தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவோம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

ஏக இறைவன் பற்றிய பயம் நமக்கு முழுமையாக இருக்கும் போது, நாம் வாழ்வில் சரியான முறையில் நடந்து கொள்வோம். மார்க்கக் காரியங்கள் மட்டுமல்ல, மற்ற செயல்களிலும் சீரிய வகையில் செயல்படுவோம். ஆகவே தான் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இறையச்சம் குறித்து அதிகமதிகம் கூறப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதற்கு நோன்பு மூலம் ரமலான் மாதம் முழுவதும் நமக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை சரியான முறையில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன்: 2:183)

நோன்பு வைத்திருக்கும் வேளையில் சாப்பிடுவதற்கும், பருகுவதற்கும் வாய்ப்பு கிடைத்தால், மற்றவர்கள் முன்னிலையில் இருக்கும் போது மட்டுமல்ல, தனிமையில் உள்ள போதும் தவிர்த்துக் கொள்கிறோம்; விலகிக் கொள்கிறோம். இவ்வாறு எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சுகிற குணத்தையே சத்திய மார்க்கம் நம்மிடம் எதிர்பார்க்கிறது. இது குறித்து சில முக்கிய கருத்துக்களை இங்கு இந்த உரையில் காண்போம்.

முஃமின்களிடம் இருக்கும் முக்கிய பண்பு

இம்மையில் வாழும்போது நம்பிக்கையாளர்கள் எப்படி இருப்பார்கள் என்பது தொடர்பாகப் பல செய்திகள் திருமறையில் சொல்லப்பட்டுள்ளது. அவ்வகையில் அல்லாஹ் கூறும்போது, முஃமின்கள் தனிமையில் இறைவனை பயந்து வாழ்வார்கள் என்று குறிப்பிடுகிறான். இதை மெய்ப்படுத்தும் வகையில் செயல்பட்டு நமது இறையச்சத்தை பரிபூரணப்படுத்திக் கொள்ள வேண்டும்.

الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَهُمْ مِّنَ السَّاعَةِ مُشْفِقُوْنَ‏

அவர்கள் தனிமையில் தமது இறைவனை அஞ்சுவார்கள். யுகமுடிவு நேரம் பற்றியும் அஞ்சுவார்கள்.

(அல்குர்ஆன்: 21:49)

சிலர் சமூகத்தின் பார்வையில் இருக்கும் போது, சுத்த தங்கமாய் இருக்கிறார்கள்; மார்க்கக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றுகிறார்கள்; தீமைகளை விட்டும் தள்ளி நிற்கிறார்கள். ஆனால், தனியாக இருக்கும் சமயங்களில், மார்க்கம் தடுத்த காரியங்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகிறார்கள். தங்களது கடமைகளிலும் பொறுப்புகளிலும் பொடுபோக்குத் தனமாக இருக்கிறார்கள். இத்தகைய அரை குறையான இறையச்சம் முஃமின்களுக்கு அழகல்ல.

அஞ்சுவோருக்கே அறிவுரை பயனளிக்கும்!

நாமெல்லாம் திருமறைக் குர்ஆனை இறைவேதமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அது இறங்கிய மாதத்தில் நோன்பை நிறைவேற்றுகிறோம். இத்துடன் கடமை முடிந்து விட்டதென ஒதுங்கிவிடக் கூடாது. திருமறைக்கு ஏற்ப நமது வாழ்வை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப சிந்தனைகளையும் செயல்களையும் சீர்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு, தனித்திருக்கும் சமயத்திலும் வல்ல ரஹ்மானை பயந்து வாழும் தன்மை நம்மிடம் இருப்பது அவசியம்.

اِنَّمَا تُنْذِرُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ وَمَنْ تَزَكّٰى فَاِنَّمَا يَتَزَكّٰى لِنَفْسِهٖ ؕ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ

தனிமையில் இருக்கும் போது தமது இறைவனை அஞ்சி, தொழுகையை நிலைநாட்டியோரையே நீர் எச்சரிக்கை செய்வீர். பரிசுத்தமாக நடப்பவர் தமக்காகவே பரிசுத்தமாகிக் கொள்கிறார். அல்லாஹ்விடமே திரும்புதல் உள்ளது.

