05) தப்லீக் ஜமாஅத் தஹ்பீஹ் மணி

நூல்கள்: கொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)

தப்லீக் ஜமாஅத்

முஸ்லிம்களிடம் செல்வாக்குப் பெற்ற இயக்கங்களில் தப்லீக் ஜமாஅத் முதலிடம் வகிக்கின்றது. அந்த ஜமாஅத்தில் நம்மை இணைத்துக் கொள்ளலாமா? அந்த ஜமாஅத்தின் கொள்கை, கோட்பாடுகள் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்துள்ளனவா?

நாற்பது நாட்கள், ஒரு வருடம் என்று ஊர் ஊராக அழைத்துச் சென்று மக்களைத் தொழுகைக்கு அழைக்கின்றனர். இது சரியா? என்றெல்லாம் பல கேள்விகள் முஸ்லிம்களிடையே நிலவுகின்றன.

எனவே இது பற்றி நாம் விரிவாக ஆராய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நாற்பது நாட்களுக்கோ, ஒரு வருடத்திற்கோ மார்க்க வேலைகளுக்காகவோ சொந்த வேலைக்காகவோ வெளியூர் செல்வது மார்க்கத்தில் குற்றமாகாது.

மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காகவும், பிறருக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும், அறப்போர் செய்வதற்காகவும், ஹலாலான முறையில் பொருளீட்டுவதற்காகவும், இன்ன பிற தேவைகளுக்காகவும் பிரயாணம் மேற்கொள்வதை மார்க்கம் தடுக்கவில்லை; அனுமதிக்கின்றது.

மூஸா (அலை) அவர்கள் சில விஷயங்களை அறிந்து கொள்வதற்காக இறைவனது கட்டளைப்படி ஹில்று (அலை) அவர்களைச் சந்திக்க மேற்கொண்ட பயணம் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன்: 18:60)– 18:82)

ஒரே ஒரு மார்க்கச் சட்டத்தை அறிந்து கொள்வதற்காக மக்காவிலிருந்து மதீனாவுக்குப் பயணம் செய்து வந்த நபித் தோழர்களும் இருந்துள்ளனர்.

(புகாரி: 88, 2640)

நல்ல காரியங்களுக்காகப் பிரயாணம் மேற்கொள்ளலாம் என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன. இது பற்றி இன்னும் ஏராளமான சான்றுகளும் உள்ளன.

எனவே பயணம் செய்வது சரியா? தவறா? என்ற அடிப்படையில் இதனை அணுகுவது சரியில்லை. இந்தப் பயணம் எதற்காக மேற்கொள்ளப்படுகின்றது என்ற அடிப்படையிலேயே இந்த ஜமாஅத் சரியான ஜமாஅத்தா? இல்லையா? என்ற முடிவுக்கு வர முடியும்.

‘எதற்காக மக்களை அழைக்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘தொழுகையின் பால் மக்களை அழைப்பதற்காகத் தான் ஆள் சேர்க்கிறோம்’ என்று கூறுகின்றனர்.

‘தொழுகை எனும் மிக முக்கியமான கடமையின் பால் மக்களை அவர்கள் அழைக்கின்றனர்; இதற்காக தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து பிரயாணம் மேற்கொள்கின்றனர்’ என்பது உண்மை தான். * பெருமையும், கர்வமும் கொண்ட பலர், தப்லீக் ஜமாஅத் மூலம் சாதுவானவர்களாக மாறியுள்ளதை மறுக்க முடியாது.

* பெரும் செல்வந்தர்கள் கூட இந்த ஜமாஅத்தில் செல்லும் போது சமையல் செய்வதற்கும் முன் வருகிறார்கள்.

* தஹஜ்ஜுத், லுஹா போன்ற வணக்கங்களைப் பேணுதலுடன் செய்து வருகின்றனர்.

* சினிமாக்களை விட்டு விடுகின்றனர்.

இவைகளெல்லாம் வரவேற்கத் தக்க மாற்றங்கள் என்பதில் ஐயம் இருக்க முடியாது. அந்த ஜமாஅத்தில் உள்ள இது போன்ற நல்ல அம்சங்களை மறுப்பவர்கள் உண்மையை விரும்பக் கூடியவர்களாக இருக்க முடியாது.

