தற்கொலை செய்ய முயன்றார்களா நபிகள் நாயகம்?
பொய் பிரச்சாரத்தால் இஸ்லாத்தைக் களங்கப்படுத்தத் துடியாய் துடிக்கும் கள்ளக் கிறித்தவக் கூட்டமும், தங்களின் இழிசெயலால் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் சமாதி வழிபாட்டுக் கும்பலும் நபிகள் நாயகம் தற்காலைக்கு முயன்றார்கள் என்ற செய்தியைப் பரவலாக பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் இப்பரப்புரைக்கும் பழிப்புரைக்கும் பலமான அஸ்திவாரமாக அமைந்திருப்பது புகாரியில் உள்ள பின்வரும் நீண்ட செய்தியாகும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது.
பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். பிறகு (அந்த உணவு தீர்ந்ததும் தம் துணைவியாரான) கதீஜாவிடம் திரும்பி வருவார்கள். அதைப் போன்றே பல நாள்களுக்குரிய உணவை கதீஜா அவர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்திய(வேத)ம் திடீரென்று (ஒருநாள்) வரும்வரை நீடித்தது.
(அன்று) வானவர் (ஜிப்ரீல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம், ‘ஓதும்’ என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே’ என்று அவருக்கு பதிலளித்தார்கள்.
(அப்போது நடந்த சம்பவத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்:)
அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு ‘ஓதும்’ என்றார். அப்போதும் ‘நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே’ என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து, பின்னர் என்னை விட்டு விட்டு, ‘ஓதும்’ என்றார். அப்போதும், ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே’ என்றேன்.
அவர் என்னை மூன்றாவது முறையும் என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு ‘படைத்த உம்முடைய இறைவனின் பெயரால் ஓதும்..’ என்று தொடங்கும் (96வது அத்தியாயத்தின்) வசனங்களை ‘மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்’ என்பது வரை (அல்குர்ஆன்: 96:1-5) ➚ ஓதினார்.
(தொடர்ந்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு கழுத்தின் சதைகள் (அச்சத்தால்) படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பி வந்து, ‘எனக்குப் போர்த்தி விடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்’ என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. அப்போது, ‘கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டுவிட்டு நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தெரிவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா(ரலி) அவர்கள், ‘அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவுகிறீர்கள்’ என்றார்கள்.
பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பவரின் புதல்வர் ‘வரக்கா’விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும் ஆவர்.
‘வரக்கா’ அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை(ஹீப்ரு மொழியிலிருந்து) அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார்.
அவரிடம் கதீஜா அவர்கள், ‘என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள்’ என்றார்கள். அப்போது வரக்கா நபி(ஸல்) அவர்களிடம் ‘என் சகோதரர் புதல்வரே! நீர் என்ன கண்டீர்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம் தெரிவித்தார்கள். (அதைக் கேட்ட) வரக்கா, நபி(ஸல்) அவர்களிடம் ‘அவர்தாம் நபி மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார்’ என்று கூறிவிட்டு ‘உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே!’ என்று கூறினார்.
இதைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மக்கள் என்னை வெளியேற்றவா செய்வார்கள்?’ என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள் ‘ஆம். நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்’ என்று பதிலளித்தார்.
அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார்.
(இந்த முதலாவது வேத அறிவிப்போடு) சிறிது காலம் வேத அறிவிப்பு தடைபட்டது. அதனால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பல முறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தோன்றி,
‘முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, இறைத்தூதர்தாம்’ என்று கூறுவார்கள். இதைக் கேட்கும் போது நபி(ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பிவந்து விடுவார்கள். வேத அறிவிப்பு தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும்போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போன்றே கூறுவார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நபிகளாருக்கு வஹீ வரத் துவங்கி பின் தடைபட்டுப் போனதால் மனமுடைந்து மலை உச்சிக்குச் சென்று தற்கொலை செய்ய முயற்சித்தார்கள் என்றும் ஒவ்வொரு முறை அவ்வாறு எண்ணமேற்பட்டு முயற்சிக்கும் போதெல்லாம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, நீங்கள் இறைத்தூதர் தான் என ஆறுதல் கூறிய பிறகே நபிகளார் ஆறுதலடைவார்கள் எனவும் இச்செய்தி கூறுகிறது. தற்கொலை செய்யும் தப்பெண்ணம் நபிக்குப் பலமுறை ஏற்பட்டிருக்கிறது என்றும் இச்சம்பவம் எடுத்துரைக்கின்றது.