(அல்குர்ஆன்: 35:18)

اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِۚ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِيْمٍ‏

இந்த அறிவுரையைப் பின்பற்றி அளவற்ற அருளாளனைத் தனிமையில் அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர். அவருக்கு மன்னிப்பு மற்றும் மரியாதைக்குரிய கூலி பற்றி நற்செய்தி கூறுவீராக!

(அல்குர்ஆன்: 36:11)

திருக்குர்ஆனின் வசனங்களை பள்ளிவாசல் சுவர்களில் பார்க்கிறோம்; பயான்களில் கேட்கிறோம். இப்படிப் பல வழிகளில் படைத்தவனின் வார்த்தைகளைத் தெரிந்து கொண்டாலும் பலருடைய வாழ்க்கை மார்க்கத்திற்கு எதிராகவே இருக்கிறது.

குர்ஆனையே மனனம் செய்தவர்கள், அதன் போதனைகளை அடுத்தவர்களுக்குச் சொல்பவர்களும் கூட அது தடுத்திருக்கும் காரியங்களைச் செய்கிறார்கள். இதற்கான முக்கிய காரணத்தை முன்கண்ட வசனத்தில் அல்லாஹ் நமக்குத் தெளிவுபடுத்தி விட்டான். அதைக் கவனத்தில் கொண்டு நம்மைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும்.

யூசுஃப் நபியும் படிப்பினையும்

இன்றைய காலத்தில் வழிகேட்டில் வீழ்வதற்கான வாய்ப்புகள் விசாலமாகக் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக, தனித்து இருக்கும் போது பாவங்களில் மூழ்குவதற்கான வாய்ப்புகள் தேடிவந்து அமையும். அதற்கான சிந்தனைகளை ஷைத்தான் அடிக்கடி தூண்டுவான். அப்போது அல்லாஹ்வை அஞ்சி சுதாரித்துக் கொள்ள வேண்டும். இந்தப் படிப்பினை யூசுஃப் நபி வாழ்வில் நமக்கு இருக்கிறது.

யூசுஃப் நபியை வளர்த்த மன்னனின் மனைவியே அவரைத் தவறான செயலுக்கு அழைக்கிறாள். அரண்மனை மாளிகையில் யாரும் இல்லாத தருணம். ஒருவேளை தவறு இழைத்தாலும் யாருக்கும் சந்தேகம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இருப்பினும், யூசுஃப் நபி அல்லாஹ்வை            அஞ்சினார்கள். அவனிடம் உதவி தேடினார்கள். மனிதன் எனும் அடிப்படையில் மனதில் கெட்ட சலனம் ஏற்படும் போது படைத்தவன் அருளால் தம்மைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

 وَرَاوَدَتْهُ الَّتِىْ هُوَ فِىْ بَيْتِهَا عَنْ نَّـفْسِهٖ وَغَلَّقَتِ الْاَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَـكَ‌ؕ قَالَ مَعَاذَ اللّٰهِ‌ اِنَّهٗ رَبِّىْۤ اَحْسَنَ مَثْوَاىَ‌ؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ‏
 وَلَـقَدْ هَمَّتْ بِهٖ‌ۚ وَهَمَّ بِهَا‌ لَوْلَاۤ اَنْ رَّاٰ بُرْهَانَ رَبِّهٖ‌ؕ كَذٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّۤوْءَ وَالْـفَحْشَآءَ‌ؕ اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِيْنَ‏

எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து ‘வா!’ என்றாள். அதற்கவர் “அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்’’ எனக் கூறினார்.

அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்களில் ஒருவர்.

(அல்குர்ஆன்: 12:23,24)

நவீன தொடர்பு சாதனங்களும் இணையதள பயன்பாடும் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் யாருக்கும் தெரியாத வகையில் பல்வேறு அழிச்சாட்டியங்கள் நடக்கின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற ஊடகங்கள் மூலம் மஹ்ரமாக இல்லாதவர்களுடன் மணிக்கணக்காக காம அரட்டை அடிக்கிறார்கள். ஒழுக்க நெறிகளைத் துறந்துவிடுகிறார்கள்.