அதற்காக ஒட்டு மொத்தமாக தப்லீக் ஜமாஅத்தை ஆதரித்து விட முடியாது.

மார்க்கத்திற்கு விரோதமான போக்குகள் உள்ளனவா என்பதையும் நாம் ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.

ஊர் ஊராக அழைத்துச் செல்லப்படும் மக்களுக்குப் போதிக்கப்படும் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். அவர்களின் தஃலீம் வகுப்புக்களில் திருக்குர்ஆன் விரிவுரையோ, அதன் தமிழாக்கமோ, நபிமொழிகளின் ஆதாரப்பூர்வமான தமிழாக்கமோ படிக்கப்படுவதில்லை.

படிக்கப்படுவது இல்லை என்பது மட்டுமில்லை. படிக்கப்படுவதற்கு பகிரங்கத் தடை விதிக்கப்படுகின்றது. திருக்குர்ஆனையும். நபிகள் நாயகம் (ஸல்) வழியையும் படிக்கத் தடை விதிக்கும் கூட்டத்தில் பயணம் செய்யலாமா?

அல்லாஹ்வுடைய வேதத்துக்கும், அவனது தூதருடைய போதனைக்கும் தடை விதித்து விட்டு, இந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரின் நூல் மட்டுமே படிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த நூலாசிரியருக்கும், ஹஜ்ரத்ஜீக்கும் உள்ள மாமனார் மருமகன்’ உறவு தான் இந்தத் தீர்மானத்திற்குக் காரணம் என்று விபரமறிந்தவர்கள் விமர்சிப்பதில் நியாயம் இருப்பதாகவே நமக்குப் படுகின்றது.

அந்த நூல் தொகுப்பாவது இஸ்லாமிய அடிப்படையில் அமைந்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. திருக்குர்ஆனுக்கே வேட்டு வைக்கும் சங்கதிகள் அந்த நூல் ஏராளம்! இறைத் தூதரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளுக்கும் பஞ்சமில்லை! பெரியார்கள்’ பெயரால் கட்டுக் கதைகள் ஏராளம்! இது போன்ற கதைகளை அறிந்து கொள்வதற்காக பிரயாணம் மேற்கொள்ளலாமா?

தனது வயிற்றுக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் உழைக்குமாறும், குடும்பத்திற்குரிய கடமைகள் ஆற்றுமாறும் இஸ்லாம் போதிக்கின்றது.

1975- حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ ، قَالَ : حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ، قَالَ : حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا

، قَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَا عَبْدَ اللهِ أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ فَقُلْتُ بَلَى يَا رَسُولَ اللهِ قَالَ فَلاَ تَفْعَلْ صُمْ وَأَفْطِرْ وَقُمْ وَنَمْ فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ بِحَسْبِكَ أَنْ تَصُومَ كُلَّ شَهْرٍ ثَلاَثَةَ أَيَّامٍ فَإِنَّ لَكَ بِكُلِّ حَسَنَةٍ عَشْرَ أَمْثَالِهَا فَإِنَّ ذَلِكَ صِيَامُ الدَّهْرِ كُلِّهِ فَشَدَّدْتُ فَشُدِّدَ عَلَيَّ قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنِّي أَجِدُ قُوَّةً قَالَ فَصُمْ صِيَامَ نَبِيِّ اللهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ ، وَلاَ تَزِدْ عَلَيْهِ قُلْتُ وَمَا كَانَ صِيَامُ نَبِيِّ اللهِ دَاوُدَ – عَلَيْهِ السَّلاَمُ- قَالَ نِصْفَ الدَّهْرِ فَكَانَ عَبْدُ اللهِ يَقُولُ بَعْدَ مَا كَبِرَ يَا لَيْتَنِي قَبِلْتُ رُخْصَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم.