இச்செய்தி தான் மேற்கண்ட இருசாராருக்குமான அஸ்திவாராமாகும்.
வெறும் வாயை மென்று கொண்டிருந்த கிறித்தவக் கூட்டம் இதை அவல் என்றெண்ணி நன்றாக அரைத்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்கிறீர்களா?பாருங்கள்! முஹம்மது உண்மையிலேயே இறைத்தூதர் என்றால் இப்படி மனச்சோர்வடைந்து தற்கொலை செய்ய எண்ணியிருப்பாரா?
முஹம்மத் தற்கொலை செய்யுமளவு சென்றார் எனில் அவரைத் தொடர்பு கொண்ட தூண்டிய ஆவி பரிசுத்த ஆவியாக இருக்க முடியுமா? மெய்யான கடவுள் தான் அவரை தொடர்பு கொண்டார் எனில் இத்தகைய குழப்பத்திற்கு அவர் ஏன் செல்ல வேண்டும்? எனவே முஹம்மது ஓர் பொய்த்தூதர் என்று விஷமப் பிரச்சாரத்தை செய்கிறார்கள்.
இதற்குப் பதிலளிக்கத் துப்பு கெட்ட கப்ரு முட்டிக் கூட்டமோ தாங்கள் அவ்லியாக்களாகத் தேர்வு செய்த சில பைத்தியக்காரர்களைக் காப்பாற்றுவதற்காக, ‘நபியே தற்கொலை செய்ய முயற்சித்தவர் தான்’ (நஊது பில்லாஹ்) என்ற ரேஞ்சுக்கு இந்தச் செய்தியை வைத்து சிலாகித்து சிறப்பாக சிறப்புரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரண்டு சாராருக்குமே இஸ்லாம் குறித்த அறிவோ நபிமொழிகளை அணுகும் ஆய்வுத் திறமோ எதுவுமில்லை. உண்மையில் நபிகளார் தற்கொலை செய்யத் துணிந்தார்களா? இக்குறைமதி கொண்டோர் குறிப்பிடும் செய்தியின் தரம் என்ன என்பதை அலசுவோம்.
யார் சொன்னது?
இச்செய்தியினை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆயிஷாவிடமிருந்து உர்வா – உர்வாவிடமிருந்து ஸூஹ்ரி என்பார் அறிவிக்கிறார்.
இறைச்செய்தி வரும் முன் ஹிரா குகையில் நபிகளார் தங்கியிருந்த போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, ஓதுவீராக என்று கூறிய விபரங்கள் முதல், நபி அச்சமடைந்ததால் அன்னாரின் துணைவி கதீஜா அவர்கள் தம் உறவுக்காரர் வரகாவிடம் அழைத்துச் சென்று நடந்தவற்றை கூறியது அதற்கு வரகா அளித்த பதில் என நபிகள் நாயகத்திற்கு வஹீ வரத்துவங்கிய புதிதில் நடைபெற்ற நிகழ்வுகளை ஒவ்வொன்றாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இச்செய்தி துவங்குகிறது.
வஹீ தடை பட்டதால் நபியவர்கள் கவலை கொண்டார்கள் என்பதை ஆயிஷா (ரலி) கூறியதாகச் சொல்லப்படும் தொடர்ச்சியில் தான் பிரச்சனைக்குரிய வாசகம் வருகிறது.
‘‘நமக்குக் கிடைத்த தகவலின்படி’’ எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பல முறை முனைந்தார்கள்.
இந்த வாசகம் தான் நபி தற்கொலை செய்ய முயன்றார்கள் என்பதற்கான ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது. இது தான் நன்றாக ஆராயப்பட வேண்டும்.
