12) தக்பீர் மற்றும் கியாம்
தக்பீர் தஹ்ரீமா
தொழுகைக்காக கஅபாவை முன்னோக்கிய பின், முதலில் அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். இதற்கு தக்பீர் தஹ்ரீமா (தொழுகைக்கு வெளியே நடைபெறும் காரியங்களைத் தடை செய்வதற்குரிய தக்பீர்) என்று கூறப்படும்.
… நீ தொழுகைக்குத் தயாரானால் (முதலில்) முழுமையாக உளூச் செய்! பின்னர் கிப்லாவை (கஅபாவை) முன்னோக்கு! பின் தக்பீர் கூறு!.. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: (புகாரீ: 6667),(முஸ்லிம்: 602)
இரு கால்களுக்கிடையில் உள்ள இடைவெளி
நிற்கும் போது இரு கால்களுக்கிடையே எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அவர்களின் செயல் முறைகளிலிருந்தும் அறிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவரவர் இயல்புக்குத் தக்கவாறு அடுத்தவருக்கு இடையூறு இல்லாத வகையில் நடுத்தரமாக நின்று கொள்ள வேண்டும்.
இரு கைகளை உயர்த்துதல்
அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னர் இரு கைகளையும் தோள் புஜம் வரை அல்லது காதின் கீழ்ப் பகுதி வரை உயர்த்த வேண்டும். அப்போது இரு கைகளையும் மடக்காமல் நீட்டிய வண்ணம் வைத்திருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தமது இரு கைகளையும் இரு தோள் புஜங்கள் வரை உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்கள்: (புகாரீ: 735), (முஸ்லிம்: 586)
நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறும் போது தம் இரு கைகளையும் இரு காதுகளின் கீழ்ப்பகுதி வரை உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 642) (589)
நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது இரு கைகளையும் (மூடாமல்) நீட்டுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: (திர்மிதீ: 240) (223),(அபூதாவூத்: 642), நஸயீ-873,(அஹ்மத்: 8520)
நெஞ்சின் மீது கை வைத்தல்
கைகளை உயர்த்தி, வலது கையை இடது கையின் குடங்கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைக்க வேண்டும். அல்லது வலது முன்கையை இடது முன்கையின் மேற்பகுதி, மணிக்கட்டு, குடங்கை ஆகிய மூன்று இடங்களிலும் படுமாறு வைக்க வேண்டும்.
‘நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில் ஸலாம் கூறும் போது) தமது வலது புறமும், இடது புறமும் திரும்பியதை நான் பார்த்தேன். (தொழுகையில்) இதை நெஞ்சின் மீது வைத்ததை நான் பார்த்தேன்’ என்று ஹுல்புத்தாயீ (ரலி) கூறினார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் யஹ்யா என்பவர் இதை என்று சொல்லும் போது, வலது கையை இடது கையின் மணிக்கட்டின் மீது வைத்துக் காட்டினார் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் குறிப்பிடுகின்றார்கள்.
நூல்: (அஹ்மத்: 21967) (20961)
தொழும் போது மக்கள் தம் வலக்கையை இடது குடங்கை மீது வைக்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்: (புகாரீ: 740)
நபி (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது முன் கை, இடது மணிக்கட்டு, இடது குடங்கை ஆகியவற்றின் மீது வைத்தார்கள்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்: (நஸாயீ: 889) (879)
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்ற போது… தங்களது வலக்கையால் இடக்கையைப் பிடித்திருந்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்: (அபூதாவூத்: 726) (624)
கையைத் தொப்புளுக்குக் கீழ் வைப்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. தொப்புளுக்குக் கீழே கையை வைப்பது நபிவழி என்று அலீ (ரலி) அறிவிப்பதாக (அபூதாவூத்: 756) (645) உள்ளிட்ட சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து அறிவிப்புக்களும் அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் அல்கூஃபி என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகின்றன. இவர் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், புகாரீ, அபூஸுர்ஆ, அபூஹாத்தம், அபூதாவூத் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
மேலும் சிலர் நெஞ்சின் இடது புறம் கைகளை வைக்கிறார்கள். இதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது.