கட்டிய மனைவியைக் கவனிக்காமல் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவு முழுவதும் வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் என்ற தோழரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்விப்பட்டு அவரிடம் சென்றார்கள். ‘இவ்வாறு செய்யாதே! நோன்பு வை! வைக்காமலும் இரு! தொழவும் செய்! தூங்கவும் செய்! ஏனெனில் உனது உடம்புக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உனது கண்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உன் விருந்தினருக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

(புகாரி: 1975, 6134)

1968- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ ، حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ ، عَنْ أَبِيهِ
، قَالَ آخَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ سَلْمَانَ وَأَبِي الدَّرْدَاءِ فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً فَقَالَ لَهَا مَا شَأْنُكِ قَالَتْ أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا فَجَاءَ أَبُو الدَّرْدَاءِ فَصَنَعَ لَهُ طَعَامًا فَقَالَ كُلْ قَالَ فَإِنِّي صَائِمٌ قَالَ مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ قَالَ فَأَكَلَ فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُو الدَّرْدَاءِ يَقُومُ قَالَ نَمْ فَنَامَ ثُمَّ ذَهَبَ يَقُومُ فَقَالَ نَمْ فَلَمَّا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ قَالَ سَلْمَانُ قُمِ الآنَ فَصَلَّيَا فَقَالَ لَهُ سَلْمَانُ إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا وَلأَهْلِكَ عَلَيْكَ حَقًّا فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم صَدَقَ سَلْمَان

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸல்மான் (ரலி), அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்ற போது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முதர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். ‘உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று அவரிடம் ஸல்மான் (ரலி) கேட்டார். அதற்கு உம்முதர்தா (ரலி), ‘உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையும் இல்லை’ என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து ஸல்மானுக்காக உணவு தயாரித்தார். ஸல்மான் அபுத்தர்தாவிடம், ‘உண்பீராக!’ என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, ‘நான் நோன்பு வைத்திருக்கிறேன்’ என்றார். ‘நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்’ என்று ஸல்மான் கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரலி) நின்று வணங்கத் தயாரானார். அப்போது ஸல்மான் (ரலி) ‘உறங்குவீராக!’ என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் ஸல்மான், ‘உறங்குவீராக!’ என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் ஸல்மான் (ரலி) ‘இப்போது எழுவீராக!’ என்று கூறினார். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம் ‘உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக!’ என்று ஸல்மான் (ரலி) கூறினார். பின்பு அபுத்தர்தா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘ஸல்மான் உண்மையையே கூறினார்!’ என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூஜுஹைபா (ரலி)

(புகாரி: 1968, 6139)

சில்லா’வுக்கு அழைக்கும் போது இந்தக் கடமைகள் பின் தள்ளப்படுகின்றன. அல்லாஹ் பார்த்துக் கொள்வான்’ என்று கூறி எல்லாக் கடமைகளையும் புறக்கணிக்கச் செய்யும் அளவுக்கு இந்த சில்லா’வின் மீது வெறியூட்டப்படுகின்றது. அல்லாஹ் பார்த்துக் கொள்வான்’ என்பதற்கு இவர்கள் கொண்டது தான் பொருள் என்றால் குடும்பத்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவன் நம் மீது சுமத்தியிருப்பானா என்று இவர்கள் சிந்திப்பதில்லை. பல கடமைகளைப் புறக்கணிக்கத் தூண்டும் இந்தப் பிரயாணம் சரி தானா என்பதைச் சிந்தியுங்கள்!

அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையிலாவது இவர்கள் உண்மையாளர்களாக இருக்கிறார்களா? இவர்கள் தான் இந்த விஷயத்தில் மிகவும் குறைந்த நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர். எந்த இயக்கமும் எந்த நபரும் பயணத்தின் போது பண்ட பாத்திரங்களையும், சட்டி பெட்டிகளையும் தூக்கிக் கொண்டு செல்வதில்லை. ஆனால் இவர்கள் அனைத்து சமையல் சாதனங்களையும் கூடவே எடுத்துச் செல்பவர்களாக உள்ளனர். அதாவது சோத்துக்கு மட்டும் அல்லாஹ் பார்த்துக் கொள்ள மாட்டான் என்பது போல் இவர்களின் நம்பிக்கை அமைந்துள்ளது.

