தன்னம்பிக்கை ஊட்டும் விதி

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1
முன்னுரை

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்திலும் பலமான உயிரினங்கள் உண்டு. பலவீனமான உயிரினங்களும் உண்டு. இதில் குறிப்பாக மனிதன் உடல் உறுப்புகள் இழந்தோ அல்லது பிறக்கும் போதே ஊனமுள்ளவனாகவோ பிறந்தால் மனவேதனைப்படுகிறான். தீராத நோய்கள் ஏற்பட்டு அதனால் மனவேதனை படுகிறான்.

சிந்திக்கும் அறிவு குறைவால் தன்னால் பெரிய அளவு சாதிக்க முடியவில்லையே என்று கவலைப்படுகிறான். இதுபோன்று எண்ணெற்ற விசயங்களில் ஒருவர் அறிவால், சிந்தனையால், ஆற்றலால், உடல் வலிமையால், ஆரோக்கியத்தால், சிறப்புக்குரியவராகத் திகழ்வார். அதே வேளையில் இன்னொருவர் மேலே சொன்ன அனைத்து விசயங்களிலும் ஒருபடி கீழே இருப்பார். அல்லது மிகவும் கீழ் நிலையில் இருப்பார். இந்த நிலையை சந்திக்கும்போது எல்லாம் என் தலை விதி என்று சலித்துக் கொண்டு மனமுடைந்து மூலையில் முடங்கி போய்விடுவான்.

ஆனால் இஸ்லாமிய மார்க்கம் இவ்வாறு பாதிக்கபட்டோருக்கு திருமறைக்குர்ஆன் மூலம் ஆறுதல் கூறுகிறது.

لِّـكَيْلَا تَاْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰٮكُمْ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِۙ‏

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்). கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்

(அல்குர்ஆன்: 57:23)

இந்த வசனம் இழந்தவர்கள் என்ற ஒருசாராரைப் பற்றியும் வழங்கப்பட்டவர்கள் என்ற இன்னொரு சாராரைப் பற்றியும் கூறுகிறது.

தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தியுள்ளான் என்று அல்லாஹ் கூறுகின்றான். இழப்பவர்களே! அதிகம் பாதிக்கப்படுபவார்கள். அவர்கள் இந்த உலகில் எவற்றையெல்லாம் இழக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

உடல் உறுப்புகள் இழந்தவர்கள்

உலகில் உள்ள ஆண்கள் பெண்களில் கண் இல்லாதவர்களும், வாய் பேசமுடியதவர்களும், காது கேட்காதவர்களும், கை,கால்களில் ஊனமுள்ளவர்களும் இருக்கின்றனர். இவர்களின் மனநிலையை பார்த்தோம் என்றால் நாங்கள் என்ன பாவம் செய்தோம். எதற்காக இந்த இழிநிலை? கண் இல்லாதவர் கூறுகிறார்…! எங்களால் இந்த உலகத்தைப் பார்க்க முடியவில்லை. என்ற கவலை! வாய் பேசமுடியதவர்களுக்கு நான் நினைக்கும் கருத்துக்களை என்னால் சொல்ல முடியவில்லை என்ற கவலை! காது கேட்காதவர்கள், நல்ல விசயங்களை என்னால் கேட்க முடியவில்லை என்ற கவலை! போலியோவால் பாதிக்கப்பட்டு கை, கால்களில் ஊனமுள்ளவர்களுக்கு, சொந்தக்காலில் நின்று எங்கேயும் செல்ல முடியவில்லை, உழைக்க முடியவில்லை என்ற கவலை ஏற்படும்.

அழகு குறைந்தவர்கள்

உலகில் உள்ளவர்களில் சிலர் வெள்ளை நிறத்தோடு நல்ல அழகுள்ளவர்களாக இருப்பதைப் பார்க்கலாம். அதே நேரத்தில் சிலர் கருப்பு நிறத்தவர்களாக உள்ளதை பார்க்கலாம். இவர்களில் கருப்பு நிறம் பெற்றவர்கள் தன்னுடைய நிறம் இவ்வாறு உள்ளதே! என்று மனம் வருத்தப்படுவதுண்டு.