பார்வை எங்கு இருக்க வேண்டும்?
தொழும் போது பார்வை வானத்தை நோக்கி இருக்கக் கூடாது. திரும்பியும் பார்க்கக் கூடாது. முன்னால் உள்ளவர்களைப் பார்ப்பது தவறில்லை.
நூல்கள்: (புகாரீ: 750),(முஸ்லிம்: 649)
தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். ‘ஒரு அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரீ: 751)
‘நபி (ஸல்) அவர்கள் லுஹரிலும், அஸரிலும் ஓதுவார்களா?’ என்று கப்பாப் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர்கள் ஆம் என்றார்கள். ‘நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். ‘நபி (ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்’ என்று கப்பாப் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூமஃமர்
நூல்: (புகாரீ: 746)
தொழுகையின் ஆரம்ப துஆ
கைகளை நெஞ்சில் கட்டிய பின்னர் பின் வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றை ஓத வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள்.’இறைத்தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும், கிராஅத்துக்கும் (குர்ஆன் ஓதுதலுக்கும்) இடையே தாங்கள் என்ன ஓதுகிறீர்கள்?’ என நான் கேட்டேன். அதற்கு,
‘அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்
என்று ஓதுவேன்’ என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
பொருள்: இறைவா! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும், என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரீ: 744)
நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு பின்வரும் துஆவை ஓதி விட்டு கிராஅத் ஓதுவார்கள்.
வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவா(த்)தி வல்அர்ள ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரி(க்)கீன். இன்ன ஸலா(த்)தீ வநுசு(க்)கீ வமஹ்யாய வமமா(த்)தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீ(க்)கலஹு வபிதாலி(க்)க உமிர்(த்)து வஅன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்(த்)தல் மலி(க்)கு லாயிலாஹ இல்லா அன்(த்)த, வஅன அப்து(க்)க ளலம்(த்)து நஃப்ஸீ, வஃதரஃப்(த்)து பிதன்பீ ஃபஃக்பிர்லீ துனூபி ஜமீஆ, லாயஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த வஹ்தினீ லி அஹ்ஸனில் அக்லா(க்)கி லா யஹ்தீ லிஅஹ்ஸனிஹா இல்லா அன்(த்)த, வஸ்ரிஃப் அன்னீ ஸய்யிஅஹா,லாயஸ்ரிஃபு அன்னீ ஸய்யிஅஹா இல்லா அன்(த்)த, லப்பை(க்)க வஸஃதை(க்)க வல்கைரு குல்லுஹு ஃபீயதை(க்)க வஷ்ஷர்ரு லைஸ இலை(க்)க அன பி(க்)க வஇலை(க்)க தபாரக்(த்)த வ(த்)தஆலை(த்)த அஸ்தஃபிரு(க்)க, வஅ(த்)தூபு இலை(க்)க
பொருள்: இணை வைத்தவர்களில் ஒருவனாக நான் இல்லாமல் கட்டுப்பட்டவனாக, வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்புகிறேன். என் தொழுகையும், என் இதர வணக்கங்களும், என் வாழ்வும்,என் மரணமும் அகில உலகையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகராக எவருமில்லை. இவ்வாறு தான் ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானும் ஒருவன். இறைவனே! நீயே அதிபதி. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. நான் உனது அடிமை. எனக்கே நான் அநீதி இழைத்து விட்டேன். என் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டேன். எனவே என் குற்றங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் குற்றங்களை மன்னிக்க முடியாது. நற்குணத்தின் பால் எனக்கு வழி காட்டுவாயாக! உன்னைத் தவிர யாரும் வழி காட்ட முடியாது. தீய குணங்களை விட்டும் என்னைக் காப்பாயாக! உன்னைத் தவிர யாரும் தீய குணங்களை விட்டும் காக்க முடியாது. இதோ உன்னிடம் வந்து விட்டேன். அனைத்து நன்மைகளும் உன் கைகளிலே உள்ளன. தீமைகள் உன்னைச் சேராது. நான் உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே சரணடைந்தேன். நீ பாக்கியம் மிக்கவன். உயர்ந்தவன். உன்னிடம் பாவமன்னிப்பு தேடுகின்றேன். உன்னை நோக்கி மீள்கின்றேன்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: (நஸாயீ: 897) (887)
இந்த ஹதீஸ் (முஸ்லிம்: 1419) (1290) லும் இடம் பெற்றுள்ளது.
ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க தபாரகஸ்முக்க வதஆலா ஜத்துக்க வலாயிலாஹ கைருக.. என்ற ஸனாவை சிலர் தொழுகையின் ஆரம்ப துஆவாக ஓதி வருகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் இதை ஓதினார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்மான ஹதீஸ்கள் எதுவும் இல்லை.
சூரத்துல் பாத்திஹா ஓதுதல்
தொழுகையின் முதல் துஆ ஓதிய பின்னர் சூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும்.
‘சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகையில்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: உபாதா (ரலி)
நூல்கள்: (புகாரீ: 756),(முஸ்லிம்: 595)
சூரத்துல் ஃபாத்திஹாவின் வசனங்கள்:
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம். மாலி(க்)கி யவ்மித்தீன். இய்யா(க்)க நஅபுது வஇய்யா(க்)க நஸ்(த்)தயீன். இஹ்தினஸ் ஸிரா(த்)தல் முஸ்த(க்)கீம். ஸிரா(த்)தல்லதீன அன்அம்(த்)த அலைஹிம் கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்
பொருள்:
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… எல்லாப் புகழும் அகிலம் அனைத்தையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே! அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்பாளன். தீர்ப்பு நாளின் அதிபதி. இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். நீ எவர்களுக்கு பாக்கியம் புரிந்தாயோ அவர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக! உன் கோபத்துக்கு ஆளானவர்களின் வழியுமல்ல; நெறி கெட்டவர்களின் வழியுமல்ல.
(அல்குர்ஆன்: 01:1) ➚,7)
பிஸ்மில்லாஹ் ஓத வேண்டுமா
ஒவ்வொரு ரக்அத்திலும் சூராக்களை ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என சப்தமிட்டோ,மெதுவாகவோ கூற வேண்டும்.
‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பது சூரத்துல் ஃபாத்திஹாவின் ஒரு வசனம் என்பதால் அதையும் ஓத வேண்டும்.
‘நபி (ஸல்) அவர்களின் கிராஅத் (குர்ஆன் ஓதுதல்) எவ்வாறு இருந்தது?’ என அனஸ் (ரலி)யிடம் விசாரிக்கப்பட்ட போது’அவர்கள் நீட்டி நிறுத்தி ஓதினார்கள்’ என்று கூறிவிட்டு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதில் ரஹ்மான் ரஹீம் என்ற வார்த்தைகளை நீட்டி ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: கதாதா,
நூல்: (புகாரீ: 5046)
‘நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்றே தொழுகையைத் துவங்குவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: (புகாரீ: 743),(முஸ்லிம்: 229)
நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வைச் சப்தமின்றி ஓதினார்கள் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரமாகும். சப்தமிட்டு பிஸ்மில்லாஹ் ஓதுவதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதேன். அவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று ஓதி விட்டுப் பிறகு அல்ஹம்து சூராவை ஓதினார்கள்…. ‘அல்லாஹ்வின் மீதாணையாக நபி (ஸல்) அவர்கள் தொழுது காட்டியது போல் நான் உங்களுக்குத் தொழுது காட்டினேன்’ என்று அபூஹுரைரா (ரலி) குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: நுஐம் அல்முஜ்மிர்
நூல்: (ஹாகிம்: 849) (1/357)
பின்பற்றித் தொழுபவர் சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டுமா?
இமாமைப் பின்பற்றித் தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாம் ஓதுவதைக் கேட்க வேண்டும். வேறு எதையும் ஓதக் கூடாது.
குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!