மேலும் இந்த ஜமாஅத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளும், வீரமும் மழுங்க வைக்கப்படும் அளவுக்கு, மூளைச் சலவை செய்யப்படுகின்றது.

தங்கள் உயிரைத் தியாகம் செய்வதற்காக அறப்போருக்குச் சென்ற நபித் தோழர்களின் வீரமிக்க பயணமும், இது பற்றி ஆர்வமூட்டிய நபிமொழிகளும் சோற்றுப் பொட்டலத்தைத் தூக்கிக் கொண்டு இவர்கள் செல்கின்ற பயணத்தைப் பற்றியது என்று போதிக்கத் துணிந்து விட்டனர்.

தஸ்பீஹ் மணியை உருட்டிக் கொண்டு, முழங்காலுக்குக் கீழ் ஜுப்பாவை அணிந்து கொண்டு பள்ளியின் ஒரு மூலையில் அல்லது ஒரு தூணில் சாய்ந்து விடுவது தான் இஸ்லாம் என்று கற்பிக்கத் தலைப்பட்டு விட்டனர். இஸ்லாத்திற்கு தவறான வடிவத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களைக் கோழைகளாக ஆக்கும் இந்த ஜமாஅத் எப்படி சரியான ஜமாஅத்தாக இருக்க முடியும்?

ஒரு மனிதனுக்கு அதிகபட்சம் எந்த அளவுக்கு மரியாதை செய்யலாம் என்பதற்கு இஸ்லாம் வரம்பு கட்டியுள்ளது. இந்த வரம்பு மார்க்கத்தின் பெயரால் மீறப்படுகின்றது.

ஷியாக்களில் உள்ள மதத் தலைமை போல் தப்லீக் ஜமாஅத்திலும் ஹஜ்ரத்ஜீ’ என்ற பெயரால் மதத் தலைமை உருவாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதருக்கு, அவர்களின் தோழர்கள் செய்யாத அளவுக்கு ஹஜ்ரத்ஜீ’க்கு மரியாதை செய்யப்படுகின்றது.!

1635- حَدَّثَنَا إِسْحَاقُ ، حَدَّثَنَا خَالِدٌ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم جَاءَ إِلَى السِّقَايَةِ فَاسْتَسْقَى فَقَالَ الْعَبَّاسُ يَا فَضْلُ اذْهَبْ إِلَى أُمِّكَ فَأْتِ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم بِشَرَابٍ مِنْ عِنْدِهَا فَقَالَ اسْقِنِي قَالَ يَا رَسُولَ اللهِ إِنَّهُمْ يَجْعَلُونَ أَيْدِيَهُمْ فِيهِ قَالَ اسْقِنِي فَشَرِبَ مِنْهُ ثُمَّ أَتَى زَمْزَمَ وَهُمْ يَسْقُونَ وَيَعْمَلُونَ فِيهَا فَقَالَ اعْمَلُوا فَإِنَّكُمْ عَلَى عَمَلٍ صَالِحٍ ، ثُمَّ قَالَ – لَوْلاَ أَنْ تُغْلَبُوا لَنَزَلْتُ حَتَّى أَضَعَ الْحَبْلَ عَلَى هَذِهِ ، يَعْنِي عَاتِقَهُ – وَأَشَارَ إِلَى عَاتِقِهِ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்ட போது குடி தண்ணீர் விநியோகிக்கப்படும் தண்ணீர்ப் பந்தலுக்கு வந்தார்கள். குடிக்க தண்ணீர் கேட்டார்கள். நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ், தண்ணீர்ப் பந்தன் பொறுப்பாளராக இருந்தார். அவர் தமது இளைய மகன் ஃபழ்லு என்பாரை அழைத்து, ‘வீட்டிற்குச் சென்று உன் தாயாரிடம் நபிகள் நாயகத்துக்காக குடிதண்ணீர் வாங்கி வா’ என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இந்தத் தண்ணீரையே தாருங்கள்’ எனக் கேட்டார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! இதில் மக்கள் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே’ என்று அப்பாஸ் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘பரவாயில்லை! இதனையே எனக்குக் குடிக்கத் தாருங்கள்’ எனக் கேட்டு அந்தத் தண்ணீரைக் குடித்தார்கள். பின்னர் புனிதமான ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் அந்தக் கிணற்று நீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டும், அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி ‘இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்! நீங்கள் சிறப்பான பணியையே செய்கிறீர்கள். நானும் இப்பணியைச் செய்வதால் நீங்கள் எனக்காக ஒதுங்கிக் கொள்வீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நானும் கிணற்றில் இறங்கி இந்தத் தோளில் தண்ணீர் சுமந்து மக்களுக்கு விநியோகம் செய்திருப்பேன்’ என்று கூறினார்கள்.

