல! தன் மீது விழும் பாரத்தைத் தாங்குவதற்கு ஓர் சுமை தாங்கி வேண்டும். அது தான் விதி!

இந்த விதியின் மீதுள்ள நம்பிக்கை தான் மனிதனை, சோதனை சூறாவளிகள் முற்றுகையிடும் போது, வாழ்க்கைக் கப்பலை சுனாமிப் பேரலைகள் அலைக்கழிக்கும் போது, ஒரு நங்கூரமாக அமைந்து விடுகின்றது. இதயத்தில் ஏற்பட்ட காயத் தடங்களுக்கு சுகமான ஒற்றடமாக அமைந்து விடுகின்றது. இங்கே மன அழுத்தம் வலுவிழந்து போகின்றது.

எனவே விதியின் மீது கொள்ளும் நம்பிக்கையினால் ஏற்படும் இத்தகைய பலனாலும், மனித அறிவுக்குப் புலப்படாத எண்ணற்ற பலன்களாலும் தான் இஸ்லாம் விதியை நம்பிக்கை கொள்ளச் சொல்கின்றது. இத்தகைய காரணங்கள் இல்லாவிட்டாலும் ஒரு முஸ்லிம் விதியை நம்பித் தான் ஆக வேண்டும். அப்படி விதியை நம்பாதவர்களை முஸ்லிம் என்று இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை.

ஒரு சோதனை ஏற்படும் போது, அது இறைவன் நம் மீது ஏற்கனவே தீர்மானித்தது. நம் கையில் என்ன இருக்கின்றது? எனக் கருதி, இறை முடிவைத் திருப்தி கொள்வோம் என்று ஒரு மனிதன் நினைத்தால் அவனது மன அழுத்தம் அவனைப் பாதிக்க விடாமல் தற்காத்துக் கொள்கிறான். அல்லாஹ்வும் அவன் மீது அன்பு கொள்கிறான். அல்லாஹ்வின் முடிவில் திருப்தி கொள்ளாமல் அவசரப்பட்டு தற்கொலை செய்து கொண்டு தன்னை அழித்துவிடின் அவனுக்கு சுவனத்தைத் தடை செய்து, அவனை நிரந்தர நரகவாதியாக ஆக்கி விடுகின்றான்.

كَانَ بِرَجُلٍ جِرَاحٌ فَقَتَلَ نَفْسَهُ فَقَالَ اللَّهُ بَدَرَنِي عَبْدِي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الْجَنَّة

ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : ஜுன்துப் (ரலி)
நூல் : (புகாரி: 1364) 

மனோதத்துவ ரீதியிலான சிகிச்சை

ஒரு இழப்பு ஏற்படும் போது அது விதியினால் ஏற்பட்டது என்று நம்பி பொறுத்திருந்தால் அவனுக்கு ஏற்பட்ட இழப்பை சரி கட்டி வேறொரு சிறந்த பரிகாரத்தையும் அல்லாஹ் வழங்கி விடுகின்றான்.

சங்கடம் ஏற்படும் போது ஒருவர், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும் மஃஜுர்னீ ஃபீ முஸீபதீ, வ அக்லிஃப் லீ கைரன் மின்ஹா (பொருள்: நாம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள். அவனிடமே திரும்பச் செல்பவர்கள். அல்லாஹ்வே! எனக்கு ஏற்பட்ட சங்கடத்தில் எனக்குப் பகரமாக ஆக்குவாயாக!) என்று கூறினால் அதைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் பகரமாக ஆக்கி விடுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.

مَا مِنْ عَبْدٍ تُصِيبُهُ مُصِيبَةٌ فَيَقُولُ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِى فِى مُصِيبَتِى وَأَخْلِفْ لِى خَيْرًا مِنْهَا إِلاَّ أَجَرَهُ اللَّهُ فِى مُصِيبَتِهِ وَأَخْلَفَ لَهُ خَيْرًا مِنْهَا ». قَالَتْ فَلَمَّا تُوُفِّىَ أَبُو سَلَمَةَ قُلْتُ كَمَا أَمَرَنِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَأَخْلَفَ اللَّهُ لِى خَيْرًا مِنْهُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم

(என் கணவர்) அபூஸலமா (ரலி) இறந்த போது, “முஸ்லிம்களில் அபூஸலமாவை விட சிறந்தவர் யார் இருக்கின்றார்? நபி (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் சென்ற குடும்பத்தில் அவர் முதல் மனிதராவார்’ (என எண்ணினேன்) பின்பு நான் அந்தப் பிரார்த்தனையைக் கூறினேன். அல்லாஹ் எனக்கு ரசூல் (ஸல்) அவர்களைப் பகரமாக வழங்கினான்.

