24) தஜ்ஜால் செய்யும் அற்புதத்தை நம்புவது இணைவைத்தலாகாதா?
தஜ்ஜால் இனிமேல் வருவான் என்று நாம் நம்புகின்றோம். தஜ்ஜால் வந்து பல செயல்களைச் செய்து மக்களை தன் பக்கம் ஈர்ப்பான். அவன் செய்யக் கூடிய செயல்களில் இறந்தவரை உயிர்ப்பிப்பதும் அடங்கும். ஒருவரை இறக்கச் செய்து உயிர்ப்பித்துக் காண்பிப்பான்.
அல்லாஹ்வைப் போல யாரும் செயல்பட முடியாது என்று நாம் நம்பினால் தஜ்ஜால் இவ்வாறு செய்வதை எப்படி நம்ப முடியும்? அதுவும் இணைவைத்தல் ஆகாதா என்றும் எதிர்க்கேள்வி கேட்கின்றனர்.
இந்தக் கேள்வியை மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகத்தான் தெரியும். இதனைச் சிந்தித்துப் பார்த்தால் இது தவறான கேள்வி என்பது விளங்கும்.
ஏனென்றால் தஜ்ஜால் என்ற ஒருவன் இறுதிக் காலத்தில் வரவிருப்பதாக நூஹ் நபி அவர்களின் காலத்திலிருந்து அனைத்து நபிமார்களும் தமது சமுதாயத்துக்கு எச்சரித்துள்ளார்கள்.
3057 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
…..பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள்: நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
தஜ்ஜால் என்று ஒருவன் வருவான். இவன் சில காரியங்களைச் செய்து காட்டுவான். அவன் தன்னைக் கடவுள் என்று சொல்வான். அவனை நம்பிவிடாதீர்கள். இவன் ஒன்றரைக் கண்ணுள்ளவனாக இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனைக் குறித்து எச்சரித்துள்ளார்கள்.
3338 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:
நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நரகம் போன்றதைக் கொண்டு வருவான் அவன் எதை சொர்க்கம் என்று கூறுகின்றானோ அது தான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கின்றேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
3439 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களின் நடுவே அமர்ந்தபடி தஜ்ஜால் என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், தஜ்ஜால் என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனது கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும் என்று கூறினார்கள்.
அம்ர் பின் ஸாபித் அல்அன்சாரீ (ரஹ்) அவர்கள், நபித்தோழர்களில் சிலர் தம்மிடம் கூறியதாகப் பின்வருமாறு என்னிடம் தெரிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றி எச்சரித்த அன்றைய தினத்தில், தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையில் காஃபிர் (இறைமறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும். அவனது நடிவடிக்கையை வெறுக்கின்ற ஒவ்வொருவரும் அதை வாசிப்பார்கள்; அல்லது ஒவ்வோர் இறை நம்பிக்கையாளரும் வாசிப்பார்கள் என்றும், “அறிந்து கொள்ளுங்கள்: உங்களில் எவரும் இறப்பதற்குமுன் தம் இறைவனைப் பார்க்க முடியாது” என்றும் கூறினார்கள்.
5620 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எல்லா இறைத்தூதர்களும் தம் சமுதாயத்தாரை மகா பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்து கொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். ஆனால், உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரு கண்களுக்கிடையே காஃப், ஃப, ரா (இறைமறுப்பாளன் – காஃபிர்) என்று (தனித் தனி எழுத்துகளில்) எழுதப்பட்டிருக்கும்.
எந்த இறை மறுப்பாளர்களாக இருந்தாலும் அவர்களின் செயல் மூலமாக காஃபிர்கள் என்று மக்கள் அறிந்தார்களே தவிர, நெற்றியில் எழுதி வைத்து இவன் போன்று அடையாளப்படுத்தப்படவில்லை. இது இவனது முக்கிய பலவீனம்.
தஜ்ஜால் என்பவன் சில அதிசயங்களைச் செய்துகாட்டி தன்னை இறைவன் என்பான் என்றாலும் இது சூரியக்காரனுக்குச் சக்தி உள்ளதாக நம்புவது போன்றதல்ல.
தஜ்ஜால் என்பவன் இப்படிச் செய்வான் என்று முன்னரே நமக்கு எச்சரிக்கப்பட்டுள்ளதாலும், அவனது நெற்றியில் காஃபிர் என்று பதிக்கப்பட்டு இருக்கும் என்று அவனை இனம் காட்டி இருப்பதாலும் அவனது வலது கண் ஊனமாக இருக்கும் என்று நபியவர்கள் நமக்கு முன்னறிவிப்பு செய்துள்ளதாலும் இது சூனியக்காரனின் ஆற்றலில் இருந்து இந்த வகையில் வேறுபடுகிறது.
மேலும் தஜ்ஜால் எந்த அற்புதத்தைச் செய்துகாட்டி தன்னை இறைவன் என்று வாதிடுவானோ அதே அற்புதத்தில் அல்லாஹ் அவனைப் பொய்யாக்கிக் காட்டுவான் என்றும் ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.