(புகாரி: 1636)

மற்றவர்கள் அருந்துகிற அதே தண்ணீரைத் தமக்கும் தருமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்கின்றார்கள். தமது பெரிய தந்தையின் வீட்டிருந்து நல்ல தண்ணீர் பெற்றுக் குடிப்பது யாராலும் பாரபட்சமாக எடுத்துக் கொள்ளப்படாது என்ற நிலையிலும் மக்கள் எந்தத் தண்ணீரைப் பருகுகிறார்களோ அதையே பருகுவதில் பிடிவாதமாக இருக்கின்றார்கள். பலதரப்பட்டவர்களின் கைகள் இத்தண்ணீரில் பட்டுள்ளது என்று தக்க காரணத்தைக் கூறிய பிறகும் அந்தத் தண்ணீரையே கேட்டுப் பருகுகின்றார்கள்.

தப்லீக் ஜமாஅத்தின் இஜ்திமாக்களில் ஹஜ்ரத்ஜீக்கும் முக்கிய தலைவர்களுக்கும் சிறப்பு உணவு வழங்கப்டுகின்றது.

ஹஜ்ரத்ஜீ என்பவர் மற்றவர்களைப் போன்ற மனிதர் அல்ல என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகரின் வாரிசுகள் தான் அந்தப் பதவிக்கு வர முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது.

ஒரு முழம் உயரத்திற்கு ஒரு குஷன் மெத்தை

உயரமாக திண்டுகள்

உடலைப் பிடித்து விடுவதற்காக விடலைப் பையன்கள்

இப்படி ராஜ தர்பார் கொடிகட்டிப் பறக்கின்றது. பிற மதங்களின் அவதாரப் புருஷர்கள் போலவும், ஆச்சார்யர்கள் போலவும் இப்பதவியைப் பெற்றவர்கள் மதிக்கப்படும் நிலை உள்ளது.

அவர் வருவதற்கு முன் பராக் சொல்ல எத்தனை பேர்? அவரைத் தொட்டு விட்டாலே பாவங்கள் பறந்து போகும் என்போர் எத்தனை பேர்?

திண்டுக்கல்லில் (1990) நடந்த தப்லீக் ஜமாஅத் மாநாட்டுக்காக போஸ்ட் கார்டுகள், பள்ளிவாசல் போர்டுகள், ஜும்ஆ பிரசங்கங்கள் மூலம் மக்கள் அழைக்கப்பட்ட போது ‘ஹஜ்ரத்ஜீ’யின் துஆவுக்கு வாருங்கள்’ என்பதே பிரதானப்படுத்தப்பட்டது. அங்கு பேசப்படும் கருத்துக்களை விட இவரது நல்லாசியே முக்கிய குறிக்கோளாகிப் போனது. இந்த துஆ நடக்கும் நேரத்திற்கு மட்டுமே புறப்படுபவர்களும் உள்ளனர்.

உலகத்தில் வாழுகின்ற – அல்லது இந்தியாவில் வாழுகின்ற முஸ்லிம்களில் இவர் தான் இறைவனுக்கு மிகவும் உவப்பானவர் என்று இவர்களுக்குச் சொல்லித் தந்தவர் யார்?

இவர் துஆ செய்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற உத்திரவாதத்தை இறைவனிடமிருந்து பெற்றுத் தந்தவர் யார்?

