தக்லீதைத் தகர்த்தெறியும் திருக்குர்ஆன்

பயான் குறிப்புகள்: கொள்கை

தக்லீதைத் தகர்த்தெறியும் திருக்குர்ஆன்

மனித சமுதாயம் நேரான வழியில் செல்வதற்காக அல்லாஹ் இறுதித் தூதராக முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பி வைத்தான். அவர்களுக்கு அல்குர்ஆன் என்ற இறைவேதத்தையும், ஏனைய மார்க்க ஞானங்களையும் இறைவன் வழங்கி அதனையே உலகம் அழியும் வரை தோன்றும் மக்கள் பின்பற்ற வேண்டிய இஸ்லாம் எனும் மார்க்கமாகவும் ஆக்கினான்.

ஆனால் இறைவனின் நேர்வழியை மனித சமுதாயத்திற்குப் போதித்த இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு, எவர்களின் சொற்களும், செயல்களும் மார்க்க ஆதாரமாகக் கொள்ளப்படாதோ அவர்களின் சுய கருத்துக்களை மார்க்கமாகப் பின்பற்றும் சூழல் இஸ்லாமிய சமூகத்தில் அதிகமானவர்களிடம் ஊடுருவியது.

‘‘பின்பற்றுவதற்குத் தகுதியில்லாதவர்களின் சுய கருத்துக்களையும், செயல்களையும் மார்க்க ஆதாரமாகக் கொள்வது தான் ‘‘தக்லீத்” என்பதாகும். இதனைக் ‘‘கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல்” என்றும் பொருள் செய்கின்றனர்.

அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் தூதர் ஆகிய இருவரின் வழிகாட்டுதல்களைத் தவிர வேறு யாருடைய வழிகாட்டுதல்களும் மார்க்க ஆதாரமாகாது.

இதனைத் திருமறைக் குர்ஆன் ஏராளமான வசனங்களில் மிக மிக வலிமையாக எடுத்துரைக்கின்றது. சான்றிற்காக சில வசனங்களை இங்கே காண்போம்.

فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்

(அல்குர்ஆன்:7:158)

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுவீராக

(அல்குர்ஆன்: 3:31)

قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ ۖ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ

“அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்’’ எனக் கூறுவீராக

(அல்குர்ஆன்: 3:32)

إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்’’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்: 24:51)

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ۗ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

(அல்குர்ஆன்: 33:36)

فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 4:65)

 إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களிலெல்லாம் மிகத்தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: நஸயீ 1560

இது போன்ற ஏராளமான திருமறை வசனங்களும், நபிமொழிகளும் இஸ்லாத்தின் அடிப்படை திருமறைக் குர்ஆன், நபிகள் நாயகத்தின் மார்க்க வழிகாட்டுதல்கள் ஆகிய இரண்டு மட்டும் தான் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதற்கு நேர் எதிரானது தான் தக்லீத் ஆகும்.

இஸ்லாமிய சமூகத்தில் ஊடுருவிய தக்லீத்

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு பின்பற்றுவதற்குத் தகுதியில்லாதவர்களின் சுய கருத்துக்களையும், செயல்களையும் மார்க்கமாகப் பின்பற்றும் தக்லீத் எனும் இந்தக் கொடிய நோய் இஸ்லாமியர்களிடம் படிப்படியாக ஊடுருவியது.

இன்றைக்கு ஸலபிக் கொள்கை என்ற பெயரிலும், மத்ஹபுகள் என்ற பெயரிலும் தரீக்காக்கள் என்ற பெயரிலும், தப்லீக் ஜமாஅத் என்ற பெயரிலும் தக்லீதின் கோரப்பிடியில் ஏராளமான முஸ்லிம்கள் சிக்கித் தங்களுடைய மறுமை வாழ்வைச் சீரழிக்கும் கொள்கையில் பயணம் மேற்கொள்கின்றனர்.

