தனிமையில் ஒரு மனிதன்
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
இந்த உலகத்தில் உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடந்தால் மட்டும் தான் இறையருளைப் பெற்று மறுமையில் வெற்றி பெற முடியும் என்பதை இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் தெள்ளத் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றோம்.
என்றாலும், நவீன காலம் என்பது மனிதர்களைக் கடுமையான சோதனைகளுக்குள்ளாக்கி பல தரப்பட்ட ஷைத்தானிய சிந்தனைகளை உள்ளங்களில் ஊடுருவச் செய்கின்ற மிக மோசமான காலகட்டமாகும். எந்தளவிற்கென்றால் ஒரு மனிதன் இன்றைய நவீன காலகட்டத்தில் நல்லவனாக வாழ்வதே மிக மிகக் கடினம் என்று சொல்கின்ற அளவுக்கு மனிதர்களை வழிகேட்டின் பாதையில் தள்ளி விடுகின்ற ஏராளமான செயல்பாடுகள் அசுர வளர்ச்சி அடைந்திருக்கின்ற காலகட்டமாகும்.
அதிலும் குறிப்பாக, நான்கு நபர்களுக்கு மத்தியிலும், ஒரு கூட்டத்துக்கு மத்தியிலும், குடும்பத்தார்களுக்கு மத்தியிலும், நல்ல நண்பர்களுக்கு மத்தியிலும் மனிதன் தவறு செய்வதற்கு வெட்கப்பட்டு அஞ்சி நிற்கின்றான். அதே நேரத்தில் யாருமே இல்லாத தனிமையான சூழல் என்று வந்து விட்டால், அவனது தவறுகள் தலை விரித்துத் தாண்டவமாடுகின்ற அவல நிலையைப் பார்க்கின்றோம். முன்னர் ஒரு காலம் இருந்தது. அந்தச் சூழலில், தனிமை தான் ஒரு மனிதனைப் பாவத்தில் இருந்து விடுவித்து, அவனை ஞானியாக்கும் என்றார்கள்.
தனிமையில் இருப்பவர் அரிய பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து, ஏராளமான சாதனைகளை சாதித்து விட முடியும் என்றார்கள். தனிமையான சூழல் மனிதனை சிந்தனைச் சிற்பியாக வார்த்தெடுக்கும் என்றார்கள். தனிமை மனிதனை மிகப்பெரும் விஞ்ஞானியாக மாற்றும் என்றார்கள். தனிமையாக இருக்கும் மனிதன், இறைவனை அதிகமதிகம் நினைத்துக் கொண்டே இருப்பான் என்றார்கள்.
ஆனால் இதுபோன்ற பலதரப்பட்ட கருத்துக்களை, வார்த்தைகளை, குணநலன்களை, பண்புகளை உடைத்தெறிந்து சுக்குநூறாக நொறுக்கித் தள்ளுகின்ற அளவுக்கு இன்றைய நவீன கால கட்டத்தின் தனிமையான சூழல் மாறிவிட்டது. இன்றைய சூழலில் தனிமை என்பது ஒரு மனிதனைக் கெட்டவனாக மாற்றுகின்றது. கேடுகெட்ட காரியத்தை அரங்கேற்றத் துடிக்கின்றது.
மக்களுக்கு மத்தியில் நல்லவன் வேடம் போட்டுவிட்டு, தனிமைக்குச் சென்றால் அது அவனை அயோக்கியனாக மாற்றி விடுகின்றது. தனிமை பலதரப்பட்ட கெட்ட சிந்தனைகளைச் சிந்திக்க வைக்கின்றது. தடை செய்யப்பட்ட அத்தனை காரியங்களையும் சர்வ சாதரணமாகச் செய்து முடிக்க வைக்கின்றது. உச்சகட்ட அருவருக்கத்தக்க காரியத்தைக் கூட எவ்வித மன உறுத்தலுமின்றி செய்ய வைக்கின்றது.