நமக்குக் கிடைத்த தகவலின் படி என்று கூறி நபி தற்கொலை செய்ய எண்ணினார்கள் என்று கூறப்படுகிறது என்றால் இத்தகவல் யாருக்குக் கிடைத்தது? யார் மூலம் கிடைத்தது? ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இந்தத் தகவல் கிடைத்திருந்தால் வேறு நபித்தோழர் மூலம் கிடைத்திருக்கலாம் என்று கருதலாம்.
ஆயிஷா அல்லாத – அச்செய்தியில் இடம் பெறும் வேறு அறிவிப்பாளர்களுக்கு இந்தத் தகவல் கிடைத்திருந்தால் அவர்கள் இந்தத் தகவலை யாரிடமிருந்து, எப்படிப் பெற்றார்கள் என்பதைச் சொல்ல வேண்டும். நபி தொடர்புடைய செய்தியினை அவர்கள் கூறுவதால் அவர்களின் வரலாறும் ஆராயப்பட்டு அவர்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். அதன் பிறகே அது நம்பகமான செய்தி என்ற தரத்தை அடையும்.
நமக்குக் கிடைத்த தகவலின் படி… என்ற வாசகம் யார் சொன்னது?
இச்செய்தியினை துவக்கத்திலிருந்து நன்றாகக் கவனித்து வந்தால் அது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய வார்த்தை அல்ல என்பதையும் ஆயிஷாவுக்குப் பிந்தைய நபர் கூறிய வார்த்தையே என்பதையும் அறியலாம். ஹிரா குகையில் தங்கியதிலிருந்து நபி தொடர்புடைய பல செய்திகளை ஆயிஷா (ரலி) குறிப்பிட்டு வருகிறார்கள்.
இந்நிகழ்வுகள் எதிலும் ஆயிஷா அவர்கள் நபியுடன் உடனிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தெளிவாகக் குறிப்பிடுவதானால் இந்நிகழ்வு ஆயிஷா அவர்கள் பிறப்பதற்கு சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பே நடைபெற்ற நிகழ்வாகும். ஆக அனைத்தையுமே ஆயிஷா (ரலி) பிற நபித்தோழரிடமிருந்து கேட்டறிந்த தகவல்களைத் தான் எடுத்துக் கூறுகிறார்கள்.
அப்படியிருக்க, நீண்ட சம்பவத்தின் துவக்கத்திலிருந்து எங்கேயும் எனக்கு கிடைத்த தகவலின் படி என்பதைக் கூறாமல் தற்கொலை விவகாரத்தின் போது மாத்திரம் இந்த வாசகம் வருகிறது என்றால் நிச்சயம் இது ஆயிஷா அவர்களின் வார்த்தையல்ல என்பதை சம்பவத்தின் போக்கே காட்டிக் கொடுத்து விடுகிறது.
முழுச் சம்பவத்தையும் ஆயிஷா தான் அறிவிக்கின்றார்கள். அதில் பல தகவல்களைக் கூறுகிறார்கள். எல்லாமே அவர்களுக்குப் பிற நபித்தோழர்கள் மூலம் கிடைத்த தகவல்கள் தாம். எதிலும் அவர்கள் உடனிருக்கவில்லை. அப்படியிருக்க நபி தற்கொலை செய்ய எண்ணினார்கள் என்ற தகவல் வரும் போது மட்டும் ‘எனக்கு கிடைத்த தகவலின் படி’ என்று சொல்வதாக இருந்தால் கண்டிப்பாக இதை ஆயிஷா பயன்படுத்தவில்லை. ஆயிஷாவுக்குப் பிந்தைய அறிவிப்பாளர்களில் – அறிஞர்களில் ஒருவரே இதைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெளிவு.
இப்படி சம்பவத்தின் போக்கை நன்றாக உற்று நோக்கி இந்த வாசகத்தை அதே சம்பவத்தில் இடம்பெறும் ஸூஹ்ரி என்பவரே கூறுகிறார் என்று அறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
அறிஞர் இப்னு ஹஜர் மற்றும் கிர்மானீ ஆகியோர் இதை குறிப்பிடுகின்றனர்.