இவரது துஆவுக்கு இருக்கும் அற்புத சக்தியை இவர்கள் எவ்வாறு கண்டுபிடித்தனர்?

இன்னும் அனேகக் குறைபாடுகள்!

* சட்டங்களை ஆலிம்கள் தான் சொல்ல வேண்டும் என்று புரோகிதத்துக்கு வக்காலத்து!

* நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே தீமையைக் கண்டு கொள்ளாத நிலை!

நன்மைகளிலும் ஒன்றிரண்டு நன்மைகளை மட்டுமே சொல்லிவிட்டு மற்ற நன்மைகளை பேசாமல் மவுனம் சாதித்தல்.

இப்படி தப்லீக் ஜமாஅத்தின் தீய செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

குறிப்பு : இல்யாஸ் மவ்லானா அவர்களின் தப்லீக்குக்கும் இன்று மாறியுள்ள தப்லீக்குக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

தஸ்பீஹ் மணி

பிற மதத்தவர்கள் வைத்திருக்கும் ஜெபமாலையிலிருந்து காப்பியடிக்கப்பட்டதே தஸ்பீஹ் மணி.

அல்லாஹ்வின் தூதரும், அவர்களின் அன்புத் தோழர்களும் இந்த ஜெபமாலையை வைத்துக் கொண்டிருக்கவில்லை.

4033 – حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِى مُنِيبٍ الْجُرَشِىِّ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
« مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ».

‘யார் பிற சமயக் கலாச்சாரத்திற்கேற்ப நடக்கின்றாரோ அவர் அவர்களைச் சேர்ந்தவரே’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல்கள் :(அபூதாவூத்: 3512),(அஹ்மத்: 4868)

எனவே பிற சமயத்தவரிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்த தஸ்பீஹ் மணி தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

3410 – حدثنا أحمد بن منيع حدثنا إسماعيل بن علية حدثنا عطاء بن السائب عن أبيه عن عبد الله بن عمرو رضي الله عنهما قال :

قال رسول الله صلى الله عليه و سلم خلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة ألا وهما يسير ومن يعمل بهما قليل يسبح الله في دبر كل صلاة عشرا ويحمده عشرا ويكبره عشرا قال فأنا رأيت رسول الله صلى الله عليه و سلم يعقدها بيده قال فتلك خمسون ومائة باللسان وألف وخمسمائة في الميزان وإذا أخذت مضجعك تسبحه وتكبره وتحمده مائة فتلك مائة باللسان وألف في الميزان فأيكم يعمل في اليوم والليلة ألفين وخمسمائة سيئة ؟ قالوا وكيف لا يحصيهما قال يأتي أحدكم الشيطان وهو في صلاته فيقول اذكر كذا اذكر كذا حتى ينتقل فلعله لا يفعل ويأتيه وهو في مضجعه فلا يزال ينومه حتى ينام

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் தஸ்பீஹ் எண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன்’

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்கள் :(திர்மிதீ: 3332, 3408), நஸயி 1331,

 

‘உங்கள் விரல்களால் எண்ணுங்கள்! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புஸ்ரா (ரலி)

நூல்கள் :(திர்மிதீ: 3507),(அபூதாவூத்: 1283)

தஸ்பீஹ் மணியை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் வருமாறு:

‘நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு பெண்ணிடம் சென்றோம். அவருக்கு முன்னால் சிறு கற்களோ, பேரீச்சங் கொட்டைகளோ இருந்தன. அவற்றைக் கொண்டு அப்பெண் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தார்’

அறிவிப்பவர் : ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி)

நூல்கள் :(திர்மிதீ: 3491),(அபூதாவூத்: 1282)

இந்த ஹதீஸின் அடிப்படையில் தஸ்பீஹ் மணி வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர்.

ஆனால் இந்த ஹதீஸ் நம்பகமானது அல்ல. ஏனெனில் இதன் மூன்றாவது அறிவிப்பாளர் குஸைமா என்பவர் யாரென்று அறியப்படாதவர். இதனை தஹபீ அவர்கள் மீஸானிலும், இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீபிலும், குறிப்பிடுகிறார்கள்.