குறிப்பாக இது போன்ற குறைபாடுள்ள பெண்களை திருமணம் முடிக்க அதிகமான ஆண்கள் முன்வருவதில்லை. இதனால் தாங்கள் விரும்பும் மாப்பிள்ளையை திருமணம் முடிக்க ஆசைப்பட்டாலும் அது நடப்பதற்கு நிறம் தடையாகி விடுகிறது. ஏதோ வந்த மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து காலத்தை ஓட்டுகின்றனர். இது போன்றவர்களுக்கு நிறம் குறையாகிவிடுகிறது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அறிவு குறைந்தவர்கள்

கூர்மையான, சிந்தித்து பார்க்கக்கூடிய, அறிவுபடைத்தவர்கள் உலகில் சாதனை படைக்கின்றனர். டாக்டராக, இன்ஜினியராக, வக்கீலாக, நீதிபதியாக, விஞ்ஞானியாக பல பதவிகளைப் பெற்று உயர்ந்த அந்தஸ்தில் இருக்கின்றனர். ஆனால் படிக்கத் தெரியாத பாமர மக்கள் தங்களுக்கு கிடைத்ததை வைத்து போதுமாக்கிக் கொண்டு வாழ்பவர்களும் இருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு தன்னால் பல முயற்சிகள் செய்தும் சாதிக்க முடியவில்லையே! திறமை இருந்தும் வெற்றி பெறமுடியவில்லையே! செல்வந்தர்களாக, ஆகமுடியவில்லையே! இதனால் மக்கள் மத்தியில் மதிப்பும் அந்தஸ்தும் குறைந்தவர்களாக இருக்கிறோம் என்ற கவலை ஏற்படுகிறது.

நோயால் பாதிக்கபட்டவர்கள்

மனிதனாகப் பிறந்துள்ள அனைவருக்கும் நோய் வராமல் இருப்பதில்லை. அவ்வப்பொழுது வந்துபோய் வரும் நோய்களால் நாம் கவலைப்படுவது கிடையாது. ஆனால் நிரந்தரமாக, கடுமையான, கொடுமையான நோய்களால்தான் மனிதர்களாகிய நாம் கவலைப்படுகிறோம். புற்றுநோய், காசநோய், எய்ட்ஸ், தீரா வயிற்று வலி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னுடைய அறுபது வருட காலமும் மன வேதனைக்கு ஆளாகின்றனர். சில நோய்களால் சமுதாயத்தால் புறக்கணிக்கபடும்போது மிகவும் வருத்தப்பட்டு நொந்துபோகின்றனர். இப்படி ஏதோ ஒரு வகையில் இழப்பை சந்தித்தவர்களாகவே இருப்போம். இதற்கு வழியேதும் இல்லையா என்றால் கண்டிப்பாக உண்டு.

இந்த உலகில் நாம் இழந்ததற்கும், கஷ்டபட்டதற்கும், மனவேதனைக்கு ஆளானதிற்கும், அல்லாஹ் மறுமையில் அதற்குரிய கூலியை தருவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பொறுத்துக்கொண்டால் சொர்க்கம் உண்டு

வலிப்பு நோயை சகித்துக்கொண்டதற்காக அல்லாஹ் அந்தப் பெண்மணிக்கு சொர்க்கம் தருவதாக வாக்களிக்கிறான்.

حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ :
قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلاَ أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ فَقَالَتْ أَصْبِرُ فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ أَنْ لاَ أَتَكَشَّفَ فَدَعَا لَهَا

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர்.

இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமாக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னார்கள்.

இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

அறி : அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)
நூல் : (புகாரி: 5652) 

பார்வை இல்லாமல் இருப்பது இறைவனது சோதனை என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கும் அழகான கண்களோடு சொர்க்கம் உண்டு

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ
إِنَّ اللَّهَ قَالَ إِذَا ابْتَلَيْتُ عَبْدِي بِحَبِيبَتَيْهِ فَصَبَرَ عَوَّضْتُهُ مِنْهُمَا الْجَنَّةَ يُرِيدُ عَيْنَيْهِ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறுகிறான்: நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை(ப் பறித்து)க்கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன்

“அவனுடைய பிரியத்திற்குரிய இரு பொருட்கள்” என்பது அவருடைய இரு கண்களைக் குறிக்கும்.

அறி : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : (புகாரி: 5653) 

நோய் வந்தால் பாவங்கள் மன்னிக்கப்படும்
عَنِ ابْنِ مَسْعُودٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
دَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ يُوعَكُ فَمَسِسْتُهُ فَقُلْتُ إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا قَالَ أَجَلْ كَمَا يُوعَكُ رَجُلاَنِ مِنْكُمْ قَالَ لَكَ أَجْرَانِ قَالَ نَعَمْ مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى مَرَضٌ فَمَا سِوَاهُ إِلاَّ حَطَّ اللَّهُ سَيِّئَاتِهِ كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا.

நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் கண்டு சிரமப்பட்டுக்கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்று அவர்களை(ப் பரிவோடு) தொட்டேன். அப்போது நான், “தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று (நான் ஒருவனே அடைகிறேன்)” என்றார்கள்.