‘நமக்கு கிடைத்த தகவலின் படி’ என்று சொன்னவர் ஸுஹ்ரி ஆவார். இச்சம்பவத்தோடு நபி தொடர்பாக நம்மை வந்தடைந்த தகவல்களில் இதுவும் ஒன்று என்பது இதன் கருத்தாகும். இது ஸூஹ்ரிக்கு கிடைத்த தகவலாகும். அது முழு அறிவிப்பாளர் தொடருடன் அமையவில்லை இதுவே வெளிப்படையான கருத்து என கிர்மானி கூறுகிறார்.
பத்ஹூல் பாரி, பாகம் 12, பக்கம் 359
எனக்குக் கிடைத்த தகவலின் படி நபி தற்கொலை செய்ய முனைந்தார்கள் எனும் வாசகத்தை சம்பவத்தில் தொடர்புடைய ஸுஹ்ரியோ அல்லது வேறு யாருமோ கூறியிருக்கிறார்கள் எனும்போது இக்கருத்து முழு அறிவிப்பாளர் தொடருடன் அமையப்பெற்ற செய்தியாக இல்லை என்றாகி விடுகிறது.
ஸூஹ்ரி தாபியி ஆவார். அவர் நபிக்கு வஹி வந்த துவக்க காலத்தில் நடைபெற்ற சம்பவத்தைச் சொல்வாரேயானால் இதை அவர் யாரிடமிருந்து அறிந்து கொண்டார் என்கிற நபர்கள் விபரம் இங்கு குறிப்பிடப்படவில்லை. நபித்தோழர் அல்லாதவரிடமிருந்தும் இந்தத் தகவல் அவருக்குக் கிடைத்திருக்கலாம். அவர் யார்? அவரது நம்பகத்தன்மை என்ன உள்ளிட்ட விபரங்கள் இச்செய்தியில் இல்லை.
எனவே நீண்ட செய்தியில் உள்ள இச்சிறுபகுதி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகக் கருதப்படும். இதனடிப்படையில் நபிகளார் தற்கொலைக்கு முயன்றார்கள் எனும் புகாரியில் உள்ள நீண்ட செய்தியின் இந்தப் பகுதி அறிவிப்பாளர் அடிப்படையில் நிராகரிக்கப்பட வேண்டிய பலவீனமான செய்தியாகிறது.
குர்ஆனுக்கு எதிரானது
நபிகள் நாயகம் தற்கொலைக்கு முயன்றார்கள் எனும் இந்தச் செய்தியின் கருத்தும் குர்ஆனுக்கு எதிரானதாகவே உள்ளது.
நபிகள் நாயகம் வஹி நின்று போனதால் தற்கொலைக்கு முயன்றார்கள் என்றால் கடுமையான மன பாதிப்பு நபிக்கு ஏற்பட்டுள்ளது என்றாகிறது. மேலும் ஒவ்வொரு முறை தற்கொலை செய்ய முயற்சிக்கும் போது ஜிப்ரீல் அலை வந்து நீர் தூதர் தாம் என்று கூறிய பிறகே ஆறுதல் அடைவார்கள் என்றால் இது நபிகள் நாயகம் இறைத்தூதில் கடுமையான சந்தேகத்தில் இருந்தார்கள் என்ற கருத்தையும் தருகிறது. இவ்விரண்டுமே திருக்குர்ஆன் கூறும் போதனைகளுக்கு தெளிவாகவே எதிரானதாகும்.
நபிகள் நாயகம் தமக்கு இறைவனின் புறத்திலிருந்து செய்தி வருகிறது என்பதை மக்களிடம் எடுத்துரைத்த போது நபியை பைத்தியக்காரர் என்றே மக்கள் விமர்சித்தனர்.
அதை இறைவன் வன்மையாகக் கண்டித்து நபிக்கு எந்தப் பைத்தியமும் இல்லை அவர் பைத்தியக்காரரும் அல்ல என்கிறான்.
உங்கள் தோழர் (முஹம்மது) பைத்தியக்காரர் அல்லர்.
எனவே (முஹம்மதே!) அறிவுரை கூறுவீராக! உமது இறைவனின் பேரருளால் நீர் சோதிடர் அல்லர். பைத்தியக்காரரும் அல்லர்.
(அல்குர்ஆன்: 52:29) ➚.)