மேற்சொன்ன அனைத்தும் அல்லாஹ் அருள் செய்த சில நல்லவர்களைத் தவிர பெரும்பான்மையான மக்கள் தனிமையில் இருந்து தங்களைத் தாங்களே நரக நெருப்புக்கு இரையாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு தனிமையான சூழல் மனிதனுக்கு ஏராளமான பாவமான காரியங்களைச் செய்ய வைத்து அதலபாதாளத்தில் தள்ளி விடுகின்றது. தனிமையில் இருந்து விடுபட்டு நல்லவனாக வாழ்வதற்கும், தனிமையான சூழலிலும் நல்லவனாக நம்மைப் பட்டை தீட்டிக் கொள்வதற்கும் இஸ்லாம் ஏராளமான வழிகாட்டுதல்களை நமக்குக் கற்றுத் தருகின்றது.
பிற மத மக்களிடத்தில், வழிபாட்டுத் தளங்களிலோ அல்லது வீட்டில் வைத்திருக்கும் வழிபாட்டு அறையிலோ மட்டும் தான் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்ற பயம் ஓரளவு இருக்கும். வெளியே வந்து விட்டால் தவறுகள் செய்வதற்கு வரம்பே கிடையாது.
ஆனால் இஸ்லாமிய மார்க்கம் இந்த சூத்திரங்களையெல்லாம் சுக்கு நூறாகத் தகர்த்தெறிகின்றது. வெளிப்படையாக மக்களோடு மக்களாகக் கலந்திருந்தாலும், யாருமே இல்லாத இடத்தில், தான் மட்டும் தனித்திருந்தாலும் இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
ஒவ்வொரு மனிதனின் வலப்பக்கத்திலும் இடப்பத்திலுமாக இரண்டு வானவர்களின் மூலம் இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற ஆழமான நம்பிக்கையை ஒவ்வொரு முஸ்லிம்களின் உள்ளங்களிலும் இஸ்லாம் அழுத்தந் திருத்தமாகப் பதிய வைக்கின்றது.
மேலும், தனிமையான சூழலில் ஒருவன் தன்னைத் தானே பாவம் செய்வதிலிருந்து தற்காத்துக் கொண்டால் இறைநேசத்தையும், மகத்தான கூலியையும், பிரம்மாண்டமான வெற்றியையும் பெற முடியும் என்பதையும் இஸ்லாம் ஆழமாக எடுத்துரைக்கின்றது. அவற்றை இந்த உரையில் காண்போம்..
இறைவன் தனது திருக்குர்ஆன் வசனங்களில் மனித குலத்துக்கு அறிவுரை கூறும் போது,
தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.
யார் தனிமையில் இறைவனை அஞ்சுகின்றாரோ அத்தகையவருக்கு மகத்தான, பிரம்மாண்டமான கூலியைத் தயாரித்து வைத்திருப்பதாக இறைவன் வாக்குறுதி வழங்குகின்றான்.
அவர்கள் தனிமையில் தமது இறைவனை அஞ்சுவார்கள். யுகமுடிவு நேரம் பற்றியும் அஞ்சுவார்கள்.
தனிமையில் தன்னைத் தானே பாவச் செயலில் ஈடுபடாமல் தற்காத்துக் கொள்வாரேயானால், அது நிச்சயமாக அவரைப் பரிசுத்தப்படுத்தும் என்று இறைவன் உத்தரவாதம் வழங்குகின்றான்.
தனிமையில் இருக்கும்போது தமது இறைவனை அஞ்சி, தொழுகையை நிலைநாட்டியோரையே நீர் எச்சரிக்கை செய்வீர். பரிசுத்தமாக நடப்பவர் தமக்காகவே பரிசுத்தமாகிக் கொள்கிறார். அல்லாஹ்விடமே திரும்புதல் உள்ளது.
தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு இறைவனின் புறத்திலிருந்து கிடைக்கின்ற மரியாதைக்குரிய கூலிக்குச் சொந்தக்காரர்களாக மாறி விட முடியும் என்று அல்லாஹ் சான்று பகர்கின்றான்.