நபித்தோழர்களாக இருந்தாலும், இமாம்களாக இருந்தாலும், மார்க்க அறிஞர்களாக இருந்தாலும் குர்ஆன், சுன்னாவின் ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் கூறும் கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் குர்ஆன், சுன்னாவை ஆதாரமாக வைத்து ஒருவர் ஒரு கருத்தைக் கூறினால் அது அவருடைய சொந்தக் கருத்தல்ல. திருக்குர்ஆனிலும், சுன்னாவிலும் உள்ளடங்கியுள்ள ஞானத்தையே அவர் எடுத்துரைக்கின்றார்.

அதே நேரத்தில் குர்ஆன் சுன்னாவில் இல்லாத கருத்துக்களையோ, அல்லது தன்னுடைய சுய கருத்துக்களையோ மார்க்கம் என்ற பெயரில் ஒருவர் கூறினால் அதனை நாம் மார்க்க அடிப்படையில் உள்ளதா என்பதைச் சிந்திக்காமல் பின்பற்றினால் நிச்சமயாக அது நம்மை நரகத்தில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

இன்றைக்கு ஸலபிக் கொள்கை என்று சொல்லிக் கொள்வோரில் அதிகமானவர்கள் குர்ஆன், சுன்னாவின் ஆதாரமின்றி ஸஹாபாக்கள் கூறியவற்றையும் மார்க்கமாகப் பின்பற்ற வேண்டும் என்ற வழிகெட்ட கொள்கையில் செல்கின்றனர்.

அதுபோன்று மத்ஹபுவாதிகள், குர்ஆன் சுன்னாவில் இல்லாவிட்டாலும், குர்ஆன் சுன்னாவிற்கே எதிராக இருந்தாலும் தங்களுடைய மத்ஹபு இமாம்கள் சொன்னவற்றையே மார்க்கமாகக் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உச்சகட்ட தக்லீதில் ஊறித் திளைக்கின்றனர்.

அது போன்றுதான் தரீக்காவிலும், தப்லீக்கிலும் மனிதர்களின் மனோஇச்சைகள் மட்டுமே மார்க்கம் என்ற பெயரில் அதிகம் போதிக்கப்படுகின்றது. அதனை அவர்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றி தக்லீதின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர்.

தக்லீத் செய்வது வழிகேடே!

மார்க்கத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும்.

إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ

அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. (அல்குர்ஆன்: 12:40)

 وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள்.

(அல்குர்ஆன்: 5:44)

وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன்: 5:45)

وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.

(அல்குர்ஆன்: 5:47)

أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنَ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ ۚ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ ۗ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ

அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.

(அல்குர்ஆன்: 42:21)

اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர்.

(அல்குர்ஆன்: 9:31)

மேற்கண்ட இறைவசனங்கள் அனைத்தும் அல்லாஹ் அருளியதின் அடிப்படையில் தான் தீர்ப்பளிக்க வேண்டும், மார்க்கச் சட்டங்கள் எடுக்க வேண்டும் என்பதையும் இறைவன் அல்லாதவர்களின் கருத்துக்களை மார்க்கமாகப் பின்பற்றக் கூடாது என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

குறிப்பாக, 9:31வது வசனத்தில் கிறத்தவர்கள் தங்களது மதபோதகர்களையும், பாதிரிகளையும், ஈஸா (அலை) அவர்களையும் கடவுள்களாக்கினர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

கிறித்தவர்கள் ஈஸா நபியைக் கடவுளாக வணங்குகின்றனர். எனவே அவர்கள் ஈஸாவைக் கடவுளாக்கி விட்டனர் என்பதன் பொருளை நாம் நேரடியாகவே விளங்கிக் கொள்ளலாம்.

மதபோதகர்களையும், பாதிரிமார்களையும் கடவுளாக்கிக் கொண்டனர் என்பதன் பொருள் என்ன?