அவர்களின் தோழருக்கு (முஹம்மதுக்கு) எந்தப் பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அவர் தெளிவான எச்சரிக்கை செய்பவரே.
(அல்குர்ஆன்: 7:184) ➚.)
நபிக்கு எந்தப் பைத்தியமும் ஏற்படவில்லை என்று அல்லாஹ் மறுத்துள்ளதோடு அத்தகைய நிலை நபிக்கு எப்போதும் ஏற்படவில்லை என்ற மறுப்பையும் அல்லாஹ் இதில் உள்ளடக்கியுள்ளான். வஹிக்கு முன்பு பைத்தியக்காரராக நபி இருந்தால் அதுவும் நபித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதே.
மனச்சிதைவு ஏற்பட்டுப் பலமுறை தற்கொலை முயற்சி மேற்கொண்ட ஒருவர் அந்தக் கால கட்டத்திலேயே தனக்கு இறைவனின் புறத்திலிருந்து செய்தி வருகிறது என்று கூறினால் மக்கள் எப்படி அவரை இறைத்தூதராக அங்கீகரிப்பார்கள்? இச்செயல் நபித்துவத்தை கடுமையாகப் பாதிக்கும் செயலாகும்.
எனவே எந்நிலையிலும் நபி மனச்சிதைவு உள்ளவராக இருக்கவில்லை என்பதையே மேற்கண்ட வசனம் குறிக்கின்றது. அல்லாஹ் இவ்வாறு கூறியிருக்க நபிகள் நாயகம் தற்கொலை செய்ய முயன்றார்கள் என்றால் அது நபி கடும் மனப்பாதிப்புக்குள்ளாகி இருந்தார்கள் என்று ஆகி விடும். பல தடவை தற்கொலைக்கு முயற்சி செய்த ஒருவரை நிச்சயம் மனப்பாதிப்பு உள்ளவராகவே கருத இயலும். நபியை பைத்தியக்காரர் என்று சொல்வது எப்படியோ அப்படித்தான் பைத்தியக்காரச் செயலை நபி செய்தார்கள் என்று நம்புவதும். குற்றத்தில் இரண்டும் சமமே.
இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது உண்மையானால் அதன் பிறகு எதிரிகள் நபியைப் பைத்தியக்காரர் என்று விமர்சித்தது உண்மை என்றாகி விடும். எனவே இந்தச் செய்தி அறிவிப்பு குறைபாடு இருப்பதுடன் மிக முக்கியமாக குர்ஆனுக்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது. சரியான அறிவிப்பாளர் தொடருடன் இது அமையப் பெற்றிருந்தால் கூட குர்ஆனுக்கு முரண்படும் இத்தன்மையே இதை பலவீனமாக்கப் போதுமானதாகும்.
குர்ஆனுக்கு முரணான இதுபோன்ற செய்திகளை வைத்துக் கொண்டு இஸ்லாத்தைக் களங்கப்படுத்த முடியாது. நபிகள் நாயகம் தொடர்புடைய செய்தியை எப்படி அணுகுவது என்ற அடிப்படை அறிவு இல்லாமலேயே இஸ்லாம் பற்றி விமர்சிக்கப் புறப்பட்ட கிறித்தவக் கூட்டத்திற்கு நாம் என்ன சொல்கிறோம் எனில் நபிமொழியை அணுகும் ஆய்வுத்திறனை வளர்த்துக் கொண்டு அதன்பின் இஸ்லாத்தை விமர்சனம் செய்ய முன்வாருங்கள் என்ற அழைப்பை விடுக்கிறோம்.
புகாரியின் நிலை என்ன?
இது தொடர்பாக முஸ்லிம்களுக்கு அறிவுறுத்த வேண்டிய விஷயமும் இதில் அடங்கியுள்ளது. முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் புகாரியில் ஒரு செய்தி பதிவாகி விட்டால் அவ்வளவு தான்; அதற்கு மேல் வாய் திறக்க கூடாது என்ற வழிகேடான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். நாங்களும் தவ்ஹீத் தான் என்று எக்காளமிடும் ஸலபுக் கும்பலோ அதற்கு ஒத்து ஊதி, ஆமாமாம் புகாரியில் பலவீனமா? என்று எகத்தாளம் பேசி வருகின்றனர்.