இந்த அறிவுரையைப் பின்பற்றி அளவற்ற அருளாளனைத் தனிமையில் அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர். அவருக்கு மன்னிப்பு பற்றியும் மரியாதைக்குரிய கூலி பற்றியும் நற்செய்தி கூறுவீராக!
அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான்
ஒரு மனிதர் பலதரப்பட்ட நபர்களுக்கு மத்தியில் இருந்தாலும் அல்லது யாருமே இல்லாத இடத்தில் தனிமையில் இருந்தாலும், எந்த இடத்தில் நாம் இருந்தாலும், அந்த இடத்தில் அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற ஆழமான நம்பிக்கையை நாம் நம்முடைய உள்ளங்களில் பதிய வைக்க வேண்டும்.
இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்று ஒருவர் தன்னுடைய உள்ளத்தில் ஆழப் பதிய வைத்து விட்டால் எவ்வளவு பெரிய வழிகேட்டின் பாதையின்பால் தள்ளி விடுகின்ற அழிவில் சிக்கித் தவித்தாலும், தன்னைத் தானே தற்காத்துக் கொள்வார்.
வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும், வானிலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
நீங்கள் எங்கே இருந்தாலும் அல்லாஹ் உங்களுடன் தான் இருக்கின்றான் என்ற வார்த்தையின் பொருளை ஆழமாக உள்ளத்தில் நிறுத்திக் கொண்டால் பாவக் கணைகள் நம்மை நோக்கிப் படையெடுக்கும் போது, சுக்கு நூறாக நொறுக்கி விட முடியும்.
வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிவான் என்பதை நீர் அறியவில்லையா? மூவரின் இரகசியத்தில் அவன் நான்காமவனாக இல்லாமல் இல்லை. ஐவரில் அவன் ஆறாமவனாக இல்லாமல் இல்லை.
இதை விடக் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுடன் அவன் இல்லாமல் இருப்பதில்லை. பின்னர் கியாமத் நாளில் அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
அதிகமான நபர்கள் கூட்டு சேர்ந்து தவறிழைத்தாலும், அல்லது தனிமையில் அமர்ந்து கொண்டு தனிமனிதனாகத் தவறிழைத்தாலும், நீங்கள் எத்தனை நபர்கள் இருக்கின்றீர்களோ அந்த எண்ணிக்கையோடு சேர்த்து, கூடுதலாக இறைவனின் கண்காணிப்புப் பார்வையும் கிடுக்குப் பிடியாக இருக்கின்றது என்று இறைவன் கடுமையாக எச்சரிக்கின்றான்.
அவர்களது இரகசியத்தையும், அதை விட இரகசியத்தையும் நாம் செவியுறவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா? அவ்வாறில்லை! அவர்களிடம் உள்ள நமது தூதர்கள் பதிவு செய்கின்றனர்.
அவர்களின் இரகசியத்தையும், பரம இரகசியத்தையும் அல்லாஹ் அறிவான் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா? அல்லாஹ் மறைவானவற்றையும் நன்கு அறிபவன்.
இரகசியமான காரியங்களைத் தனிமையில் அரங்கேற்றும் போது, யாரும் பார்க்கவில்லை! யாருக்கும் கேட்கவில்லை என்று நினைத்து அலட்சியமாக இருக்க வேண்டாம்; நமது தூதர்கள் மூலம் அவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கின்றோம் என்று இறைவன் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களின் மூலம் எச்சரிக்கை விடுக்கின்றான்.
முன்னொரு காலத்தில் நடைபெற்ற அற்புதமான ஒரு சம்பவத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் காட்டி, உலகம் அழிகின்ற நாள் வரை வரவிருக்கின்ற ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களுக்கும் தனிமை குறித்துப் பாடம் நடத்துகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீர் என மழை பிடித்துக் கொண்டது. எனவே, அம்மூவரும் மலைப் பகுதியில் அமைந்திருந்த குகை ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். (எதிர்பாராதவிதமாக) பெரும் பாறை ஒன்று மலையிலிருந்து உருண்டு வந்து அந்தக் குகையின் வாயிலை மூடிக் கொண்டது.