அறி : உம்மு ஸலமா (ரலி)
நூல் : (முஸ்லிம்: 1675) (1525)

இங்கு மார்க்கம் மேற்கண்ட பிரார்த்தனையை வெறும் மந்திர வார்த்தைகளாகச் சொல்ல வேண்டும் என்று கூறவில்லை. அவனது மன பாரத்தை இந்த வார்த்தைகள் கீழே இறக்கி வைக்கின்றது. அவனது பாரத்தை வாயாரச் சொல்லி, அவனை அமைதிப்படுத்துகின்றது.

மன அழுத்தத்தைப் போக்க இதை விட மாமருந்து உலகில் கிடையவே கிடையாது.

மறுமை மீது மாறாத நம்பிக்கை

இஸ்லாமிய மார்க்கம் மறுமை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் இழந்து விட்ட இழப்புக்கு ஓர் ஈடாக, அவர் சந்தித்த சோதனைக்கு ஒரு பரிகாரமாக சுவனத்தைப் பரிசாக அளிக்கின்றான்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ
يَقُولُ اللَّهُ تَعَالَى مَا لِعَبْدِي الْمُؤْمِنِ عِنْدِي جَزَاءٌ إِذَا قَبَضْتُ صَفِيَّهُ مِنْ أَهْلِ الدُّنْيَا ثُمَّ احْتَسَبَهُ إِلاَّ الْجَنَّةُ

அல்லாஹ் கூறுகின்றான்:
இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்.
இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 6424) ,(அஹ்மத்: 9024)

இதுவும் மன அழுத்தத்திற்கு ஒரு சிறந்த மருந்தாக அமைந்து விடுகின்றது.

இப்படி மேற்கண்ட இந்த வழிமுறைகளில் மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்ளாமல் தற்கொலை என்ற பெயரில் தன்னை அழித்துக் கொண்டால் அவன் இறை ஏற்பாட்டைக் குறை கூறியவனாக ஆகி விடுகின்றான். இதனால் தான் அவனுக்கு அல்லாஹ் சுவனத்தைத் தடை செய்து விடுகின்றான்.

இப்படித் தற்கொலை செய்பவர் போர்க்களத்தில் வந்து இஸ்லாத்திற்காக போராடியவராக இருந்தாலும் சரி தான்.

நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போரில்) சந்தித்துப் போரிட்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட, மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்று விட்டனர். அப்போது அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர், (எதிரிப் படையில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருப்பவர், படையிலிருந்து விலகி தனியே சென்றவர் என எவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டிய படி துரத்திச் சென்று கொண்டிருந்தார்.

நபித் தோழர்கள், “இந்த மனிதர் போரிட்டதைப் போல் நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை” என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “அவரோ நரகவாசியாவார்” என்று கூறினார்கள்.

அப்போது அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு மனிதர், “நான் அவருடன் இருக்கிறேன்” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். அவர் கடுமையாகக் காயப்படுத்தப் பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி தன் வாளின் (கைப்பிடி) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையில் வைத்து அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

(கண்காணிக்கச் சென்ற) அந்த மனிதர், அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அவர், “சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி நரகவாசி என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். உங்களுக்காக நான் அவருடன் போய் வருகிறேன் என்று கூறி விட்டு அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். உடனே அவர் சீக்கிரமாக மரணிக்க விரும்பி வாளின் பிடி முனையைப் பூமியில் நட்டு, அதன் கூர் முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையில் வைத்து அதன் மீது தன்னை அழுத்தி தற்கொலை செய்து கொண்டார்” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப் பார்வைக்கு ஒருவர் சொர்க்கத்திற்குரிய செயலைச் செய்வார். ஆனால் அவர் நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால் அவர் சொர்க்கவாசியாக இருப்பார்” என்று சொன்னார்கள்.

அறி : ஸஹ்ல் பின் ஸஅத் அஸ்ஸாயிதீ (ரலி)
நூல் : (புகாரி: 2898) 

புனிதப் போர் என்ற பெயரில் நடைபெறும் தற்கொலைத் தாக்குதல்களும் இந்த அடிப்படையில் அமைந்தவை தான்.

ஜனாஸா தொழுகை இல்லை

இதுபோன்று தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவும் மறுத்து விட்டார்கள்.