நான் “(இத்துன்பத்தின் காரணமாக) உங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்குமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் , “ஆம். ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை” என்றார்கள்.

அறி : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : (புகாரி: 5667) 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَعَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ ، وَلاَ وَصَبٍ ، وَلاَ هَمٍّ ، وَلاَ حُزْنٍ ، وَلاَ أَذًى ، وَلاَ غَمٍّ حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلاَّ كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.

அறி : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : (புகாரி: 5641) , 5642

பெற்ற குழந்தை இறந்தால் நரகத்திலிருந்து காக்கும் திரையாகி விடும்
 عَنْ أَبِي سَعِيدٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ النِّسَاءَ قُلْنَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم اجْعَلْ لَنَا يَوْمًا فَوَعَظَهُنَّ وَقَالَ أَيُّمَا امْرَأَةٍ مَاتَ لَهَا ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ كَانُوا حِجَابًا مِنَ النَّارِ قَالَتِ امْرَأَةٌ وَاثْنَانِ قَالَ وَاثْنَانِ.

பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) “”எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங்களேன்” எனக் கேட்டுக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள், பெண்களுக்கு ஒருநாள் உபதேசம் செய்தார்கள்.

அதில் “ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால் அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக ஆகிவிடுவார்கள்” எனக் கூறியதும் ஒரு பெண் “இரு குழந்தைகள் இறந்தால்?” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ இரு குழந்தைகள் இறந்தாலும்தான்” என்றார்கள்.

அறி : அபூசயீத் (ரலி)
நூல் : (புகாரி: 1249) 

தன்னால் கொடுக்கப்பட்ட சோதனைக்கு ஏக இறைவனாகிய அல்லாஹ் தானே பொறுப்பேற்றுகொண்டு, அனைத்து இழப்புகளுக்கும் பாவமன்னிப்பையும், கண்ணை இழந்திருந்தால் கண்ணைக் கொடுத்தும், கால்களை இழந்திருந்தால் கால்களைக் கொடுத்தும், கைகளை இழந்திருந்தால் கைகளைக் கொடுத்தும், அழகை இழந்திருந்தால் அழகைக் கொடுத்தும், மொத்தத்தில் எதையெல்லாம் இழந்திருந்தாரோ அத்தனையையும் கொடுத்து மறுமையில் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான்.

மறுமையில் அழகாக்கப்படும் உடல்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :
إِنَّ أَوَّلَ زُمْرَةٍ يَدْخُلُونَ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ عَلَى أَشَدِّ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ إِضَاءَةً لاَ يَبُولُونَ ، وَلاَ يَتَغَوَّطُونَ ، وَلاَ يَتْفِلُونَ ، وَلاَ يَمْتَخِطُونَ أَمْشَاطُهُمُ الذَّهَبُ وَرَشْحُهُمُ الْمِسْكُ وَمَجَامِرُهُمُ الأَلُوَّةُ الأَنْجُوجُ عُودُ الطِّيبِ وَأَزْوَاجُهُمُ الْحُورُ الْعِينُ عَلَى خَلْقِ رَجُلٍ وَاحِدٍ عَلَى صُورَةِ أَبِيهِمْ آدَمَ سِتُّونَ ذِرَاعًا فِي السَّمَاءِ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்; எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மூக்கு சிந்தவும் மாட்டார்கள்.

அவர்களுடைய சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களுடைய வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய, (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அகில் என்பது நறுமணக் குச்சியாகும். அவர்களுடைய மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 3327) 

மேற்கண்டவாறு பல நன்மைகளை வாரிவழங்கி, நாம் கஷ்டப்படும் ஒவ்வொன்றுக்கும் வெகுமதிகள் உண்டு என்று கூறி தன்னுடைய அடியார்களுக்கு வாழ்வில் தன்னம்பிக்கை ஏற்படுத்தி ஊக்கப்படுத்தி இந்த பூஉலகில் வாழ்வதற்கு அனைத்து உபதேசங்களையும் இறைவன் வழங்குகிறான்.

சில நிபந்தனைகள்

தனக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை எண்ணி, மரணத்தைக் கேட்கக் கூடாது.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم :
لاَ يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ مِنْ ضُرٍّ أَصَابَهُ فَإِنْ كَانَ لاَ بُدَّ فَاعِلاً فَلْيَقُلِ اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتْ الْوَفَاةُ خَيْرًا لِي.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாகவேண்டும் என்றிருந்தால் “இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக!” என்று கேட்கட்டும்.