நாங்கள் தொழுகையில், இன்னார் மீது ஸலாம், இன்னார் மீது ஸலாம் என்று கூறிக் கொண்டிருந்தோம். அப்போது தான் ‘குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!’ என்ற (அல்குர்ஆன்: 7:204) குர்ஆன் வசனம் வந்தது.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: தப்ஸீர் தப்ரீ, பாகம்: 9, பக்கம்: 162
‘இமாம் ஓதும் போது நீங்கள் மவுனமாக இருங்கள்!’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 680) (612)
ஆமீன் கூறுதல்
சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்ததும் ‘ஆமீன்’ கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும், பின் நின்று தொழுபவரும் ஆமீன் கூற வேண்டும்.
‘இமாம் ‘கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்’ எனக் கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன், மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரீ: 782)
இந்த ஹதீஸில் கூறப்படும் கூலூ (நீங்கள் சொல்லுங்கள்) என்ற அரபி வாசகம், மெதுவாகச் சொல்வதையும் சப்தமிட்டுச் சொல்வதையும் எடுத்துக் கொள்ளும். இந்த வாசகத்திற்கு நபித்தோழர்கள் சப்தமிட்டுக் கூறுதல் என்று புரிந்துள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது. எனவே ஆமீன் என்பதைச் சப்தமிட்டும் சொல்லலாம். விரும்பினால் சப்தமில்லாமலும் சொல்லலாம்.
‘இந்தப் பள்ளிவாசலில் 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். இமாம் ‘கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்’எனக் கூறும் போது அந்த நபித் தோழர்களிடமிருந்து ‘ஆமீன்’ என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அதா
நூல்: குப்ரா பைஹகீ-2455 .
துணை சூராக்கள்
சூரத்துல் பாத்திஹா ஓதிய பின்னர் குர்ஆனில் நமக்குத் தெரிந்த முழு அத்தியாயத்தையோ, அல்லது சில வசனங்களையோ ஓத வேண்டும்.
முதல் இரண்டு ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹாவும், துணை சூராவும் நபி (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள். பிந்திய ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதியுள்ளார்கள். சில சமயங்களில் துணை சூராவும் சேர்த்து ஓதியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தையும் துணை அத்தியாயங்கள் இரண்டையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்கும் அளவிற்கு ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தை விட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும், சுப்ஹிலும் செய்வார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்கள்: (புகாரீ: 776),(முஸ்லிம்: 686)
நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் முப்பது வசனங்கள் அளவு ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (நஸாயீ: 476) (472)
ஒரு அத்தியாயத்தை எல்லா ரக்அத்களிலும் ஓதுதல்
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் இதா ஸுல்ஸிலத்தில் அர்லு’ என்று தொடங்கும் அத்தியாயத்தை இரண்டு ரக்அத்களிலும் ஓதினார்கள்.
நூல்: (அபூதாவூத்: 816) (693)
வரிசை மாற்றி ஓதுதல்
துணை அத்தியாயங்களை ஓதும் போது குர்ஆனில் உள்ள வரிசைப்படி ஓத வேண்டும் என்பது அவசியமில்லை. வரிசை மாற்றியும் ஓதலாம். உதாரணமாக 114 வது அத்தியாயமாக உள்ள நாஸ் அத்தியாயத்தை ஓதிவிட்டு 113 வது அத்தியாயமாக உள்ள ஃபலக் என்ற அத்தியாயத்தை ஓதலாம்.
ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது முதலில் (இரண்டாவது அத்தியாயமான) ஸூரத்துல் பகராவை ஓத ஆரம்பித்தார்கள். பின்னர் (நான்காவது அத்தியாயமான) ஸூரத்துந் நிஸாவை ஓத ஆரம்பித்தார்கள். பின்னர் (மூன்றாவது அத்தியாயமான) ஸூரத்து ஆலஇம்ரானை ஓத ஆரம்பித்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 1421) (1291)
ஒரு அத்தியாயத்தைப் பிரித்து ஓதுதல்
துணை சூரா ஓதும் போது ஒரு அத்தியாயத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்து ஓதுவதும் கூடும்.
நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் ஸூரத்துல் அஃராஃப் அத்தியாயத்தை இரண்டு ரக்அத்துகளில் பிரித்து ஓதினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (நஸாயீ: 991) (981)