இதற்கு முக்கியக் காரணம், நான்கு சுவருக்குள் இருந்தாலும் அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் எனும் அச்சம் இல்லாததே ஆகும். இம்மாதிரியானவற்றிலிருந்து மக்கள் திருந்திக் கொள்வதற்கு மாமனிதர் நபிகளாரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

قَالَ: «إِنِّي لَأَنْقَلِبُ إِلَى أَهْلِي، فَأَجِدُ التَّمْرَةَ سَاقِطَةً عَلَى فِرَاشِي، فَأَرْفَعُهَا لِآكُلَهَا، ثُمَّ أَخْشَى أَنْ تَكُونَ صَدَقَةً، فَأُلْقِيهَا»

நான் என் வீட்டாரிடம் திரும்பி விடுகின்றேன். என் படுக்கையின் மீது பேரீச்சம் பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதைத் தின்பதற்காக எடுக்கின்றேன். அதற்குள் அது ஸதகா பொருளாக இருக்குமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்படுகின்றது; உடனே அதைப் போட்டு விடுகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 2432) 

மன்னிப்பு பெற்றுத் தரும் இறையச்சம்

கொடுக்கல் வாங்கல், மற்றவர்களுடன் பழகுதல் என்று பலவிதமான செயல்களில் நம்மிடம் தவறுகள் ஏற்பட்டு விடுகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ தீமையான காரியங்களையும் செய்துவிடுகிறோம். இவ்வாறான நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மறுமையில் மகத்தான வெற்றி பெற வேண்டுமெனில், தனிமையிலும் அல்லாஹ்வைப் பற்றிய அச்ச உணர்வு எழ வேண்டும்.

اِنَّ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ‏

தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.

(அல்குர்ஆன்: 67:12)

மிகைத்தவனிடம் வெகுமதியைத் தேடுவதற்குப் பதிலாக, மக்களிடம் உலக ஆதாயங்களைத் திரட்டிக் கொள்வதற்காக சில ஆலிம்கள் மார்க்கத்தின் உண்மையான அடிப்படையை மறைத்து விடுகிறார்கள். கௌரவம் குறைந்துவிடுமெனக் கருதி சத்தியக் கருத்துகளில் இருட்டடிப்புச் செய்கிறார்கள். இத்தகைய நபர்கள் அல்லாஹ்வைப் பயந்து தங்களை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்.

اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلْنَا مِنَ الْبَيِّنٰتِ وَالْهُدٰى مِنْۢ بَعْدِ مَا بَيَّنّٰهُ لِلنَّاسِ فِى الْكِتٰبِۙ اُولٰٓٮِٕكَ يَلْعَنُهُمُ اللّٰهُ وَ يَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَۙ‏
اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَيَّـنُوْا فَاُولٰٓٮِٕكَ اَ تُوْبُ عَلَيْهِمْۚ وَاَنَا التَّوَّابُ الرَّحِيْمُ‏

வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 2:159,160)

இம்மையிலே கிடைக்கும் இறையுதவி

திரைமறைவில் இருக்கும்போதும் படைத்தவனை நினைத்து திருத்திக் கொண்டால் இவ்வுலகிலேயே அவனுடைய உதவி நமக்குக் கிடைக்கும். துன்பங்கள், சிரமங்கள் ஆகியவற்றிலிருந்து அவன் நம்மைக் காப்பான். இதைப் பின்வரும் சம்பவம் மூலம் புரிந்து கொள்ள இயலும்.