அந்த மதபோதகர்கள், மற்றும் பாதிரிகளின் சுய கருத்துக்களை மார்க்கமாகப் பின்பற்றுவதைத் தான் அவர்களைக் கடவுளாக்குதல் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இவ்வசனத்தின் மையக் கருவைச் சிந்தித்தாலே குர்ஆன், சுன்னா ஆதாரம் இல்லாமல் நபித்தோழர்கள், இமாம்கள், மார்க்க அறிஞர்கள் என்று யாருடைய சுய கருத்தை மார்க்கமாகக் கருதிப் பின்பற்றினாலும் அது அவர்களைக் கடவுளாக்குதல் எனும் நிலைக்குக் கொண்டு சென்று விடும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளமுடியும்.

அல்லாஹ்வின் வேதக் கட்டளைகள், அல்லாஹ்விடம் இருந்து நபி (ஸல்) அவர்கள் பெற்றுத் தந்த வழிகாட்டுதல்கள் ஆகியவற்றைத் தவிர வேறு யாருடைய கருத்துக்களையும் மார்க்கமாகப் பின்பற்றக் கூடாது என்பதைத் திருமறைக் குர்ஆன் பின்வரும் வசனத்தில் எடுத்துரைக்கின்றது.

اتَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ ۗ قَلِيلًا مَا تَذَكَّرُونَ

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்

(அல்குர்ஆன்: 7:3)

எனவே யாருடைய கருத்தாக இருந்தாலும் அதற்குரிய மார்க்க ஆதாரம் அறியாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது மார்க்கத்திற்கு எதிரானது நாம் மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

தக்லீத் செய்பவர்கள் வழிகேடர்களே!

குர்ஆன், சுன்னா ஆதாரமில்லாதவற்றை மார்க்கம் எனக் கருதிப் பின்பற்றுபவர்களிடம், ‘ஏன் இவ்வாறு தக்லீத் செய்கிறீர்கள்? இதற்கு குர்ஆனிலும், நபிவழியிலும் எந்த ஒரு ஆதாரமும் இல்லையே?’ எனக் கேட்கும் போது அவர்கள், ‘நபித்தோழர்கள் இவ்வாறு செய்துள்ளனர், எங்கள் இமாம்கள் இவ்வாறு வழிகாட்டியுள்ளனர், மார்க்க அறிஞர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்’ என்ற ஒற்றைப் பதிலையே மறுப்பாகக் கூறுகின்றனர்.

உண்மையில் மார்க்க விஷயத்தில் இவ்வாறு முன்னோர்கள் மீதும் அறிஞர்கள் மீதும் பழி போட்டுத் தப்பிப்பது காஃபிர்களின் வழிமுறையாகும்.

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு எதிராகக் காஃபிர்கள் இது போன்ற பதிலையே கூறினர்.

 

إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا هَٰذِهِ التَّمَاثِيلُ الَّتِي أَنْتُمْ لَهَا عَاكِفُونَ

قَالُوا وَجَدْنَا آبَاءَنَا لَهَا عَابِدِينَ

قَالَ لَقَدْ كُنْتُمْ أَنْتُمْ وَآبَاؤُكُمْ فِي ضَلَالٍ مُبِينٍ

 

“நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?’’ என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்டபோது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்’’ என்று அவர்கள் கூறினர்.

 “நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்’’ என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 21:52-54)

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள் என்று கூறப்படும் போதெல்லாம் வழிகேடர்கள் ‘தங்களது முன்னோர்கள் அவ்வாறு செய்தனர்’ என்ற சொத்தை வாதத்தையே பதிலாகக் கூறியுள்ளனர் என திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது. இதனைப் பின்வரும் வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

 

وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا ۗ أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ

وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً ۚ صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ

 

“அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!’’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்‘’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?

வெறும் சப்தத்தையும், ஓசையையும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றே (ஏகஇறைவனை) மறுப்போரின் தன்மை உள்ளது. (அவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே அவர்கள் விளங்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 2:170),171)

وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَىٰ مَا أَنْزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا ۚ أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ

“அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்!’’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்’’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?