புனிதத்தில் குர்ஆனுக்கு நிகராக புகாரி நூலை மதிப்பிடும் இவர்களின் எண்ணக் கோட்டையை இந்தச் செய்தி சுக்கு நூறாக நொறுக்கி, தகர்த்து விடுகிறது. ஏனெனில் நபி தற்கொலைக்கு முயன்றதாக உள்ள இச்செய்தி புகாரியிலேயே உள்ளது.
எல்லாவற்றையும் நம்பித்தான் பதிவு செய்துள்ளார் எனில் நபி தற்கொலை செய்ய பல முறை முயன்றார்கள் என்பது தான் இமாம் புகாரியின் நிலைப்பாடா? புகாரி பதிவு செய்து விட்டார் என்பதால் உலக முஸ்லிம்கள் அனைவரும் நபி தற்கொலை செய்யத் துணிந்தார்கள் என்பதை அவசியம் நம்ப வேண்டுமா?
இமாம் புகாரியை மனிதனாகப் பார்க்காமல் அவரிடத்தில் எந்தத் தவறும் வராது என்ற அளவில் அவரை இறைவனுக்கு இணையாக்கும் இஸ்லாமியர்கள் இதன் மூலம் புகாரி இமாமும் தவறிழைப்பவரே – பலவீனமானதை சரியானது என தவறாக மதிப்பிடுபவரே என்பதை உணர்ந்து கொள்ள முன்வர வேண்டும்.
இந்தச் செய்தியை இமாம் புகாரி, தாபியியின் அல்லது தனது சொந்தக் கூற்றாகப் பதிவு செய்யாமல் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றோடு இணைத்து சரியான அறிவிப்பாளர் தொடர் கொண்ட செய்தியின் தோரணையில் சொன்னது ஏற்க முடியாத தவறாகும். அதனால் அவர் பெரிய அறிஞர் அல்ல என்றாகி விடாது. அவர் மிகப் பெரும் அறிஞர் தான் என்றாலும், நம்மை போன்ற மனிதர் என்ற அடிப்படையில் தவறிழைப்பவர் என்பதை எப்போதும் மறந்து விடக்கூடாது.
குறிப்பு: இதைப் படித்ததும், என்னது? இமாம் புகாரி தவறிழைத்து விட்டாரா? என்று பொங்கியெழுந்து, இல்லையில்லை இமாம் புகாரி இதை கொண்டு வந்ததன் ஹிக்மத் – நுணுக்கம் என்ன தெரியுமா? என்று பயான் பண்ணும் ஸலபுக் கும்பலைப் பார்த்தால் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நேர்வழி வேண்டிப் பிரார்த்திப்பது நமது பொறுப்பாகும்.
பலவீனமான செய்தி
புகாரி அல்லாத மற்ற நூல்களிலும் இச்செய்தி இடம்பெற்றுள்ளது. அவைகளின் தரத்தையும் அறிந்து கொள்வோம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிப்பதாக இதே கருத்தில் அமைந்த வேறொரு செய்தி தப்காதுல் குப்ரா எனும் நூலில் உள்ளது.
நபிகளாருக்கு வஹீ வந்த போது சில நாட்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வரவில்லை. எனவே கடும் கவலை கொண்டு தற்கொலை செய்யும் நோக்கில் ஒரு முறை ஸபீர் என்ற மலைக்கும், மற்றொரு முறை ஹிராவுக்கும் சென்றார்கள். இம்மலைகளை நாடிச் சென்று வந்த நிலையில் வானத்திலிருந்து ஒரு சப்தத்தைக் கேட்டு திடுக்கம் அடைந்து நின்றுவிட்டார்கள். பிறகு தம் தலையை உயர்த்திப் பார்த்தால் அங்கே ஜிப்ரீல் அலை வானத்திற்கும் பூமிக்குமிடையிலுள்ள இருக்கையில் உள்ளடக்கி இருந்தவாறே, ‘முஹம்மதே உண்மையிலேயே நீர் அல்லாஹ்வின் தூதர் தாம், நான் தான் ஜிப்ரீல்’ என்று கூறினார்கள். அதன் பிறகு நபியின் கண்களை அல்லாஹ் குளிர்ச்சிப்படுத்தி உள்ளத்தை இணைத்த நிலையில் திரும்பிச் சென்றார்கள். அதன் பிறகு வஹீ தொடர்ந்து எழுச்சியுடன் வரலாயிற்று.