(இதனைக் கண்ட) அவர்கள் தமக்குள், “நாம் (வேறெவரின் திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக என்று தூய்மையான முறையில் செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை சாதனமாகக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இந்தப் பாறையை நம்மை விட்டு அகற்றி விடக் கூடும்’’ என்று பேசிக் கொண்டனர்.
இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய மகள் (ஒன்றுவிட்ட சகோதரி- முறைப்பெண்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை எப்படி ஆழமாக நேசிப்பார்களோ அப்படி நான் அவளை நேசித்தேன். நான் அவளிடம் என்னுடன் உடலுறவு கொள்ள வருமாறு அழைத்தேன். நான் அவளுக்கு நூறு தீனார்கள் (பொற்காசுகள்) கொடுத்தாலே தவிர என்னுடன் உறவு கொள்ள முடியாது என்று அவள் மறுத்தாள்.
நான் அ(ந்தப் பணத்)தை மிகவும் சிரமப்பட்டுச் சேகரித்தேன். நான் (அந்தப் பணத்துடன் சென்று) அவளுடைய இரு கால்களுக்கும் இடையே அமர்ந்த போது அவள், “அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சு. முத்திரையை (கற்பு உறுப்பை) அதற்குரிய (மண பந்த) உரிமையின்றி திறக்காதே’’ என்று கூறினாள். உடனே நான் எழுந்து விட்டேன்.
இந்த நற்செயலை நான் உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதினால் இந்தப் பாறையை எங்களை விட்டு சற்று நீக்கி விடுவாயாக! இவ்வாறு அதில் ஒருவர் பிரார்த்தித்தார். உடனே, பாறை சற்று விலகியது.
(இதுபோன்ற மற்ற இருவரும் தாங்கள் செய்த நல்லறங்களைக் கொண்டு இறைவனிடம் வேண்டினர். பாறையை முழுவதுமாக அல்லாஹ் விலக்கினான்).
ஆதாரம்: (புகாரி: 2333) (ஹதீஸின் ஒரு பகுதி)
இந்தச் செய்தியை நன்றாகப் படித்துப் பாருங்கள்! கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த போது, தான் செய்த நல்லறங்களில் சிறந்த செயலை அல்லாஹ்விடம் முறையிட்டுக் கேட்கின்றார்கள். இறைவனும் செவிசாய்த்து, பதிலளித்து, அவர்களின் இன்னல்களை நீக்கி காப்பாற்றுகின்றான்.
இந்த அற்புதமான செய்தியிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள்: கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, தாங்கள் செய்த நல்லறங்களிலேயே சிறந்ததைத் தேர்ந்தெடுத்து இறைவனிடத்தில் மன்றாடுகின்றனர்.
அந்த மூவரில் ஒருவர், தனக்கு பிடித்தமான, நேசத்திற்குரிய உறவுக்காரப் பெண்மணியிடம், தனிமையில் நடைபெற்ற சம்பவம் குறித்து இறைவனிடம் முறையிடுகின்றார். தனிமையில் தவறான முறையில் அந்தப் பெண்ணை நெருங்கப் பார்க்கின்றார். ஆனால் அந்தப் பெண்மணியோ! அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சு! என்று சொன்ன வார்த்தை நெஞ்சை கீறிக் கிழித்துக் கொண்டு, துளைத்தெடுத்து மிரள வைத்தது.
தனிமை தான்! என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம்! யாருக்கும் தெரிந்திருக்க கடுகளவு கூட வாய்ப்பில்லை! ஆனாலும் கூட அந்த வாய்ப்பை, இறைவனுக்கு பிடித்தமான வாய்ப்பாக மாற்றிக் காட்டினார்களே! இதுவல்லவா! தனிமையைப் பயன்படுத்தும் அற்புதமான முன்மாதிரி.