(அல்குர்ஆன்: 5:104)

 

أَمْ آتَيْنَاهُمْ كِتَابًا مِنْ قَبْلِهِ فَهُمْ بِهِ مُسْتَمْسِكُونَ

بَلْ قَالُوا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَىٰ أُمَّةٍ وَإِنَّا عَلَىٰ آثَارِهِمْ مُهْتَدُونَ

وَكَذَٰلِكَ مَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِي قَرْيَةٍ مِنْ نَذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَىٰ أُمَّةٍ وَإِنَّا عَلَىٰ آثَارِهِمْ مُقْتَدُونَ

قَالَ أَوَلَوْ جِئْتُكُمْ بِأَهْدَىٰ مِمَّا وَجَدْتُمْ عَلَيْهِ آبَاءَكُمْ ۖ قَالُوا إِنَّا بِمَا أُرْسِلْتُمْ بِهِ كَافِرُونَ

فَانْتَقَمْنَا مِنْهُمْ ۖ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ

 

இதற்கு முன் அவர்களுக்கு ஏதேனும் ஒரு வேதத்தை நாம் கொடுத்தோமா? அதை அவர்கள் (இதற்குரிய சான்றாக) பற்றிப் பிடித்துக் கொண்டார்களா? 

அவ்வாறில்லை! “எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளில் நடப்பவர்கள்’’ என்றே கூறுகின்றனர்.

இவ்வாறே உமக்கு முன் ஒரு ஊருக்கு எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் “எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள்’’ என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.

உங்கள் முன்னோர்களை எதில் கண்டீர்களோ அதை விட நேர்வழியை நான் கொண்டு வந்தாலுமா? என (எச்சரிக்கை செய்பவர்) கேட்டார். “எதனுடன் நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே’’ என்று அவர்கள் கூறினர்.

எனவே அவர்களைத் தண்டித்தோம். பொய்யெனக் கருதியோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனிப்பீராக!

(அல்குர்ஆன்: 43:21-25)

மேற்கண்ட வசனங்களில், ‘முன்னோர்களைப் பின்பற்றுகிறோம் என்று கூறியவர்கள் காஃபிர்கள், அவர்கள் எந்த முன்னோர்களைப் பின்பற்றினார்களோ அவர்களும் காஃபிர்கள், ஆனால் நாங்கள் ஸஹாபாக்களையும், இமாம்களையும், மார்க்க அறிஞர்களையும் தானே ஆதாரமாகப் பின்பற்றுகிறோம். எனவே அவர்களுடன் எங்களை எப்படி ஒப்பீடு செய்யலாம்?’ என தகலீத் செய்பவர்கள் கேட்கலாம்.

இன்றைய தக்லீத்வாதிகளுக்கும், மேற்கண்ட இறைவசனங்களில் கூறப்படும் தக்லீத்வாதிகளுக்கும் உள்ள பொதுவான விஷயமே இறைச் சட்டங்களை அடிப்படையாகக் கொள்ளாமல் இருந்ததுதான். இரு சாராருமே இறைச் சட்டங்களை அடிப்படையாகக் கொள்ளாமல் மனிதர்களின் சுய கருத்துக்களை கண்மூடிப் பின்பற்றுகிறார்கள் என்பதுதான் இதிலுள்ள பொதுவான அடிப்படையாகும்.

இதனைப் புரிந்து கொண்டாலே இன்றைய தக்லீத்வாதிகளுக்கும் இவ்வசனங்கள் பேரிடியாக அமைந்துள்ளன என்பதைச் சிந்தனையாளர்கள் அறிந்து கொள்ள முடியும்.

சிந்திக்கத் தூண்டும் திருக்குர்ஆன்

திருமறைக் குர்ஆன், அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் மட்டுமே கட்டுப் படவேண்டும் என்பதை ஏராளமான வசனங்களில் எடுத்துரைக்கின்றது. இதற்குரிய ஆதாரங்களை நாம் முன்னர் கண்டோம். யாருடைய கருத்தாக இருந்தாலும் அது குர்ஆன் சுன்னாவிற்கு ஒத்திருக்கின்றதா? என்பதை ஆய்ந்தறிந்தே பின்பற்ற வேண்டும் எனவும் திருக்குர்ஆன் வழிகாட்டுகிறது.