மேலும் இதன் நான்காவது அறிவிப்பாளர் ஸயீத் பின் அபீ ஹிலால் என்பவர் நம்பகமானவராக இருந்தவர். எனினும் கடைசிக் காலத்தில் நினைவுத் தடுமாற்றம் கொண்டவராகி விட்டார் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் கூறுகின்றார். எனவே இந்த ஹதீஸ் ஏற்கப்பட முடியாததாகும்.

தஸ்பீஹ் மணியை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் மற்றொரு ஆதாரம்:

‘நான் தஸ்பீஹ் செய்வதற்கு நான்காயிரம் பேரீச்சம் பழக் கொட்டைகளைக் குவித்து வைத்திருந்த போது என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள் ‘நீ செய்து கொண்டிருக்கும் தஸ்பீஹை விடச் சிறந்ததை நான் உனக்குக் கூறட்டுமா?’ கேட்டார்கள். ‘எனக்குக் கூறுங்கள்’ நான் கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று கூறு!’ என்றார்கள்.

அறிவிப்பவர் : சஃபிய்யா (ரலி)

(திர்மிதீ: 3477)

இந்த ஹதீஸும் நம்பகமானது அல்ல. ஏனெனில் இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய ஹாஷிம் பின் ஸஃது என்பவர் நம்பகமானவர் அல்ல என்று தஹபீ அவர்கள் மீஸானி’லும், இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீபிலும் கூறுகின்றனர்.

மேலும் இதன் இரண்டாம் அறிவிப்பாளர் கினானா’ என்பவர் யாரென்றே தெரியாதவர்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மார்க்கத்தில் எப்போது பார்த்தாலும் தஸ்பீஹ் செய்து கொண்டிருக்க வேண்டும் எனக் கூறப்படவில்லை. ஒரு முஸ்லிமுக்கு ஏராளமான கடமைகள் உள்ளன.

மனைவி, மக்களைக் காக்கும் கடமை, பிரச்சாரம் செய்யும் கடமை போன்ற கடமைகளைச் செய்ய வேண்டியவன் பல்லாயிரக் கணக்கில் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தால் அந்தக் கடமைகளையெல்லாம் அவனால் செய்ய முடியாமல் போகும்.

நபிகள் நாயகம் அவர்கள் கற்றுத் தந்த திக்ருகளில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் கூறப்படும் அதிக பட்ச எண்ணிக்கை 100 க்கு மேல் இல்லை. இதை எண்ணுவதற்கு கைவிரல்களே போதுமானதாகும்.

தஸ்பீஹ் மணி ஏற்படுத்திய விளைவுகளையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தாம் எப்போதும் அல்லாஹ்வின் நினைவில் நிலைத்திருப்பதாக தம்பட்டம் அடிக்கும் போக்கை இது ஏற்படுத்தி விட்டது.

தஸ்பீஹ் மணியைக் கையால் உருட்டிக் கொண்டு மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருப்பவர்களையும் கூட நாம் காண முடிகின்றது.

இன்னும் சிலர் தஸ்பீஹ் மணியை உருட்டும் போது யாரேனும் ஸலாம் கூறினால் அதற்குக் கூட அவர்கள் பதில் சொல்வதில்லை. ஒரு தலை அசைப்புத் தான் ஸலாமுக்குப் பதிலாகக் கிடைக்கும். ஸலாமுக்குப் பதில் கூறுவது கடமை என்பதைக் கூட இவர்களால் உணர முடியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இல்லாத இந்த நவீன கண்டு பிடிப்பு அல்லது காப்பியடிப்பு புனிதம் நிறைந்த பொருளாகக் கூட மாறி விட்டது.

நபிகள் நாயகம் அவர்களின் காலத்தில் இது இல்லாததாலும் அது ஏற்படுத்தும் தீய விளைவின் காரணமாகவும், பிறரிடமிருந்து அது காப்பியடிக்கப்பட்டது என்பதாலும் இந்த ஜெபமாலை தவிர்க்கப்பட வேண்டும். இஸ்லாத்திற்கும், இதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.