خَرَجَ ثَلاَثَةُ نَفَرٍ يَمْشُونَ فَأَصَابَهُمُ المَطَرُ، فَدَخَلُوا فِي غَارٍ فِي جَبَلٍ، فَانْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ، قَالَ: فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: ادْعُوا اللَّهَ بِأَفْضَلِ عَمَلٍ عَمِلْتُمُوهُ، فَقَالَ أَحَدُهُمْ: اللَّهُمَّ إِنِّي كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ، فَكُنْتُ أَخْرُجُ فَأَرْعَى، ثُمَّ أَجِيءُ فَأَحْلُبُ فَأَجِيءُ بِالحِلاَبِ، فَآتِي بِهِ أَبَوَيَّ فَيَشْرَبَانِ، ثُمَّ أَسْقِي الصِّبْيَةَ وَأَهْلِي وَامْرَأَتِي، فَاحْتَبَسْتُ لَيْلَةً، فَجِئْتُ فَإِذَا هُمَا نَائِمَانِ، قَالَ: فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا، وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ رِجْلَيَّ، فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمَا، حَتَّى طَلَعَ الفَجْرُ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ عَنَّا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ، قَالَ: فَفُرِجَ عَنْهُمْ، …

‘(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றனர்.

அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன்.

ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து’ எனக் கூறினார். அவ்வாறு இடைவெளி உண்டானது.

மற்றொருவர், ‘இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்கு’ எனக் கூறினார். அல்லாஹ் அவர்களைவிட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்.

மற்றொருவர், ‘இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்துவிட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார்.

இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை; எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களைவிட்டு இந்தச் சிரமத்தை நீக்கு’ எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.’ இதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: (புகாரி: 2215) 

அல்லாஹ்வை அஞ்சி மோசடி இல்லாமல் வியாபாரம் செய்தால் அதிலே பரக்கத் எனும் அருள் வளம் கிடைக்கும். பொய் பேசாமல், புறம் பேசாமல், அவதூறு கூறாமல், அடுத்தவர் மீது இட்டுக்கட்டாமல் தனிமனித ஒழுக்கத்தோடு நேர்மையாக வாழ்ந்தால் அவனது அன்பும் அரவணைப்பும் நிச்சயம் கிடைக்கும். இதைப் பெரும்பாலோர் புரிந்து கொள்வதில்லை.

அஞ்சுவோருக்கு அர்ஷின் நிழல்

ஒவ்வொரு நொடியும் அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை நினைவில் நிறுத்தி பரிசுத்தமாக வாழ்வோரை அல்லாஹ் மறுமையில் அடையாளம் காட்டுவான். முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை அனைவரும் சங்கமித்திருக்கும் மஹ்ஷர் மைதானத்தில் இவர்களை கண்ணியப்படுத்துவான். அதன்படி, அல்லாஹ்வின் அர்ஷுடைய நிழலில் நிற்கும் மகத்தான பாக்கியம் கிடைக்கும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ

‘அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 660) 

மக்களிடம் மதிப்புடையவர்களாக இருக்க வேண்டுமென வெளிப்படையில் பாசாங்கு காட்டாமல், அல்லாஹ்விடம் நற்பெயர் பெரும் வண்ணம் எப்போதும் நல்லவர்களாகத் திகழ வேண்டும். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் அழகிய முறையில் கட்டுப்பட்டு வாழவேண்டும். அப்போதுதான் நமக்கும் மறுமையில் உயர்வு கிடைக்கும்.

وَاُزْلِفَتِ الْجَـنَّةُ لِلْمُتَّقِيْنَ غَيْرَ بَعِيْدٍ‏
هٰذَا مَا تُوْعَدُوْنَ لِكُلِّ اَوَّابٍ حَفِيْظٍ‌ۚ‏
مَنْ خَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِ وَجَآءَ بِقَلْبٍ مُّنِيْبِۙ‏

(இறைவனை) அஞ்சியோருக்கு சொர்க்கம் தொலைவின்றி நெருக்கத்தில் கொண்டு வரப்படும். திருந்தி, பேணி நடந்து, மறைவில் அளவற்ற அருளாளனுக்கு அஞ்சி, தூய உள்ளத்துடன் வந்த ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கப்பட்டது இதுவே.

(அல்குர்ஆன்: 50:31-33)

தனிமையில் வரம்பு மீறுவோரின் மறுமை நிலை

மக்களிடம் மரியாதையோடு இருக்க வேண்டுமென அவர்களின் முன் மட்டும் நல்ல விதமாக நடந்து விட்டு, மறைவாக இருக்கும் போது மார்க்கத்தின் வரம்புகளை மீறுவோர் மறுமையில் மோசமான நிலையில் மாட்டிக் கொள்வார்கள். குற்றவாளிகளாய் இருப்பார்கள். அவர்களின் நன்மையான காரியங்களை அல்லாஹ் அற்பமாக அலட்சியப் படுத்திவிடுவான்.