1882 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவே (மதீனாவுக்கு வெளியே), மதீனாவில் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒரு மனிதர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்! என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா? என்று கேட்பான். மக்கள் கொள்ள மாட்டோம்! என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒரு போதும் அறிந்திருக்கவில்லை என்று கூறுவார். தஜ்ஜால் நான் இவரைக் கொல்வேன்! என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். தஜ்ஜால் பற்றி நபி (ஸல்) அவர்கள் நீண்ட விளக்கம் தரும் போது இதைக் கூறியதாகவும் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஒரு நல்ல மனிதரைக் கொன்று விட்டு அவரை உயிர்ப்பித்தால் என்னை இறைவன் என்று நம்புவீர்களா என்று தஜ்ஜால் அறைகூவல் விடுகிறான். அதுபோல் ஒரு நல்ல மனிதரை அழைத்து அவரைக் கொன்று விட்டு உயிருடன் எழுப்பிக் காட்டுவான். ஆனால் எந்த மனிதரை ஆதாரமாகக் காட்டி தன்னை இறைவன் என்று அவன் வாதிடுவானோ அதே மனிதர் அவனை இறைவன் என்று ஏற்க மறுப்பார். நீதான் எங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்த தஜ்ஜால் என்பார்.
தனக்கு இறந்தவரை உயிர்ப்பிக்கும் சக்தி இருப்பதாக எண்ணிக் கொண்டு அந்த மனிதரை மீண்டும் கொல்ல தஜ்ஜால் முயற்சிப்பான். ஆனால் அவனால் கொல்ல முடியாது என்று இந்த ஹதீஸில் சொல்லப்படுகிறது.
நல்லடியாரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பித்தது தஜ்ஜாலின் செயல் அல்ல என்று அந்த நிமிடமே நிரூபிக்கப்பட்டு விடுகிறது. மீண்டும் உயிர்ப்பிப்பது இருக்கட்டும். அவரைக் கொல்லக் கூட அவனால் முடியாது. கொல்வது மனிதனால் சாத்தியமாகக் கூடிய செயல் தான். உயிர்ப்பித்தல் தான் சாத்தியமில்லாதது. இவனுக்கோ ஒரு மனிதனைக் கொல்லக் கூட முடியவில்லை என்று அல்லாஹ் காட்டி விடுகிறான்.
இப்படித் தான் ஹதீஸ் சொல்கிறது. இப்படி நம்பினால் தஜ்ஜாலுக்கு இறைத்தன்மை உள்ளதாக நம்பியதாக ஆகுமா? ஒருக்காலும் ஆகாது.
தஜ்ஜால் இறைத்தன்மை அற்றவன் என்பதற்குத்தான் இது ஆதாரமாக உள்ளது.
ஒரு மனிதனுக்கு அல்லாஹ் ஒரு ஆற்றலைக் கொடுத்து இருந்தால் அவனால் அதைப் பல சந்தர்ப்பங்களில் செய்ய முடியும். ஒரே ஒரு தடவை அவனிடமிருந்து ஒரு அதிசயம் வெளிப்பட்டு அதே அதிசயத்தை மறுபடியும் அவனுக்குச் செய்ய முடியாவிட்டால் அவனிடம் அல்லாஹ் ஒரு தடவை வெளிப்படச் செய்துள்ளான் என்றும் அதை அவன் செய்யவில்லை என்றும் அறிந்து கொள்ளலாம்.
ஆனால் சூனியக்காரன் எதைச் செய்து காட்டினானோ அது அந்த நேரமே பொய்யென நிரூபிக்கப்படும் என்று சூனியக் கட்சியினர் நம்புவதில்லை. மாறாக சூனியக்காரன் தான் விரும்பும் போதெல்லாம் அதைச் செய்ய வல்லவன் என்று தான் நம்புகிறார்கள்.
அது மட்டுமின்றி தஜ்ஜால் செய்வது பொய்யும் பித்தலாட்டமும் தான்; உண்மை அல்ல என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.
3450 ரிப்யீ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா? என்று கேட்டார். ஹுதைஃபா (ரலி) அவர்கள், தஜ்ஜால் வெளியே வரும் போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை இது நெருப்பு’ என்று கருதுகின்றார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை இது குளிர்ந்த நீர்’ என்று கருதுகின்றார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் எவர் சந்திக்கின்றாரோ அவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் என்று சொன்னார்கள்.
அவன் எதை நரகம் என்று சொல்கிறானோ அது நரகமல்ல. சோலையாக இருக்கும். அவன் குளிர் நீர் என்று சொன்னது உண்மையில் கொதி நீராக இருக்கும். இதன் மூலம் அவன் இறைவன் அல்ல; பித்தலாட்டக்காரன் என்பது அப்போதே நிரூபிக்கப்பட்டு விடும்.
சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் ஒரு தடவை செயல்படுவான். அப்போதே அது பொய் என்று நிரூபிக்கப்படுவதுடன் மறுபடியும் அவனால் அதைச் செய்ய இயலாமல் போய்விடும் என்று இவர்கள் நம்புகிறார்களா? அப்படி நம்பினால் அதற்கான ஆதாரத்தைக் காட்டுவார்களா?
இறுதியில் 40 நாட்கள் கழித்து ஈஸா நபி அவர்கள் வந்து அவனைக் கொன்று விடுவார்கள்.
இதுவும் சூனியமும் ஒன்றாகுமா?