ஒருவர், குர்ஆன் சுன்னாவிலிருந்து நான் ஆய்வு செய்து கூறுகிறேன் என்று ஒரு புதிய கருத்தை முன்வைக்கின்றார். அதற்கு ஆதாரம் என்ற பெயரில் குர்ஆன் வசனங்களையும், சுன்னாவையும் முன்வைத்தாலும் அவர் எடுத்துவைக்கும் ஆதாரங்களில் அதற்கான சான்றுகள் இருக்கின்றதா என்று சிந்தித்து, அதற்கான சான்றுகள் இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு கருத்தைக் கூறி அதற்குப் பொருத்தமில்லாத குர்ஆன் வசனங்களை, ஹதீஸ்களை வைத்தால் அக்கருத்தை மார்க்கமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. அந்த அறிஞர் ஆய்வு செய்தால் சரியாகத் தான் இருக்கும் என்று நம்பிப் பின்பற்றுவது தான் தக்லீதின் அடிப்படை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். குர்ஆன் வசனங்கள் எடுத்து வைக்கப்பட்டாலும் அதில் கூறப்படும் கருத்திற்குப் பொருத்தமான ஆதாரம் உள்ளதா? என்பதைச் சிந்தித்தே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

وَالَّذِينَ إِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 25:73)

இறை வசனங்களில் கூறப்படும் சரியான கருத்தை அறிந்து பின்பற்ற வேண்டும் எனவும் கண்மூடித்தனமாகப் பின்பற்றக் கூடாது என்றும் அல்லாஹ் வழிகாட்டியுள்ளான்.

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَا

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?

(அல்குர்ஆன்: 47:24)

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ ۚ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 4:82)

இதிலிருந்து திருமறைக் குர்ஆன் சிந்திக்காமல் பின்பற்றுவதை மிகக் கடுமையாக எதிர்க்கின்றது என்பதை நாம் அறிந்கொள்ளலாம்.

அல்லாஹ் மனிதனுக்கு பார்வைப் புலன், கேள்விப் புலன் மற்றும் சிந்தனைத் திறனை வழங்கியுள்ளான். நாம் பார்க்கும் விஷயங்களையும், கேட்கும் விஷயங்களையும் சிந்தனையைப் பயன்படுத்தி சிந்தித்து அறிய வேண்டும் என்று திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் வலியுறுத்துகின்றது.

قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ ۚ ثُمَّ اللَّهُ يُنْشِئُ النَّشْأَةَ الْآخِرَةَ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

‘‘பூமியில் பயணம் செய்யுங்கள்! ‘அல்லாஹ் எவ்வாறு முதலில் படைத்தான்’ என்பதைக் கவனியுங்கள்!’’ என்று கூறுவீராக! பின்னர் அல்லாஹ் மற்றொரு தடவை உற்பத்தி செய்வான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன்: 29:20)

أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَا أَوْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا ۖ فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَٰكِنْ تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ

அவர்கள் பூமியில் பயணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) விளங்குகிற உள்ளங்களும், கேட்கும் செவிகளும் அவர்களுக்கு இருந்திருக்கும். பார்வைகள் குருடாகவில்லை. மாறாக உள்ளங்களில் உள்ள சிந்தனைகளே குருடாகி விட்டன.

(அல்குர்ஆன்: 22:46)

وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ ۖ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا ۚ أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

(அல்குர்ஆன்: 7:179)

மேற்கண்ட வசனங்களில் உண்மையை அறிய நாம் பார்வைப் புலன், மற்றும் செவிப் புலன், சிந்தனைத் திறன் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் அவ்வாறு சிந்தனை செய்யாமல் இருப்பவர்களைக் கால்நடைகளோடும், அதை விடக் கீழாகவும் இறைவன் கூறுகின்றான். அவர்கள் நரகவாதிகள் என்றும் எச்சரிக்கை செய்கின்றான்.