وَذَرُوْا ظَاهِرَ الْاِثْمِ وَبَاطِنَهٗ‌ؕ اِنَّ الَّذِيْنَ یَکْسِبُوْنَ الْاِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوْا يَقْتَرِفُوْنَ‏

பாவங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் விட்டு விடுங்கள்! பாவத்தைச் செய்தோர், தாம் செய்து வந்ததன் காரணமாகத் தண்டிக்கப்படுவார்கள்.

(அல்குர்ஆன்: 6:120)

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
«لاَ أَحَدَ أَغْيَرُ مِنَ اللَّهِ، وَلِذَلِكَ حَرَّمَ الفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَلاَ شَيْءَ أَحَبُّ إِلَيْهِ المَدْحُ مِنَ اللَّهِ، وَلِذَلِكَ مَدَحَ نَفْسَهُ»

“அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால் தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்கமானவை அனைத்திற்கும் அல்லாஹ் தடை விதித்துள்ளான். தன்னைப் புகழ்வதை விட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: (புகாரி: 4634) 

عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ
«لَأَعْلَمَنَّ أَقْوَامًا مِنْ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ بِحَسَنَاتٍ أَمْثَالِ جِبَالِ تِهَامَةَ بِيضًا، فَيَجْعَلُهَا اللَّهُ عَزَّ وَجَلَّ هَبَاءً مَنْثُورًا» ، قَالَ ثَوْبَانُ: يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا، جَلِّهِمْ لَنَا أَنْ لَا نَكُونَ مِنْهُمْ، وَنَحْنُ لَا نَعْلَمُ، قَالَ: «أَمَا إِنَّهُمْ إِخْوَانُكُمْ، وَمِنْ جِلْدَتِكُمْ، وَيَأْخُذُونَ مِنَ اللَّيْلِ كَمَا تَأْخُذُونَ، وَلَكِنَّهُمْ أَقْوَامٌ إِذَا خَلَوْا بِمَحَارِمِ اللَّهِ انْتَهَكُوهَا»

‘‘மறுமை நாளில் என்னுடைய சமுதாயத்தில் திஹாமா மலையளவு நன்மைகளைக் கொண்ட கூட்டத்தினர் வருவார்கள் என்பதை நானறிவேன். மகத்துவமும் மாண்பும் கொண்ட அல்லாஹ் அவர்களுடைய நன்மைகளை சிதறும் தூசுகளாக ஆக்கிவிடுவான்’’ என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அதற்கு ஸவ்பான் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவர்களைப் பற்றி அறியாத நிலையில் அவர்களில் ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களைப் பற்றி எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள்; எங்களுக்கு சொல்லுங்கள்’’ என்று கூறினார்.

அதற்கு, ‘‘அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் உங்களுடைய சகோதரர்கள்; உங்களுடைய இனத்தை சார்ந்தவர்கள். உங்களைப் போன்று இரவில் (வணக்கத்தில்) ஈடுபடுபவர்கள். ஆனால், அவர்கள் தனித்திருக்கும் போது (மற்றவர்கள் முன்) எவற்றை விட்டும் விலகி இருந்தார்களோ அத்தகைய அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட காரியங்களை செய்யும் கூட்டத்தினர் ஆவர்’’ என நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: (இப்னு மாஜா: 4245) 

அன்பார்ந்த சகோதரர்களே! எவரும் இல்லாத தருணத்திலும் கூட ஏக இறைவனை நினைத்து நம்மை நெறிப்படுத்திக் கொள்ளும் போது, பிறர் முன் இருக்கும் நேரத்திலும் தூய முறையில் பயணிக்கும் பக்குவத்தைப் பெற்றிடுவோம். இத்தகு நற்புரிதலையும், நல்ல மாற்றத்தையும் பெற்று ஈருலகிலும் வெற்றிபெறுவோமாக! அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவனாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.