அந்தப் பெண்மணிக்கு அந்த ஆண் மகனை பிடிக்கவில்லை என்பதோ அல்லது வேறு வேறு காரணங்களினாலோ அந்தப் பெண்மணி மறுக்கவில்லை! தனிமையான சூழல்! இருவரும் சம்மதித்து விட்டார்கள்! ஆனால் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று சொன்ன மாத்திரத்திலே வெடுக்கென்று எழுந்து ஓடோடி விடுகிறார். தனிமையில் சிறந்து விளங்கி இறையன்பையும் பெற்று விட்டார்!
இதுபோன்ற தனிமையான சூழலில், இந்த இடத்தில், இன்றைய காலத்தில் வாழ்கின்ற நம்மவர்களை ஒப்பு நோக்கிப் பாருங்கள்! தனிமையை தவறாகப் பயன்படுத்துகின்றோம்.
எத்தனை முறை கேட்டாலும், எத்தனை முறை படித்தாலும் நம்முடைய மேனியை சிலிர்க்க வைக்கின்ற அளவுக்கு இந்தச் செய்தி நமக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
இச்சம்பவம் நம்முடைய உள்ளங்களில் பசுமரத்தாணி போன்று ஆழமாகப் பதிய வேண்டும். உலகம் அழிகின்ற நாள் வரை இந்தத் தனிமை செய்தி நமக்கு அற்புதமான படிப்பினை செய்தி என்பதை யாராலும் மறுக்க இயலாது!
பரப்பப்பட்ட புழுதியாக மாற்றி விடாதீர்கள்! இந்த உலகத்தில் வாழும் போது, வெளிப்படையாக நல்லவனாகவும், மக்களுக்கு மத்தியில் சிறந்தவனாகவும், மிகச் சிறந்த இறையச்சவாதியாகவும் நடித்து விட்டு, மறைவில் இருக்கும் போதும், தனிமையில் இருக்கும் போதும் கேடுகெட்ட காரியங்களை அரங்கேற்றுபவர்களாக நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
நாம் என்னதான் வெளிப்படையாக நல்ல பல அமல்களை செய்தாலும், நல்லவனாக வலம் வந்தாலும், பிறருக்கு அறிவுரை கூறும் போது, தேன் போன்ற தித்திக்கின்ற வார்த்தைகளைக் கொட்டினாலும், தனிமையில் மறைவான சூழலில் இருக்கும் போது இறைவனுக்கு அஞ்சி நடக்கவில்லையென்றால், மறுமையில் நாம் அடைகின்ற கைசேதம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
“எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தாரை நான் அறிவேன். மறுமை நாளில் ‘திஹாமா’ மலைகள் போன்ற நன்மைகளுடன் அவர்கள் வருவார்கள். அவர்களின் நன்மைகளை அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவான்” என்று நபியவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அவர்களைப் போன்று நாங்கள் ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள்! அவர்களை எங்களுக்குத் தெரியாது!” என்றோம்.
அதற்கு நபியவர்கள் “அவர்கள் உங்களின் சகோதரர்கள், உங்களைச் சார்ந்தவர்கள் நீங்கள் இரவு வணக்கத்தில் ஈடுபடுவதைப் போன்றே அவர்களும் இரவில் வணக்கம் புரிவார்கள். ஆயினும் அல்லாஹ்வின் தடைகளை மீறுவதற்கான சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு வாய்த்தால் அல்லாஹ் தடை செய்தவற்றைச் செய்து விடுவார்கள். அவர்களே அக்கூட்டத்தினர்’ என்று கூறினார்கள்.
ஆதாரம்: (இப்னு மாஜா: 4245)
இந்தச் செய்தியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்ற மிக முக்கியமான வாசகத்தை நாம் உற்று நோக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
அதாவது, திஹாமா மலை அளவுக்கு நன்மை செய்தவர்களின் நன்மைகளை அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக மாற்றி விடுவான். அத்தகைய கைசேதப்பட்டவர்களின் அடையாளங்கள் குறித்து நபித்தோழர்கள் கேட்கும் போது, ஒற்றை வார்த்தையில், இரத்தினச் சுருக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்தார்கள்.