ஹதீஸ் எண் 469
தப்காதுல் குப்ரா பாகம் 1 பக்கம் 196
இந்தச் செய்தி முற்றிலும் நிரகாரிக்கத்தக்க பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இதில் இடம் பெறும் முஹம்மத் பின் உமர் அல்வாகிதீ என்பவர் பல அறிஞர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானவர் ஆவார்.
இமாம் அஹ்மத் இவரை பொய்யர் என்றும் இமாம் நஸாயி, புகாரி ஆகியோர் வாகிதீ ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
பார்க்க: அல்காமில், பாகம் 7, பக் 481
தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 9, பக் 324
எனவே இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும் என்பதில் சந்தேகமில்லை.
இதே செய்தி இப்னு ஹிப்பானில் ஆயிஷா (ரலி) அறிவிப்பாக வருகிறது.
அதில் இப்னுல் முதவக்கில் என்பார் இடம் பெறுகிறார். இவரும் அறிஞர்களால் குறை சொல்லப்பட்டவரே.
இவரிடம் மறுக்கப்பட வேண்டிய செய்திகள் உள்ளன என தஹபீ விமர்சித்துள்ளார்.
மீஸானுல் இஃதிதால், பாகம் 3, பக்கம் 560
இமாம் அபூஹாதம் அவர்களும் இவரை பலவீனமானவர் என்று குறை கூறியுள்ளார்
அல்முக்னி, பாகம் 2, பக்கம் 628
அதிகம் தவறிழைப்பவர் என்று இப்னு அதீ விமர்சித்துள்ளார்.
தத்கிரதுல் ஹூஃப்பாழ், பாகம் 2, பக்கம் 46
இத்துடன் இப்னு ஹிப்பானின் இந்த அறிவிப்பிலும் துவக்கத்தில் நாம் விளக்கிய எனக்குக் கிடைத்த தகவலின் படி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
எனவே இந்தச் செய்தியும் ஆதாரமாகக் கொள்ள இயலாத பலவீனமான செய்தி என்பது தெளிவாகிறது.
தப்ரீ அவர்களின் அறிவிப்பு
நபியவர்கள் தற்கொலைக்கு முயன்றார்கள் என்ற கருத்திலமைந்த மற்றொரு செய்தி தாரீகு தப்ரீ, பாகம் 2, பக்கம் 298லும் பதிவாகியுள்ளது. ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பாகப் பதிவாகியுள்ள இச்செய்தியில் நுஃமான் பின் ராஷித் என்பார் இடம்பெறுகிறார்.
இவரை அறிஞர்கள் பலரும் பலவீனப் படுத்தியுள்ளனர்.
யஹ்யா அல்கத்தான் இவரை முற்றிலும் பலவீனமானவர் என்றும் இமாம் அஹ்மத் இவரை ஹதீஸ் துறையில் குழப்பமானவர் என்றும்
இப்னு மயீன் பலவீனமானவர் என்றும் இவருடைய செய்திகளில் அதிகம் சந்தேகம் உள்ளது என இமாம் புகாரி அவர்களும், அதிகம் தவறிழைப்பவர் பலவீனமானவர் என நஸாயியும் விமர்சித்துள்ளனர்.
பார்க்க: தஹ்தீபுல் கமால்,
பாகம் 29, பக்கம் 447
எனவே இது குறித்து எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை. அனைத்தும் பலவீன மானவையாகவே உள்ளன.
நபிகள் நாயகம் மனப்பிறழ்ச்சி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்கள் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்ற குர்ஆனுக்கு எதிரான செய்தியாகும்.
இனிமேலும் இதை நபியின் மீது பரப்புவோர் எவரோ அவரே மனப்பிறழ்ச்சி கொண்டோராகக் கருதப்படுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.