ஒரு மனிதர் நோயுற்ற போது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அவர் இறந்து விட்டார்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவர் இறந்தது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “நான் அவரை (இறந்திருக்கக்) கண்டேன்” என்று அம்மனிதர் கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் இறக்கவில்லை” என்று சொன்னார்கள். பிறகு அம்மனிதர், (நோயாளியிடம்) வந்ததும் அவர் கூரான ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அவர் இறந்து விட்டார்” என்று தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், “அவர் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், “அவர் தன்னிடமிருந்த கூரிய முனையுள்ள ஈட்டியால் அறுத்துக் கொள்வதை நான் பார்த்தேன்” என்றார். “நீ பார்த்தாயா?” என்று நபி (ஸல்) கேட்க, அவர் ஆம் என்றார். “அப்படியானால் நான் அவருக்குத் தொழுவிக்க மாட்டேன்” என்று சொன்னார்கள்.

அறி : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)
நூல் : (அபூதாவூத்: 3185)

(புகாரி: 6606) வது ஹதீஸில், முஸ்லிமான உயிரைத் தவிர வேறு எந்த உயிரும் சுவனம் செல்ல முடியாது என்று கூறுவதன் மூலம், தற்கொலை செய்தவன் காஃபிராகி விட்டான் என்று அடித்துச் சொல்லி விடுகின்றார்கள்.

விதியின் மீது கொள்கின்ற நம்பிக்கை, மறுமையின் மீது கொள்கின்ற நம்பிக்கை, தற்கொலை செய்து விட்டால் ஜனாஸா தொழுகை இல்லை, சுவனம் செல்ல முடியாது என்று பல்வேறு அடிப்படைகளில் தற்கொலையை இஸ்லாம் வேரோடு கிள்ளி எறிகின்றது.

இப்படி இஸ்லாம் காட்டித் தரும் இந்த நம்பிக்கை மற்றும் வழிமுறைகளில் தான் தற்கொலையை ஒழிக்க முடியுமே தவிர வேறு எந்த வழிமுறையிலும் ஒழிக்க முடியாது என்பதை நாம் தெளிவாகப் பிரகடனப் படுத்துகின்றோம். இது தத்துவார்த்த அடிப்படையில் அல்ல! நடைமுறை செயல்பாடு அடிப்படையில் உலகப் புள்ளியியல் அடிப்படையில் நிரூபணமான உண்மையாகும். இந்த அடிப்படையில் தற்கொலை இல்லாத ஒரு சமுதாயத்தைப் படைக்க உலக மக்களை இஸ்லாத்தின் பால் வாருங்கள் என்ற அழைப்பை முன் வைக்கிறோம்.

அதே சமயம் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் இந்தத் தற்கொலைகள் சில நடப்பதை மறுப்பதற்கில்லை. முஸ்லிம்களுக்கு மத்தியிலும் இந்தத் தற்கொலைகள் நடப்பதற்கு முழு முதற் காரணம் மார்க்க அறிஞர்கள் தான்.

நபி (ஸல்) அவர்கள் தற்கொலையில் இறந்தவருக்குத் தொழுவிக்காமல் ஒதுங்கியிருக்கின்றார்கள். அது மட்டுமல்ல! தற்கொலை செய்தவன் முஸ்லிம் கிடையாது என்று தெளிவாக உணர்த்தியும் இருக்கின்றார்கள். அப்படியிருந்தும் இந்த மார்க்க அறிஞர்கள் எனப்படுவோர், நபி (ஸல்) அவர்களை விஞ்சிய மேதாவிகள் போன்று தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துகின்றார்கள். தெரிந்தே இந்த அக்கிரமத்திற்குத் துணை போகின்றார்கள். இது தான் முஸ்லிம்களிடம் தற்கொலைச் சாவுகள் நடப்பதற்குக் காரணமாக அமைகின்றது.

திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் தற்கொலை என்பது எத்தகைய பாவம் என்பதை இந்த ஆலிம்கள் தங்களின் பிரச்சாரத்தின் போது விளக்கியிருந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்றிருப்பார்கள். ஆனால் அதைச் செய்யாமல் தற்கொலை செய்தவனுக்கு ஜனாஸா தொழுகை நடத்தி அதற்குத் துணை போகின்றார்கள் என்பது தான் வேதனை.

எனவே தற்கொலையைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து நிரந்தர நரகத்தைத் தரும் பாவமான தற்கொலையிலிருந்து நம்மையும் நமது சமுதாயத்தையும் காப்போமாக!

எனவே மேற்கூறிய அனைத்து விஷயங்களும் நம் வாழ்கையில் பாடமாகவும் படிப்பினையாகவும் கொண்டு வாழும் நன் மக்களாய் அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!