அறி : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : (புகாரி: 5671) 

அல்லாஹ்வைத் திட்டி விடக்கூடாது

அல்லாஹ்வுக்கு கண் இல்லையா! இவன் எல்லாம் ஒரு கடவுளா! எனக்கு கஷ்டத்தை கொடுத்தவன் இறைவனே கிடையாது! என்றெல்லாம் பேசாது பொறுமையோடு இருக்க வேண்டும்.

وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும்உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக.

(அல்குர்ஆன்: 2:155)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِامْرَأَةٍ عِنْدَ قَبْرٍ وَهِيَ تَبْكِي فَقَالَ اتَّقِي اللَّهَ وَاصْبِرِي.

அடக்கவிடம் (கப்று) அருகில் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “”அல்லாஹ்வைப் பயந்துகொள்! பொறுமையாயிரு!” எனக் கூறினார்கள்.

அறி : அனஸ் (ரலி)
நூல் : (புகாரி: 1252) 

இணைகற்பிக்கக் கூடாது
اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில்உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

(அல்குர்ஆன்: 4:48)

وَلَـقَدْ اُوْحِىَ اِلَيْكَ وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَ‌ۚ لَٮِٕنْ اَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏
بَلِ اللّٰهَ فَاعْبُدْ وَكُنْ مِّنَ الشّٰكِرِيْنَ‏

“நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

(அல்குர்ஆன்: 39:65,66)

தற்கொலை செய்யக்கூடாது
عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
…وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அவர் அதே ஆயுதத்தால் நரகில் வேதனை செய்யப்படுவார்.

அறி : ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)
நூல் : (புகாரி: 1363) 

1364 – وَقَالَ حَجَّاجُ بْنُ مِنْهَالٍ ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ ، عَنِ الْحَسَنِ ، حَدَّثَنَا جُنْدَبٌ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، فِي هَذَا الْمَسْجِدِ فَمَا نَسِينَا وَمَا نَخَافُ أَنْ يَكْذِبَ جُنْدَبٌ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
كَانَ بِرَجُلٍ جِرَاحٌ فَقَتَلَ نَفْسَهُ فَقَالَ اللَّهُ بَدَرَنِي عَبْدِي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الْجَنَّةَ

ஹஸன் அல்பஸரீ அவர்கள் கூறியதாவது:
ஜுன்துப் (ரலி) அவர்கள் இந்த (பஸ்ராவின்) பள்ளிவாசலில் வைத்து எங்களிடம் (ஒரு ஹதீஸைக்) கூறினார்கள். அதை நாங்கள் மறக்கவில்லை. மேலும் ஜுன்துப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் பொய்யைக் கூறியிருப்பார் என்று நாங்கள் அஞ்சவுமில்லை.

அவர்கள் கூறியதாவது:

“ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார். உடனே அல்லாஹ், “என் அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கிவிட்டேன்” எனக் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : ஜுன்துப் (ரலி)
நூல் : (புகாரி: 1364) 

عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم

الَّذِي يَخْنُقُ نَفْسَهُ يَخْنُقُهَا فِي النَّارِ وَالَّذِي يَطْعُنُهَا يَطْعُنُهَا فِي النَّارِ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யார் தமது கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெரித்துக்கொண்டிருப்பார். யார் தம்மைத்தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருப்பார்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 1365) 

துன்பங்களின் போது பிரார்த்தனையை செய்வோம்!

துன்பங்களின் போது செய்ய வேண்டிய பல்வேறு பிரார்த்தனைகளை இஸ்லாம் கற்றுத் தருகிறது. குறிப்பாக,

ரப்பனா அஃப்ரிஃ அலைனா சஃப்ரன் வத வஃப்ஃபனா முஸ்லீமீன்

رَبَّنَاۤ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِيْنَ

“எங்கள் இறைவா! எங்களுக்குப்பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!” என்றனர்.

(அல்குர்ஆன்: 7:126)

எனவே நமக்கு ஏற்பட்டிருக்கும் உடல் சார்ந்த இழப்புகள், பொருளாதார சார்ந்த இழப்புகள், மற்றும் மேலே சொன்னது போல் ஏற்படும் எல்லா துன்பங்களையும் பொறுத்துக்கொண்டால் இறைவன் மறுமையில் நமக்கு அதிகமான நன்மைகளை வரிவழங்குவான். அப்படி இழப்புகளின் போதும், துன்பங்களின் போதும் பொறுமையோடு வாழ அல்லாஹ் நம் எல்லோருக்கும் அருள் புரிவானாக!

சல்மான் குனியமுத்தூர்