அதாவது, மக்களுக்கு மத்தியில் நல்லவன் போன்று நடந்து கொள்வார்; தொழுகையை நிறைவேற்றுவார்; அதிகமான உபதேசங்களை மக்களுக்கு எடுத்துரைப்பார்; இரவு வணக்கத்தில் ஈடுபடுவார்; ஆனால் தனித்திருக்கும் போதும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதும் தடை செய்யப்பட காரியங்களை சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பார்.
இத்தகைய குணம் படைத்தவர்கள் எவ்வளவு பிரம்மாண்டமான, ஊர் மெச்சக்கூடிய அளவுக்கு அமல்கள் செய்தாலும் சரிதான், நெடுங்காலம் மார்க்கத்திற்காக தியாகம் செய்து, மார்க்கப் பணிகளைச் செய்து, அமல்களை சேர்த்து வைத்தாலும் சரிதான், எத்தனை பேர் சத்தியத்தை ஏற்பதற்குக் காரணமான இருந்தாலும் சரிதான். அத்தகைய நற்காரியங்கள் பரப்பப்பட்ட புழுதிக்குத்தான் சமம்.
மக்களோடு மக்களாகக் கலந்திருக்கும் போதும் சரி; யாருமில்லாத தனிமையான சூழலில் இருக்கும் போதும் சரி; உண்மையான நல்லவர்களாக வாழ வேண்டும். இறைவனிடத்தில் கண்ணியத்திற்குரியவர்கள் என்ற பதவிக்குச் சொந்தக்காரர்களாக மாற முயற்சிக்க வேண்டும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?’’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “அவர்களில் இறையச்சமுடையவரே’’ என்று பதிலளித்தார்கள். மக்கள், “நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை’’ என்றனர். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரான யூசுஃப் அவர்கள் தாம் (மக்களில் கண்ணியத்திற்குரியவர்கள்)’’ என்று சொன்னார்கள்.
ஆதாரம்: (புகாரி: 3490)
யார் அல்லாஹ்வுக்கு அஞ்சி வெளிப்படையிலும் தனிமையிலும் பயபக்தியுடன் வாழ்கிறாரோ, அவரே மக்களில் கண்ணியத்திற்குரியவர் என்றார்கள். மேலும், இறையச்சத்தின் முன்மாதிரி நபி யூஸுஃப் (அலை) அவர்கள் தனிமையில் இருந்த போதும் கூட, அல்லாஹ்வின் அருளால் தன்னுடைய கற்பை, தன்னுடைய எஜமானியிடமிருந்து தற்காத்துக் கொண்டார். இவரும் மக்களில் கண்ணியத்திற்குரியவர் என்றார்கள்.
உலக மாந்தர்களிடத்திலும், பெரும் கூட்டத்திலும் நல்லவன் வேடம் போட்டு வாழ்ந்து விட்டு, நாம் இந்த உலகத்தில் பெறத் துடிக்கும் அற்பத்திலும் அற்பமான இன்பத்திற்காக, நம்முடைய அந்தரங்க வாழ்க்கை அசிங்கமானதாக மாறி விடுமானால், நம்மை அதலபாதாளத்தில் தள்ளி, மிகப்பெரும் இழிவைப் பெற்றுத் தந்து விடும்.
என்னைப் படைத்த இறைவனிடத்தில் நான் கண்ணியத்திற்குரியவன் என்ற மகத்தான பட்டத்தைப் பெறுவதற்காகவே வாழ்நாள் முழுவதும், இயன்றவரை என்னுடைய வாழ்க்கையைப் பட்டை தீட்டிக் கொள்வேன்; சீர்திருத்திக் கொள்வேன்; வெளிப்படையான வாழ்க்கையிலும், அந்தரங்கமான தனிமையிலும் இறைவனுக்கு அஞ்சி நடப்பேன் என்ற சபதத்தை உளமாற ஏற்று நடப்போமாக!
பாவங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் விட்டு விடுங்கள்! பாவத்தைச் செய்தோர், தாம் செய்து வந்ததன் காரணமாகத் தண்டிக்கப்படுவார்கள்.
எனவே தனிமையில் அல்லாஹ்வை அஞ்சி வாழும் நன்மக்களாய் அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவனாக.!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.