தக்லீத் வாதிகளின் மறுமை நிலை

பின்பற்றத் தகுதியில்லாதவர்களின் சுய கருத்துக்களையும், வழிகெட்ட கருத்துக்களையும் பின்பற்றியவர்களின் மறுமை நிலை குறித்து திருமறைக் குர்ஆன் பல்வேறு வசனங்களில் எச்சரிக்கை செய்கின்றது. குர்ஆனைப் புறக்கணித்து, மனிதர்களின் சுய கருத்தை மார்க்கமாகப் பின்பற்றுபவர்களுக்கு எதிராக மறுமையில் நபி (ஸல்) அவர்களே இறைவனிடம் முறையிடுவார்கள்.

وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَىٰ يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا

يَا وَيْلَتَىٰ لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا

وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَٰذَا الْقُرْآنَ مَهْجُورًا

 

அநீதி இழைத்தவன் (கவலைப்பட்டு) தனது கைகளைக் கடிக்கும் நாளில் “இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே’’ என்று கூறுவான்.

இன்னாரை நான் உற்ற நண்பனாக ஆக்காமல் இருந்திருக்கக் கூடாதா? அறிவுரை எனக்குக் கிடைத்த பின்பும் அதை விட்டு என்னை அவன் கெடுத்து விட்டான். ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான் (என்றும் கூறுவான்.)

“என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்’’ என்று இத்தூதர் கூறுவார்.

(அல்குர்ஆன்: 25:27-30)

அது போன்று பின்பற்றத் தகுதியில்லாதவர்களை, அவர்களின் சுய கருத்துக்களை கண்மூடிப் பின்பற்றினால் நாளை அவர்கள் பின்பற்றியவர்களை விட்டும் விரண்டோடி விடுவார்கள். அவர்களும் வழிகேடர்களாக இருந்திருந்தால் இரு சாராருமே நரக வேதனையை அனுபவிப்பார்கள்.

إِذْ تَبَرَّأَ الَّذِينَ اتُّبِعُوا مِنَ الَّذِينَ اتَّبَعُوا وَرَأَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْأَسْبَابُ

وَقَالَ الَّذِينَ اتَّبَعُوا لَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوا مِنَّا ۗ كَذَٰلِكَ يُرِيهِمُ اللَّهُ أَعْمَالَهُمْ حَسَرَاتٍ عَلَيْهِمْ ۖ وَمَا هُمْ بِخَارِجِينَ مِنَ النَّارِ

 

பின்பற்றப்பட்டோர், வேதனையைக் காணும்போது (தம்மைப்) பின்பற்றியோரிடமிருந்து விலகிக் கொள்வர். அவர்களிடையே (இருந்த) உறவுகள் முறிந்து விடும். 

“(உலகுக்கு) திரும்பிச் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு இருக்குமானால் அவர்கள் எங்களிடமிருந்து விலகிக் கொண்டதைப் போல் அவர்களிடமிருந்து நாங்களும் விலகிக் கொள்வோம்’’ என்று பின்பற்றியோர் கூறுவார்கள். இப்படித்தான் அல்லாஹ் அவர்களது செயல்களை அவர்களுக்கே கவலையளிப்பதாகக் காட்டுகிறான். அவர்கள் நரகிலிருந்து வெளியேறுவோர் அல்லர்.

(அல்குர்ஆன்: 2:166),167)

 

يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا

وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا

رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا

 

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?’’ எனக் கூறுவார்கள்.

“எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்’’ எனவும் கூறுவார்கள்.

”எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!’’ (எனவும் கூறுவார்கள்.)

(அல்குர்ஆன்: 33:66-68)

இம்மையிலும் மறுமையிலும் கொடிய நாசத்தை உண்டாக்கும் இந்தக் கொடிய தக்லீத் எனும் வியாதியிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! குர்ஆன், சுன்னாவை மட்டுமே பின்பற்றி வாழக்கூடிய நன்மக்களாகவும், யாருடைய கருத்தாக இருந்தாலும் அது குர்ஆன் சுன்னாவிற்கு உட்பட்ட கருத்தா? என்பதைச் சிந்தித்து நடைமுறைப்படுத்தக் கூடிய நன்மக்களாகவும் அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!